ஜம்மு காஷ்மீரில் தற்போது அமலில் உள்ள சர்ச்சைக்குரிய பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் அத்துமீறல்கள் குறித்து அறிக்கை வெளியிட, அம்னெஸ்டி அமைப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் நடக்கவிருந்த அம்னெஸ்டி அமைப்பின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு அனுமதி மறுத்துள்ளது அரசு நிர்வாகம்.
“சட்ட – ஒழுங்கு பிரச்சினையை காக்கும் பொருட்டு” அனுமதியை மறுத்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் காரணம் கூறியுள்ளது. ஸ்ரீநகர் துணை ஆணையர் அலுவலகத்தைச் சேர்ந்த சில அலுவலர்கள் இதை வாய்மொழியாகக் கூறியதாக அம்னெஸ்டி அமைப்பின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த நசியா இரோம் தெரிவித்துள்ளார்.
“சட்டமற்ற சட்டத்தின் கொடுங்கோன்மை : ஜம்மு காஷ்மீரின் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதானால் குற்றச்சாட்டும் இல்லை, விசாரணையும் இல்லை” என தலைப்பிடப்பட்ட அம்னெஸ்டி அமைப்பின் அறிக்கை இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதில், சர்ச்சைக்குரிய பொதுப் பாதுகாப்பு சட்டத்தை ஜம்மு காஷ்மீரில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
“இந்தச் சட்டம் மாநில அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே பதட்டத்தை தூண்டிக்கொண்டிருக்கிறது. இதை நிச்சயம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என அம்னெஸ்டி இந்தியா அமைப்பின் தலைவர் ஆகர் பட்டேல் தெரிவித்துள்ளார்.
‘மாநிலத்தின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைக்கும் விதமாக’ ஒரு நபர் நடந்துகொண்டால் அவரை இரண்டு வருடங்கள் வரை காவலில் வைக்க அனுமதிக்கிறது இந்தச் சட்டம். ஒரு நபர் பொது அமைதியை கெடுக்கும் வகையில் நடந்துகொள்வார் எனக் கருதினால் இந்தச் சட்டத்தின்படி ஓராண்டு அவரை சிறையில் வைத்திருக்க முடியும். எதற்காக கைது செய்கிறோம் என்பது குறித்து அதிகாரிகள் எந்தவித அறிக்கையும் தரத் தேவையில்லை.
படிக்க:
♦ ” தந்தையர் இல்லா காஷ்மீர் ” – திரைப்படம் | கண்ணீர் பள்ளத்தாக்கின் கதை !
♦ ஊஃபா – என்.எஸ்.ஏ தேச துரோக சட்டங்களை நீக்கு ! வலுக்கும் எதிர்ப்புகள் !!
2007 மற்றும் 2016-ம் ஆண்டுக்கிடையே பொதுப் பாதுகாப்பு சட்டத்தின்படி 2,400 கைதுகள் நடந்துள்ளன. இவற்றில் 58% வழக்குகள் நீதிமன்றத்தில் நொறுங்கிப் போயின.
2012 – 2018-ம் ஆண்டு வரை இந்தச் சட்டத்தில் கைதான 210 பேரின் வழக்குகளை திறனாய்வு செய்திருக்கும் அம்னெஸ்டி, முற்றிலுமாக இந்தச் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதாகச் சொல்கிறது. கைதானவர்களுக்கு பிணை வழங்குவதை தவிர்ப்பதற்காக ஒத்த உத்தரவுகளை வழங்குவதை நீதிபதிகள் மேற்கொண்டதாக இந்த அறிக்கை கூறுகிறது. தலைமை ஆய்வாளரான ஸாகூர் வானி, பிணையில் வெளிவரும் வாய்ப்புள்ள நபர்களைக் கைது செய்ய இந்தச் சட்டத்தை ‘பாதுகாப்பு வளையமாக’ பயன்படுத்தியதாகக் கூறுகிறார்.
‘சட்டமில்லாத சட்டம்’ என அழைக்கும் இந்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என கேட்டுள்ளது அம்னெஸ்டி. சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு சட்டத்தின் மீது இந்தியாவுக்குள்ள கடமையை இந்தச் சட்டம் மீறுகிறது எனவும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை மற்றும் மனித உரிமைகளுக்கான மரியாதையை இந்தச் சட்டம் புறந்தள்ளுவதாகவும் அந்த அமைப்பு சாடியுள்ளது.
அனிதா
நன்றி : ஸ்க்ரால்