ழுத்தாளரும் இயக்குனருமான அஷ்வின் குமார் ஒரு விடலை பருவக் காதல் கதை மூலம் காஷ்மீரின் கதைக்குள் உங்களை அழைத்து செல்கிறார். பிரிட்டனை சேர்ந்த 16 வயது இளம்பெண் நூர் (ஜாரா வெப்) காஷ்மீரிலுள்ள தன்னுடைய தாத்தா (குல்பூசன் கர்பண்டா) மற்றும் பாட்டியை (சோனி ரஸ்தன்) சந்திக்க வருகிறாள். அதே நேரம் அரை கைப்பெண்ணான அவளது தாய் (நடாஷா மாகோ) சில ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன தன்னுடைய கணவனைத் தேடி களைத்து கடைசியில் தன்னுடைய மகளுடன் சென்று விட முடிவு செய்கிறார்.

ஆனால் நூருடைய தாத்தாவும் பாட்டியும் அவர்களை விடவில்லை. தங்களுடைய மகன் மீண்டும் கிடைப்பான் என்ற ஒரு மங்கலான நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. அதற்கு பிரிட்டனில் இருந்து வந்த தங்களது பேத்தியின் உதவியை பெறுகிறார்கள்.

நூர் ஒரு சுட்டிப்பெண். தன்னுடைய கைப்பேசியிலிருக்கும் கேமரா மூலம், தான் செல்லும் இடமெல்லாம் பதிவு செய்யும் நூர் தன்னுடைய தந்தையைப் பற்றியும் கேள்வி எழுப்புகிறாள். தன்னுடைய கிராமத்தைச் சேர்ந்த மஜீத் (சிவம் ரெய்னா) என்ற பையனுடன் நட்பு ஏற்பட்டவுடன் அவளுக்கு உண்மை இன்னும் கூடுதலாக புரிகிறது. மஜித்தின் கதையும் நூரின் கதை போன்றது தான். அவனது தந்தையையும் காணவில்லை அவனது தாயும் ஒரு அரைக் கைம்பெண்தான். இருவரின் சில செயல்கள் எதிர்வர இருக்கும் மீதக் கதையை எடுத்துக்காட்டுகின்றன.

இழப்புகளின் ஊடாகத் தோன்றும் பரிவின் காரணமாக இருவருக்கும் முதல் காதல் அரும்புகிறது. தொடர்ந்து ஆபத்து நிறைந்ததும் அதிர்ச்சியடையச் செய்வதுமான ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

காஷ்மீரில் ஆங்காங்கே கிடைத்த தகவல்களை அவதானித்தும், அனுபவத்தின் மூலமாகவும் மேலும் தன்னுடைய தந்தையின் பழைய நண்பரான தீவிர சிந்தனை கொண்ட அர்ஷித் லோனுடன்(அஸ்வின் குமார்) உரையாடுவதன் மூலமாகவும் ஒரு முழுமையான சித்திரத்தை நூர் உருவாக்குகிறாள். மஜித் மற்றும் அர்ஷித் மூலம் தீவிரவாதத்திற்கும் ஆயுத போராட்டத்திற்கும் உள்ள வேறுபாட்டையும் , காஷ்மீரின் முரண்பாட்டையும், ‘ஆள்தூக்கும் பயங்கரத்தைப்’ பற்றியும் ஒரு அறிமுகம் நூருக்கு கிடைக்கிறது.

படிக்க:
♦ காஷ்மீர் : நான் நான்கு மகன்களை இழந்திருக்கிறேன் | படக் கட்டுரை
♦ காஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை ! காணொளி !

அங்கிருக்கும் பெண்கள் மூலம் சமூகத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகளை நாம் அறியலாம். பெரும்பாலானோர் ஏதோ நேர்ந்து விட்டவர்கள் போல வாழ்கின்றனர். மன்னிக்கும் மனம் மற்றும் பரிவு குறித்தும் குமார் ஆய்வு செய்கிறார். ஒரு காட்சியில் தன்னுடைய தந்தையின் புகைப்படங்களை நூர் கேட்கிறாள். வெறுமையான புகைப்பட ஆல்பத்தை அவளுக்கு காட்டி தங்களது “சொந்த கைகளாலேயே சொந்த மக்களின் நினைவுகளை நாங்கள் அழித்து விட்டோம்” என்று அவளது தாத்தா குல்பூசன் கர்பண்டா கூறுகிறார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கின் அழகையும், நூரின் மகிழ்ச்சியையும் மற்றும் இந்திய இராணுவத்திற்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையிலான மோதல்களால் எங்கும் நிறைந்திருக்கும் அச்சத்தையும் குமார் சிறப்பாக காட்சிப்படுத்துகிறார். தன்னுடைய பதவியினால் தனக்கு ஏற்பட்டிருக்கும் உள்ளக்கொதிப்பை ஒரு இராணுவ அதிகாரி (அனுசுமண் ஜா) ஒரு காட்சியில் வெளிப்படுத்துகிறார். “இங்கே எப்படி நான் வேலை பார்ப்பேன் என்று தெரியவில்லை. நேர்மையான ஒரு மோதலை எனக்கு தாருங்கள். கண்ணில் படக்கூடிய எதிரியை காட்டுங்கள்” என்று கேட்கிறார்.

107 நிமிடங்கள் பயணிக்கும் இத்திரைப்படம் ஆங்கிலம், காஷ்மீரி மற்றும் உருது என்ற மூன்று மொழிகளிலும் மாறி மாறி செல்கிறது. ஒரு சில காட்சிகளில் குறிப்பாக மஜித் பேசக்கூடிய உரையாடல்கள் போலியான தோற்றம் தருகின்றன. ஒரு சில காட்சிகளில் இசை இரைச்சலை தருகிறது. கதைமாந்தர்கள் குறிப்பாக வெப், ரெய்னா, குமார், கர்பண்டா மற்றும் ரஸ்தான் கதைக்கு பொருத்தமாக இருக்கின்றனர்.

நிழற்பட இயக்குனர்கள் ஜீன் மார்ச் செல்வா மற்றும் ஜீன் மேரி டேலோர்மி இருவரும் திரைப்பட திரை மற்றும் கைப்பேசி திரை இரண்டிற்கான விகிதத்தை மாற்றி மாற்றி திரைக்கதை ஓட்டத்திற்கு ஏதுவாக காட்டியிருக்கிறார்கள். சிலசமயம் அதிர்ச்சி தருவதாகவும் சிலசமயம் அழுத்தமாகவும் மொத்தமாக நிலவும் சூழலை பொறுப்புணர்வுடன் படத்தொகுப்பாளர்களான தாமஸ் கோல்ட்சேர், அபரா பானர்ஜி மற்றும் குமார் மூவரும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

வினவு செய்திப் பிரிவு
கட்டுரையாளர் : உதித்தா ஜுஞ்ஜுன்வாலா

தமிழாக்கம் : சுகுமார்
நன்றி: ஸ்க்ரால் 

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க