ஆசிய கிரிக்கெட் கோப்பை 2025: மோடி – அமித்ஷா தயாரித்த மெகா பட்ஜெட் படம்!

இந்தியாவால் பெயர் சூட்டப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில், இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது என்பதற்கு அடையாளமான செய்கைகளை மைதானத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் செய்ய... பாகிஸ்தான் போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது என்பதை உணர்த்தும் விதமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் செய்கை செய்ய... உலகமே முகம் சுளித்தது.

வெறி நாய் கடித்தால் என்ன ஆகும்? கடிபட்டவரும் வெறி நாயைப் போல மாறுவார். நிதி மூலதனமும் அப்படித்தான். அது பாயும் இடங்கள் எல்லாம் மதவாத, இனவாத தோற்றத்துடன் இரத்தம் குடிக்கும் காட்டேறியாக மாறிவிடும். நாகரீகமான அடிப்படைப் பண்புகள் என்று கருதப்படுபவை எல்லாம் வெந்து சாம்பலாகும்.

இதற்கு மிகச்சிறந்த உதாரணம் 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 9 முதல் 28-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த ஆசியக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி.

இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஹாங்காங், ஓமன்… என கிரிக்கெட் விளையாடும் ஆசிய நாடுகள் அனைத்தும் கோப்பையை வெல்வதற்காக விளையாடின. அந்தவகையில் செப்டம்பர் 14, செப்டம்பர் 21 ஆகிய இரு நாட்களும் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இவ்விரு போட்டிகளிலும் இந்தியா வென்றது. இதனைத் தொடர்ந்து புள்ளிகள் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் தேர்வாகின. இந்த ஃபைனல் மேட்ச் செப்டம்பர் 28 அன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதிலும் இந்தியாவே வெற்றி பெற்றது.

ஆனால், அதிகாரப்பூர்வமாக ஆசியக் கோப்பை இந்தியாவுக்குக் கிடைக்கவில்லை. இந்தியா அக்கோப்பையைப் பெறவில்லை.

காரணம், ஆபரேஷன் சிந்தூர்.

ஏப்ரல் 26, 2025 அன்று ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் ஆயுதமேந்திய பயங்கரவாதிகளால் 26 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்குப் பதிலடி தரும் வகையில் மே மாதம் பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தது. வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பயங்கரவாதிகளின் தாக்குதலால் கணவரைப் பறிகொடுத்த பெண்களின் நெற்றிக் குங்குமத்தை அடையாளப்படுத்துவதாகக் கூறி இத்தாக்குதலுக்கு “ஆபரேஷன் சிந்தூர்” என ஆணாதிக்க பிற்போக்கு மனநிலையுடன் இந்தியா பெயர் சூட்டியது.

88 மணிநேரங்கள் மட்டுமே நீடித்த இந்தப் போரை இரு நாடுகளும் சட்டென்று நிறுத்தின. “நான்தான் போரை நிறுத்தச் சொன்னேன்” என, அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துக் கொண்டேயிருந்தார். பாகிஸ்தான் இதை ஆமோதித்தது. ஆனால், இந்தியா இந்த விநாடி வரை இதுகுறித்து வாயே திறக்கவில்லை. டிரம்புக்கு கிடைக்க வேண்டிய ‘அங்கீகாரத்தை’ வழங்கவேயில்லை.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பின. ஊடகங்களில் காரசாரமான விவாதங்கள் நடந்தன. என்றாலும், பா.ஜ.க-வோ மோடியோ வாயே திறக்கவில்லை. மாறாக “பாகிஸ்தானை நாம் அடிபணிய வைத்தோம்” எனத் திரும்பத் திரும்ப உச்சரித்தார்கள்; உச்சரிக்கிறார்கள்.

இதற்கு மாறாக, இந்தியப் போர் விமானங்களை, தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் அறிவித்தது. இதற்கு ஆதாரமான புகைப்படங்களையும் வெளியிட்டு பாசிச பா.ஜ.க-வின் அடிமடியில் கைவைத்தது.

பா.ஜ.க-வின் அடித்தளமே மதவாதமும் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பை விதைப்பதும்தான். குறிப்பாக, ‘அகண்ட பாரதம்’ பயோஸ்கோப்பை ஓட விடுவதே பா.ஜ.க-வின் தேர்தல் கால அஜெண்டா. பாகிஸ்தானை பூதக் கண்ணாடியில் காண்பித்து பூச்சாண்டி காட்டுவது இதன் ஒரு பகுதி. இதை வைத்துதான் பா.ஜ.க. இதுவரை மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. புல்வாமா தாக்குதலைக் கடைவிரித்து 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஓட்டுப் பிச்சை எடுத்தது இதற்கு ஒரு சோறு பதம்.

இந்நிலையில் ‘ஆபரேஷன் சிந்தூரை’ அடிப்படையாக வைத்து பீகார் மாநில சட்டசபைத் தேர்தலில் வாக்குத் திருட்டு நடத்தி ஓட்டுக்களை அள்ளலாம் என பா.ஜ.க செயலில் இறங்கியது. கூடவே 2026-ஆம் ஆண்டு நடைபெறவிருந்த தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் எதைக் காட்டி மக்களைத் திசை திருப்பி வாக்குகளைத் திருடுவது என யோசித்தது.

இதற்கு விடையாக அமைந்ததுதான் பா.ஜ.க. சார்பில் தயாரான திரைப்படமான “2025-ஆம் ஆண்டு ஆசிய கிரிக்கெட் போட்டி”. இப்படத்துக்கான பட்ஜெட், ரூ.18 ஆயிரத்து 760 கோடி.

***

உண்மையில் இந்தியர்களும் கிரிக்கெட்டும் ஒட்டிப் பிறந்த இரட்டை வாழை அல்ல. அது மரபணு மாற்றப்பட்டு ஒட்டி வைக்கப்பட்ட வாழை. ஒட்ட வைத்தது காலனியாதிக்கம் முதல் மறுகாலனியாக்கம் வரையிலான அனைத்துக் கட்டங்களிலும் உழைக்கும் வர்க்கத்தின் குருதியைக் குடித்துக் கொழுத்த நிதிமூலதனத்தின் அழுகிய வாழை.

இந்திய கிரிக்கெட் விளையாட்டுக்கு தோராயமாக 320 வயதிருக்கலாம். வணிகம் செய்வதற்காக இந்தியாவுக்குள் நுழைந்த கிழக்கிந்திய கம்பெனி, கிரிக்கெட்டையும் தம்முடன் சுமந்து வந்தது.

1721-ஆம் ஆண்டு பரோடா சமஸ்தானத்தைச் சேர்ந்த கட்ச் கடற்கரையில் வந்து இறங்கிய ஆங்கிலேய மாலுமிகள் இந்திய மண்ணில் முதன் முதலாக கிரிக்கெட் விளையாடினர்.

இதனைத் தொடர்ந்து ஆங்கில இராணுவ அதிகாரிகள் அணிக்கும், ஐரோப்பிய வர்த்தகர்கள் அணிக்கும் இடையேயான முதல் கிரிக்கெட் போட்டி 1751-ஆம் ஆண்டு நடந்தது. இதன் அடுத்தக்கட்டமாக 1848-இல் காலனிய ஆட்சியாளர்களுடன் வர்த்தகம் செய்த பார்சி வணிகர்கள் பார்சி கிரிக்கெட் அணியை உருவாக்கினார்கள்.

பின்னர், இந்திய சமஸ்தானங்களின் மகாராஜாக்களும், ஆங்கிலக் கல்வி பயின்று ஆங்கிலேயருக்கு சேவகம் செய்த அதிகார வர்க்க இந்தியர்களும் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டினர். அவர்களது சார்பில் 1907-இல் இந்துக்களின் அணியும், 1912-இல் இஸ்லாமியர்களின் அணியும் ஏற்படுத்தப்பட்டன. 1930-களில் ஆங்கிலோ இந்திய மற்றும் கிறிஸ்தவ இந்தியர்களின் அணியும் ஆட்டத்தில் சேர்ந்து கொண்டன.

அன்றைய ஐ.சி.சி-ஆக (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) லண்டனிலிருந்து செயல்பட்ட ஏகாதிபத்திய கிரிக்கெட் குழுமத்தில் சேர ஆளும் வர்க்க அடிமைகள் விரும்பினார்கள். இதில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அமைப்பு வேண்டும். இதற்காக சிந்து, பஞ்சாப், பாட்டியாலா, ஐக்கிய மாகாணம், ராஜ்புதனா என்கிற இன்றைய இராஜஸ்தான், போபால், பரோடா, கத்தியவார், மத்திய இந்தியா பகுதிகளிலிருந்த பிரதிநிதிகள் ஒன்று கூடினர். அப்படியாக 1928-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை ஏற்படுத்தினார்கள்.

ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்தியாவில் காங்கிரசிடமும், பாகிஸ்தானில் முஸ்லீம் லீக் கட்சியிடமும் அதிகாரத்தை ஒப்படைத்து விட்டு 1947-இல் வெளியேறினர். எப்படி பல நிர்வாக, அரசியல் அமைப்புகள், சட்ட திட்டங்கள் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் ஆங்கிலேய அதிகாரிகளாலும், ஆங்கிலேய இராணுவத்தாலும் தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்டதோ, அப்படி இந்திய மகாராஜாக்களால் உருவாக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் தொடர்ந்து லண்டனிலிருந்து செயல்பட்ட ஏகாதிபத்திய கிரிக்கெட் குழுமத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்தது.

இந்தச்சூழலில், தனியார் முதலாளிகள் அரசு உரிமங்கள் பெறுவதிலும், காண்டிராக்டுகள் எடுப்பதிலும் கவனம் செலுத்தினர். கௌரவ பதவியான கிரிக்கெட் வாரியத் தலைவர் பொறுப்பை முன்னாள் ஆட்டக்காரர்கள், செல்வாக்கு மங்கிவரும் மகாராஜாக்கள், வயதான தொழிலதிபர்கள், ஓய்வு நேரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் எடுத்துக் கொண்டனர்.

1970-களில் ஒரு நாள் கிரிக்கெட் பிரபலமடைய ஆரம்பித்தது. ஆஸ்திரேலியாவில் கேரி பேக்கர் என்ற ஊடகத் தொழிலதிபர் வெளிப்படையாக சர்வதேச கிரிக்கெட் வாரியத்தைப் புறக்கணித்தார். உலகெங்கிலுமிருந்து கிரிக்கெட் வீரர்களை வரவழைத்து உலகப் போட்டித் தொடரை ஆரம்பித்தார்.

இதைப் பிரபலப்படுத்தவும், பணம் காய்ச்சும் மரமாக மாற்றவும் வண்ண வண்ண உடைகள், தொலைக்காட்சி ஒளிபரப்பு, விளக்கொளியில் ஆட்டம் போன்ற ஜிகினாக்களைப் புகுத்தினார். இதன் வழியாக உழைக்கும் வர்க்கத்தின் பொழுதுபோக்கு அம்சமாக இருந்த திருவிழாவுக்கான இலக்கணங்களை அப்படியே கிரிக்கெட்டில் பொருத்தினார். இதன் வெற்றி கிரிக்கெட்டின் சந்தைப்படுத்தும் வலிமையை நிதிமூலதனத்துக்கு எடுத்துக்காட்டியது.

1980-களில் தொலைக்காட்சி இந்தியா முழுவதும் பரவலானது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவை முக்கியமான சந்தையாக திறந்துவிடும் பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டன. இதனையடுத்து தொலைக்காட்சி ஒளிபரப்புக்கான விளையாட்டாக கிரிக்கெட் மாறியது; மாற்றப்பட்டது. பங்களிப்பை விட பார்த்து மகிழ்வதற்கான வடிவத்தில், கோடிக்கணக்கான நுகர்வோரை ஒரே நேரத்தில் சென்றடைவதற்கான மேடையாக உருவெடுத்தது.

***

1979-ஆம் ஆண்டு, மேற்குவங்கத்தைச் சேர்ந்த டால்மியா தொழில் குடும்பத்தைச் சேர்ந்த ஜக்மோகன் டால்மியா, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் நுழைந்தார். அவர் பொருளாளராக பொறுப்பேற்ற 1983-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த மூன்றாவது ஒரு நாள் உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெற்றது. இதனையடுத்து 1987-இல் உலகக் கோப்பை போட்டியை இந்தியா – பாகிஸ்தானில் கூட்டாக நடத்தும் உரிமையை இந்திய கிரிக்கெட் வாரியம் வென்றது. இந்த போட்டிகளுக்கான புரவலர் வேறு யாருமல்ல… புதிய பொருளாதாரக் கொள்கைகளின் தலைமைப் பூசாரியான அம்பானியின் ரிலையன்ஸ்தான்.

விளைவு, இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் கிரிக்கெட் வெள்ளமென பாய்ந்தது. திறமையான, இளம் கிரிக்கெட் வீரர்கள் தேசிய ஹீரோக்களாக உருவாக்கப்பட்டனர். அவர்களை தத்தெடுத்துக்கொண்ட பெருநிறுவனங்கள் அவர்களது பெயரை தொழில்முறையில் வளர்த்தெடுத்து ரசிகர்களின் மனதில் வழிபடும் விக்கிரகங்களாக பதிய வைத்தன.

1990-களில் உலகமயமாக்கல் அறிமுகப்படுத்தப்பட்டதும் இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைத்த பன்னாட்டு நிறுவனங்கள் அள்ள அள்ள குறையாத அளவுக்கு விளம்பர ஆதரவை இந்திய கிரிக்கெட்டுக்கு வழங்கின. இதன் வழியாக இந்திய நுகர்வோரின் மனதில் ஆணியடித்து அமர்ந்தன. தங்கள் பொருட்களை ‘தரமான பிராண்ட்’ என நம்ப வைத்தன. உழைக்கும் மக்களின் குருதியை பகிரங்கமாக ஸ்ட்ரா வைத்து குடிக்கத் தொடங்கின.

பங்கு கேட்காமல் தாங்கள் குடிக்கும் குருதியிலிருந்து ஒழுகிய குருதியை நக்கத் தொடங்கிய இந்திய தரகு முதலாளிகளின் செயல், ஏகாதிபத்தியங்களை மகிழ்வித்தன. இதற்கு பரிசாக பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து, 1996-ஆம் ஆண்டு வரை ஆங்கில முதலாளிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த சர்வதேச கிரிக்கெட் கழகத்தின் (இப்போதைய ஐ.சி.சி.) தலைமைப் பொறுப்பில் ஜக்மோகன் டால்மியாவை அமர வைத்தன.

ஏகாதிபத்தியங்களின் பினாமியான இந்தியாவில் வளர்ந்தவர் ஜக்மோகன் டால்மியா. எனவே, பினாமிக்குரிய ‘போர்க்குணங்களுடன்’ சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பங்காற்றினார். ஐ.சி.சி-யின் வருமானத்தை அதிகரிக்க சேம்பியன்ஸ் கோப்பை என்ற புதிய போட்டித்தொடரை பன்னாட்டு கிரிக்கெட் கழகத்தின் சொத்தாக உருவாக்கினார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை தேசிய கிரிக்கெட் வாரியங்களிடமிருந்து கைப்பற்றி ஐ.சி.சி-யின் பொறுப்பில் ஒப்படைத்தார். இதன் மூலம், இந்த போட்டிகளின் புரவலராக நீண்ட கால ஒப்பந்தம் போட்டுக்கொள்ளும் வசதியை தன் எஜமானர்களான பன்னாட்டு முதலாளிகளுக்கு ஜக்மோகன் டால்மியா ஏற்படுத்திக் கொடுத்தார்.

விளம்பரத் துறையில் ஐ.பி.எல். அல்லது இந்திய கிரிக்கெட் அல்லது ஒரு டெஸ்ட் போட்டித் தொடரை “பிராப்பர்ட்டி” அல்லது “சொத்து” என்று குறிப்பிடுவார்கள். அதாவது இந்த சொத்தை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விட்டு எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாதித்து அதன் மதிப்பை உயர்த்திக் கொண்டே செல்வது.

கிரிக்கெட் வீரர்களை பிராண்டாக முன் நிறுத்துவது, திரைப்பட நடிகர்களை இணைத்துக் கொள்வது, புதுப் புது வடிவங்களை புகுத்துவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் அந்தச் சொத்தின் மதிப்பை அதிகரித்துக் கொண்டே போக வேண்டும். சொத்தைக் கட்டிக் காப்பது மட்டுமல்ல… அதை வளர்ப்பதும் பினாமியின் வேலைதான். இந்த விதத்தில் ஜக்மோகன் டால்மியா நல்ல வேலைக்காரர் என்பதை நிரூபித்தார்.

‘சொத்தின்’ மதிப்பை அதிகரிப்பதற்காக ஒரு நாள் போட்டி விதிகளில் பார்வையாளர் ஆர்வத்தையும், பரபரப்பையும் பராமரிக்கும் வகையில் பல மாற்றங்கள் அடுத்தடுத்து செய்யப்பட்டன. பிரபலமான தொலைக்காட்சி பார்வை நேரத்துக்கு ஏற்றபடி ஆட்ட நேரங்கள் திட்டமிடப்பட்டன.

ஆனாலும் பன்னாட்டு முதலாளிகளுக்கு பசி அடங்கவில்லை. இந்திய அணியின் வெற்றி – தோல்வியை சார்ந்திராமல் உத்தரவாதமான, இன்னும் அதிகமான விளம்பர வாய்ப்புகள், இந்தியச் சந்தையில் இன்னும் அதிகமான விரிவாக்கம் எல்லாம் தேவைப்பட்டன.

எஜமானர்களின் இந்தக் கனவை நினைவாக்க இந்திய தரகு முதலாளிகள் நான் நீ என போட்டிப் போட்டார்கள். வணிக முக்கியத்துவம் வாய்ந்த கிரிக்கெட் வாரியத்தை கைப்பற்ற ஸ்பிக் நிறுவனத்தின் ஏ.சி.முத்தையா, மகாராஷ்டிராவின் சர்க்கரை ஆலை மற்றும் விவசாய முதலாளியும் அரசியல்வாதியுமான சரத்பவார், இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன் முதலானவர்கள் களத்தில் குதித்தனர்.

2005-ஆம் ஆண்டில் ஜக்மோகன் டால்மியாவின் பினாமியை தோற்கடித்து வாரியத் தலைவர் பதவியை சரத்பவார் கைப்பற்றினார். 2007-ஆம் ஆண்டில் புதிதாக உருவாக்கப்பட்ட டி-20 போட்டி வடிவத்தில் இந்தியா உலகக் கோப்பையை வென்றது. அதன் பிறகு ஒரு திரைப்படம் போல 3 மணி நேர விளையாட்டு, பெண்களின் ஆட்டம் (சியர்ஸ் கேர்ள்ஸ்), விளையாட்டு வீரர்களின் ஆடைகள் என்று விளம்பர சாத்தியங்களை பல மடங்கு திறந்து விட்ட ஐ.பி.எல். எனப்படும் “இந்தியன் பிரீமியர் லீக்” உருவாக்கப்பட்டது.

1975-இல் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், 30 பிராந்திய / மாநில சங்கங்களின் கூட்டமைப்பாக செயல்படுகிறது. அந்த உறுப்பினர் சங்கங்கள் வாக்களித்து செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கின்றனர். தலைவர் பதவியில் ஒருவர் அதிகபட்சம் 3 ஆண்டுகள் மட்டும்தான் இருக்க முடியும் என்ற விதி உள்ளது. அதற்கு பிறகு தமது சார்பில் பினாமி ஒருவரை நியமித்து கட்டுப்பாட்டை உறுதி செய்து கொள்வதுதான் வழி.

நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் வாரியம் நடத்தும் போட்டிகளில் எந்த வர்த்தக நலன்களும் வைத்திருக்கக் கூடாது என்ற விதி ஐ.பி.எல். போட்டிகளுக்காக மாற்றப்பட்டு, ஐ.பி.எல்., டி-20 போட்டிகளில் அத்தகைய வர்த்தக நலன்கள் அனுமதிக்கப்பட்டன. இது, இந்தியா சிமென்ட்ஸ் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சொந்தமாக வைத்துக் கொண்டே, கிரிக்கெட் வாரிய பதவியையும் வகித்த சீனிவாசனுக்கு மட்டுமின்றி, பல ஐ.பி.எல். அணிகளில் பினாமி முதலீடு செய்திருந்த நிர்வாகிகளுக்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தை கொடுத்தது.

***

இப்படி உருவாய் திருவாய் இளதாய் ஒளியாய் மாறியிருக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வயது 97. இதில் முதல் 60 ஆண்டுகளில் கண்டிராத ஊழல்களும் சூதாட்டங்களும் சதித் திட்டங்களும் மர்மங்களும் கடந்த 37 ஆண்டுகளில் வாரியத்துக்குள் எப்படி புகுந்தன?

1990-ஆம் ஆண்டுகளில் தனியார்மயமும் தாராளமயமும் உலகமயமும் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு மறுகாலனியாக்கம் நிலவத் தொடங்கியதும் நிதிமூலதனம் அம்மணமாக வலம் வரத் தொடங்கியிருப்பதுதான் இதற்கான பதில்.

ஜக்மோகன் டால்மியாவுக்கு முன்புவரை இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக இருந்தவர்கள் அரைக்காலனியாதிக்க பண்பாட்டு வழிமுறைகளுடன் வெளிப்படையாக அறம் பேசி, மறைவாக ஊழல் செய்து வந்தனர். நிதிமூலதனம் பெயர் அளவிலாவது கட்டுப்படுத்தப்பட்டது.

தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தை நோக்கி இந்தியா நகரத் தொடங்கிய காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்குள் நுழைந்த ஜக்மோகன் டால்மியா, ஊழலை வெளிப்படையாக்கினார். நிதிமூலதனத்தைச் சுற்றியிருந்த விலங்குகளை உடைத்தெறிந்தார்.

மறுகாலனியாக்கத்தின் பிரதிநிதிகளான மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத் தலைவரும் மத்திய அமைச்சராக இருந்தவருமான சரத் பவார் மற்றும் சென்னை கிரிக்கெட் சங்கத் தலைவரும் இந்திய சிமென்ட்ஸ் முதலாளியுமான என்.சீனிவாசன் ஆகியோர் ஊழல் என்பதே அறம் என ஏற்கும் நிலைக்கு மக்களை தள்ளினார்கள். காற்று நுழைய முடியாத இடத்துக்குள்ளும் நிதிமூலதனம் பாய்வதற்கு ஏற்ப பாதை அமைத்துக் கொடுத்தார்கள்.

இந்த மூவருமே இந்திய கிரிக்கெட்டை சுரண்டச் சுரண்ட பணம் எடுக்கும் மரமாக மாற்றி, இந்திய கிரிக்கெட் வாரியத்தை உலகத்திலேயே பணக்கார விளையாட்டு அமைப்பாக மாற்றிய ‘பெருமைக்குரிய’ தரகு முதலாளிகள் என்றால் அது மிகையில்லை. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இன்றைய மதிப்பு, ஜூலை 2025 நிலவரப்படி ரூ.18,760 கோடி. இதற்கடுத்து இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உள்ளது. இதன் மதிப்பு, ரூ.658 கோடி மட்டுமே. அதாவது முதல் இரு இடங்களுக்கான இடைவெளி கிட்டத்தட்ட ரூ.18 ஆயிரம் கோடி. மூன்றாவது இடத்தில் இங்கிலாந்தின் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.492 கோடி. நான்காவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மதிப்பு ரூ.458 கோடி.

இதனால்தான் சர்வதேச கிரிக்கெட் வாரியம், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என முதலாளித்துவ அறிஞர்கள் பெருமை பொங்க குறிப்பிடுகிறார்கள். உண்மை இதற்கு எதிரானது. இந்திய கிரிக்கெட் வாரியம் என்பதே சர்வதேச நிதிமூலதன முதலாளிகளின் பினாமிதான். இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆடும் போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமை, டிஜிட்டல் உரிமை, ஸ்பான்சர்ஷிப் என அனைத்தையும் கொட்டிக் கொடுப்பது தேசம் கடந்த பன்னாட்டு முதலாளிகளே என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

***

இப்பொழுது மறுகாலனியாக்க கட்டத்தில், அதற்கேற்ப இந்திய கிரிக்கெட் வாரியம் செயல்பட்டு வருகிறது. இதற்கான பொறுப்பை ஏற்றிருப்பவர் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனான ஜெய் ஷா.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த ஜெய் ஷா, இன்று சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஒருங்கிணைப்பதும் அவற்றைத் தோண்டத் தோண்ட பணம் வரும் ஊற்றாக நிலைநிறுத்துவதும் இவரது முதன்மையான பணி.

அரசியலில், அரசாங்கத்தில், ஆளும் வர்க்கத்தில் கிரிக்கெட் வழியாக ஆதிக்கம் செலுத்தும் முதலாளியாக ஜக்மோகன் டால்மியா இருந்தார். ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளான ஏகபோக தரகு முதலாளிகளான அம்பானியும் அதானியும் வெளிப்படையாக ஒன்றிய அரசை ஆட்டிப் படைப்பதற்கு உகந்த சூழலை உருவாக்கிக் கொடுத்திருக்கும் இன்றைய மறுகாலனியாக்க கட்டத்தின் பிரதிநிதியாக சரத்பவாரை தொடர்ந்து ஜெய் ஷா காட்சியளிக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வாரியமும் இந்திய அரசியலும் இரண்டற கலந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இந்தப் ‘பெருமை’யை தாய்திரு நாடாம் இந்தியாவில் தொடங்கி வைத்தவர் வேறு யாருமல்ல, இன்றைய ‘பாரத’ பிரதமரான மோடிதான். இவர், குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது அம்மாநில கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் இருந்தார். பிறகு அப்பணியை அமித்ஷா ஏற்றார்.

எனவே, கிரிக்கெட் வாரியத்தை வைத்துக் கொண்டு அரசியலில் என்னவெல்லாம் செய்யலாம் என்பது இவ்விருவருக்கும் நன்றாகவே தெரியும். அதைத்தான் ஏகாதிபத்தியங்களின் நலன்களுக்காக அரங்கேற்றி வருகிறார்கள்.

***

இவர்களது அனுபவத்துக்கான விதையைத் தூவியது ஆங்கிலேயே ஏகாதிபத்தியம். அதை நீரூற்றி வளர்த்தது நேரு தலைமையிலான அரசாங்கம். ஏகாதிபத்தியம் என்ற பம்ப்செட்டில் இருந்து முதன்முதலில் தூவப்பட்ட விதை செழித்து வளர நீர் பாய்ச்சப்பட்டது 1952-ஆம் ஆண்டு. அந்த வருடம்தான் இந்தியாவில் முதன்முதலில் தேர்தல் நடந்தது. அதே ஆண்டுதான் முதன்முதலில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியும் நடைபெற்றது.

அன்று தொடங்கி இன்று வரை இவ்விரு அணிகளும் மொத்தம் 211-க்கும் மேற்பட்ட முறை மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் 88 போட்டிகளிலும், இந்தியா 80 போட்டிகளிலும் வெற்றிப் பெற்றுள்ளன. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில், பாகிஸ்தான் இந்தியாவை விட அதிக போட்டிகளில் வென்றுள்ளது. அதே நேரத்தில் இந்தியா டி20 போட்டிகளில் அதிகப் போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளது.

ஐ.சி.சி. உலகக் கோப்பைகளில், இரு அணிகளும் 16 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் 15 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. ஒவ்வொரு முறை இந்தியாவும் பாகிஸ்தானும் மைதானத்தில் மோதும் போதும் சம்பந்தப்பட்ட நாடுகளில் ஆட்சி செய்யும் ஏகாதிபத்தியங்களின் அடிவருடி அரசாங்கங்கள் எப்படி அதை அறுவடை செய்யலாம் என்றே ரூம் போட்டு யோசிக்கின்றன. தேர்தல் நேர அறுவடையாகவே விளையாட்டுப் போட்டியை கையாள்கின்றன.

அதனால்தான் ‘தேசப் பெருமையை’ காப்பதற்காக 1962-ஆம் ஆண்டு முதல் 1977-ஆம் ஆண்டு வரை இந்தியாவும் பாகிஸ்தானும் கிரிக்கெட் ஆடவில்லை. மாறாக, இக்காலங்களில் ஏகாதிபத்தியங்களின் அடியாளாக தெற்காசிய பிராந்தியத்தில் இருக்கப் போகிறவர் யார் என்ற போட்டி இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்தது. இதன் விளைவாக 1965 மற்றும் 1971-ஆம் வருடங்களில் யுத்தங்களும் அரங்கேறின.

இடைப்பட்ட 15 ஆண்டுகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேராக கிரிக்கெட் விளையாடவில்லை. இதனால் கிரிக்கெட் வழியாகக் கிடைக்கும் வருவாய் குறைந்தது. எனவே மீண்டும் இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் கிரிக்கெட்டில் மோதிக்கொள்ள வேண்டும் என இரு நாட்டிலும் ஆட்சியில் இருந்த தங்கள் அடிவருடி அரசாங்கங்களை ஏகாதிபத்தியங்கள் முடுக்கிவிட்டன.

சமூக ஏகாதிபத்திய நாடாக விளங்கிய ரஷ்யா, இதற்கான முதல் அடியை எடுத்து வைத்தது. ஆப்கானிஸ்தானை அப்போது ஆக்கிரமித்திருந்த ரஷ்யா, இந்தியாவையும் பாகிஸ்தானையும் கிரிக்கெட் ஆடும்படி கட்டளையிட்டது. ஆனால், இரு நாட்டு பினாமி அரசாங்கங்களும் அதற்குள் தத்தம் மக்களிடம் மற்ற நாட்டின் மீதான வெறுப்பை விதைத்திருந்தன. எனவே, இரு நாடுகளிலும் இரு நாட்டுக்கு இடையிலான போட்டியை நடத்துவது கடினம். நடந்தால் லாபமாக இருக்க வேண்டிய போட்டி கலவரமாக மாறவே வாய்ப்பு அதிகம்.

இதற்கான தீர்வை ஏகாதிபத்தியங்களே முன்வைத்தன. இந்தியாவுக்குள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் வர முடியாது. பாகிஸ்தானுக்குள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் நுழைய முடியாது. சரி. மூன்றாவது நாட்டில் இருவரும் மோதிக் கொள்ளுங்கள் என ஜட்ஜ்மெண்ட் கொடுத்தார்கள். அத்துடன் வாஸ்து சாஸ்திரம் பார்த்து மத்திய கிழக்கு நாடுகளையும் – குறிப்பாக ஷார்ஜா, கனடாவின் டொரண்டோவையும் இருநாட்டு கிரிக்கெட் வீரர்களும் மோதிக் கொள்ளும் களமாக அமைத்துக் கொடுத்தனர்.

இப்படியாக 1978-ஆம் ஆண்டு மீண்டும் இந்தியா பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி தொடங்கியது. 1980-களின் பிற்பகுதியிலும், 1990-களின் பெரும்பகுதியிலும் இந்தியாவும் பாகிஸ்தானும் ஷார்ஜா, கனடாவின் டொரண்டோ ஆகிய ஏகாதிபத்தியங்களால் அடையாளம் காணப்பட்டு கொடுக்கப்பட்ட மைதானங்களில் மட்டுமே மோதின. 1990-களிலும் 2000-களின் முற்பகுதியிலும் கனடாவில் நடந்த இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் அதிகாரப்பூர்வமாக ‘நட்பு கோப்பை’ என்றே அழைக்கப்பட்டன.

இடையில் கார்கில் யுத்தம், 2008-இல் மும்பை பயங்கரவாத தாக்குதல் ஆகிய நிகழ்வின் போது இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இதை நீண்ட காலத்துக்கு இழுத்துப் பிடிக்க ஏகாதிபத்தியங்கள் தயாராக இல்லை. காரணம் சர்வதேச அளவில் நொடிக்கு நொடி வருமானம் தருவது இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டிதான். மிகையில்லை. இரு நாடுகளுக்கு இடையிலான போட்டியின் போது 10 விநாடிக்கு ரூ.16 லட்சம் வரை விளம்பர வருவாய் கிடைப்பது இதில்தான். எனவே, எக்காரணம் கொண்டும் இப்போட்டி தடைபடக் கூடாது என்பதில் பன்னாட்டு நிறுவனங்கள் உறுதியாக இருக்கின்றன. பகை வேண்டும். போட்டியும் நடக்க வேண்டும். இதுதான் ஏகாதிபத்தியங்களின் தாரக மந்திரம்.

எனவே, ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பை, ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசியக் கோப்பை போன்ற அடுத்தக்கட்ட சுரண்டல் வடிவங்கள் பன்னாட்டுப் கிரிக்கெட் போட்டிகளில் உருவாக்கப்பட்டதும் ஏகாதிபத்தியங்கள் செய்த முதல் வேலை இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களை மரபணு மாற்றப்பட்ட முழுமையான பகையாளிகளாக மாற்றியதுதான். இந்த நெருப்பை அணையாமல் பாதுகாக்கும் பொறுப்பை இரு நாடுகளையும் சேர்ந்த ஓட்டுக் அரசியல் கட்சிகள் ஏற்றன.

***

மதவாதத்தை வைத்து பிழைப்பு நடத்திவந்த பா.ஜ.க. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட வரும்போதெல்லாம் காட்டுமிராண்டிகளாக மாறி எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியது. டெல்லி மைதானத்தை சிவசேனா நாசப்படுத்தியது இதன் ஓர் அங்கம். பாகிஸ்தான் வீரர்களைப் பார்த்து “ஜெய் ஸ்ரீராம்” கோஷமிடுவது அதன் மேம்பட்ட வடிவம்.

இப்படியாக பாகிஸ்தான் மீதான இந்துத்துவ பாசிஸ்டுகளின் வெறுப்பை ஒட்டுமொத்த இந்தியர்களுக்குள்ளும் கடத்துவதற்கு, பா.ஜ.க. கிரிக்கெட்டை ஒரு வழிமுறையாக பின்பற்றி வருகிறது. ஒவ்வொரு நொடியையும் இதற்காகவே அர்ப்பணிக்கிறது. அப்படித்தான் 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியையும் பயன்படுத்தியது.

ஏகாதிபத்தியங்களின் ‘செல்லப் பிள்ளை’யாக, நம்பிக்கைக்குரிய பினாமியாக நீடிக்க வேண்டுமென்றால், உழைக்கும் மக்களின் உடலிலுள்ள ஒவ்வொரு செல்லிலும் அணுவிலும் பன்னாட்டு நிறுவனங்களின் “லோகோ”வை பதிக்க வேண்டும். அதில் சிறு பிசிறு ஏற்பட்டாலும், பன்னாட்டு நிறுவனங்கள் தன்னை எட்டி உதைத்து கீழே தள்ளிவிடும் என்பது பா.ஜ.க-வுக்கு நன்றாகவே தெரியும்.

எனவே சந்தர்ப்பம் கிடைக்காவிட்டாலும், சந்தர்ப்பதை உருவாக்கி நிதிமூலதன ‘‘லோகோ’’வை இந்திய உழைக்கும் மக்களின் உடலில் பா.ஜ.க. பதித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை ஏகாதிபத்திய பன்னாட்டு மூலதனங்களின் வேட்டைக்காடாக வடிவமைத்தது.

ஏகாதிபத்தியங்களை நக்கிப் பிழைக்கும் போட்டியில் அம்பானி – அதானி தலைமையிலான ஏகபோக தரகு முதலாளிகளின் பிரதிநிதியான பா.ஜ.க-விற்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே, எதிர்க்கட்சிகள், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை காரணம் காட்டி பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் முன்வரிசையில் நின்று இந்த எதிர்ப்பைத் தெரிவித்தன. நீதிமன்றத்தில் தங்கள் எடுபிடிகளை வைத்து வழக்கும் தொடர்ந்தனர்.

ஆனால், பா.ஜ.க. இதற்கு செவிசாய்க்கவில்லை. பாகிஸ்தானை எதிர்த்து இந்தியா விளையாடும் என பகிரங்கமாக சொல்லாமல் அமைதியாக அறிவித்தது.

ஏனெனில், கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி வழியாக ரூ.10 ஆயிரம் கோடியை லாபமாக சர்வதேச கிரிக்கெட் வாரியம் பெற்றுள்ளது. அப்படியானால் இப்போட்டிகளின் வழியாக பன்னாட்டு முதலாளிகள் எவ்வளவு சம்பாதித்திருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

எனவே, உறுதியாக நிச்சயமாக ஏகாதிபத்தியங்களே கணிக்காத லாபத்தை இந்த ஆசிய கிரிக்கெட் போட்டி வழியாக அவர்களுக்கு பெற்றுத் தந்து, பினாமி அரசியலை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்ற முடிவுடன் பா.ஜ.க. செயல்பட்டது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சொத்து மதிப்பான ரூ.18 ஆயிரத்து 760 கோடியை வைத்து மெகா மகா பட்ஜெட் திரைப்படத்தை தயாரித்தது.

மோடி – அமித்ஷா – ஜெய் ஷா கூட்டணியால் உருவான இத்திரைப்படத்தின் டீசர் செப்டம்பர் 14 அன்று வெளியானது.

பொதுவாக விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் அணிகளின் கேப்டன்கள், ஆட்டம் தொடங்குவதற்கு முன் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொள்வார்கள். விளையாட்டு முடிந்ததும் தோல்வி பெற்ற அணியினர், வெற்றிப் பெற்றவர்களுக்கு கைகொடுப்பார்கள். இதுதான் நடைமுறை.

இந்த வழக்கத்தைதான் செப்டம்பர் 14 அன்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ் மீறினார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனான சல்மான் அலி ஆகாவுடன் கைகுலுக்க மறுத்தார். மட்டுமல்ல இப்போட்டியில் இந்தியா வெற்றிப் பெற்றதும் பாகிஸ்தான் அணியினருக்கு இந்திய அணியைச் சேர்ந்த ஒரு வீரரும் கைகொடுக்கவில்லை.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருடனும் நாங்கள் துணை நிற்கிறோம். அவர்களது குடும்பத்தினருடன் நாங்கள் நிற்கிறோம்… ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்ற எங்கள் துணிச்சலான ஆயுதப்படைகளுக்கு எங்கள் வெற்றியை அர்ப்பணிக்கிறோம். அவர்கள் தொடர்ந்து நம் அனைவரையும் ஊக்குவிப்பதால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர்களை பதிலுக்கு ஊக்கப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்…” என்றவர் தொடர்ந்து சொன்னதுதான் அடிகோடிட வேண்டிய செய்தி.

“இந்திய அரசாங்கமும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் எங்களுடன் ஒன்றிணைந்து நிற்கின்றன…” இதன் மூலம் கைகொடுக்க மறுக்கும் இந்த நடவடிக்கை முன்பே திட்டமிடப்பட்டது என்பதை உலகுக்கு அல்ல பன்னாட்டு நிதிமூலதனத்துக்கு அறிவித்தார்.

இப்படி விளையாட்டுப் போட்டியில் எதிரணியினர் கைகுலுக்க மறுப்பது ஒன்றும் புதிதல்ல. 2019-ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றுக்கு மேரி கோம் நேரடியாகச் செல்வதற்கு நிகாத் ஜரீன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து 2020 பிப்ரவரியில் இருவருக்கும் இடையில் தேர்வுப் போட்டி நடைப்பெற்றது. மேரி கோம் இதில் வெற்றிபெற்று ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றுக்கு தேர்வானார். இப்போட்டி முடிந்ததும் நிகாத் ஜரீனுடன் கைகுலுக்க மேரி கோம் மறுத்துவிட்டார். இது இரு தனிநபர்களுக்கு இடையிலான விசயம்.

2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரையடுத்து உக்ரைன் டென்னிஸ் வீரர்கள் ரஷ்ய டென்னிஸ் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தனர். அதேபோல் 2023-ஆம் ஆண்டு உலக ஃபென்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில், உக்ரைன் ஃபென்சிங் வீராங்கனை ஓல்கா கார்லன், ரஷ்ய வீராங்கனையுடன் கைகுலுக்க மறுத்தார். இவை இரண்டும் இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு இடையில் நடந்த எதிர்ப்புக்கான உதாரணங்கள்.

ஆனால், 2025-ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் நடந்துகொண்டது தேசவெறியை கிளப்பிவிட்டு ஏகாதிபத்தியங்களின் லாபத்தை கொழுக்கச் செய்யும் நடவடிக்கையாகும்.

செப்டம்பர் 14 அன்று இந்திய கிரிக்கெட் அணியினர் இப்படி நடந்து கொள்வார்கள் என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமோ பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களோ எதிர்பார்க்கவில்லை. எனவே, இதற்கு பதிலடி கொடுக்கத் தயாரானார்கள். இந்திய வீரர்களும் இதை எதிர்கொள்ள முடிவு செய்தார்கள்.

இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 21 அன்றும், இறுதிப் போட்டி நிகழ்ந்த செப்டம்பர் 28 அன்றும் அரங்கேறிய காட்சிகள் அருவருப்பின் எல்லைகளைக் கடந்தது.

ஏகபோக ஏகாதிபத்திய தரகு முதலாளிகள் ஆட்டிப் படைக்கும் அரசால் வளர்க்கப்பட்ட அந்நாட்டின் ஏகாதிபத்திய அடிமைகள் எந்தளவுக்கு தரம் தாழ்ந்து போவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்திய – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் நடந்து கொண்டார்கள்.

இந்தியாவால் பெயர் சூட்டப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில், இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது என்பதற்கு அடையாளமான செய்கைகளை மைதானத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் செய்ய… பாகிஸ்தான் போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது என்பதை உணர்த்தும் விதமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் செய்கை செய்ய…

உலகமே முகம் சுளித்தது. ஆனால், ஏகாதிபத்தியம் மகிழ்ந்தது. ஏனெனில் இந்த ஒவ்வொரு செய்கையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக ஒளிபரப்பாக பன்னாட்டு நிறுவனங்களுக்கான வருமான வருவாய் ரீல்ஸ், கிளிப்பிங்ஸ், இன்ஸ்டா பதிவுகளின் வழியாக ஏறுமுகத்தில் பாய்ந்தது.

அனைத்துக்கும் உச்சம் செப்டம்பர் 28 அன்று நிகழ்த்தப்பட்ட காட்சி. ஆசிய கோப்பையில் வெற்றிப் பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ், கோப்பையை பெற மறுத்துவிட்டார். காரணம், அக்கோப்பையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரிடமிருந்து பெற வேண்டும். அந்தத் தலைவர் மொஹ்சின் நக்வி. இந்த நக்வி, பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர். மட்டுமல்ல பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இப்போதைய தலைவரும் மெஹ்சின் நக்விதான். எதிரியின் கையிலிருந்து எப்படி கோப்பையை வாங்க முடியும்? அது பஹல்காமில் உயிரிழந்த இந்தியர்களுக்கு செய்யும் ‘துரோகம்’ என்பது சூர்யகுமார் யாதவின் வாதம்.

எனவே எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு துணை தலைவர் கலித் அல் ஜரூனி கோப்பையை வழங்க வேண்டுமென சூர்யகுமார் யாதவ் வலியுறுத்தினார். இதை, தனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதிய நக்வி, கோப்பையுடன் ஹோட்டலுக்கு சென்றுவிட்டார்.

உடனே இந்திய கேப்டனான சூர்யகுமார் யாதவ், தன் அணியினருடன் பதிலுக்கு மைதானத்தை விட்டு வெளியேறவில்லை. மாறாக அடுத்தக் காட்சிக்கு நகர்ந்தார்.

வாங்காத, வாங்க மறுத்த ஆசியக் கோப்பையைப் பெற்றுக் கொண்டதுபோல் மைதானத்தில் செய்கைகளைச் செய்யத் தொடங்கினார் இந்திய கேப்டன்.

அதாவது மகிழ்ச்சியுடன் கோப்பையை பிடித்துக் கொண்டு வருவதுபோல் தன் அணியினரை நோக்கி வந்தார். உண்மையிலேயே கோப்பை வருவதுபோல் இந்திய கிரிக்கெட் வீரர்கள் உடனே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என துள்ளினார்கள்.

இக்காட்சிகள் ஒளிபரப்பாக ஆக கேமராவுக்கு வெளியே பன்னாட்டு நிறுவன முதலாளிகளும் துள்ளிக் குதித்தார்கள். நொடிக்கு நொடி காசு பணம் துட்டு மணி மணி டாலர் டாலர் கொட்டத் தொடங்கியது, இரத்தக் காட்டேறிகளை கூத்தாட வைத்தது.

இந்த மகிழ்ச்சியை இவர்களின் விசுவாச அடிமைகளான மோடியும் அமித்ஷாவும் எதிரொலித்தார்கள். ஆபரேஷன் சிந்தூரில் வெற்றிப் பெற்ற போது மகிழ்ந்ததுபோல் இப்பொழுதும் ஆனந்தமடைவதாக இருவரும் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்கள். இந்திய ஊடகங்கள், ‘சும்மா பேச்சுக்கு’ இந்திய கிரிக்கெட் வீரர்களின் செயலைக் கண்டித்தன.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், “இது அறமற்ற செயல்” என இந்திய கிரிக்கெட் வாரியத்தையும் இந்திய வீரர்களையும் குற்றம்சாட்டியதுடன் நிறுத்திக் கொண்டது. ஏனெனில், கடந்த மூன்று ஆண்டுகளில் நான்கு தலைவர்கள், எட்டு வெவ்வேறு பயிற்சியாளர்கள், நான்கு கேப்டன்கள், 26 தேர்வாளர்கள் என சுழலும் கதவாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது.

இப்போது துபாயில் இருக்கும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை அலுவலகத்தில் ஆசிய கோப்பை உள்ளது. இந்தியாவின் பக்கம், இலங்கை, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் நிற்கின்றன. இவர்கள் ஒன்று சேர்ந்து ஆசிய கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி மொஹிசின் நக்விக்கு கடிதம் எழுதினர்.

இதற்கு, “இந்திய கிரிக்கெட் வாரிய தரப்பிலிருந்து யாராவது ஒருவர் துபாய் வந்து, தன்னிடமிருந்து கோப்பையை பெற்றுக் கொள்ளலாம்” என நக்வி பதிலளித்தார்.

இதை இந்திய கிரிக்கெட் வாரியம் நிராகரித்துவிட்டது. இப்பிரச்சினை அடுத்து நடக்கவுள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில், அக்கவுன்சிலின் இப்போதைய தலைவரான ஜெய் ஷா முன் தீர்வு காணப்படும் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

எனவே, மோடி – அமித்ஷா பிரதர்ஸ் வழங்கும் “ஆசிய கிரிக்கெட் கோப்பை 2025” மெகா மகா பட்ஜெட் படத்தின் க்ளைமாக்ஸ் அக்கூட்டத்துக்குப் பிறகுதான் வெளியிடப்படும். இந்த ரிலீஸ் நிகழ்வையும் நிதிமூலதன பாய்ச்சலுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்திய கிரிக்கெட் வாரியம் நடந்து கொள்ளும்.

இந்த மெகா மகா பட்ஜெட் படம் வெற்றியா? இதற்கு, ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு அடுத்து நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டிலும், அக்டோபர் இறுதியில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் வெளியிடப்பட்ட புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பதிலளிக்கிறது.

இந்தப் புதிய படத்தையும் மோடி – அமித்ஷா பிரதர்ஸ்தான் தயாரிக்கிறார்கள். பட்ஜெட் (மூலதனம்) மட்டும் இன்னும் முடிவாகவில்லை. தீர்மானிக்க வேண்டிய நிதிமூலதனம் இதுகுறித்து ஆலோசித்து வருகிறது. கணிசமான பட்ஜெட் கிடைக்கும் என மோடி – அமித்ஷா கும்பல் நம்புகிறது; எதிர்பார்க்கிறது.

காரணம், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிரடியாக இருந்ததுதான்.

வேறொன்றுமில்லை. மகளிர் ஆசிய கோப்பை விளையாட்டில் பாகிஸ்தான் அணி வீராங்கனைகளுடன் கைகுலுக்க இந்திய அணி வீராங்கனைகள் மறுத்துவிட்டனர். காரணம் ஆபரேஷன் சிந்தூர்.

ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் பஹ்ரைன் நாட்டின் மனாமா நகரில் அக்டோபர் மாத இறுதியிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கபடி விளையாட்டு முதல் தடவையாக சேர்க்கப்பட்டுள்ளது. இதில் இந்திய – பாகிஸ்தான் கபடி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பாகிஸ்தானை 81-26 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆனால், பாகிஸ்தான் கபடி வீரர்களுடன் இந்திய கபடி வீரர்கள் கைகுலுக்கவில்லை. காரணம் ஆபரேஷன் சிந்தூர்.

இப்படியாக புத்தம் புதிதாக இரண்டு அரங்கங்களை ஏகாதிபத்திய நிதிமூலதன கும்பலுக்கு மோடியும் அமித்ஷாவும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்துள்ளனர். ஒன்று இந்திய மகளிர் கிரிக்கெட். அடுத்தது இந்திய கபடி அணி. இனி மெல்ல மெல்ல இவ்விரு சந்தைகளும் விரிவடையத் தொடங்கும்.

மகளிர் கிரிக்கெட் வழியாக இந்திய பெண்களுக்கான உடை, அரிதாரத்தில் தொடங்கி உதிரும் முடி வரை ‘பிராண்டட்’ பொருட்களாகும். கபடி ஆட்டத்தின் வழியாக சிறுநகர கிராமப்புற மக்கள் மத்தியில் ஏகாதிபத்திய பண்பாட்டு விழுமியங்கள் வலுவாகக் காலூன்றும்.

வெறி நாய் கடித்தால் என்ன ஆகும்? கடிபட்டவரும் வெறி நாய் போல மாறுவார். நிதி மூலதனமும் அப்படித்தான். அது பாயும் இடங்கள் எல்லாம் மதவாத, இனவாத தோற்றத்துடன் இரத்தம் குடிக்கும் காட்டேறியாக மாறும். நாகரீகமான அடிப்படைப் பண்புகள் என்று கருதப்படுபவை எல்லாம் வெந்து சாம்பலாகும்.


கவின்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க