12.06.2026
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே கடலுக்குள் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி கோரி இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான “ஹிந்துஸ்தான் ஆயில் கார்ப்பரேஷன்” விண்ணப்பம் கொடுத்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.
ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமாக ஏற்கெனவே இருக்கும் எண்ணெய்க் கிணறுகளில் எண்ணெய் வளம் வேகமாகக் குறைந்து வரும் நிலையில், புதிய ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க அந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. பொதுத்துறை நிறுவனம் என்ற பெயரில் அதிகார வர்க்கத்தினர், இந்தியாவைச் சூறையாடி வருகின்ற கார்ப்பரேட் முதலாளிகளின் லாபவெறிக்காக தமிழ்நாட்டின் மையப் பகுதியான கடலூர் கடற்கரை பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கின்ற திட்டத்தை அமல்படுத்துவதற்குத் துடித்துக் கொண்டுள்ளனர்.
இந்த 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளும் பரங்கிப்பேட்டையில் இருந்து 18 கி.மீ தொலைவில் வங்கக்கடலில் அமைக்கப்படவுள்ளன. இந்தப் பகுதிகள் தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருவதால் அதன் அனுமதி கேட்டு ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
வங்காள விரிகுடா கடலில் கலக்கின்ற பெண்ணையாறு, கெடிலம் மற்றும் பரவலாறு ஆகிய மூன்று ஆறுகளும் ஒன்று கூடுகின்ற “கூடல் ஊர்” என்பதுதான் பிரிட்டன் ஆட்சியில் மருவி கடலூர் என்றானது. இதுதான் கடலூர் என்பதன் பெயர்க் காரணம். தற்போது தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக கடலூர் திகழ்கிறது.
ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நாகப்பட்டினம் முதல் சென்னை வரை நீண்டு விரிந்துள்ள கடற்கரை பரப்புகளில் அலையாத்தி காடுகள் என்று சொல்லக்கூடிய மாங்குரோவ் காடுகள் (சதுப்புநிலக் காடுகள்) முக்கியமான இயற்கை பாதுகாப்பு அரணாகவும், இயற்கை கொடையாகவும் திகழ்ந்து கொண்டிருந்தது.
படிப்படியாக இந்த அலையாத்திக் காடுகள் அழிக்கப்பட்டு கடலோரத்தில் புதிய தொழிற்சாலைகளும், புதிய நகரப் பகுதிகளும் உருவானதன் விளைவாக இயற்கை பேரழிவிலிருந்து நம்மைக் காப்பாற்றுவதற்கு இயற்கையே ஏற்படுத்திக் கொடுத்த கொடையான மாங்குரோவ் காடுகள் இன்று பெயரளவிற்கு சில பகுதிகளில் மட்டுமே நீடித்துக் கொண்டுள்ளது.
இதனையும் முழுமையாக ஒழித்துக் கட்டுவதற்கு கடலோரப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கொண்டு வருவதன் மூலம் சுற்றுச் சூழலுக்கு இயற்கை வழங்கியுள்ள பாதுகாப்பிற்கும், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதியில் வாழ்கின்ற மக்களின் உயிராதாரத்திற்கும் சாவு மணி அடிப்பதற்குத் துணிந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகத் தொடர்ச்சியாக பல்வேறு கட்ட போராட்டங்களும், மக்கள் அதிகாரக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து கூட்டாகவும், தனித்தனியாகவும் போராடி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வைத்தனர். இதனால்தான் டெல்டா மாவட்டங்களில் இதுவரை அதிகாரப்பூர்வமாக ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்குத் தடை நீடிக்கிறது.
2018 ஆம் ஆண்டிலேயே இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் ஹைட்ரோகார்பன் இயக்குநரகம் (சி.ஜி.எச்) சார்பில், மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் பல்வேறு பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்களுடன் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதில், தூத்துக்குடியின் ஸ்டெர்லைட் ஆலையை நடத்திய கொலைகார நிறுவனமான வேதாந்தா நிறுவனத்துக்கு 41, ஆயில் இந்தியாவுக்கு 9, ஓ.என்.ஜி.சி-க்கு 2, கெயில், பாரத் பெட்ரோ ரிசோர்ஸ், இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் கம்பெனி ஆகிய பொதுத் துறை நிறுவனங்களுக்கு தலா ஒரு இடம் கிடைத்துள்ளது. மொத்தம் உள்ள 55 இடங்களில் நிலப் பகுதியில் 46, கடல் பகுதியில் 9 இடங்கள் அமைய உள்ளன. இவற்றில் 3 இடங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.
புதுச்சேரியின் காரைக்காலில் தொடங்கி தமிழ்நாட்டில் விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை ஒட்டிய ஆழம் குறைந்த கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தாவுக்கு 2 இடங்கள் கிடைத்துள்ளன. இவைதவிர, பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி-க்கு சிதம்பரத்தை ஒட்டிய நிலப்பகுதியில் ஓர் இடம் கிடைத்துள்ளது என்று அப்போதே செய்திகள் வெளியாகின.
தமிழ்நாட்டில் தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களின் காரணமாக ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், ஏற்கெனவே ஆட்சியிலிருந்த தி.மு.க மக்களின் போராட்டங்களின் அழுத்தத்திற்குப் பணிந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் தடுத்து வந்த நிலையில், மீண்டும் ஹைட்ரோ கார்பன் அனுமதி கோரி இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் பொதுத் துறை நிறுவனம் விண்ணப்பம் கொடுத்திருப்பதும், படிப்படியாக அதை அங்கீகரிப்பதற்கு ஒன்றிய அரசாங்கம் தமிழ்நாடு அரசை நிர்ப்பந்திப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
கடலூரில் உள்ள கடற்கரை பரப்பில் பரங்கிப்பேட்டை முதல் கடலூர் வரை பல்வேறு ரசாயன உரத் தொழிற்சாலைகளும், மக்களின் உயிரைக் குடிக்கின்ற கெம்பிளாஸ்ட் சன்மார் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. கடலூரில் முக்கியமான தொழிலான மீன்பிடி தொழில் படிப்படியாக அழிந்து வருகிறது. இந்த சூழலில் ஹைட்ரோ கார்பன் திட்ட அனுமதி கடலூர் மாவட்டத்தை முற்றாக நரக வாழ்க்கையில் தள்ளிவிடும் அபாயம் கொண்டது.
ஏற்கெனவே நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் மூலம் கிராமங்களை படிப்படியாக காலி செய்துவிட்டு பூமிக்கு அடியில் புதைந்து கிடக்கின்ற நிலக்கரியைத் தோண்டி எடுக்கிறோம் என்ற பெயரில் தண்ணீரை உறிஞ்சி எடுப்பதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் பல மடங்கு குறைந்துள்ளது. சுற்றுச் சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கடலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கொடுப்பது கடலூர் மாவட்டத்திற்கே சமாதி கட்டுவதற்குச் சமமாகிவிடும்.
தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரங்களைப் பிடுங்கி எறிந்து கொண்டும், கடற்கரை ஓரத்தில் மீன்பிடி தொழிலில் உள்ள மீனவர்களின் வாழ்க்கையை அழித்தும் அவர்களின் பிணங்களுக்கு மேலே உருவாக்கப்படும் எந்த ஒரு திட்டமும் மக்கள் விரோதத் தன்மை கொண்டதுதான். அந்த அடிப்படையில் இத்திட்டத்தை அனுமதிக்கக் கூடாது.
இதுபோன்ற நாசகர திட்டங்களை ஒருபோதும் அனுமதிக்கவே கூடாது என்று போராடுவோம். கடலூரை மட்டுமல்ல தமிழ்நாட்டையும் பாதுகாப்போம்.
மக்கள் அதிகாரக் கழகம்.
கடலூர் மாவட்டம்.
9443849915
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











