
15.06.2026
கடலூரில் ஹைட்ரோ கார்பன் எடுக்க
இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் விண்ணப்பம்!
தமிழ்நாட்டை நாசமாக்காதே!
பத்திரிகைச் செய்தி
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டைப் பகுதியிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் கடலில் நான்கு ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளது.
ஏற்கெனவே அப்பகுதிகளில் செயல்படும் கிணறுகளில் ஹைட்ரோ கார்பன் குறைந்து போவதால் புதிய கிணறுகள் அமைப்பதற்கு அனுமதி கேட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்துள்ளனர். இப்படிப்பட்ட சூழலில்தான் பரங்கிப்பேட்டையில் இருந்து கடலில் 18 கிலோமீட்டர் தொலைவில் நான்கு கிணறுகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அந்த நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
சுனாமியின் போதும் தொடர்ந்து ஏற்பட்ட பெரு வெள்ளங்களின் போதும் கூட கடலூர் மாவட்டம் பெருமளவில் பாதிக்காமல் இருந்ததற்கு காரணம் மாங்குரோவ் என்று அழைக்கப்படும் அலையாத்திக் காடுகள்தான். இந்துஸ்தான் ஆயில் நிறுவனத்தின் விண்ணப்பத்தை ஏற்று ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு அனுமதி அளித்தால் மாங்குரோவ் காடுகள் அழிந்து போகும். கடல் வளம் பாதிக்கப்பட்டு மீன் வளமும் கடலில் வாழ்கின்ற பல்லுயிர்களும் அழிந்து போகும்.
இந்துஸ்தான் ஆயில் நிறுவனத்தின் விண்ணப்பத்தினை நிராகரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் கனிம வளங்கள், இயற்கை வளங்களைச் சூறையாடும், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் எவ்வித கார்ப்பரேட் நிறுவனங்களின் திட்டங்களுக்கும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





