கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்புரிமையை ரத்துசெய்து தனது நீண்டகால இலக்கை நிறைவேற்றிக் கொண்டது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பல். மேலும் அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகத் துண்டாடியது. காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமையை ரத்து செய்ததன் மூலம் காஷ்மீரில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது; காஷ்மீர் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்று மோடி-அமித்ஷா கும்பல் கொக்கரித்தது.
ஆனால், கடந்த 2021-ஆம் ஆண்டு காஷ்மீரில், “லஷ்கர்-இ-தொய்பா” (Lashkar-e-Taiba) பயங்கரவாதக் குழுவின் பின்னணியில் இயங்கக்கூடிய “எதிர்ப்பு முன்னணி” (TRF-The Resistance Front) என்ற புதிய பயங்கரவாதிகள் குழு, சிறுபான்மை இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளடங்கிய அப்பாவி பொதுமக்களை சுட்டுக்கொன்றது. காஷ்மீரிகள் அல்லாதவர்கள் காஷ்மீர் பகுதியில் குடியேறினால் அவர்களையும் நாங்கள் ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகளாகத்தான் கருதுவோம் என்று அப்பாவி மக்களைச் சுட்டுக் கொன்றதற்கு நியாயம் கற்பித்தது. இத்தாக்குதல்கள் காஷ்மீரில் அமைதி நிலைநாட்டப்பட்டுவிட்டதாக மோடி-அமித்ஷா கும்பல் பேசியதெல்லாம் அப்பட்டமான பொய் என்பதை எடுத்துக்காட்டின.
இந்நிலையில், காஷ்மீர் பகுதியில் தாக்குதல்களை அரங்கேற்றிய பயங்கரவாதக் குழுக்கள், அண்மைகாலமாக ரஜோரி, பூஞ்ச், ரியாசி, தோடா, கதுவா, உதம்பூர் உள்ளிட்ட ஜம்மு பகுதிகளை நோக்கி தங்களது தாக்குதல்களை விரிவுப்படுத்தியிருப்பது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
ஜம்முவில் புதிய உச்சநிலையில் பயங்கரவாதம்
கடந்த ஜூன் 8 அன்று, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆன்மீகப் பயணமாக ஜம்முவின் ரியாசி மாவட்டத்திலுள்ள சிவகோத்ரியிலிருந்து கத்ராவில் உள்ள வைஷ்ணவி கோவிலுக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர், 33 பேர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதலானது, காவி பாசிசக் கும்பலுக்கு சவால்விடும் வகையில், மூன்றாவது முறையாக மோடி ஒன்றிய பிரதமராக பதவியேற்ற நாளான ஜூன் 8 அன்று நடத்தப்பட்டிருக்கிறது. மேலும், இத்தாக்குதலுக்கு “எதிர்ப்பு முன்னணி” பொறுப்பேற்றிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது.
இதற்கு அடுத்து ஜூன் 11 மற்றும் 12 அன்று ஜம்முவின் கதுவாவின் சத்தர்கலா மற்றும் தோடா மாவட்டத்தின் கண்டோ சோதனைச்சாவடிகளில் நடத்தப்பட்ட இரட்டைத் தாக்குதலில் ஆறு இராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கின்றனர். ஜூன் 26 அன்று தோடா மாவட்டத்தில் உள்ள கண்டோ பகுதியில் நடைபெற்ற மோதல் கொலையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஜூலை 7, ரஜௌரியில் உள்ள சோதனைச்சாவடியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் காயமடைந்துள்ளார்.
ஏப்ரல் இறுதி முதல் ஜூலை வரையிலான மூன்று மாதக் காலத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் ஜம்முவில் நடத்தப்பட்டுள்ளன.
ஜூலை 8 அன்று கதுவா மாவட்டத்தில் உள்ள பத்னோடா கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர், 5 பேர் காயமடைந்திருக்கின்றனர். அதே நாளில் காஷ்மீரின் குல்காம் பகுதியிலும் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. அதே மாதம் 15-ஆம் தேதி, தோடா மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதலில் 4 இராணுவ வீரர்கள், ஒரு அதிகாரி என 5 பேர் உயிரிழந்திருக்கின்றனர். “ஜெய்-இ-முகம்மது” (JeM-Jaish-e-Mohammad) என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் பின்னணிக் கொண்ட “காஷ்மீர் புலிகள்” (The Kashmir Tiger) என்ற பயங்கரவாதிகள் குழு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. எதிர்ப்பு முன்னணியைப் போலவே காஷ்மீர் புலிகளும் காஷ்மீரின் சிறப்புரிமை பறிக்கப்பட்ட பிறகு உருவான பயங்கரவாதக் குழு என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் இறுதி முதல் ஜூலை வரையிலான மூன்று மாதக் காலத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் ஜம்முவில் நடத்தப்பட்டுள்ளன. 2002-க்கு பிறகு ஜம்முவில் இத்துணை அதிக எண்ணிக்கையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அரங்கேறுவது இதுவே முதன்முறையாகும். இவை 1990 மற்றும் 2000-த்தின் தொடக்கக் காலங்களில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை நினைவுப்படுத்துபவையாக அமைந்துள்ளது.
இதனை மூடிமறைக்க முயலும் சங்கிகளும் பா.ஜ.க. சார்பு ஊடகங்களும் தற்போதைய பயங்கரவாதத் தாக்குதல்கள் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் காஷ்மீரில் நடத்தப்படுவதாக நயவஞ்சகமாகக் குறிப்பிடுகின்றன. ஆனால், சங்கிக் கூட்டத்தால் மூடிமறைக்க முடியாத அளவிற்கு அடுத்தடுத்த தாக்குதல்கள் அரங்கேறி, காஷ்மீரை காட்டிலும் ஒப்பீட்டளவில் குறைந்த வன்முறைகள் அரங்கேறும் ஜம்முவும் பயங்கரவாதத்தின் குவிமையமாக மாறியுள்ளது என்ற உண்மை பொதுவெளியில் அம்பலமாகி நாறியுள்ளது.
இதன் மூலம், பாசிச மோடி-அமித்ஷா கும்பல் காஷ்மீரின் சிறப்புரிமையைப் பறித்ததே ஜம்மு-காஷ்மீரில் புதிய இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதக் குழுக்கள் உருவாகி பயங்கரவாதத் தாக்குதல்களை புதிய உச்சநிலைக்கு கொண்டுசென்றுள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது. இது, இந்தியாவில் நடைபெறும் இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு அடிப்படையாக இருப்பது இந்துமதவெறிதான் என்ற வரலாற்று உண்மையை மீண்டும் நிரூபித்திருக்கிறது.
இராணுவ ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் ஜம்மு
ஜம்முவில் அதிகரித்துவரும் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “பயங்கரவாத ஒழிப்பு விவகாரத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டத் திட்டங்களை ஜம்மு பிராந்தியத்திலும் நிறைவேற்ற வேண்டும்” என்று உத்தரவிட்டிருக்கிறார். இதன் பிறகு, 500 துணை கமாண்டோக்களை ஜம்மு பகுதியில் குவித்திருக்கிறது, இந்திய ராணுவம். இராணுவ வீரர்கள் ரோந்து செல்வதற்காக 200 கவச பாதுகாப்பு வாகனங்களும் இந்திய ராணுவத்தால் வழங்கப்பட்டிருக்கிறது.
மேலும், தன் கைவிரலைக் கொண்டு தன் கண்களையே குத்துவது போல, ஜம்மு மக்களைக் கொண்டே கிராம பாதுகாப்புக் குழுக்கள் என்ற பெயரில் குண்டர் படைகளை உருவாக்கி ஜம்மு மக்களை வேவு பார்க்கிறது, இந்திய ராணுவம். பிகார், சத்தீஸ்கர் மாநிலங்களில் நக்சல் ஒழிப்பு, மாவோயிஸ்ட் ஒழிப்பு என்ற பெயரில், தங்கள் தாயான மலைகளைக் காக்கப் போராடுகிற பழங்குடி மக்கள் மீது தாக்குதல் நடத்த பழங்குடிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட “சல்வா ஜூடும்” (Salwa Judum) என்ற குண்டர் படையை ஒத்தவையே இக்குழுக்கள்.
இதுமட்டுமின்றி, ஏற்கெனவே தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிற பல இஸ்லாமிய இளைஞர்களை கைது செய்திருக்கிறது ஜம்மு போலீசுத்துறை. ரியாசி மாவட்டத்தில் நடைபெற்ற பேருந்து தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் 150 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் பல நேரங்களில் தீவிரவாதிகளுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் இதர உதவிகள் வழங்கியிருக்கிறார் என்று ரஜௌரி மாவட்டத்தைச் சேர்ந்த ஹகம் தின் என்ற 45 வயதுடைய நபர் போலீசுத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூன் 19 அன்று பத்திரிகையாளர் சந்திப்பின் போது, “இக்கைது ஒரு சாதனை” என்று ரியாசி மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் மொஹிதா சர்மா கூறியிருக்கிறார். மேலும், ஹகம் தனது வீட்டில் பயங்கரவாதிகளைத் தங்கவைத்து, அவர்களுக்கு உணவளித்து, அடர் வனப்பகுதிக்குள் அவர்களைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்; அதற்காக ரூ.6,000 பணம் பெற்றிருக்கிறார் என்று அள்ளிவிட்டிருக்கிறார், மொஹிதா. ஆனால் ஹகம்தான் பயங்கரவாதிகளுக்கு உணவளித்தார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. அதேபோல், ரியாசி பேருந்து தாக்குதலுக்குப் பிறகு, ஆயுதச்சட்டம், ஊபா போன்ற கருப்புச் சட்டங்களில் சில இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜம்முவில் உள்ள உள்ளூர் மக்களில் சிலர் பயங்கரவாதிகளை ஆதரிப்பது உண்மைதான். ஜம்மு-காஷ்மீரின் தேசிய இன உரிமையை மறுத்து இந்திய அரசு செலுத்தும் இராணுவ ஒடுக்குமுறை மற்றும் காவி பாசிசக் கும்பல் தங்களுடைய இந்துராஷ்டிரக் கனவிற்காக காஷ்மீரின் சிறப்புரிமையைப் பறித்தது என அனைத்தும் சேர்ந்துதான் அம்மக்களை பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. ஆனால், இந்த உண்மையை மூடி மறைத்துவிட்டு பயங்கரவாத வலைப்பின்னல் ஒழிப்பு, தேடுதல் வேட்டை என்ற பெயரில் அப்பாவி இஸ்லாமிய மக்களை போலீசுத்துறையாலும் இராணுவத்தாலும் வேட்டையாடி பொய் வழக்குகளில் சிறையில் அடைக்கிறது, பாசிச மோடி அரசு.
மேலும், ஜம்முவின் பூஞ்ச், ரஜௌரி மாவட்டங்களில் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்று சந்தேகிப்பவர்களை இந்திய இராணுவம் கைது செய்து சித்திரவதைகள் செய்வதோடு கொலை செய்வதாகவும் மோடி இராணுவத்தின் முகத்திரையைக் கிழித்திருந்தது, “மோடி ஆட்சியில் இராணுவம்” என்ற தலைப்பிடப்பட்ட பிப்ரவரி 2024 “தி கேரவன்” இதழில் வெளியான “இராணுவ நிலையத்திலிருந்து அலறல்கள்” என்ற கட்டுரை. பின்னர், ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் நெருக்கடியால் இக்கட்டுரை இணையத்திலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு மக்களைக் கொண்டே கிராம பாதுகாப்புக் குழுக்கள் என்ற பெயரில் குண்டர் படைகளை உருவாக்கி ஜம்மு மக்களை வேவு பார்க்கிறது, இந்திய ராணுவம். இக்குழுக்கள் “சல்வா ஜூடும்” (Salwa Judum) என்ற குண்டர் படையை ஒத்தவையே.
இதன் மூலம், காஷ்மீரிகளின் தேசிய விடுதலை உணர்வை ஒடுக்குவதற்காக பல ஆண்டுகளாகக் கையாண்ட இந்த வழிமுறையையே, பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் தற்போது ஜம்முவிற்கும் விரிவுப்படுத்த எத்தணிக்கிறது காவி பாசிச மோடி-ஷா கும்பல். ஆனால், ஜம்முவில் பயங்கரவாதம் தலைவிரித்தாட ஊற்றுக்கண்ணாக இருந்த ராணுவ ஒடுக்குமுறைகளும் பாசிச அடக்குமுறைகளும் பயங்கரவாதத்தை மூர்க்கப்படுத்துமே ஒழிய முடிவுக்கு கொண்டுவராது என்பதே எதார்த்தம்.
கானல் நீரான மாநில அந்தஸ்தும் கைக்கெட்டாத தேர்தலும்
ஜம்முவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவதையடுத்து, காஷ்மீர் மக்களுக்கு ஜனநாயகம் வழங்க வேண்டியதன் அவசியத்தை ஜனநாயக சக்திகள் வலியுறுத்தி வருகின்றனர். சட்டமன்றத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர். நடந்து முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. மோடி கும்பலை துரத்துவதற்காகவும், கைது செய்யப்பட்டு சிறைகளில் வாடுகிற நூற்றுக்கணக்கான அப்பாவி இஸ்லாமியர்களின் விடுதலைக்காகவும் காஷ்மீர் மக்கள் பா.ஜ.க-விற்கு எதிராக வாக்களித்திருந்தனர். இதன் காரணமாக, இத்தேர்தலில் காஷ்மீரின் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், 2021-ஆம் ஆண்டிலிருந்து ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடத்தாமல் அம்மக்கள் மீது சர்வாதிகார ஆட்சி செலுத்திவந்த பாசிச பா.ஜ.க. கும்பல், வருகிற ஆகஸ்ட் மாதத்தில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது; தேர்தல் பொறுப்பாளர்களை நியமிப்பது உள்ளிட்ட தேர்தலுக்கான ஏற்பாடு வேலைகளையும் செய்து வருகிறது; ஆனால், காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டாலும் அதுவெறும் கண்துடைப்பிற்கானது மட்டுமே என்பதை பாசிசக் கும்பலின் நடவடிக்கைகளே தெளிவுப்படுத்துகிறது.
2021-ஆம் ஆண்டிலிருந்து ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடத்தாமல் அம்மக்கள் மீது சர்வாதிகார ஆட்சியை செலுத்தி வருகிறது பாசிச பா.ஜ.க. கும்பல்
ஏனெனில், ஜம்முவில் அதிகரித்துவரும் பயங்கரவாதத் தாக்குதல்களை முகாந்திரமாகக் கொண்டு, அண்மையில் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்து துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கயிருக்கிறது ஒன்றிய உள்துறை அமைச்சகம். இச்சட்டத் திருத்தத்தின்படி, போலீசு, பொது நிர்வாகம், அகில இந்திய குடிமைப் பணிகள் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையம் தொடா்பாக நிதித்துறையின் முன்அனுமதி பெற வேண்டிய முன்மொழிவுகள் தலைமைச் செயலர் மூலமாக துணைநிலை ஆளுநருக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கப்படாமல் அந்த முன்மொழிவுகள் மீது முடிவுகள் எடுக்கப்படக் கூடாது. அதேபோல், மாநில அரசு வழக்குரைஞா் மற்றும் பிற வழக்குரைஞர்களை நியமனம் செய்வதற்கான பரிந்துரைகளை, சட்டம், நீதி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள்துறை தலைமைச் செயலர் மூலம் துணைநிலை ஆளுநரிடம் சமர்ப்பிக்க வேண்டும். சிறைகள், தடயவியல் ஆய்வக விவகாரங்கள் தொடா்பான பரிந்துரைகளையும் துணைநிலை ஆளுநரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சக செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சட்டத் திருத்தத்தின் மூலம், காவல், பொது நிர்வாகம், குடிமைப் பணிகள் என அனைத்து அதிகார வர்க்க மட்டங்களிலும் ஆர்.எஸ்.எஸ்-காரர்களை அதிகாரிகளாக நியமித்துக்கொள்ள முடியும். ஏற்கெனவே இராணுவ ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் மக்களை மேலும் இந்துத்துவப் பிடிக்குள் நெருக்குவதாகவே இது அமையும்.
தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் என எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநரைக் கொண்டு இணையாட்சி நடத்துகிறது பாசிசக் கும்பல். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடந்தாலும், தற்போது துணைநிலை ஆளுநரின் கண்காணிப்பில் காலனியாக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர், தேர்ந்தெடுக்கப்பட்ட பொம்மை அரசின் கட்டுப்பாட்டில் காலனியாக நீடிக்கும் என்பதைத் தவிர வேறு எந்த மாற்றமும் நிகழாது.
மேலும், அதிகரித்துவரும் பயங்கரவாதத் தாக்குதல்களை காரணம் காட்டி பாசிசக் கும்பல் தேர்தலை நடத்தவிடாமல் செய்தவதற்கும் வாய்ப்புள்ளது. சான்றாக, இதுவரை நடந்த பத்துக்கும் மேற்பட்டத் தாக்குதலில் ரியாசி மற்றும் கதுவாவில் இராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்டத் தாக்குதல்களுக்கு மட்டுமே பயங்கரவாத அமைப்புகள் பொறுப்பேற்றுள்ள நிலையில், மீதமுள்ள தாக்குதல்களை மோடி இராணுவமே திட்டமிட்டு நடத்தியிருப்பதற்கான வாய்ப்புள்ளதாகவும் நம்பப்படுகிறது. நாடு முழுவதும் முற்போக்காளர்கள் படுகொலை, ரயில் எரிப்பு, புல்வாமா தாக்குதல் என பயங்கரவாதத் தாக்குதல்களை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க திட்டமிட்டு அரங்கேற்றியிருப்பதை எவராலும் மறுக்க முடியாது.
எனவே, ஜம்மு-காஷ்மீரில் இராணுவத்தை குவிப்பதும்; ஒடுக்குமுறைகளை தீவிரப்படுத்துவதும்; கண்துடைப்பிற்காக தேர்தல் நடத்துவதும் பயங்கரவாதம் மேலும் வலுப்பெறுவதற்கான வாய்ப்பையே வழங்கும். காஷ்மீரி மக்களுக்கான தேசிய சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டி அம்மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை வழங்குவது மட்டுமே ஜம்மு-காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டும்.
அப்பு
(புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube