ஆகாஷ் டெலிசன்: உயர் நீதிமன்றத்தின் விசித்திரமான ‘கருணை’!

இன்று, ஆகாஷ் படுகொலையின் நூறாவது நாள்! மக்கள் அதிகாரக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜனநாயக சக்திகள், அமைப்பினர் தமிழ்நாடு முழுவதும் மனு கொடுத்துப் போராடி வருகின்றனர். இதே நூறாவது நாளில், நீதிமன்றத்தில் உடலை எரிப்பதற்கான உத்தரவும் வருவது, தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை போலீசு கொட்டடியில் ஆகாஷ் டெலிசன் படுகொலை செய்யப்பட்ட நூறாவது நாள் இன்று. இன்றுவரை, அவரைக் கொன்ற போலீசு குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை, அவரது உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோர் போராடி வருகின்றனர். இந்நிலையில், இன்று, மதுரை உயர் நீதிமன்றமும் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு தனது தீர்ப்பைக் கூறியுள்ளது.

“காவல் நிலையத்தின் வாசலோடு அரசமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவு முடிந்துவிடுவதில்லை. காவல் வன்முறை என்பது சட்டத்தின் ஆட்சிக்கு எதிரான மிகக் கொடிய தாக்குதல்.” இது, ஆகாஷ் படுகொலை தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஜூன் 10-ஆம் தேதி உதிர்த்த முத்துக்கள்!

ஆகாஷ் படுகொலை என்பது வெறும் போலீசு கொட்டடி கொலை மட்டுமல்ல, அது ஒரு சாதிவெறிக் கொலை என்பதை உணர்ந்தவர்களுக்கு உயர்நீதிமன்றத் தீர்ப்பின் உண்மைப் பரிமாணம் புரியவரும்.

ஆனால், சரியாக ஐந்து நாட்கள் கழித்து, இன்று, அதே நீதிமன்றம் ஆகாஷின் குடும்பத்திற்கு வழங்கிய உத்தரவு என்ன தெரியுமா? “இன்று மாலை ஐந்து மணிக்குள் உடலைப் பெற்றுக்கொள்ளுங்கள். இல்லையெனில் காவல்துறையே சட்டப்படி உடலை அடக்கம் செய்ய உத்தரவிட நேரிடும்.”

ஒருபுறம் மனித உரிமை குறித்து வியாக்கியானம் பேசுவது; மறுபுறம், போலீசு சித்திரவதையால் மகனைப் பறிகொடுத்துவிட்டு நீதி கேட்டுப் போராடும் பெற்றோரை, “மாலை 5 மணிக்குள் உடலை வாங்கு, இல்லையென்றால் நாங்களே புதைப்போம்” என்று அதிகாரத்தைக் கொண்டு மிரட்டுவது.

நமது நீதிமன்றத்தின் இந்த சுயமுரண்பாட்டைப் புரிந்து கொள்வது எப்படி?

உயிருடன் இருந்த ஆகாஷுக்கு வழங்கப்படாத ‘கண்ணியம்’, அவரது பிணத்துக்காவது உடனடியாக வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் விரும்புகிறதோ?

இது, நமது நீதித்துறையின் விசித்திரமான ‘கருணை’!

போலீசைத் தோலுரித்த மரண வாக்குமூலம்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த 26 வயதான தலித் இளைஞர் ஆகாஷ் டெலிசன். மார்ச் 5 அன்று ஒரு குற்றவழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். போலீசு நிலைய ‘விசாரணைக்குப்’ பின் கால் முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆகாஷ், மார்ச் 8 அன்று உயிரிழந்தார். ‘போலீசிடமிருந்து தப்பி ஓடி, பாலத்திலிருந்து குதித்ததால் கால் முறிந்தது’ என்ற வழக்கமான கட்டுக்கதையை அவிழ்த்துவிட்டது, போலீசு.

ஆனால், மரணப்படுக்கையில் ஆகாஷ் இருந்தபோது, மாஜிஸ்திரேட்  நேரில் சென்று பதிவு செய்த மரண வாக்குமூலத்தில் இருப்பது என்ன? “கண்களைக் கட்டி, காலை கற்களின் மீது வைத்து, ஈரமான சாக்குப்பையால் சுற்றி, இரும்புக் கம்பியால் தாக்கினார்கள்” என்று படிக்கும்போதே நமக்கு வலிக்கும் ஒரு வாக்குமூலத்தைப் பதிவு செய்துவிட்டு இறந்து போயிருக்கிறார், ஆகாஷ். அவரது உடலில் இருந்த காயங்களையும் நீதித்துறை நடுவர் பதிவு செய்துள்ளார்.


படிக்க: ஆகாஷ் டெலிசன் உடலை வாங்க மறுத்த 100வது நாள்! தமிழ்நாடு முழுவதும் மனு கொடுக்கும் இயக்கம்


இந்த மறுக்க முடியாத ஆதாரத்திற்குப் பிறகுதான் வழக்கே கொலை வழக்காக மாற்றப்பட்டது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள் பாய்ந்தன. விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாறியது. கொலையாளிகளான போலீஸ்காரர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டார்கள்.

இந்த நிலையில் ஆகாஷின் குடும்பம் கேட்பது என்ன?

“என் மகனைக் கொன்ற கொலையாளிகளைக் கைது செய், உரிய தண்டனை வழங்கு” என்பதைத் தவிர வேறு என்ன அநியாயமான கோரிக்கையைக் கேட்டுவிட்டார்கள்?

தங்களின் மகனை இந்த நிலைக்கு ஆளாக்கிக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை எதிர்த்தும் நீதிகேட்டும், ஒரு ஏழைக் குடும்பம் தன்னிடம் எஞ்சியிருக்கும் ஒரே ஆயுதமாக “உடலை வாங்க மாட்டோம்” என்று கடந்த 100 நாட்களாகப் போராடுகிறது. அதற்கு ஆதரவாக ஜனநாயக சக்திகள் துணை நிற்கிறார்கள்.

ஆனால், நீதிமன்றமோ, குற்றவாளிகளான போலீசோடு சேர்ந்துகொண்டு ஆகாஷின் உடலை அடக்கம் செய் என்கிறது; அதற்கு அவசரம் காட்டுகிறது.

குடும்பத்துக்குக் மாலைவரை கெடு;
கொலையாளிகளுக்குக் காவலா?

ஆகாஷின் உடல் மூன்று மாதங்களுக்கும் மேலாக மதுரை அரசு மருத்துவமனை பிணவறையில் அழுகிக் கிடப்பதாகவும், மருத்துவர்களுக்கே தொற்று அபாயம் இருப்பதாகவும் அரசுத் தரப்பு நீலிக்கண்ணீர் வடிக்கிறது. ஆகாஷின் உடலைக் கண்ணியமாக அடக்கம் செய்ய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அந்த உடல் இத்தனை நாட்களாகப் பிணவறையில் கிடக்கக் காரணம் யார்?

ஆகாஷைக் கொன்றவர்கள் சாதாரண நபர்கள் என்றால் இந்நேரம் கொலை வழக்கில் சிறையில் இருந்திருப்பார்கள். நிச்சயமாகக் கடும் தண்டனை கிடைக்கும் நிலை ஏற்பட்டிருக்கும்.

ஆனால் கொலையாளிகள் காக்கிச் சீருடையில் இருப்பதால் அரசுக் கட்டமைப்பே அவர்களைப் பாதுகாக்கிறது. இந்த அரச பயங்கரவாதிகளைத் தண்டிக்கத் துப்பில்லாத நீதிமன்றம், “உடல் அழுகுகிறது; உடனே வாங்குங்கள்” என்று பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் மட்டும் ‘அறச்சீற்றம்’ கொள்கிறது.

ஒரு ஏழைக் குடும்பத்திற்கு மாலை 5 மணி என்ற துல்லியமான காலக்கெடுவை விதிக்கும் நீதிமன்றம், கொலைகாரர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிப்பதில் கறார் காட்ட மறுக்கிறது.

நீதி தேவதையின் கடிகாரம், அதிகாரிகளைப் பொறுத்தவரை அரசு அலுவலகக் கடிகாரத்தைப் போலவும், சாமானியர்களைப் பொறுத்தவரை ‘டைம் பாம்’ போலவும் நடிக்கிறது.

கொலையாளிகளிடமே உடலை ஒப்படைக்கும் வக்கிரம்!

இந்த உத்தரவின் ஆகப்பெரிய கொடூரம் என்ன தெரியுமா?

குடும்பம் உடலைப் பெறாவிட்டால், அந்த உடலை “சட்டப்படி” அடக்கம் செய்யும் பொறுப்பு காவல்துறையிடமே வழங்கப்படுமாம். ஆகாஷை உயிருடன் காவலில் எடுத்தது, போலீசு. அடித்துத் துவைத்து காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பியது. மரணத்திற்குக் காரணமாக இருந்ததும் போலீசே. இப்போது அதே உடலை குடும்பத்திடமிருந்து பிடுங்கி அடக்கம் செய்யத் தயாராக நிற்பதும் அதே போலீசு!

இதைவிட முழுமையான “சட்டத்தின் ஆட்சி” வேறு எங்கே நடக்க முடியும்?

இறந்தவரின் உடலைப் புதைக்கச் சொல்லி மிரட்டுவதிலா கண்ணியமும், நீதியும் அடங்கியிருக்கின்றன?

இல்லை, கொலையாளிகளைத் தண்டிப்பதில்தான் உண்மையான நீதியும் கண்ணியமும் இருக்கின்றன.

உடலைப் புதைக்க இத்தனை அவசரப்படும் நீதிமன்றம், நீதிக்காக ஏன் அவசரப்படுவதில்லை என்பதில் தான் அதன் வர்க்கத் தன்மையும் நீதிமன்றத்தின் உண்மைத் தன்மையும் அடங்கியிருக்கிறது.

போராடும் போதுதான் ‘பொதுமக்களை’ நினைக்கும்
விசித்திரமான அக்கறை!

நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம், ஆகாஷின் குடும்பத்துக்கு நேர்ந்தது, ஏதோ உணர்ச்சிவசப்பட்ட ஒரு தனிப்பட்ட அநீதி அல்ல.

இது, உழைக்கும் மக்கள் அரசுக்கு எதிராகப் போராடும் போதெல்லாம் நீதிபதிகளிடம் தவறாமல்  வெளிப்படும் அப்பட்டமான ஆளும் வர்க்கப் பாசம்தான்.

தொகுப்பூதியத்தில் பணியாற்றிய செவிலியர்கள் பணிநிரந்தரம், எட்டு மணி நேர வேலை என்று வீதிக்கு வந்தபோது, “போராடுவது சட்டவிரோதம்; பணிக்குத் திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும், பொதுமக்களைப் பிணைக்கைதியாக வைக்காதீர்கள்” என்றது இதே நீதிமன்றம்தான்.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் அகவிலைப்படி நிலுவைக்காகப் போராடியபோது, “பொங்கல் காலத்தில் மக்கள் பாதிக்கப்படுவார்கள்” என்று தடுத்து நிறுத்தியதும் இதே நீதிமன்றம்தான்.


படிக்க: திருப்புவனம் இளைஞர் லாக்கப் படுகொலை: கொலைகார போலீசை கைது செய்


பன்னிரண்டு மணி நேரம் உழைக்கும் செவிலியரும், வாழ்நாளெல்லாம் ஸ்டியரிங்கைப் பிடித்த போக்குவரத்துத் தொழிலாளியும் இந்த நீதிமன்றத்தின் பார்வையில் பொதுமக்களே இல்லையா?

தொழிலாளியை அரசு மாதக்கணக்கில் வஞ்சித்தால், வதைத்தால் அது வெறும் ‘நிர்வாக முடிவு’. ஆனால், அந்தத் தொழிலாளி வீதியில் இறங்கினால் அது ‘பொதுமக்களுக்கு எதிரான குற்றம்’ என்று நீதிமன்றம் கொக்கரிக்கும்.

இதுதான் நீதிக்கான ‘கடைசிப் புகலிடத்தின்’ இலட்சணம்!

டி.கே. ரங்கராஜன் வழக்கில் (2003) “அரசு ஊழியர்களுக்கு வேலைநிறுத்தம் செய்ய அடிப்படை உரிமையே இல்லை” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பெழுதியதும் இந்த வர்க்கத் திமிரில்தான்.

உழைப்பைச் சுரண்டுவது அரசின் உரிமை; அதை எதிர்க்கும் உரிமை தொழிலாளிக்கு இல்லை என்பதுதான் நீதிமன்றத்தின் நிலைப்பாடு.

நீதி கிடைப்பது எங்கே:
நீதிமன்றப் படியிலா? போராட்டத்திலா?

ஆகாஷ் வழக்கில் கொலைப் பிரிவு சேர்க்கப்பட்டதும், சி.பி.சி.ஐ.டி. விசாரணை வந்ததும் நீதிமன்றத்தின் கருணையால் மட்டுமா?

மானாமதுரை மக்களின் வீரியமான போராட்டம், ஜனநாயக அமைப்புகளின் தலையீடு ஏற்பட்ட அழுத்தத்தின் விளைவுதான், அது.

இன்று, ஆகாஷ் படுகொலையின் நூறாவது நாள்! மக்கள் அதிகாரக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜனநாயக சக்திகள், அமைப்பினர் தமிழ்நாடு முழுவதும் மனு கொடுத்துப் போராடி வருகின்றனர். இதே நூறாவது நாளில், நீதிமன்றத்தில் உடலை எரிப்பதற்கான உத்தரவும் வருவது, தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.

இப்போது ஆகாஷின் குடும்பத்திடம் நீதிமன்றமும் அதிகார வர்க்கமும், “உடலை வாங்கிக் கொள்ளுங்கள்” என மிரட்டுகின்றன.

இவர்களின் அதிகாரத்தைக் கொண்டு, பெற்றோரின் சம்மதமின்றியே நாளை ஆகாஷின் உடல் அடக்கம் செய்யப்படலாம். ஆனால், அவன் மரணம் எழுப்பிய கேள்வியை புதைத்துவிட நாம் அனுமதிக்க முடியுமா?

இப்போது நீதிமன்றமும், போலீசும் சொல்ல வருவது இதைத்தான்:

நீதி வேண்டுமா போராடுங்கள்; 100 நாட்களாக நடத்திய போராட்டத்தை விட இன்னும் வீரியமாகப் போராடுங்கள்; நீதிமன்றப் படிக்கட்டுகளில் அல்ல, வீதிகளில்…!

ஆம், ஆகாஷின் குடும்பத்திற்குத் தோள்கொடுத்துத் தொடர்ந்து போராடுவோம்! கொலையாளிகள் தண்டிக்கப்படும் வரை,
நீதி நிலைநாட்டப்படும் வரை வீதிகளில் இறங்கிப் போராடுவோம்.!


தமிழ்ச்சுடர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க