ந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள அனந்தநாக், காஷ்மீர் பிரச்சினையில் அதிக அளவில் பாதிக்கப்பட்ட பெண்களைக் கொண்ட பகுதி.  பலர் தங்களுடைய கணவர்களை, மகன்களை, தந்தைகளை இழந்தவர்கள்.  மேலும், ஏறக்குறை 1500 அரை கைம்பெண்களுக்கு தங்களுடைய கணவர்கள் எங்கே இருக்கிறார்கள் எனத் தெரியாது.

“நான் நான்கு மகன்களை இழந்திருக்கிறேன். அதில் மூவர் கிளர்ச்சியாளர்கள். நான்காவது மகன், கிளர்ச்சியாளர்களுக்கு உணவு எடுத்துக்கொண்டு போனபோது, என்கவுண்டர் செய்யப்பட்டான்” என்கிறார் 83 வயதான நப்சா பானோ. தெற்கு காஷ்மீரில் உள்ள சோம்ப்ரைட் கிராமத்தில் சிறியதொரு வீட்டில் வசிக்கிறார் இவர்.

நப்சா தன்னுடைய மகன்கள் உயிரிழந்த நேரத்தை நினைவில் கொண்டுவருகிறார்.  சிறுநீரக பிரச்சினை காரணமாக தனது கணவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்தபோது தனது நிலைமை மிகவும் மோசமடைந்துவிட்டதாகச் சொல்கிறார் இவர்.

அணு ஆயுத நாடுகளான இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தீர்க்கப்படாத பிரச்சினையாக காஷ்மீர் உள்ளது. இரு நாடுகளும் இந்தப் பகுதியை முன்வைத்து இரண்டு போர்களை நிகழ்த்திவிட்டன.  கடந்த மூன்று பத்தாண்டுகளில் 70 ஆயிரம் மக்கள் தங்களுடைய வாழ்க்கையை தொலைத்திருக்கிறார்கள்.

மன்சூர் அகமதுவின் 85 வயதான தாய் குருஷி, அரை இருள் சூழ்ந்த அறையில் தனது மகன் இறந்ததைக்கூட அறியாமல் அமைதியாக இருக்கிறார். இந்திய இராணுவத்தில் பணியாற்றிய அகமது, ஜம்மு பகுதியில் 2018-ம் ஆண்டில் நடந்த சன்ஜுவான் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

“அவர் திரும்பத் திரும்ப தன்னுடைய மகனைப் பற்றி கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர் உயிரோடு இல்லை என்பதை அவர் அறியவில்லை” என்கிறார் அகமதுவின் தங்கை. “தன்னுடைய மகனின் தொலைபேசி அழைப்புக்காக அவர் காத்திருக்கிறார்”.

படிக்க:
இந்தியனே…. காஷ்மீரின் குரலைக் கேள் !
காஷ்மீர் : ஊரடங்கு மட்டுமல்ல உள்ளத்தையும் அடக்கும் இந்திய அரசு !

மனநல மருத்துவரான ஆரிஃப் மக்ரிபி கான், ஸ்ரீநகர் பகுதியில் மனநல பிரச்சினைக்குள்ளான நோயாளிகளுக்கென்று தன்னார்வதொண்டு நிறுவனம் ஒன்றை நடத்துகிறார். 2016-ம் ஆண்டுக்கு பிறகு நோயாளிகளின் வருகை அதிகமாகியுள்ளதாக தெரிவிக்கிறார்.

“இவர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினை அதிர்ச்சியினால் ஏற்படக்கூடிய மன உளைச்சல் சீர்கேடு (post-traumatic stress disorder – PTSD). ஒரு பெண் தன்னுடைய குடும்ப உறுப்பினரை இழக்கும்போது, பல மாதங்களுக்கு PTSD தவிர்க்க முடியாததாகிறது.  அது இன்னும் மோசமான பிரச்சினைகளுக்கு இட்டுச் சென்று, அதிலிருந்து வெளிவர முடியாமல் போகிறது” என்கிறார் ஆரிஃப்.

முகப்புப் படத்துக்கான குறிப்பு: தெற்கு காஷ்மீரின் சோபியனில் ஒரு கிளர்ச்சியாளரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட பெண்கள்.  2016-ம் ஆண்டு ஆளுமைக்குரிய கிளர்ச்சியாளர் புர்ஹான் வானி கொல்லப்பட்டதற்கு பிறகு, சோபியன் மற்றும் புல்வாமா மாவட்டங்கள் உள்ளூர் கிளர்ச்சியாளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

ஷகிலாவின் கணவர் ஒரு போலீசு அதிகாரி. ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு வெளியே அவரும் உடன் பணியாற்றியவர்களும் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டனர்.  “என்னுடைய குழந்தைகள் அவருடைய அப்பாவைப் பற்றி தொடர்ந்து கேட்டபடியே இருக்கிறார்கள். அவருக்கு என்ன நடந்தது என்பது அவர்களுக்குத் தெரியாது. சில நேரங்களில் அவர்களுடைய கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடிவதில்லை” என்கிறார் ஷகிலா.

காஷ்மீரில் 1500-க்கும் மேற்பட்ட அரை கைம்பெண்கள், தங்களுடைய கணவர்களின் வருகைக்காக காத்திருக்கிறார்கள்.

தெற்கு காஷ்மீரில் உள்ள குத்வானியில் என்கவுண்டர் நடந்த இடத்திலிருந்து அதிச்சிக்குள்ளான ஒரு பெண்ணை ஒரு இளைஞர் அழைத்துச் செல்கிறார். கடந்த சில ஆண்டுகளில் இந்தப் பகுதி அதிகப்படியான எதிர்த்தாக்குதல்களையும் என்கவுண்டர்களையும் எதிர்கொண்டு வருகிறது.

நான்கு மகன்களை இழந்த நப்சா பானோ.

தெற்கு காஷ்மீரில் கிளர்ச்சியாளர் ஆசிப் மாலிக்கின் தாய், அவருடைய இறுதி ஊர்வலத்தில் முழுக்கங்களை எழுப்புகிறார்.

16 ஆண்டுகளாக தனது கணவரின் வருகைக்காக காத்திருக்கிறார் நசீமா பானோ. காஷ்மீரில் காணாமல் போன 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரில் அவரும் ஒருவர்.

தெற்கு காஷ்மீரின் கொகெர்நாக் பகுதியில் பாதுகாப்புப் படையால் கொல்லப்பட்ட கிளர்ச்சியாளருக்கு அஞ்சலி செலுத்தும் பெண்கள்.

இந்திய பாதுகாப்புப் படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில், குல்காமின் வானிகுந்த் பகுதியில் உள்ள வீட்டிலிருந்த யாஷ்மினாவின் மகள் முஸ்கானின் நெற்றியைத் துளைத்தது ஒரு துப்பாக்கிக் குண்டு.

இந்திய இராணுவத்தில் பணியாற்றிய மன்சூர் அகமதுவின் 85 வயதான தாய் குருஷி, தன் மகன் பலியானதை இன்னமும் அறியவில்லை.

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் நகரில் உள்ள ஒரு சன்னதிக்கு வெளியே வழிபடும் பெண்கள்.

காஷ்மீரி கிளர்ச்சியாளரின் தாய் இவர். எல்லை தாண்டிச் சென்ற 20-களில் இருந்த இவருடைய மகன் திரும்பவேயில்லை. 1990-களின் ஆரம்ப காலத்தில் காஷ்மீரில் கிளர்ச்சியாளர்கள் உருவாகத் தொடங்கியபோது, பல இளம் சிறார்கள் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீருக்குள் ஆயுத பயிற்சிக்காகவும் இந்தியாவின் ஆட்சியை எதிர்த்தும் போராடவும் எல்லைத் தாண்டிச் சென்றார்கள்.

தெற்கு காஷ்மீரின் அர்வானி கிராமத்தில் ஒரு கிளர்ச்சியாளரின் இறுதி சடங்கை பார்வையிடும் பெண்கள்.

தெற்கு காஷ்மீரில் உள்ள சூஃபி சன்னதியை வணங்கும் ஒரு பெண்.


தமிழாக்கம்: கலைமதி
நன்றி: அல்ஜசீரா


படிக்க:
காஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம் !
காஷ்மீர்: இந்திய இராணுவமே வெளியேறு!
காஷ்மீர்: அரசுப் படைகளின் கொலைவெறி!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க