Monday, March 1, 2021
முகப்பு போலி ஜனநாயகம் இராணுவம் காஷ்மீர் : ஊரடங்கு மட்டுமல்ல உள்ளத்தையும் அடக்கும் இந்திய அரசு !

காஷ்மீர் : ஊரடங்கு மட்டுமல்ல உள்ளத்தையும் அடக்கும் இந்திய அரசு !

-

“அன்றைக்கு மசூதி முற்றுகையிடப்பட்டிருந்தது. இந்தப் பகுதியே பெரும் பரபரப்பில் இருந்ததால் ஜாவேதின் பள்ளிக்கு விடுமுறை அறிவித்திருந்தார்கள். அவன் பக்கத்தில் இருந்த பிள்ளைகளோடு விளையாடி விட்டு சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தான். அவன் வந்து கொஞ்ச நேரத்தில் படைவீரர்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார்கள். நாங்கள் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே எனது மகனைத் தூக்கிச் சென்றார்கள். நாங்கள் அவர்களிடம் கெஞ்சினோம்… ஆனால் அவர்கள் அதைப் பொருட்படுத்தவே இல்லை” என்கிறார் ஹஃபீசா பானு. காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹஃபீசா.

அது 1993-ம் ஆண்டின் குளிர்காலம். அப்போது ஹஸ்ரத்பால் மசூதி முற்றுகைக்குள்ளாகியிருந்தது. மொத்த மாநிலத்தின் மீதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஹஃபீசா மனநோயால் பாதிக்கப்பட்ட ஒரு காஷ்மீரித் தாய்.

கடத்திச் செல்லப்பட்ட தங்கள் பிள்ளையை மீட்க அந்தக் குடும்பம் எடுத்த முயற்சிகள் ஏதும் பலனளிக்கவில்லை. தீவிரவாத கும்பலைச் சேர்ந்த ஜாவேதை தாங்கள் கைது செய்து அழைத்துச் செல்லும் வழியில் தப்பிச் சென்று விட்டானென்று சாதிக்கிறது போலீசு. போலீசால் ‘தீவிரவாதி’ எனச் சொல்லப்படும் ஜாவேதின் வயது 13. ஜாவேதைத் தேட அலைந்து திரிந்த ஹஃபீசாவுக்கு அவரது மகள் ருக்‌ஷானா உதவியாக இருந்திருக்கிறார். சரியாக மூன்று வருடங்கள் கழித்து, 1996-ல் மனவுளைச்சல் தாளாமல் மாரடைப்பில் ருக்‌ஷானா இறந்த போது அவளுக்கு வயது 14.

இன்று ஹஃபீசா பானுவுக்கு வயதாகி விட்டது. தனது வீட்டின் மேற்கூரையை வெறித்துப் பார்த்துக் கொண்டோ, அல்லது கூரையில் உள்ள உத்திரங்களை மீண்டும் மீண்டும் எண்ணிக் கொண்டோ, அல்லது வீட்டுக் கதவில் உள்ள விரிசல்களை எண்ணிக் கொண்டோ, கம்பளிப் போர்வையில் அச்சிடப்பட்டிருக்கும் மலர்களை எண்ணிக் கொண்டோ தனது பொழுதைப் போக்குகிறார்.

ஹஃபீசா பானு குடும்பத்தினருடன்

மூன்று சிறிய அறைகளுடன் சமையல் அறையும் கொண்ட வீட்டில் ஹஃபீசா வசிக்கிறார். மண்சுவர்களால் ஆன ஒரு அறையில் உடலுறுப்பை இழந்த உறவினர் ஒருவர் வசிக்கிறார்; விருந்தினர்களை வரவேற்க மற்றொரு அறை; தனது இறந்து போன மகள் மற்றும் காணாமல் போன மகனின் நினைவுகளால் நிரப்பப்பட்ட அந்த மூன்றாவது அறையில் வசிக்கிறார் ஹஃபீசா.

அந்த அறையில் ஒரு கட்டில் போடப்பட்டுள்ளது. அதன் ஒரு முனையில் உடைந்த வானொலிப் பெட்டி ஒன்று கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளது; இன்னொரு முனையில் விதவிதமான மாத்திரைகள் நிறைந்த ஜாடி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்தப் படுக்கையில் தான் ஹஃபீசா துயில்கிறார். ஒவ்வொரு இரவும் ஈது பண்டிகைக்காக தனது மகனுக்குப் புத்தாடைகள் எடுப்பது போல் கனவு காண்கிறார் – மறுநாள் காலை அழுது கொண்டே விழித்தெழுகிறார். ஹஃபீசா மனநோயால் பாதிக்கப்பட்ட ஒரு காஷ்மீரத் தாய்.

மனநலன் சார்ந்த பிரச்சினைகள் காஷ்மீர் மாநிலத்தில் அசாதாரணமாக நிலவுகின்றது. இது குறித்து பல்வேறு தன்னார்வக் குழுக்கள் ஆய்வுகள் நடத்தி உள்ளன. எல்லைகள் இல்லாத மருத்துவர்கள் (Doctors without Borders) என்கிற அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்று சரிபாதி காஷ்மீரிகள் ஏதோவொரு வகையில் மனநலன் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது.

அதே போல், கடந்த ஏப்ரல் 7-ம் தேதியன்று கடைபிடிக்கப்பட்ட உலக சுகாதார தினத்தை முன்னிட்டு “மன அழுத்தம் குறித்துப் பேசுவோம்” என்கிற தலைப்பிலான நிகழ்வுக்கு சிரீநகர் அரசு மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில், “காஷ்மீரில் சமூகம் சார்ந்த மனநோய் ஆய்வு” என்கிற அறிக்கை ஒன்று சமர்பிக்கப்பட்டுள்ளது.  இமான்ஸ் (IMHANS – Institute of Mental Health and Neurosciences) மற்றும் சில தன்னார்வக் குழுக்கள் காஷ்மீர் மக்களிடையே செய்த ஆய்வுகளை அடிப்படையாக கொண்டதே மேற்படி அறிக்கை.

சுமார் 11.3 சதவீத காஷ்மீரிகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்கிறது இப்புதிய ஆய்வு.  இது நாட்டின் பிற பகுதிகளை ஒப்பிடும் போது அசாதாரணமான அளவில் அதிகமாக உள்ளதென ஆய்வு நடத்திய தன்னார்வக் குழுக்கள் தெரிவித்துள்ளன. கலவரங்கள் மற்றும் வன்முறைகளின் விளைவாக ஏற்படும் அதிர்ச்சிகரமான சம்பவங்களை எதிர்கொள்வதே காஷ்மீர் மக்களிடையே மனநலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு அடிப்படையாக உள்ளதென மேற்படி ஆய்வு வெளிப்படுத்தி உள்ளது.

”1989-ம் ஆண்டுக்கு முன்பெல்லாம் ‘மோதலுக்குப் பிந்தைய மன அழுத்தப் பிரச்சினைகளுடன்’ (Post traumatic Stress Disorder) எந்த நோயாளிகள் வருவது அரிது. இப்போது நிலைமை அப்படியல்ல. தலைமுறை தலைமுறையாக அடிவாங்கிக் கொண்டிருக்கிறோம். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானால் தாக்கப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்பதே நிலைமை” என்கிறார் காஷ்மீரைச் சேர்ந்த மனநல மருத்துவர் முஷ்டாக் மர்கூப்.

காஷ்மீரில் மனநோய்களுக்கு ஆளானவர்களில் வெறும் 6.4 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர் என்கிறார் இமான்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மனநல மருத்துவர் அர்ஷாத் ஹுசைன். என்பதுகளின் இறுதியில் காஷ்மீரில் உள்ள ஒரே அரசு மனநல மருத்துவமனைக்கு சுமார் 1700 நோயாளிகள் சிகிச்சைக்காக வந்துள்ளனர்; தற்போதோ ஒருலட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு வருகின்றனர். என்றாலும், ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை அற்பமாகவே உள்ளது.

எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படலாம் என்ற நிலையில் மாத்திரைகள் மட்டும் இவரது மனநோயினை தீர்க்குமா?

மனநோய்களுக்கான காரணங்களை விளக்கும் தன்னார்வக் குழுக்களின் ஆய்வறிக்கைகள் பெயரளவிற்கு காஷ்மீரில் நிலவும் “அசாதாரண சூழல்”, “பதட்டமான சூழல்” போன்ற சில தேய்வழக்குகளைப் பயன்படுத்தி விட்டு நகர்ந்து விடுகின்றன.

தன்னார்வக் குழுக்களின் ஆய்வறிக்கைகள் இறுதியில் “மருத்துவமனைகளை அதிகரிப்பது, மருத்துவர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவது, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சிக்கிச்சை எடுத்துக் கொள்ள ஊக்குவிக்கும் முகாம்களை நடத்துவது” மற்றும் இன்னபிற சொத்தையான தீர்வுகளையே முன்வைக்கின்றன. ஆனால், ஒரு மாநிலம் முழுவதையும் இராணுவத்தால் நிரப்பி அங்கு வாழும் மக்களை நிரந்தர அச்சத்தில் ஆழ்த்தி வைத்துள்ள மாபெரும் குற்றவாளியான இந்திய ஆளும் வர்க்கத்தை இவ்வறிக்கைகள் மென்மையான வார்த்தைகளில் கூட இடித்துரைக்க மறுக்கின்றன.

பொருளாதாரம், மொழி, பண்பாடு, கல்வி உரிமை, உழைக்கும் உரிமை உள்ளிட்ட சகல துறைகளிலும் நாடெங்கும் உள்ள உழைக்கும் மக்களை ஆளும் கும்பல் வஞ்சிக்கிறது. அனைத்து விதமான ஜனநாயக உரிமைகளையும் செல்லாக்காசாக்கி மக்களை சதாகாலமும் கண்காணிப்பின் கீழ் கொண்டு வர முயற்சிக்கிறது மோடி அரசு. இதற்காகவே ஆதார் போன்ற திட்டங்களையும், நவீன தொழில்நுட்பங்களையும் களமிறக்கியுள்ளன. அரசை எதிர்த்துப் போராடுவோரின் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுகிறது.

அடக்குமுறைக்கு ஆளாகிறவர்கள் வேறு வேறு பிரிவு மக்கள் என்றாலும் அவர்களின் எதிரி ஒருவன் தான். எனவே எங்கோ வட எல்லையில், கண்காணாத தொலைவில் வாழும் மக்களுக்கு நடந்த அநீதியாக இதைக் கடந்து செல்லாமல் காஷ்மீர்களுடன் கைகோர்க்க வேண்டிய கடமை ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் உள்ளது.

நன்றி: அல்ஜசிரா

மேலும் படிக்க:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க