13.06.2026
நெல்லை: மேலப்பாளையத்தில் நெடுஞ்சாலைத் துறையினரின்
அலட்சியத்தால் கார் ஏறி ஒன்றரை வயது குழந்தை பலி!
பத்திரிகைச் செய்தி
நெல்லை மாநகராட்சியில் மேலப்பாளையம் மண்டலத்தில் மேலப்பாளையம் – அம்பாசமுத்திரம் சாலை பிரதான சாலையாக விளங்கி வருகிறது. நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து பாபநாசம் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்து வரை, தினமும் 1000-க்கும் அதிகமான வாகனங்கள் இச்சாலையில் இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது வடக்கு, தெற்கு புறவழிச் சாலை மேலப்பாளையம் ரவுண்டானா முதல் கருங்குளம் வரை பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக சாலையில் குழிகள் தோண்டப்பட்டு சிமெண்ட் தொட்டிகள், குழாய்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த குழிகளால் எதிரெதிர் இயக்கப்படும் வாகனங்கள் தட்டு தடுமாறி செல்கின்றன. சாலையின் ஒரு புறத்தில் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டிய சேதமடைந்த சாலை, மறுபக்கம் கால்நடைகள், மணல் திட்டுகள் காணப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இந்நிலையில், வெளிநாட்டில் வேலை செய்து வரும் நெல்லை பத்தமடை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஷேக் மைதீன் விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளார். இவருடைய மனைவி நைனம்மாள். ஒன்றரை வயதான ரஹீமா என்ற இரண்டாவது பெண் குழந்தையுடன், 11.06.2026 அன்று தம்பதியர் மேலப்பாளையம் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே சென்றபோது, மாநில நெடுஞ்சாலைத் துறையினர் பராமரித்து வரும் குண்டும் குழியுமான அந்த சாலையில், ஒரு பள்ளத்தில் பைக் ஏறி இறங்கியதில் நிலை தடுமாறி குழந்தை ரஹீமா தனது தந்தையின் வலக்கை பக்கமாக சாலையில் தவறி விழுந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து பெற்றோர்கள் மீள்வதற்கு முன்னால், வேகமாக வந்த ஒரு கார் குழந்தை மீது ஏறி இறங்கியது. இதில் குழந்தை காரின் சக்கரத்தில் சிக்கி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டு சுமார் 45 நிமிடம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு, தெற்கு புறவழிச்சாலை முதல் கருங்குளம் டாஸ்மாக் மாவட்ட அலுவலகம் வரை பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சாலையில் இருபுறமும் குழிகள் தோண்டப்பட்டு தொட்டிகள், குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. இதில் மேலப்பாளையம் கன்னிமார் குளம் பகுதி குறுகிய சாலையாகும். இதனால் விபத்து அபாயம் உள்ளது. பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிந்த பகுதியில் உடனடியாக சாலையை சீரமைத்து விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலப்பாளையத்தில் பாதாள சாக்கடை முடிந்த இடங்களில் சாலைகளை சீரமைப்பதற்காக ரூபாய் 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் 30 சதவீதம் கமிஷன் கேட்பதாக புகார் கூறப்படுகிறது. இதை காரணம் காட்டி பணிகளை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் அப்பாவி குழந்தையின் உயிர் பலியாகி உள்ளது.
ஏற்கெனவே நெல்லையில் கலெக்டராக இருந்த கார்த்திகேயன் சாலைகளின் நிலை தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கடிந்து கொண்டார். அப்போது மோசமான சாலையில் நடக்கும் விபத்துகளுக்கு சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் எச்சரித்தார். அப்போதைய கலெக்டரின் அந்த எச்சரிக்கைக்கு பின்னரும் நெடுஞ்சாலை துறையினர் அலட்சியமாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இது குறித்து மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி, பணியை தொடங்க தாமதம் ஏன் என்று விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்யும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மீது தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் இந்த விபத்து வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும் என நெல்லை மாவட்ட மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
நெல்லை தூத்துக்குடி மாவட்டங்கள்.
9385353605
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











