பாசிசக் கும்பலின் பிடியில் திரைத்துறை, மோடிக்கும்பலின் அறிவிக்கப்படாத தேர்தல் பிரச்சாரம்!

மூன்றாவது முறை ஆட்சியை பிடிப்பதற்காக பாசிச மோடி கும்பல் கலவரத்தை தூண்டும் வகையில் அப்பட்டமான வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதை போல, வெறுப்பு படங்களும் பாசிச பா.ஜ.க-விற்கும் மோடிக்கும்  அறிவிக்கப்படாத தேர்தல் பிரச்சாரமாக செயல்படுகின்றன.

மீபத்தில் தமிழ்நாட்டில், “சன் டிவியில்” இராமாயணம் தொடரை ஒளிப்பரப்ப போவதாக அறிவித்தது விவாத பொருளாகியது. நாடுமுழுவதும் பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு எதிராக போராட்டங்கள் வலுவடைந்துக்கொண்டிருக்கும் சூழலில், காசுக்காக ராமனை புனிதனாக்கி பாசிஸ்டுகளுக்கு கரசேவை செய்யும் சன் டிவியை அம்பலப்படுத்தி பலர் பேசியிருந்தனர். இதேபோன்று, பலரின் கவனத்திற்கு வராத ஆபாயகரமான பாசிச நச்சுக்கருத்துக்களை கொண்ட பல திரைப்படங்களை பாசிசக் கும்பல் இத்தேர்தலையொட்டி வெளியிட்டுக்கொண்டிருக்கிறது.

இந்தியாவில் மே 2023 முதல் 2024 ஜூன் வரையிலான தேர்தல் காலகட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட இந்துத்துவ கருத்துருவாக்கப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. பல படங்கள் ஏற்கெனவே வெளிவந்துள்ள நிலையில், சில படங்கள் மே–ஜூன் இடைப்பட்ட நாட்களில், அதாவது நாடாளுமன்றத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவின்போது வெளியாக உள்ளன. தேர்தல் சமயத்தில் இத்தகைய வெறுப்பு பிரச்சார திரைப்படங்களை(Hate Propaganda Flim)  அதிகளவில் வெளியிடுவதன் மூலம், “இந்து மக்களுக்கும் நாட்டிற்கும் இஸ்லாமியர்களால் பெரும் ஆபத்து இருக்கிறது”, “பாகிஸ்தானால், தேசத்திற்கு ஆபத்து” போன்ற கருத்துருவாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தி மதவெறியையும், தேசவெறியையும் கிளப்பிவிடுவதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறது பாசிச கும்பல்.

தேர்தல் பிரச்சாரங்களாக திரைப்படங்கள்

2024 நாடாளுமன்றத் தேர்தல் நடந்துகொண்டிருக்கும் சூழலில், இந்தாண்டு ஜனவரி மாதத்திலிருந்து, “மைன் அடல் ஹூன்” (Main Atal Hoon), “சட்டப்பிரிவு 370” (Article 370), “பஸ்டர் – தி நக்சல் ஸ்டோரி, ரசாக்கர்” (Bastar: The Naxal Story), “சுதந்திர வீரர் சாவர்க்கர்” (Swatantra Veer Savarkar), “ஜே.என்.யு: ஜஹாங்கீர் நேஷனல் யுனிவர்சிட்டி” (JNU-Jahangir National University), “விபத்தா அல்லது சதியா: கோத்ரா” (Accident or Conspiracy: Godhra), “தி சபர்மதி ரிப்போர்ட்” (The Sabarmati Report), “திப்பு”(Tipu), “எமெர்ஜென்சி” (Emergency) உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.

இப்படங்கள் அப்பட்டமான இஸ்லாமிய வெறுப்பையும், வரலாற்று உண்மைகள் என்ற பெயரில் காவிக் குப்பைகளையும், மோடி அரசுக்கு எதிராக போராடுபவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் நோக்கத்தையும் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளன. மூன்றாவது முறை ஆட்சியை பிடிப்பதற்காக பாசிச மோடி கும்பல் கலவரத்தை தூண்டும் வகையில் அப்பட்டமான வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதை போல, இப்படங்களும் பாசிச பா.ஜ.க-விற்கும் மோடிக்கும்  அறிவிக்கப்படாத தேர்தல் பிரச்சாரமாக செயல்படுகின்றன.


படிக்க: மோடியின் வெறுப்பு பேச்சு: செவிடாகிப் போன தேர்தல் ஆணையம்


“தி கேரளா ஸ்டோரி” என்ற இஸ்லாமிய வெறுப்பு படத்தை இயக்கிய சுதிப்தோ சென்-இன் மற்றொரு படமான “பஸ்டர் – தி நக்சல் ஸ்டோரி” திரைப்படத்தின் முன்னோட்டத்தில்,  மாவோயிஸ்டுகளால் சி.ஆர்.பி.எஃப். படையினர் கொல்லப்படுவதாகவும், அதனை ஜே.என்.யூ. மாணவர்கள் கொண்டாடுவதாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்டர் பகுதியில் கனிமவள கொள்ளைக்காக பழங்குடி மக்கள் மீது அரசுத்தொடுக்கும் தாக்குதல்களுக்கு எதிராக போராடிவரும் மாவோயிஸ்டுகளை பழங்குடி மக்களுக்கு எதிரானவர்களாகவும், அவர்களை அழித்தொழிப்பதுதான் அரசின் முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் இப்படம் சித்தரிக்கிறது. இத்திரைப்படம் வெறுப்பு பிரச்சாரத்தையும் வன்முறையையும் தூண்டுவதை அம்பலப்படுத்தி, இப்படத்தின் போஸ்டரை கிழித்து படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர்களுக்கு எதிராக ஜே.என்.யு. மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.கோ

இதேபோல, கோத்ரா ரயில் எறிப்பு சம்பவத்தை இஸ்லாமியர்கள் செய்த பயங்கரவாத தாக்குதலாக சித்தரிக்கும் விதமாக “கோத்ரா: விபத்தா அல்லது சதியா” என்ற திரைப்படம் வெளிவரவிருக்கிறது. இப்படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் மட்டும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதன்தொடர்ச்சியாக ஆர்.எஸ்.எஸ் குண்டர்களால் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட குஜராத் படுகொலை அப்பட்டமாக மூடிமறைக்கப்பட்டுள்ளது. ஆனால், திஸ்தா செதல்வாட், தெகல்கா பத்திரிகை நிரூபர்கள் உள்ளிட்டோர் மேற்கொண்ட விசாரணையில், ஆர்.எஸ்.எஸ். காவி பயங்கரவாதிகளால் பல நாட்கள் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியே குஜராத் படுகொலை என்று தெரியவந்தது. எனவே, குஜராத் படுகொலையை நிகழ்த்துவதற்கான முகாந்திரமாக, காவி குண்டர்கள் சொந்த அமைப்பினரையே கொன்றுள்ளனர் என்று அப்போதே விவாதமானது. மேலும், 2019-ஆம் ஆண்டு வி.எச்.பி. குண்டர்ப்படையைச் சேர்ந்த சாமியார் பிராச்சி, “பிரதமர் (மோடி) அவர்களே, கோத்ரா போல ஒரு சம்பவத்தை நிகழ்த்தி பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுங்கள்” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், வரலாற்று திரைப்படம் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்-இன் பயங்கரவாத நடவடிக்கைகளை  மூடி மறைத்துவிட்டு, இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மறைத்துவிட்டு அவர்களையே பயங்கரவாதிகளாக சித்தரிக்கிறது இத்திரைப்படம். இதேபோன்றே கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாக வைத்து பொய்-வெறுப்பு குப்பைகளை அடிப்படையாக கொண்டு “சபர்மதி ரிப்போர்ட்” என்ற மற்றொரு திரைப்படமும் வெளிவர உள்ளது.

வரலாற்று நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தும் திரைப்படங்களில் எவ்வித தவறான தரவுகளும் இடம்பெறக்கூடாது என்பது காட்சி ஊடகத்தின் நெறியாக சொல்லப்படுகிறது. ஆனால் அவை அனைத்தையும் குப்பைத் தொட்டியில் வீசியெறிந்துவிட்டு, வரலாற்றை ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு ஏற்றவாறு திரித்து திரைப்படங்களாக்கி வருகிறது பாசிசக் கும்பல்.

18-ஆம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்திய திப்பு சுல்தான் குறித்து “திப்பு” என்ற திரைப்படம் வெளிவரவுள்ளது. அப்படத்தின் டிரெய்லரில், திப்புவின் காலத்தில் 8000 இந்து கோவில்கள் மற்றும் 27 தேவாலயங்கள் இடிக்கப்பட்டதாகவும், 40 லட்சம் இந்து மக்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டதாகவும், மாட்டிறைச்சி உண்ணும்படி இந்துக்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான இந்துக்கள் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், 2000-க்கும் மேற்பட்ட பார்ப்பனக் குடும்பங்கள் அழிக்கப்பட்டதாகக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை போர்க்குணத்துடன் எதிர்த்து நின்ற திப்பு சுல்தானை இஸ்லாமிய மதவெறியனாக சித்தரிக்கும் ஆர்.எஸ்.எஸ்-இன் கட்டுக்கதைகளுக்கு உயிர்கொடுக்கும் விதமாக எந்த அடிப்படை ஆதாரமுமின்றி இந்த வெறுப்பு படத்தை எடுத்துள்ளார்கள்.


படிக்க: பாசிச பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகரிக்கும் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள்!


ஆனால், திப்பு சுல்தானிற்கு நேரெதிராக ஆங்கிலேயர்களின் காலை நக்கிப்பிழைத்த சாவர்க்கரை விடுதலைப்போராட்ட வீரனாக சித்தரிக்கும் “சுதந்திர வீர் சாவர்க்கர்” என்ற திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியானது. 2019-ஆம் ஆண்டு மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட “பி.எம். நரேந்திர மோடி(PM Narendra Modi)” படத்தின் தயாரிப்பாளர்கள்தான் இப்படத்தையும் தாயாரித்துள்ளனர். இதிலிருந்தே பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் கும்பலின் காவிக்குப்பைகளையும், வரலாற்றுத் திரிபுகளையும் படமாக்குவதற்காகவே திரைத்துறையில் ஒரு கும்பல் உருவாகியிருப்பது தெளிவாகிறது.

இந்துத்துவ கொள்கைகளை பரப்புவதற்காகவே எடுக்கப்படும் இவ்வகைப்பட்ட படங்கள் பா.ஜ.க-வின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக போரடுபவர்களை மோடிக்கும்பல் குறிப்பிடுவதுபோல் ‘அர்பன் நக்சல்’ என்று முத்திரைக்குத்தும் வகையிலும் எடுக்கப்படுகிறது. இந்தியாவின் பொதுக் கல்வி நிறுவனமான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை (ஜே.என்.யு.) குறிவைத்து “ஜே.என்.யு: ஜஹாங்கீர் நேஷனல் யுனிவர்சிட்டி” என்ற பெயரில் படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. குண்டர்ப்படை புனிதப்படுத்தி காட்டப்படும் இப்படத்தில், பல்கலைக்கழகத்தில் செயல்பட்டுவரும் இடதுசாரி மாணவர் அமைப்புகளை தேச விரோத அமைப்புகளாகவும், போராடும் முற்போக்கு எண்ணம் கொண்ட மாணவர்களை தேசவிரோதிகளாகவும் சித்தரிக்கிறது. இப்பட டீசரில் பின்னணி குரலில், “நாட்டின் முன்னணி பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் வகுப்பறைகளைக் காட்டிலும் ஊடகத்தின் முன்னணியில்தான் இருக்கிறார்கள்” என்று போராடும் மாணவர்கள் மீது வெறுப்பை கக்குகிறது.

இது போன்று பல திரைப்படங்கள் பாசிசக் கும்பலின் நச்சுக்கருத்துகளை பரப்புவதற்காக எடுக்கப்பட்டு வருகிறது, இங்கு குறிப்பிடப்பட்டிருப்பது சொற்பமே. உலகளவில் அதிக திரைப்படங்களை தாயாரிக்கும் மையமாக இருக்கும் பாலிவுட் (Bollywood) எனும் இந்தித்திரைத்துறை பாசிஸ்டுகளின் பிரச்சாரக்கருவியாக மாறிவருகிறது.

காவிமயமாகியுள்ளத் திரைத்துறை

மோடிக்கும்பல் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே அரசின் அனைத்து துறைகளிலும் சமூகத்திலும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஊடுருவி தனது ஆதிக்கத்தை செலுத்திவருகிறது. அந்தவகையில் பாலிவுட் என்று அழைக்கப்படும் இந்தித் திரைப்படத்துறை ஏறக்குறைய பாசிஸ்டுகளின் கட்டுப்பாட்டிற்கு கீழ் வந்துள்ளது. சந்தர்ப்பவாதமாகவும் பிழைப்புவாதமாகவும் உள்ள படைப்பாளர்களுக்கு பணம், விருதுகளைக் கொடுத்து இந்துத்துவ படங்களை எடுக்க வைக்கிறது, காவி கும்பல். பணத்திற்கு மயங்காதவர்களை மிரட்டி பணிய வைக்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன.

இத்தகைய படங்கள் வெளிவரும்போது பாசிச மோடி அரசும் ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார கும்பலும் படத்திற்கும் படக்குழுவினருக்கும் பல்வேறு சலுகைகளையும் வாரி இறைக்கின்றன. சான்றாக, “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” மற்றும் “தி கேரளா ஸ்டோரி” போன்ற திரைப்படங்கள் மோடியே நேரடியாக பாராட்டி விளம்பரப்படுத்தியது; வரி தள்ளுபடி செய்வது; திரையரங்குகளில் இலவசக் காட்சிகளுக்கான ஏற்பாடு செய்வது; திரையரங்குகளில் சங்கிகளை குவித்து படத்தை ஓட வைப்பது போன்ற நடவடிக்கைகள் இப்படங்களுக்கு லாபத்தை அளிப்பதோடு பிற தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களையும் இத்தகைய படங்களை எடுக்கத் தூண்டுகிறது.


படிக்க: தி கேரளா ஸ்டோரி: முஸ்லீம் வெறுப்பிற்கான மற்றுமொரு கருவி!


இதுகுறித்து பேசும் ஆவணப்படத் தயாரிப்பாளர் ராகேஷ் சர்மா, “இந்தி படங்கள் அடியோடு மாறிவிட்டன. அவர்கள் வெறித்தனமாக வகுப்புவாதமாக மாறிவிட்டனர். அவை பெரும்பாலும் பாசிசப் போக்குகளை ஊக்குவிக்கின்றன” என்கிறார்.

இன்னொபுறம், முற்போக்கு படங்களை ஒழித்துக்கட்டுவதற்கும் பாசிசக் கும்பல் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. காட்சி ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை இயற்றியது; தணிக்கைத்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது; திரைத்துறையில் பாசிஸ்டுகளின் ஊடுருவல் அதிகரித்திருப்பது போன்றவற்றின் மூலம் பாசிசக் கும்பல் இதனை சாத்தியமாக்கியுள்ளது.

மோடியின் ஆட்சியில் நடந்த விவசாயிகள், மாணவர்கள் போராட்டங்கள் மற்றும் அவர்கள் மீதான போலீசு தாக்குதல்கள் குறித்து 2021 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட “தாண்டவ்” வெப் சீரிஸை மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி அந்த சீரிஸ் மீது பல வழக்குகளைத் தொடுத்தது பாசிசக் கும்பல். அந்த சீரிஸை வெளியிட்ட அமேசான் பிரைம் நிறுவனத்தின் இந்திய தலைவரை கைது செய்ய வாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.

ஒரு கொள்கையையோ, ஒரு நிகழ்வை பற்றிய குறிப்பான சிந்தனையோ வெகுஜன மக்களுக்கு சென்று சேர்க்கும் சிறந்த தளமாக திரைப்படங்கள் செயல்படுகின்றன. அதனால்தான் திரைத்துறையை தனக்கான முக்கிய பிரச்சாரக்க கருவியாக முசோலினி, ஹிட்லர் போன்ற பாசிஸ்ட்டுகள் வைத்திருந்தனர். தற்போது மோடிக்கும்பலும் தனக்கான பிரச்சாரக் கருவியாக இந்தித்திரைத்துறையை மாற்றிவருகிறது. இந்த அபாயகரமான போக்கு உடனடியாக தடுக்கப்பட வேண்டும். பாசிஸ்டுகளால் கொண்டுவரப்படும் வெறுப்படங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும், ஜனநாயக சக்திகள் அவற்றை அம்பலப்படுத்த வேண்டும். அதேவேளையில், மக்களின் உண்மையான பிரச்சனைகளை பேசக்கூடிய, சாதிய வர்ண கட்டமைப்பிற்கு எதிரான, பெண் விடுதலை, வர்க்க சிந்தனை, மத நல்லிணக்கம் போன்றவற்றை பேசும் படங்களை ஊக்குவிக்க வேண்டும்.


வெண்பா

(புதிய ஜனநாயகம் – மே 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க