சமீபத்தில் “தி கேரளா ஸ்டோரி” என்ற முஸ்லீம் வெறுப்பு திரைப்படம் வெளியானது. இது கேரளா, தமிழ்நாடு உள்ளிட தென்னிந்திய மாநிலங்களில் பெரிதளவில் தாக்கம் ஏற்படுத்தவில்லை என்றாலும், பாசிஸ்டுகளால் முஸ்லீம் வெறுப்புணர்வு ஊட்டப்பட்டிருக்கும் வட மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
கல்லூரிகளிலேயே படத்தை திரையிடுவதும், பெண்களுக்கு காவித் துப்பட்டா அணிவித்து படத்திற்கு அழைத்து சென்றதும் நடந்தது. சமீபத்தில் ராஜஸ்தான் திரையரங்குக்குள் நுழைந்த இந்துத்துவ பயங்கரவாதியான சாத்வி பராசி, முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு கருத்தைப் படம் பார்க்க வந்தவர்களிடம் பிரச்சாரம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்கில் பரவியது. அவரது வெறுப்பு பேச்சுக்கு படம் பார்க்க வந்திருப்போரும் ஆமோதித்து கரகோஷங்கள் எழுப்பிய சம்பவங்களும் நடந்தன.
இப்படத்தை வைத்து முஸ்லீம்களுக்கு எதிரான மத வெறுப்பையும் பிரிவினைவாதத்தையும் ஏற்படுத்தத் துடித்துக் கொண்டிருக்கிறது இந்துத்துவ கும்பல். இதற்கு சமீபத்தில் நடத்த இரண்டு சம்பவங்களே சான்று.
ஜம்மூவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஒன்றில் மாணவர் ஒருவர், அதே கல்லூரியில் பயிலும் இந்து மாணவர்களால் தாக்குதலுக்குள்ளாகியிருக்கிறார்.
படிக்க: என்.சி.ஆர்.பி-ன் தரவு: உண்மையான ‘’குஜராத் ஸ்டோரி’’
அக்கல்லூரியில் “தி கேரளா ஸ்டோரி” படத்தை வைத்து முஸ்லீம்கள்மீது நடத்த திட்டமிட்டிருந்த தாக்குதல்களில், மாணவர் ஒருவர் படுகாயமடைந்தார். அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் இந்து மாணவர்கள் சிலர், கல்லூரியின் வாட்ஸ் அப் குழுக்களில், “தி கேரளா ஸ்டோரி” கட்டாயமாக பார்க்க வேண்டிய திரைப்படம் என்று பதிவிட்டனர். மேலும், இதனை கல்லூரி விடுதியில் பார்க்கவும் திட்டமிட்டுள்ளனர். முதலாமாண்டு படிக்கும் முஸ்லீம் மாணவர் ஒருவர், “கல்லூரி குழுக்களில் இதுபோன்ற செய்திகளை பகிர வேண்டாம்” என தெரிவித்திருக்கிறார்.
முஸ்லீம் மாணவரின் எதிர்ப்பு இந்து மாணவர்களை ஆத்திரமடையச் செய்திருக்கிறது. அம்மாணவனை தாக்க திட்டமிட்ட இந்து மாணவர்கள் வெளியில் இருந்து கூலிப்படையை அழைத்து வந்திருக்கின்றனர். கூலியாட்கள் கல்லூரிக்குள் நுழைவதை தடுத்து நிறுத்த முயன்ற இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் கடுமையான தாக்கப்பட்டனர். அதில் மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
“தி கேரளா ஸ்டோரி” படம் வெளியானபோது இப்படத்திற்கு எதிராக கல்லூரியில் போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த எதிர்ப்புணர்வுதான் இந்துத்துவா குண்டர்களின் ஆத்திரத்தை கிளப்பிவிட்டிருக்கிறது.
***
இதேபோல கடந்த மே 13-ஆம் தேதி, மகாராஷ்டிரா மாநிலத்தின் அகோலா எனும் பகுதியில், “தி கேரளா ஸ்டோரி” தொடர்பாக எழுந்த சர்ச்சையில் முஸ்லீம்களை இந்துமதவெறி குண்டர்கள் தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார்.
தீவிர வலதுசாரியான கரண் சாஹூ என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் முகமது நபியை கேலி செய்து பதிவிட்ட பிறகுதான் முஸ்லீம்களுக்கு எதிரான இவ்வன்முறை வெறியாட்டங்கள் கட்டவீழ்த்துவிடப்பட்டிருக்கின்றன.
இதுகுறித்து முஸ்லீம் மக்கள் அளித்த புகாரை போலீஸ் ஏற்றுகொள்ள மறுத்துவிட்டதால், முஸ்லீம் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் குறித்த செய்தியோடு, முஸ்லீம்கள் இந்துக்களின் கோவில்களை இடிப்பதாக வதந்திகளும் இந்துக்கள் அதிகமாக வாழும் அருகாமை பகுதிகளில் வேகமாக பரவியது. இதனையடுத்து அங்கு திரண்ட இந்துமதவெறி குண்டர்கள் முஸ்லீம்களை தாக்க ஆரம்பித்ததோடு, மசூதிக்குள் நுழைந்து அட்டூழியமும் செய்தனர்.
படிக்க: ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : காவிகளின் வெறியாட்டத்தை மறைக்கும் அக்னிகோத்ரி !
இந்துமதவெறி குண்டர்கள் நடத்திய தாக்குதலில் 40 வயதான விலாஸ் கெய்க்வாட் என்ற நபர் கொல்லப்பட்டார். தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர் கலவரம் நடத்த இடத்தில் ஆட்டோ ஓட்டி சென்றபோது முஸ்லீம் என்று கருதி பாசிசக் கும்பலால் தாக்குதலுக்குள்ளானார். விலாஸ் கெய்க்வாட் தன்னை தாக்கவந்த கும்பலிடம், “தான் முஸ்லீம் அல்ல” என்று மீண்டும் மீண்டும் கூறிய பிறகும் அவர் கடுமையாக தாக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினார்கள்.
அப்பகுதி கலவரக்காடானது. பல இருசக்கர வாகனங்கள், கடைகள் அனைத்தும் சூறையாடப்பட்டன. கலவரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவுசெய்து கைது செய்த 28 பேரில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லீம்கள்தான். வன்முறையை நடத்திய இந்துத்துவ குண்டர்களை கைது செய்யாமல் தாக்கப்பட்ட முஸ்லீம்களை குற்றவாளிகளாக்குவது ஆளும் பாசிஸ்டுகளின் அடியாளாக போலீசுத் துறை இருப்பதையே காட்டுகிறது. வன்முறை நடந்ததையடுத்து அகோலா பகுதியில் 144 ஊரடங்கு உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.
“தி கேரளா ஸ்டோரி”யை வைத்து தென்னிந்தியாவில் மத பிரிவினையை ஏற்படுத்த திட்டமிட்டிருந்த பாசிசக் கும்பல் மண்ணைக் கவ்வியிருக்கும் அதேவேளையில், வட இந்தியாவில் இதன் தாக்கமும் இதை அடிப்படையாக வைத்து முஸ்லீம் மக்களுக்கு எதிரான கலவரங்களும் அதிகரித்து வருகின்றன. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜீ அரசு இத்திரைப்படத்திற்கு தடை விதித்ததைப்போல நாடு முழுவதும் இப்படத்தைத் தடை செய்ய முற்போக்கு ஜனநாயக சக்திகள் குரலெழுப்புவது அவசியம்!
ஸ்வாதி