‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ காஷ்மீரி பண்டிட்களை பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்துகிறது,
முஸ்லிம்களை வெறுக்கிறது!
“ஒரு காட்சி கூட புனைவு அல்ல. எல்லாம் உண்மையானது. எந்த வர்ணனையும் இல்லை என்ற எளிய காரணத்தால் இங்கு எந்த முனைப்பான வர்ணனையும் இல்லை. இது வரலாறு – தூய வரலாறு.”
-லீனி ரெய்ஃபென்ஸ்டால் டிரையம்ப் ஆஃப் தி வில் படம் பற்றி.
“காஷ்மீரின் பண்டிட்டுகள் தங்கள் சேரி முகாம்களில் அழுகிப்போயிருந்தார்கள், இராணுவமும் விடுதலைக்கான கிளர்ச்சியாளரும் இரத்தம் தோய்ந்த மற்றும் நொறுங்கிப்போன பள்ளத்தாக்கில் போரிட்டபோது அழுகிப்போவதற்கும், திரும்பி வருவதைக் கனவு கண்டு இறப்பதற்கும், திரும்பி வர வேண்டும் என்ற கனவு கண்டபோது இறப்பதற்கும், திரும்பி வர வேண்டும் என்ற கனவு இறந்த பிறகு இறப்பதற்கும், அதனால் அவர்கள் ஏன் சாகக் கூட முடியவில்லை, அது ஏன் அது ஏன் அது ஏன் அது ஏன் அது ஏன்.”
– சல்மான் ருஷ்டி ஷாலிமர் கோமாளி நூலில்.
விவேக் அக்னிஹோத்ரி மற்றும் லெனி ரெய்ஃபென்ஸ்டால் இருவரும் பல பத்தாண்டுகள் மற்றும் விமர்சன பாராட்டுக்களால் பிரிக்கப்பட்டிருந்தாலும், பிரச்சாரகரின் மிகவும் நயவஞ்சகமான உத்தியில் அவர்கள் பொதுவான தளத்தைக் காண்கிறார்கள் – இது உண்மையின் உள்ளடக்கத்தை மறைக்கும் விதமாக மிக கவனமாக அடுக்கப்பட்ட ஒரு பொய்.
ரெய்ஃபென்ஸ்டாலின் உண்மை என்னவென்றால், அவரது மிகவும் இழிபுகழ் பெற்ற திரைப்படம் நேரலையில் படமாக்கப்பட்டது. இதனால் நாஜி ஆட்சிக்கான பிரச்சாரமாக இருக்க முடியாது, ஆனால் யதார்த்தத்தில் ஒரு பத்திரிகை ஆவணமாக மட்டுமே இருந்தது.
அந்த உண்மையானது கேமராவுக்கு மட்டும் குறிப்பாக கட்டியமைக்கப்பட்ட பொய்யாகும் என்கிறார் சூசன் சண்டாக். சில தலைவர்களின் காட்சிகள் சரிவராதபோது, ஹிட்லரே நேரடியாக உத்தரவிட்டு மீண்டும் அக்காட்சிகளை எடுக்கச் சொல்லி உத்தரவிட்டதாக சூசன் குறிப்பிடுகிறார்.
படிக்க :
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : இசுலாமிய எதிர்ப்புணர்வை தூண்டும் பிரச்சார வாகனம் !
ஜம்மு – காஷ்மீர் பிரஸ் கிளப்பைக் கைப்பற்றிய சங்கிப் பத்திரிகையாளர் கும்பல் !
அக்னிகோத்ரியின் படத்தில் உள்ள உண்மை என்பது, சிறுபான்மையான காஷ்மீர் பண்டிட்டுகள் மத்தியில் எல்லையற்ற வன்முறையைத் தூண்டி, பயத்தை போராளிகள் உருவாக்கினர். இதனால் பண்டிட்டுகள் பெருமளவு காஷ்மீரைவிட்டு வெளியேறினர் என்பது. இதில் பொய் என்பது, எல்லா இசுலாமியர்களையும் இதற்கு கூட்டுப் பொறுப்பாக்கி தண்டிக்கப்பட வேண்டும் என்பது. மேலும் இசுலாமியர் மீது எவ்வளவு வன்முறை நிகழ்ந்தாலும் அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள்தான் எனப்படும் பொய்.
தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் உள்ள தரவுகளிலான உண்மையற்ற தன்மை பற்றி எவ்வளவோ எழுதியாகிவிட்டது. அப்படம் புறக்கணித்துள்ள சங்கடம் தருகின்ற உண்மைகளைப் பற்றியும் நிறைய எழுதப்பட்டுவிட்டது. உதாரணமாக அன்றைக்கு ஆட்சியில் இருந்த ஒன்றிய அரசாங்கம் பாஜக ஆதரவில்தான் இருந்தது. காஷ்மீர் மாநிலமே ஒன்றிய அரசின் நேரடி ஆட்சியில் இருந்தது.
அதிகாரப் பூர்வமான மற்றும் அதிகாரப் பூர்வமற்ற ஆவணங்கள் அனைத்தும் காஷ்மீர் பண்டிட்டுகள் மத்தியில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு, நூற்றுக்கணக்கில் தான், படத்தில் கூறப்படுவதுபோல ஆயிரக்கணக்கில் இல்லை. அதே சமயம், அதன் முக்கிய பாத்திரங்கள் போராளித் தலைவர்களான பிட்டா காரடே மற்றும் யாஷின் மாலிக்கை சித்தரிக்கின்றன.
காஷ்மீர் பண்டிட் பெண்ணை நிர்வாணமாக்கி, கொடூரமாக கொன்று கூறு போட்ட சம்பவம் உண்மையில் சர்லா பாட் என்ற பண்டிட் பெண் கும்பல் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு சிதைக்கப்பட்டதைக் குறிக்கும் உண்மை நிகழ்வைக் குறிப்பதுவே.
“இந்து ஆண்கள் இன்றி, இந்துப் பெண்களுடன்” என்ற சுதந்திர காஷ்மீரின் முழக்கங்கள் பற்றி அன்று காஷ்மீரில் இருந்த சிலர் தமது துயரங்களைப் பகிர்ந்து கொண்டபோது கூறியவைதான், ஆனால் அகதிகளாக வெளியேறிய உடனே கூறப்பட்டவையல்ல. சில ஆண்டுகள் கடந்தபின் சேர்த்துக் கொண்டவை. ஆங்குர் தத்தா-வின் ‘நிச்சயமற்ற நிலத்தின் மீது: புலம்பெயர்ந்த காஷ்மீரி பண்டிட்டுகளும் ஜம்மு முகாம்களும்’ என்ற நூல் பற்றிய தனது மதிப்புரையில் சஞ்சை காக் என்பவர் குறிப்பிடுகிறார்:
“ஒரு குறிப்பாக பாலியல் அச்சுறுத்தல் கிட்டத்தட்ட அனைத்து சமகால பண்டிட் கதையாடல்களிலும் தவறாத நிலைத்தன்மையுடன் மீண்டும் தோன்றுகிறது என தத்தா குறிப்பிடுகிறார். மேலும் இது 1990-ம் ஆண்டின் ஆரம்ப மாதங்களைப் பற்றிய பண்டிட்டுகளின் நினைவுக் குறிப்புகளில் கிட்டத்தட்ட மையமாக குறிப்பிடப்படுகிறது என்பதை நாங்கள் அறிவோம். “பதவ் பகீர், பட்னேவ் சான்” என்ற இந்த முழக்கத்தின் பொருள் ஏறக்குறைய “பண்டிட் ஆண்கள் இல்லாமல், [ஆனால்] அவர்களின் பெண்களுடன்” காஷ்மீருக்கு விடுதலையை விரும்புகிறோம் என்பதாகும்.
பாதிக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு இப்படிப்பட்ட மிகவும் புண்படுத்தும் முழக்கங்கள், அம்மக்களைப் பற்றி எப்படிப்பட்ட கருத்தை எற்படுத்தும்? ஆனால் ஆவணக் காப்பகத்தில் பழைய செய்தித்தாள்களைப் பார்க்கும் தத்தா, இந்த வெறுக்கத்தக்க முழக்கம் பற்றிய செய்தி அறிக்கைகள் பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் வெளிப்படுவதைக் காண்கிறார். “பண்டிட்டுகள் நினைவில் வைத்திருக்கும் இந்த முழக்கங்கள் அந்த நேரத்தில் அதிகாரப்பூர்வமாக ஒருபோதும் தெரிவிக்கப்படவில்லை. சம்பவங்கள் பற்றிய செய்திகள் செய்தித் தாள்களில் பதிவு செய்யப்பட்டதற்கும், அது பற்றி பண்டிட்டுகள் விவரிப்பதற்கும் இடையில் ஒரு நீண்ட கால இடைவெளி உள்ளது”.
அக்காலகட்டத்தின் செய்தித்தாள்களில் “கும்பல் வன்முறை”, போலீஸ் நடவடிக்கையினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் பெருமளவிலான கைதுகள் ஆகியவை பற்றிய செய்திகளிலேயே கவனம் செலுத்துகின்றன.” பாலியல் அச்சுறுத்தல்கள் பற்றி செய்திகள் ஒன்றுகூட இல்லை.
இந்த திரைப்படத்தில் உள்ள உண்மைத் தன்மையைப் பற்றி, அது பற்றிய நினைவுகளால் பாதிக்கப்பட்டுள்ள பண்டிட்டுகளுக்கு விட்டு விடுவதே நல்லது. காஷ்மீரி பண்டிட்களின் வெளியேற்றத்தை அறிவித்த கொடூரங்களின் உண்மையை வெளிப்படுத்துவது சந்தேகத்திற்கு இடமின்றி தவறானது; இந்தப் படத்தின் மீதான விமர்சனத்திற்கு இது தேவையுமற்றது.
தனது படத்தில், அக்னிஹோத்ரி காஷ்மீரில் இருந்து வெளியேறிய பண்டிட்டுகளின் தோளில் இருந்து அரசாங்கத்தின் துப்பாக்கியை சுடுகிறார். ஆனால் வழக்கமான பாகிஸ்தானியர்கள் மற்றும் வன்முறை பயங்கரவாதிகளுக்கு அப்பால், ஊடகங்கள், ஜே.என்.யூ போன்ற பல்கலைக்கழகங்களில் இடதுசாரி பேராசிரியர்கள் மற்றும் 370-வது பிரிவை ரத்து செய்ததை எதிர்க்கும் எவரும் அவரது தாக்குதல் இலக்குகளாகும். நிச்சயமாக, கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் வருங்காலம் அனைத்திலும் அவரது உண்மையான இலக்கு முஸ்லீம்கள் மட்டுமே.
பரந்த கோணங்களில், தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் முஸ்லீம்கள் சந்தேகத்திற்கு இடமின்றி காட்டுமிராண்டிகளாக அல்லது காட்டுமிராண்டித்தனமான காரணத்திற்காக அடிமைகளாகக் காட்டப்படுகிறார்கள்.
முக்கிய எதிரியான பிட்டா, மனசாட்சியின் மிக மோசமான கோடுகளால் வரையப்பட்டு, அவரது அட்டூழியங்களை அதிக அளவில் முரண்பாடு கொண்டதாகக் காட்டுகிறார். அவர் தனது பழைய ஆசிரியரான புஷ்கரின் மருமகளை ‘திருமணம்’ செய்ய வேண்டாம் என்று முடிவு செய்கிறார் – இது கண்ணியத்தின் ஒரு அறிகுறியாகும்.
அதற்கு பதிலாக, அவர் அப்பெண்ணை தனது இறந்த கணவரின் இரத்தத்துடன் பிசையப்பட்டுள்ள சோற்றை சாப்பிட வைக்கிறார் – காட்டுமிராண்டித்தனமானது.
பின்னர், சமூகத்தால் நேசிக்கப்பட்ட ஒரு கவிஞருக்கு அவர் அடைக்கலம் தருகிறார் – கண்ணியமானது!
அடுத்ததாக, அந்தக் கவிஞரின் உடல் மிருகத்தனமாக தாக்கப்பட்டு, ஒரு மரத்தில் இருந்து தூக்கில் தொங்கவிடப்பட்டு, இறந்துபோனதாக காட்டப்படுகிறது – காட்டுமிராண்டித்தனமானது.
இவை சொல்லும் செய்தி – கருணையில் கூட, முதுகில் கத்தி பாய்வதை எதிர்பார்க்கவும்.
இந்தக் கதையாடல் கட்டமைப்பு ஒரு பயங்கரவாதியின் கொடூரத்தை சித்தரிப்பதற்காக என வாதிட்டாலும், அது ஏறக்குறைய ஒவ்வொரு இசுலாமியனுடைய நடத்தையை சித்தரிப்பதாகவே சென்று சேர்கிறது.
ஒரு காட்சியில் சிவன் என்ற ஒரு குழந்தை கதாபாத்திரம் முகமற்ற குழந்தைகளுடன் ஒரு பள்ளத்தில் விளையாடுவதாக காட்டப்படுகிறது. அந்த முகமற்ற குழந்தைகள் தங்களுக்கு ஒரு மசூதி வேண்டும் என கோரிக்கை வைக்க, அந்த கோரிக்கையை மற்றவர்களோடு சேர்ந்து சிவனும் வைக்க வேண்டும் என அவரது தலையில் அடித்துக் கட்டாயப்படுத்துகிறார்கள்.
முக்கியமாக, காஷ்மீர பண்டிட் குடும்பத்தினரின் பாதுகாப்பில் அக்கறை காட்டுவதாக காட்டப்படும் ஒரு முஸ்லீம் அண்டை வீட்டுக்காரர், அவர்கள் சில நாட்களுக்கு வேறு இடத்தில் தங்குவதே பாதுகாப்பு என்று அவர்களிடம் கூறுகிறார். சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர் போராளிகளிடம் பண்டிட் குடும்பத்தினர் மறைந்திருக்கும் சரியான இருப்பிடத்தைக் கூறுவதாக காட்டப்படுகிறது.
சாரதா என்ற காஷ்மீர பண்டிட் பெண்ணின் பாதுகாப்பு பற்றி ஒரு வயதான, தோலெல்லாம் சுருங்கிப் போன ‘ஆசிரியர்’ அக்கறைப் படுவதாக ஒரு காட்சி. உடனே அடுத்த காட்சியில் அந்த அக்கறைக்காக தனது பாலியல் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் எனக் கூறி மிக வக்கிரமாகப் பார்த்து அனுகுகிறார். அவரது வயது, அருவருக்கத்தக்க தோற்றம், கறை படிந்த பற்கள் எல்லாமே வெறுத்தொதுக்கும்படி உள்ளது. அப்பெண்ணை வல்லுறவுக்கு உள்ளாக்கி கொடூரமாக சிதைப்பதற்கு முன் அப்பெண் மீது காறித் துப்புகிறார். – காட்டுமிராண்டித்தனம்!
கவரிங் இஸ்லாம் (Covering Islam) என்ற நூலில் எட்வர்ட் சேத் கூறுகிறார், “இஸ்லாமும்  அடிப்படை வாதமும் ஒன்று என இரண்டையும் வலிந்து ஒன்றாக உருவாக்குவதால், சாதாரண மக்கள் இஸ்லாமும் அடிப்படை வாதமும் ஒன்று என்றுதான் பார்ப்பார்கள்.” இப்படி மூன்று தலைமுறை ’சாதாரண’ இசுலாமியரைப் பார்த்தால் இந்தப் பார்வை உருவாக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஆனால், அக்னிகோத்ரி அதற்கும் மேலே செல்கிறார். இங்கு அடிப்படைவாதம் என்றாலே அது வன்முறைதான் என ஒன்றாக்கப்பட்டுள்ளது. இதனால் இளமையிலிருந்தே இசுலாமியர் என்றாலே எவ்விதத்திலும் நம்பக் கூடாதவர்கள், கொடூரமானவர்கள் என்ற பார்வை உருவாக்கப்படுகிறது.
இதைச் செய்வதற்கு ‘முற்போக்குவாதம்’ அல்லது ‘தீவிரவாதம்’ என வரையறுத்து, அது எப்படி தவறு என புரிய வைக்க சிரமப்பட்டு செய்ய வேண்டியதெல்லாம் கிடையாது என சேத் மேலும் கூறிச் செல்கிறார். “உதாரணத்திற்கு எல்லா இசுலாமியர்களிலும் 5% பேர் அல்லது 10% பேர் அல்லது 50% பேர் அடிப்படைவாதிகள் என்று சொன்னாலே போதும்.” தமது காஷ்மீர பண்டிட் நண்பர்கள் மற்றும் அருகில் உள்ளவர்களைப் பாதுகாக்க தங்களையே ஆபத்துக்கு உள்ளாக்கிக் கொண்ட இசுலாமியர்கள் உள்ளனர்.
ஆயிரக்கணக்கான காஷ்மீர இசுலாமியர்கள் தான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர் என்ற செய்தியையே அக்னிகோத்ரி முற்றாக துடைத்தழித்து விட்டார். இதைச் செய்யும் போக்கிலே சிக்கலான, கடினமான, முரணான விசயங்களை தனது நோக்கத்திற்கு மிக கேடாகப் பயன்படுத்திக் கொண்டார்.
படிக்க :
நட்டத்தில் தள்ளப்படும் காஷ்மீர் ஆப்பிள் உற்பத்தியாளர்களும் வியாபாரிகளும் !
காஷ்மீர் சிறப்பு உரிமை ரத்து – இரண்டு ஆண்டு நிறைவு : துளிர்விடுகிறது விடுதலை முழக்கம் !
அக்னிகோத்ரி போராளி குழுக்களின் பயங்கரவாதத்தையும் அரசுக்கு எதிரான மாற்றுக் கருத்தையும் ஒன்றாக்கி விட்டார். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் ஜேஎன்யூ சிக்கல் பற்றிய காட்சி. ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக நிகழ்வு ஒன்றில் ‘ஆசாதி’ முழக்கம் எழுப்பப்பட்டது. அந்தக் காட்சி அப்படியே மிக இயல்பாக எந்த நெருடலுமின்றி, யார் போடுவது என்றே தெரியாமல் “இந்திய நாடு துண்டு துண்டாகும்” என்ற முழக்கமாக மாற்றப்படுகிறது. இது பாஜக ஆதரவு ஊடகங்கள் மாணவர்களை தேசத் துரோகிகளாக்கி, ஒடுக்குவதற்காக புனைந்த மோசடிச் செய்தி. இதனடிப்படையில் அந்த மாணவர்கள் மீது 2016-ல் போட்ட தேசத் துரோக வழக்கு இன்று வரை இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இங்கு உண்மைபோல ஒன்று உருவாக்கப்பட்டு அதன்மீது பொய் கவனமாக கட்டமைக்கப்படுகிறது.
படத்தில், ஒரு பேராசிரியரின் உத்தரவில், அவரது கண்காணிப்பில் எல்லா மாணவர்களும் இந்த முழக்கத்தைப் போடுவதுபோல காட்சி கட்டமைக்கப்பட்டுள்ளது. உண்மையில், அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்ட மூன்றாம் ஆண்டு நிகழ்வையொட்டி ஒரு கவியரங்கம் நடத்தப்பட்டது. அந்த கவியரங்கத்தை சீர்குழைக்க வந்த ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி குண்டர்கள் உருவாக்கியதுதான் இந்த தேசத் துரோக நாடகமும், அந்த முழக்கமும். ஆனால் படத்தில் ஏ.பி.வி.பி அமைப்பைக் காட்டவேயில்லை. அது மட்டுமல்ல, சங் பரிவாரின் எந்த ஒரு அமைப்பையும் காட்டவில்லை. ஆனால் அவர்கள்தான் நடப்பில் சூத்திரதாரர்களாக உள்ளனர்.
ஜேஎன்யூ மாணவர்களுக்கு எதிரான ’ஆதாரங்கள்’ என இவர்கள் பயன்படுத்தும் வீடியோக்கள் எல்லாம் மோசடியாக உல்ட்டா செய்யப்பட்டவை என அம்பலமானவை. ஜீ செய்தி மற்றும் ரிபப்ளிக் டிவி போன்ற வலது சாரி ஊடகங்கள் ‘துக்கடா துக்கடா கேங்’ என அவதூறு செய்திகளையே பிரபலமாக்கியுள்ளன. (தற்செயலாக குறிப்பான இந்தப் படம் கூட ஜீ ஸ்டுடியோஸ்-ன் தயாரிப்பே.) இந்த ’கேங்’ என்ற வார்த்தை, யார் ஒருவர் அரசின் கட்டளைகளை எதிர்க்கிறார்களோ அவர்களை இழிவுபடுத்த பயன்படுத்தப்படுகிறது. இப்படி அரசிற்கு எதிரான கருத்துக் கொண்டவர்கள் அனைவரையும் இலக்கு வைத்துத் தாக்குகிறார் அக்னிகோத்ரி.
(தொடரும்…)


கட்டுரையாளர் : நவோமி பார்டன்
தமிழாக்கம் : நாகராசு
நன்றி : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க