‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் இசுலாமியர்களுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டிவிடுவதற்கான ஒரு திரித்துப் புரட்டப்பட்ட பிரச்சார வாகனம் !
லீனி ரெய்ஃபென்ஸ்டால்-ன் ‘மன உறுதியின் வெற்றி’ (Triumph of the Will) (1935) என்ற ஆவணப்படம், நூரம்பெர்க்கில் நடந்த நாஜிக் கட்சியின் 7 லட்சம் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட மாநாடு பற்றி எடுக்கப்பட்ட ஆவணப்படம். இது, இதுவரை எடுக்கப்பட்ட ஆவணப்படங்களிலேயே மிகச் சிறந்த ஒன்று என கூறப்படுகிறது. சினிமாவில் மட்டும் இது உயர்ந்த தரம் என்பதல்லாமல் பிரச்சாரத்திலும் உயர் தரம் மிக்கது என போற்றப்படுகிறது. ஆரிய இனமே ஆளப்பிறந்த இனம் என்ற நாஜிக் கொள்கைக்கேற்ப, ஜெர்மானிய ஆரிய இனமே உயர்ந்த இனம் என்கிற ஹிட்லரின் கருத்துக்கு ஏற்ப ஜெர்மானிய ஆரியன் அழகிய, நீல நிறக் கண்கள் கொண்ட, உயரமான வலுமிக்கவன் என சித்தரித்ததோடு, நாஜி ஜெர்மனியின் வெல்லப்பட முடியாத அமைப்பு ஆற்றலையும் படம் பிரச்சாரம் செய்தது.
அடால்ஃப் ஹிட்லர் படத்தைத் தொடங்கி வைத்ததோடு மட்டுமின்றி அதன் முழுத் தயாரிப்பாளரும் அவரே. அதுவரை வியாபார படங்களில் ஒரு நடிகையாக நடித்து வந்த ரெய்ஃபென்ஸ்டால், ஹிட்லரின் விருப்பமான இயக்குனர் ஆனதோடு, மூன்றாவது ரீச்சின் மிகப்பெரும் பிரச்சாரகராகவும் ஆகியிருந்தார். 1938-ம் ஆண்டில் 1936-ல் நடந்த ஒலிம்பிக் பற்றிய ஒலிம்பியா என்ற ஆவணப்படத்தை எடுத்திருந்தார். அந்த ஒலிம்பிக்கில் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜெஸ்ஸி ஓவன்ஸ் 4 தங்கப் பதக்கங்களை வென்று சர்வாதிகாரியின் ஆரிய மேலான்மை கருத்தை குழி தோண்டிப் புதைத்துவிட்டார்.
ஆனால், இந்த ஆவணப்படமோ நாஜி ஜெர்மனியின் மேலாண்மையை உலகுக்கே எடுத்துக் காட்டும் வண்ணம் அமைந்து, பெரும் வரவேற்புப் பெற்றது. இது ரெய்ஃபென்ஸ்டால்-ன் படம் எடுப்பதில் புதுப் புது தொழில்நுட்பங்களைக் கையாள்வதில் உள்ள ஆற்றலை வெளிப்படுத்தி, உலகம் முழுதும் நல்ல பெயரையும் பல விருதுகளையும் பெற்றுத் தந்தது. இவரைப் படம் எடுப்பதில் ஆற்றல் மிக்க முன்னோடிகளில் ஒருவராக நிலைநிறுத்தியது. இதன்மூலம் ‘குற்றமற்ற’ பிரச்சாரகராக இதுவரை உள்ளார்.
படிக்க :
பொய்வழக்கில் காஷ்மீர் பத்திரிகையாளர் மீண்டும் மீண்டும் கைது !
ஜம்மு – காஷ்மீர் பிரஸ் கிளப்பைக் கைப்பற்றிய சங்கிப் பத்திரிகையாளர் கும்பல் !
ரெய்ஃபென்ஸ்டாலின் திரைப்படத் திறமையில் பலமடங்கு குறைந்திருப்பினும், பாஜக விவேக் ரஞ்சன் அக்னிகோத்ரியில் ஒரு ரெய்ஃபென்ஸ்டால்-ஐ பார்த்திருக்கலாம். தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்துடன் பாஜக-வின் விருப்பமான இயக்குனராக அக்னிகோத்ரி ஆகியுள்ளார். படம் கூறும் செய்தியும் அதன் ‘அழகு’ம் அப்படியே பாஜகவோடு ஒத்துப்போகிறது என்பதை மோடியும் அவரது ஆதரவாளர்களும் தரும் ஆதரவு ஆரவாரக் கூச்சலே வெளிப்படுத்துகிறது.
இதற்கு முன் எப்போது ஒரு பிரதமர் வெளிப்படையாக ஒரு திரைப்படத்தை ஆதரித்து, அதை விமர்சிப்பவர்கள்மீது பாய்ந்து குதறியுள்ளார்கள்? பாஜக ஆளும் பல மாநில முதல்வர்கள் படத்திற்கு வரிவிலக்கு அளித்துள்ளனர்.
இத்திரைப்படம் 1989-ல் காஷ்மீரில் பயங்கரவாதிகள் பண்டிட்டுகளைக் குறிவைத்துத் தாக்கத் தொடங்கியபோது அவர்கள் (பண்டிட்டுகள்) கூட்டங்கூட்டமாக காஷ்மீரிலிருந்து வெளியேறியது பற்றியது. இப்படி ஆயிரக்கணக்கானவர்கள் தமது வீடுகளைவிட்டு வெளியேறி இந்தியாவின் பல பகுதிகளில் குடியேறினர். அப்போது கொல்லப்பட்ட பண்டிட்டுகளின் எண்ணிக்கை பற்றி பல்வேறு குழுவினரும் வெவ்வேறு எண்ணிக்கையைக் குறிப்பிடுகின்றனர். ஆனால், பண்டிட் சங்கர்ஷ் சமிதி என்கிற பதிக்கப்பட்டோர் சங்க கூற்றுப்படி, 1990 முதல் 2011 வரை கொல்லப்பட்ட பண்டிட்டுகள் 399 பேர்தான். இதில், முதல் ஆண்டில் இந்த எண்ணிக்கையில் 7% பேர் கொல்லப்பட்டனர் என்கிறார்கள். அது படிப்படியாகக் கூடி 655 ஆனது என்கிறார்கள். பிறர் கூறுவது 700-லிருந்து 1300-க்கு மேல்.
இந்தப் படம் மேலும் பலர் இறந்ததாகக் கூறி இதற்குக் காரணமானவர்கள் என காங்கிரசு, தாராளவாதிகள், மனித உரிமையாளர்கள், நக்சல் ஆதரவாளர்கள், இசுலாமியர்கள் என குற்றம் சாட்டுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதாயிருந்தால் நாட்டின் நலிவுகளுக்கு காரணம் என வழமையாக யாரையெல்லாம் பொதுவில் குற்றம் சாட்டுகிறார்களோ அதே பட்டியலைத்தான் இவரும் கூறுகிறார். இவரைப் பொருத்து ஜேஎன்யூ என்றால் நாட்டின் எதிரிகளின் கூடாரம். இவையெல்லாம் எவ்வித தரவுகளும் ஆதாரங்களுமின்றி மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்லப்படுகிறது. அக்னிகோத்ரி ராஜீவ் காந்தி மீது குற்றம் சாட்டுகிறார். ஆனால், உண்மை என்னவென்றால், அன்று டில்லியில் பாஜக ஆதரவிலான வி.பி.சிங் அரசாங்கம்தான் ஆட்சியில் இருந்தது. பாஜக முழுமையாக ஆதரித்த எமர்ஜென்சி புகழ் ஜக்மோகன் தான் காஷ்மீரில் கவர்னராக இருந்தார். (1996-ல் இதே ஜக்மோகன் பாஜக-வில் இணைந்தார்.) ஜனவரி 1990 முதல் காஷ்மீரில் இவர் வைத்ததுதான் சட்டம் என ஆட்சி செய்தார். ஏனெனில் இவரைக் கேள்வி கேட்க அன்று காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என எதுவுமில்லை.
மேலும், இந்த திரைப்படம் எந்த வரலாற்றுப் பின்புலத்தையும் கணக்கில் கொள்ளவில்லை. தவிர பயங்கரவாதிகளால் நூற்றுக்கணக்கான இசுலாமியர்கள், தேசிய மாநாட்டுக் கட்சியினர் உட்பட, கொல்லப்பட்டார்கள் என்ற உண்மையை முற்றாகப் புறக்கணித்துவிட்டது. அந்த தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லாவை அக்னிகோத்திரி மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார்.
இதற்கிடையே 2019-ல் மோடி 370–வது சட்டப் பிரிவுவை நீக்கியதுபோல, முதலிலேயே நீக்கியிருந்தால் இவ்வளவு கொலைகளும், வெளியேற்றமும் நடந்திருக்காது என ஆலோசனைகளையும் படம் முன்வைக்கிறது. எந்த உண்மைத் தரவுகளைப் பற்றியும் கவலைப்படாமல் வாட்ஸ் ஆப்பில் கோபத்துடன் பதிவர்கள் பதிவு போடுவார்களே அதையே படம் வெள்ளித் திரையில் பேசுகிறது ! கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை மிகப் பெரிதாக ஊதிப் பெருக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை, இனப் படுகொலை என்றால் எண்ணிக்கை அதிகமிருக்க வேண்டும் என அக்னிகோத்ரி நினைத்திருப்பார் போலும் !
இது பாஜக-வின் சொந்த உலக கண்ணோட்டத்துடன், தேசத் துரோகிகள் பட்டியலுடன் மிகப் பொருத்தமாகப் பொருந்திப்போகிறது. தேசத் துரோகிகள் என்றால் வேறு யார்? நம்பிக்கைத் துரோகிகள் தான் !
இப்படம் உணர்வுகளைத் தூண்டிவிடும் வகையில், குறிப்பாக இந்திய இசுலாமியர்களுக்கு எதிரான உணர்வுகளை ஒரு கடைக்கோடி எல்லைக்கு சென்று கேடாகப் பயன்படுத்துகிறது. இந்தப் படம் பார்க்கும் யாருமே, குறைந்தபட்ச மனிதாபிமான உணர்வற்ற, “கொலைகார இசுலாமியர்” என்ற கருத்துக்கு எவ்வித சிரமமுமின்றி ஆட்படுவார்கள் என்பது உறுதி. அன்று ஒன்றிய அமைச்சராக இருந்த முப்தி முகம்மது சையத்-தின் மகளான மெஹ்பூபா முஃப்தி, பண்டிட்டுகளின் துயரை பாஜக ஆயுதமாக்கியுள்ளது எனக் கூறியது வியப்புக்குறியதல்ல.
அக்னிகோத்ரிக்கு, அவர்மீது பொறாமை கொண்டோர், எதிரிகள் எண்ணிக்கை இத்துடன் நிற்கவில்லை. வியாபார ரீதியாக வெற்றி பெற்ற தனது படத்தை போதுமான அளவு அங்கீகரிக்காத திரைத்துறையினர், ஊடகம், குறிப்பாக திரை விமர்சகர்கள் என அவர் நினைக்கும் எல்லோரையும் போட்டுத் தாக்குகிறார். இதன் பொருள், அகநிலையாக இவர்கள் தன் (அக்னிகோத்ரி) மீது வெறுப்புக் கொண்டுள்ளனர் என்பதே !
அக்னிகோத்ரி தனது கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க உரிமையுண்டு ! ஆனால் அவர் எல்லைமீறி எதிர்க்கிறார். பல விமர்சகர்கள், படம் அதன் பார்வையாளர்களை தன் கருத்துக்கு ஈர்த்து, கட்டிப்போடுகிறது என பாராட்டியும் கூறியுள்ளனர். அதே நேரம் அந்த விமர்சகர்கள் படத்தில் உண்மைத் தன்மையில்லை என்ற குறையை சுட்டிக் காட்டவும் செய்கின்றனர். அக்னிகோத்ரி ஒருமுறை, “உண்மை, உண்மைதான் என யார் சொன்னது” எனக் கூறினார். எனவே அவரது படத்தைப் பற்றிய வம்பு எதைப் பற்றியது என்று அவர் ஆச்சரியப்படலாம். ஆனால் ஐயோ, நம்மில் மற்றவர்கள் உண்மைகள் போன்ற ‘அற்ப’ விஷயங்களைப் பற்றி கவலைப்படுபவர்களாக இருக்கிறோமே !
அக்னிகோத்ரியும் அவரது படமும் உருவாக்கிய சந்தடிகளைப் பற்றி – சில இயல்பானவை, சில செயற்கையாக உருவாக்கப்பட்டவை – சிறிது சொல்ல வேண்டியுள்ளது. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் மக்கள் மத்தியில் இடம் பெற அவர் தொடர்ந்து ஏதாவது செய்து கொண்டே உள்ளார். அவரது படம் காரணமாகவே அமெரிக்க, ரொடெ தீவு மாநிலம் “காஷ்மீர் இனப்படுகொலையை அங்கீகரித்ததாக” கூறிக் கொண்டார். இதுவே சந்தேகத்திற்குறியது.
இத்திரைப்படம் பார்வையாளர்களை மட்டும்கொண்டு வரவில்லை, தவறான நடத்தைகளையும் கொண்டு வந்துள்ளது. திரையரங்குகளில் தேசியவெறிக் கூச்சல்கள் எழுப்பப்படுவதாக செய்திகள் வருகின்றன.
பிரதமர் முதல் பல மாநில முதல்வர்கள் வரை படத்தை ஆதரிக்கின்றனர். இப்படி மேல்மட்ட ஆதரவு இல்லையென்றாலும் அக்னிகோத்ரி தனது மார்க்கெட்டிங் மற்றும் சுய ஊக்குவிப்பு திறன்களால் சமாளித்திருப்பார்.
படிக்க :
நட்டத்தில் தள்ளப்படும் காஷ்மீர் ஆப்பிள் உற்பத்தியாளர்களும் வியாபாரிகளும் !
காஷ்மீர் சிறப்பு உரிமை ரத்து – இரண்டு ஆண்டு நிறைவு : துளிர்விடுகிறது விடுதலை முழக்கம் !
பாஜக ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’-க்கு என்ன மதிப்புள்ளதோ அதனை ஒட்டக் கறக்கப்போகிறது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. டெல்லியில் இருந்த, இப்போதும் இருக்கிற பாஜக அரசாங்கமும் சரி, இப்போது காஷ்மீரில் நடக்கும் ஒன்றிய அரசின் ஆட்சியும் கூட ஏன் பாதிக்கப்பட்ட பண்டிட்களுக்கு ஒருவித நீதியைப் பெற உதவத் தவறிவிட்டன என்ற நியாயமான கேள்விகளை மூழ்கடிப்பதற்கும் இது அவர்களுக்கு உதவும். பெரும்பாலான பண்டிட்டுகள் இந்தியாவின் பிற பகுதிகளிலும், உலக அளவிலும் வெற்றிகரமாக, நன்றாகவே வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இன்னும் ஒருவித நீதியையும், சிக்கலை ஒருவிதமாக முடிவுக்குக் கொண்டு வரவும் விரும்பலாம். ஆனால் இதுவரை எந்த அரசாங்கமும் இந்த இரண்டையும் வழங்குவதற்கு எந்த விருப்பத்தையும் காட்டவில்லை.
சிக்கல்களின் இந்த நுணுக்கங்கள் அக்னிஹோத்ரிக்கானவை அல்ல. அவரது நோக்கம் ஒரு சில கருத்துக்கள் மற்றும் அவர் வெளிப்படையாக வைத்திருக்கும் பல தப்பெண்ணங்களை மக்கள் மனதில் ஆழப் பதிய வைப்பதாகும். இதில் அவர் வெற்றி பெறுகிறார். அவரது சிறந்தது இன்னும் வரவிருக்கிறது. ஊதிப் பெருக்கப்பட்ட தேசிய வெறித் திரைப்படங்களை உருவாக்கிய மற்ற திரைப்படத் தயாரிப்பாளர்கள் அனைவரும் நன்றாகவே இருக்கிறார்கள். ஆனால் இதுதான் உண்மையான விஷயம். இப்போதிலிருந்து, அது எல்லா வழிகளிலும் அக்னிஹோத்ரி ஆகும்.
கட்டுரையாளர் : சித்தார்த் பாட்டியா
தமிழாக்கம் : நாகராசு
நன்றி : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க