ஸ்ரீநகரில் உள்ள செய்தி இணையதளமான தி காஷ்மீர் வாலாவின் நிறுவனரும், பத்திரிகையாளருமான ஃபஹத் ஷா கடந்த பிப்ரவரி 4 முதல் சிறையில் அடைக்கப்படுள்ளார். தனது ஜாமீன் மனு விசாரணைக்கும் வருவதற்கு ஒரு நாள் முன்னதாகவே மீண்டும் மார்ச் 14 அன்று பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவரை கைது செய்துள்ளது ஜம்மு & காஷ்மீர் போலீசு.
தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களுடன் சிறுவன் ஒருவன் கொல்லப்பட்ட என்கவுண்டரை பற்றி காஷ்மீர் வாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதனால், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தேசத்துரோக குற்றச்சாட்டுகளின் கீழ் அப்பத்திரிகையின் நிறுவனர் ஃபஹத் ஷா பிப்ரவரி 4 அன்று கைது செய்யப்பட்டு ஸ்ரீநகரில் உள்ள போலீசு நிலையத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறுவன் ஒரு தீவிரவாதி என்று ஜம்மூ & காஷ்மீர் போலீசு குற்றம்சாட்டியுள்ள நிலையில், சிறுவனின் குடும்பத்தினர் தங்கள் மகன் நிரபராதி என்று கூறுவதை காஷ்மீர் வாலா செய்தியாக வெளியிட்டுள்ளது. இது மூன்றாவது எஃப்ஐஆருக்கு வழிவகுத்தது.
படிக்க :
ஜம்மு – காஷ்மீர் பிரஸ் கிளப்பைக் கைப்பற்றிய சங்கிப் பத்திரிகையாளர் கும்பல் !
உ.பி : யோகி ஆட்சியில் அதிகரிக்கும் பத்திரிகையாளர்கள் படுகொலை !
ஃபஹத் ஷா “போராளித்தனத்தை மகிமைப்படுத்துகிறார்”, “சட்ட அமலாக்க முகமைகளின் பிம்பத்தை கெடுக்கிறார்” மற்றும் “நாட்டிற்கு எதிராக அதிருப்தியை பரப்புகிறார்” என்று இந்த எஃப்ஐஆரில், ஜம்மு & காஷ்மீர் போலீசு குற்றம் சாட்டியுள்ளது.
ஷாவின் சட்ட ஆலோசகர் உமைர் ரோங்கா, “குற்றம் சாட்டப்பட்டவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அவரை எந்த குற்றத்திலும் இணைக்காததால்” பத்திரிகையாளருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கக்கூடும் என்று ஜம்மு & காஷ்மீர் போலீசுத்துறை உணர்ந்துள்ளது. அவரது தடுப்புக்காவலை நீட்டிக்கவும், அவர் வேலை செய்வதைத் தடுக்கவும் அதிகாரிகள் பொதுப் பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தியுள்ளனர். இது அவரது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். மேலும் நாங்கள் நீதிக்காக உச்சநீதிமன்றத்தை அணுகப்போகிறோம்” என்று கூறினார்.
ஃபஹத் ஷாவுக்கு ஜாமீன் கிடைத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர் மாவட்ட போலீசுத்துறை காஷ்மீர் வாலாவுக்கு எதிரான முதல் வழக்கு தொடர்பாக ஜம்மு காஷ்மீர் போலீசுத் துறையால் மே 2020-ல் பதிவுசெய்யப்பட்டது. (எஃப்.ஐ.ஆர் எண் 70/2020). இந்த வழக்கில் ஃபஹத் ஷா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 109 (ஊடுருவல்) 147 (கலவரம்) 307 (கொலை செய்ய முயற்சி), 501 (அவதூறான விஷயத்தை அச்சிடுதல்) மற்றும் 505 (பொதுத்தீங்கு) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
“விசாரணை முடிந்துவிட்டதாகத் தோன்றுவதால் ஃபஹத் இனி காவலில் இருக்கத் தேவையில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக வழக்கின் சூழ்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. இந்த வழக்கில் ஃபஹத் ஷா காவலில் வைக்கப்படிருப்பது நியாயமற்றது” என்று உமைர் கூறினார்.
ஸ்வீடனில் உள்ள  உப்சாலா பல்கலைக் கழகத்தின் அமைதி மற்றும் மோதல் ஆய்வுகளின் பேராசிரியர் அசோக் ஸ்வைன், “ஃபஹத் ஷா கைது செய்யப்பட்டதன் மூலம், ஆளும் அரசாங்கம் சர்வதேச நிகழ்ச்சி நிரலில் இருந்து காஷ்மீரை விலக்கி வைக்க தன்னால் இயன்ற அனைத்தையும் செய்கிறது என்பதை விளக்குகிறது. அந்தச் சூழலில், காஷ்மீரில் இருந்து எந்தவொரு சுதந்திரமாக அறிக்கையையும் கட்டுப்படுத்த முயற்சிக்கிறது”, “காஷ்மீரில் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுவது அங்கு பதற்றமான சூழ்நிலைமையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் உள்ளூர் சுதந்திர பத்திரிகைகள் அழிந்து போகிறது” என்று கூறினார்.
படிக்க :
உலக அளவில் 2021-ம் ஆண்டு 45 பத்திரிகையாளர்கள் படுகொலை
பீகார் : பத்திரிகையாளர் புத்திநாத் ஜா படுகொலை
“பத்திரிகையாளர்கள் இறந்தால் தான் மதிக்கப்படுவார்களா? ஏனென்றால், அவர்கள் உயிருடன் இருக்கும் போது, நாம் அதைப் பொருட்படுத்துவதில்லை. சித்திக் கப்பன், ஃபஹத் ஷா இருவரும் தங்கள் வேலையைச் செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த அநீதி அவர்களுடன் நின்றுவிடாது” என்று மூத்த பத்திரிகையாளர் ராணா அய்யூப் ட்வீட் செய்துள்ளார்.
முன்பு போட்ட பொய் வழக்கிற்கான ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியேறுவதற்கு முன் அடுத்தடுத்து பொய் வழக்கைப் போட்டு பத்திரிகையாளர்களை முடக்குகிறது ஜம்மு & காஷ்மீர் போலீசுத்துறை. பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியளாலர்களின் கருத்து சுதந்திரத்தின் மீதும், உண்மையை வெளிகொண்டுவரும் அவர்களை வேலை செய்யவிடாமல் கைது – சிறை என்றும் தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வருகிறது பாசிச மோடி அரசு.

சந்துரு
செய்தி ஆதாரம் : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க