த்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் 2017-ம் ஆண்டு முதல்வராக பதவியேற்றது முதல் 48 பத்திரிகையாளர்கள் தாக்கப்படுள்ளனர். 66 பத்திரிகையாளர்கள் மீது வழக்குப் பதிவு – கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, உத்தரப்பிரதேசத்தில் 2020-2021-ம் ஆண்டுகளில் மட்டும் 78 சதவீத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2017 முதல் பிப்ரவரி 2022 வரை மொத்தம் 138 பத்திரிகையாளர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உத்தரப்பிரதேச மக்கள் சிவில் உரிமைகளுக்கான சங்கத்துடன் (UP PUCL) இணைந்து தயாரிக்கப்பட்ட அறிக்கையில் சரிபார்க்கப்பட்ட வழக்குகள் மட்டுமே இவை. இன்னும் கணக்கில் வராத சம்பவங்களில் எண்ணிக்கை இன்னும் அதிகம் இருக்கலாம்.
படிக்க :
உ.பி : பள்ளி மாணவர்கள் இந்து மதவெறி உறுதிமொழி !
உ.பி. லக்கிம்பூர் கேரி படுகொலை : காவி பாசிஸ்டுகளின் சதி !
கடந்த 2017-ம் ஆண்டு முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றது முதல் CAAJ அறிக்கை வெளியிடப்படும் வரை மாநிலத்தில் மொத்தம் 12 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 48 பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். 66 பத்திரிகையாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு – கைது செய்யப்பட்டுள்ளனர். மிரட்டல், காவலில் வைத்தல், உளவு பார்த்தல் போன்ற 12 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக-வின் ஐந்தாண்டு கால ஆட்சியில் 78 சதவீதம் வழக்குகள் (109) குறிப்பாக 2020-ல் 52 வழக்குகளும் 2021-ல் 57 வழக்குகளும் பதிவாகியுள்ளது.
2020-ம் ஆண்டில் மட்டும் ஏழு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது ஒரு வருடத்தில் மிக அதிகமானதாகும்.
2017-ல் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் கான்பூரில் உள்ள ஹிந்துஸ்தான் செய்தித்தாளின் நவீன் குப்தா மற்றும் காஜிபூரில் டைனிக் ஜாக்ரன் பத்திரிகையாளராக இருந்த ராஜேஷ் மிஸ்ரா ஆகிய இரண்டு பத்திரிகையாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2018-2019-ம் ஆண்டில் எந்த பத்திரிகையாளர்களும் கொல்லப்படவில்லை. ஆனால் 2020-ல் மொத்தம் ஏழு பத்திரிகையாளர்கள் – ராகேஷ் சிங், சூரஜ் பாண்டே, உதய் பாஸ்வான், ரத்தன் சிங், விக்ரம் ஜோஷி, ஃபராஸ் அஸ்லாம் மற்றும் ஷுபம் மணி திரிபாதி – கொல்லப்பட்டுள்ளனர்.
உள்ளூர் பத்திரிகையான ராஷ்டிரிய ஸ்வரூப் உடன் தொடர்புடைய ராகேஷ் சிங், ஊழலை அம்பலப்படுத்தியதற்காக பல்ராம்பூரில் அவரது வீடு வைத்து தாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.
உன்னாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஷீபம் மணி, மணல் மாஃபியாவை அம்பலப்படுத்தியதற்காக தனக்கு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து போலீசு பாதுகாப்பு கோரினார். இருப்பினும் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படுவதற்கு முன்பே சுட்டுக்கொல்லப்பட்டார்.
விக்ரம் ஜோஷி காஜியாபாத்தில் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டார். தொலைக்காட்சி பத்திரிகையாளர் ரத்தன் சிங்-ம் பல்லியாவில் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொரு பத்திரிகையாளரான உதய் பாஸ்வான்-ம் அவரது மனைவியும் சோன்பத்ராவின் பர்வாடி கிராமத்தில் அடித்துக் கொல்லப்பட்டனர்.
உன்னாவில் உள்ளூர் ஆங்கில நாளிதழின் பத்திரிகையாளர் சுரஜ் பாண்டே சந்தேகத்திற்கிடமான நிலையில் ரயில் பாதையில் இறந்து கிடந்தார். இது தற்கொலை என போலீசார் கூறினாலும் இது கொலை என அவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். பின்னர் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் என இருவர் கைது செய்யப்பட்டனர்.
கௌசாம்பியை தளமாகக் கொண்ட பைகாம்-இ-தில் பத்திரிகையின் நிருபரான ஃபராஸ் அஸ்லாம் போலீசு இன்பார்மர் என்ற சந்தேகத்தின் பெயரில் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
2021-ல் சுலப் ஸ்ரீவஸ்தவா மற்றும் ராமன் காஷ்யப் ஆகிய இரு ஊடகவியலாளர்களின் கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரதாப்கரில் உள்ளூர் மதுபான மாஃபியாவின் ஊழலை அம்பலப்படுத்திய ஸ்ரீவஸ்தவா, மாஃபியா கும்பல் தன்னைக் கொன்றுவிடக் கூடும் என்று அஞ்சினார். அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு போலீசு பாதுகாப்பை நாடினார். ஆனால், போலீசு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக இந்தக் கொலையை விபத்து என்று முத்திரை குத்தியது. எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா இந்த கொலை தொடர்பாக உ.பி போலீசுத்துறையில் செயல்பாட்டை கேள்வியெழுப்பி ஒரு அறிக்கையை வெளியிட்டது.
லக்கிம்பூர் கேரியில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தனது வாகனத்தை ஏற்றி கொலை செய்தான். இந்த சம்பவத்தில் பத்திரிகையாளர் ராமன் காஷ்யப் கொல்லப்பட்டார். இந்த கொலையை ஆராய்ந்து PUCL-ஐ உள்ளடக்கிய அகில இந்திய விசாரணைக்குழு இக்கொலை நன்கு திட்டமிட்டப்பட்ட ஒன்று கூறியது.
2022-ம் ஆண்டு ஜனவரி 26 அன்று சஹாரன்பூரில் பத்திரிகையாளர் சுதிர் சைனி பட்டப்பகலில் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மொத்தம் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் உண்மையாக எண்ணிக்கை 12-க்கும் அதிகமாக இருக்கலாம் என்று CAAJ அறிக்கை கூறுகிறது.
2020-2021 ஆகிய ஆண்டுகளில் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2022-ம் ஆண்டில், அமேதி, கௌசாம்பி, குந்தா, சீதாபூர் மற்றும் காஜியாபாத் ஆகிய இடங்களிலிருந்து பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் வழக்குகள் பதிவாகியுள்ளன.
பத்திரிகையாளர்கள் மீதான சட்ட அறிவிப்புகள், எஃப்.ஐ.ஆர்., கைது, காவலில் வைத்தல், உளவு பார்த்தல், அச்சுறுத்தல் மற்றும் வன்முறை உட்பட பெரும்பாலான தாக்குதல்கள் அரசு மற்றும் நிர்வாகத்தால் தூண்டப்பட்டவை என்று அறிக்கை கூறுகிறது.
படிக்க :
உ.பி : பள்ளிச் சிறுவர்களிடம் காட்டப்படும் சாதித் தீண்டாமை !
உத்தரப்பிரதேசம் : இந்து ராஷ்டிரத்திற்குள் ‘சாத்தியமான மாற்று’ இல்லை !
இரண்டு ஊரடங்குகளின் போதும் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளை தவிர புகாரளிக்கப்படாத பல வழக்குகள் உள்ளன என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளில் பத்திரிகையாளர்கள் தாக்குதல் வழக்குகளில் பதிவு செய்யப்பட்டவைகளின் மொத்த எண்ணிக்கை 138-க்கும் அதிகமாக உள்ளது என்றும் அறிக்கை கூறுகிறது.
இந்துராஷ்டிரத்தின் சோதனைச்சாலையான உ.பி.யில் பத்திரிகையாளர்கள் – ஊடகவியளாலர்கள் திட்டமிட்டு கொலைசெய்வதன் மூலம் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி தனது பாசிசத்தை அரங்கேற்றி வருகிறது யோகி அரசு.
நாடு முழுவதும் இந்துராஷ்டிரம் அரங்கேற்றப்படும் போது, முற்போக்கான பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை உ.பியின் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும்.

சந்துரு
செய்தி ஆதாரம் : த வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க