ஜி.எஸ்.டி வரிப்பங்கீடு: அம்பலமான மோடி அரசின் சதி

2015-ஆம் ஆண்டின் பட்ஜெட் இரண்டு நாட்களில் எழுதப்பட்டது என்பதை சுப்பிரமணியம் கூறுகிறார். நிதி ஆணையத்திடம் புறவாசல் பேரம் படியாததால், குறைந்த காலக்கெடுவிற்குள் பட்ஜெட்டை தனக்கு சாதகமாக எழுதியது மோடி கும்பல்.

2014 ஆண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய உடனே, ஒன்றிய அரசால் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை கணிசமாகக் குறைக்க வேண்டும் என்று இந்திய நிதி ஆணையத்துடன் அரசியல் அமைப்பிற்கு விரோதமாக பேச்சுவார்த்தைகளை மோடி நடத்தினார் என்று NITI ஆயோக்கின் தலைவர் (CEO) பி.வி.ஆர். சுப்ரமணியம் (B.V.R. Subrahmanyam) கூறினார். இதனை இந்தியாவின் எந்த ஊடகங்களும் பெரிதாக செய்தியாக்கவில்லை. மேலும் அரசியல் கட்சிகளும், ஐனநாயக சக்திகளும் கூட இதனை “அரசியல் அமைப்பு மீறல்” என்ற கட்டத்திற்குள் மட்டுமே கண்டித்தனர். ஆனால் இந்த நிகழ்வு வர்க்க பின்னணி கொண்டது என்பதையும், இந்திய அரசியல் அமைப்பு இயல்பாகவே மக்கள் விரோதமாக வெளிப்படைத் தன்மையற்றதாக இருக்கிறது என்பதையும் இந்த நிகழ்வை பகுத்துப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம்.

சமூகம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான மையம் (CSEP) என்ற அரசு சாரா சிந்தனைக் குழாமால் கடந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட   கருத்தரங்கில்  பேசும் போது சுப்ரமணியம் மேற்கண்ட தகவலைப் பகிர்ந்து கொண்டார்.

2014-ஆம் ஆண்டில் பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராக இருந்த சுப்பிரமணியம், மோடிக்கும் நிதி ஆணையத்தின் தலைவர் ஒய்.வி. ரெட்டிக்கும் இடையே நடந்த “அரசியல் அமைப்பு விரோதமான” நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை மாற்றுவது பற்றிய பேச்சுவார்த்தையில் தொடர்பாளராக இருந்தார்.

இருப்பினும், ஒய்.வி.ரெட்டி மோடியின் இந்த புறவாசல் பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை. இதனால், மாநிலங்களுக்கு கொடுக்கவேண்டிய பங்கை வெட்டிச் சுருங்குவதில் மோடி வேறொரு வழியை தேட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பொருளாதார வல்லுநர்கள் மற்றும் பொது நிதி வல்லுநர்களைக் கொண்ட ஒரு சுதந்திரமான நிதி ஆணையம் (Finance Commission), “செஸ்” அல்லது “கூடுதல் கட்டணம் எனப்படும் Surcharges” என்ற இரண்டு வரிப் பிரிவுகளை  தவிர்த்து, மத்திய அரசு வசூலிக்கும் அதன் வரிகளில் இருந்து மாநிலங்களுடன் எவ்வளவு சதவீதப் பணத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது.


படிக்க: இராமர் கோயிலுக்கு முதல் எதிர்ப்பு! தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தோம் நாங்கள்!


இந்த நிதி ஆணையம், 2014 டிசம்பரில் சமர்ப்பித்த அறிக்கையில், அதுவரை மத்திய வரிகளில் மாநிலங்கள் பெற்று வந்த பங்கான 32 சதவீதத்தை, 42 சதவீதமாக உயர்த்தி வழங்க பரிந்துரைத்தது. ஆனால், பிரதமராக இருக்கும் மோடியும், அவரது நிதி அமைச்சகமும், மாநிலங்களின் வரிப் பங்கை 33 சதவீதம் என்ற நிலைக்கு குறைக்க விரும்பினர். அதனால் தான் அன்றைய நிதி ஆணையத்தின் தலைவராக இருந்த ஒய்.வி.ரெட்டியிடம் புறவாசல் பேரம் பேசினார் மோடி. ஆனால் பேரம் படியவில்லை.

ஆனால், மாநிலங்களின் வருவாயைக் குறைக்கும் தனது அரசாங்கத்தின் சதித்தனத்தை மறைத்த மோடி, பிப்ரவரி 27, 2015 அன்று நாடாளுமன்றத்தில் பேசுகையில்: “தேசத்தை வலுப்படுத்த, நாம் மாநிலங்களை வலுப்படுத்த வேண்டும்… நிதி ஆணைய உறுப்பினர்களிடையே ஒரு சர்ச்சை உள்ளது. அதை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். நாங்கள் செய்யவில்லை. ஆனால், மாநிலங்கள் வளப்படுத்தப்பட வேண்டும், பலப்படுத்தப்பட வேண்டும் என்பது எங்கள் நோக்கம். நாங்கள் மாநிலங்களுக்கு 42 சதவீத நிதிப் பகிர்வை வழங்கினோம். சில மாநிலங்களில் இந்த பணத்தை வைத்திருக்கும் அளவுக்கு பெரிய கருவூலங்கள் கூட இருக்காது” என்று கூறினார். இப்படி பச்சையாக பொய் பேசுவது பாசிஸ்டுகளுக்கே உரித்தான பண்புதான். ஆனால் பாசிசம் செழித்து வளர இடம் தரும் இந்த போலி ஜனநாயக கட்டமைப்பில் ஒரு வழி அடைக்கப்பட்டால், மற்றொரு வழி நிச்சயம் தோன்றும்.

அந்தவகையில், 2015-ஆம் ஆண்டிற்கான பட்ஜெடில் சமூக நலத்திட்டங்களுக்கான நிதியை கணிசமாக குறைத்து மாநில அரசுகளுக்கான பங்கை வெட்டியது மோடி அரசு.

2015-ஆம் ஆண்டின் பட்ஜெட் இரண்டு நாட்களில் எழுதப்பட்டது என்பதை சுப்பிரமணியம் கூறுகிறார். நிதி ஆணையத்திடம் புறவாசல் பேரம் படியாததால், குறைந்த காலக்கெடுவிற்குள் பட்ஜெட்டை தனக்கு சாதகமாக எழுதியது மோடி கும்பல்.


படிக்க: அயோத்தியின் இராமனும் அதானியின் இராமனும் | கவிதை


குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சூடான சமைத்த உணவை வழங்குவது போன்ற நலத் திட்டங்களுக்கு வழங்கவேண்டிய நிதியை மோடி அரசு பாதியாக குறைத்ததாக கூறினார் சுப்பிரமணியம். 2015-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் பள்ளிக் கல்விக்கான ஒதுக்கீட்டில் முந்தைய ஆண்டை விட 18.4 சதவீதம் குறைக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக கணக்கிடும் போது, 2015-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் சமூகநலத் திட்டங்களுக்கான நிதியை முந்தைய ஆண்டை விட பாதியாக குறைத்திருந்தது மோடி கும்பல்.

புறவாசல் பேரத்தின் மூலம் மாநிலத்தின் வரிப் பங்கைக் குறைக்க முடியாது என்று மோடி கும்பல் கண்டறிந்ததும், செஸ் மற்றும் கூடுதல் வரி (surcharge) எனப்படும் வரிகளின் தொகுப்பை சீராக அதிகரித்தது. இந்த வரிகளில் மாநிலங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை.

2017-18 மற்றும் 2021-22 நிதியாண்டுகளுக்கு இடையில், மத்திய அரசாங்கத்தால் வசூலிக்கப்பட்ட மொத்த “செஸ்” மற்றும் “கூடுதல் வரி” (surcharge) இருமடங்காக அதிகரித்தது. அந்த காலகட்டத்தில், மொத்த வரி வருவாயில் “செஸ்” மற்றும் “கூடுதல் வரி” ஆகியவற்றின் பங்கு 13.9 சதவீதத்தில் இருந்து 18.4 சதவீதமாக உயர்ந்தது.

மேலும், மோடி அரசாங்கம் மாநிலத்தின் வரி வளங்களை அழித்து, மாநில நிதி சுயாட்சியை அழிக்கும் சரக்கு மற்றும் சேவை வரியை (GST) ஜூலை 2017-இல் அறிமுகப்படுத்தியது. ஏராளமான உள்ளூர் வரிகளை தேசிய வரிகளாக மாற்றி, ஒரே சந்தையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டது தான் GST வரிமுறை. இது கார்ப்பரேட்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும். இதனால் சிறு, குறு வியாபாரங்கள், தொழில்கள் நசிந்து போனதை மக்கள் அனைவரும் அறிவர்.

GSTக்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, ​​GSTக்கு பிந்தைய காலகட்டத்தில் மாநிலங்களின் வரி வருவாய் குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. GST வரி பாக்கியை கூட மாநிலங்களுக்கு சரியாக கொடுக்காமல் மாநிலங்களை வஞ்சித்து வருகிறது பாசிச மோடி அரசு.

சுப்பிரமணியத்தின் உரையின் சாரமாக இருந்த இந்த ஒட்டுமொத்த விவரிப்புகளும் நமக்கு ஒன்றை மட்டும் தெளிவாக புலப்படுத்துகிறது. இந்திய ஜனநாயகம் என்று சொல்லிக்கொள்ளப்படும் இந்த கட்டமைப்பு மக்கள் விரோத போக்குகளை, அதிகார அத்துமீறல்களை அதன் உள்ளார்ந்த இயல்புகளாக கொண்டுள்ளது. அதனால் தான் அது பாசிசம் செழித்து வளர்வதற்கேற்ற விளைநிலமாக உள்ளது. மாநிலங்களின் வரி பங்கை இத்தனை மோசடிகள் மற்றும் சட்டவிரோதமான வழிகளின் மூலமாக குறைத்து மாநிலங்களை நிதியின்றி வதைப்பதானது பாஜகவின் வர்க்கப்பாசத்தையே வெளிப்படுத்துகிறது. அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்களுக்கு சலுகைகளும், கடன் தள்ளுபடிகளும் கொடுத்து அவர்களை கொழுக்கவைக்க தான் மோடி அரசு மக்களின் வரிப்பணத்தை செலவழிக்கிறது. மக்களின் வரிப்பணம் சமூக நலத்திட்டங்களின் மூலம் மக்களை சென்றடையாமல் கார்ப்பரேட் சலுகைகளுக்காக திருப்பிவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் மோடி அரசு கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இப்படி நாட்டின் உயிர்நாடியான விஷயமான மாநில வரிப் பகிர்வில் நடக்கும் மக்கள் விரோத திரைமறைவு செயல்பாடுகளைக்கூட அதிகார வர்க்கத்தின் ஒரு ஆள் சொல்லிதான், அதுவும் 10 ஆண்டுகள் கழித்து தான் தெரியவேண்டிய நிலையில் இந்திய ஜனநாயகம் இருக்கிறது. மக்களின் உயிராதாரமான பிரச்சினைகளில் கூட இந்த அரசமைப்பு வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்வதில்லை. ஏனெனில் அது அதன் இயல்பிலேயே இல்லை.

அதனால், ஒவ்வொரு பாசிச நடவடிக்கைகளும் மக்கள் மத்தியில் அம்பலப்படும் போதும், அதற்கு விளைநிலமாக இருக்கும் இந்த போலி ஜனநாயக கட்டமைப்பை அம்பலப்படுத்த வேண்டும். இதனை மாற்றியமைக்காமல் மக்களுக்கு விடிவில்லை என்பதை உரைக்கவேண்டும்.


சீனிச்சாமி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க