அயோத்தியின் இராமனும்
அதானியின் இராமனும்

இதோ
இப்போது வந்திருப்பது
அயோத்தியின் இராமன் அல்ல  இது
இராமன் 2.0

இரண்டு இராமன்களும் மனைவியோடு வாழவில்லை
அன்று ஒரு வானரம் இலங்கையை எரித்தது
இன்று பல்லாயிரம் வானரங்கள் நாட்டை எரித்துக் கொண்டிருக்கின்றன

அந்த இராமனுக்காக சூர்ப்பனகையின் முலையறுத்து
பெருமிதம் கொண்டான் இலக்குவன்

இந்த இராமனுக்காக கர்ப்பிணியின்
வயிற்றைக் கிழித்து
சிசுவை அறுத்து
வன்புணர்வு செய்தார்கள் நவீன இலக்குவன்கள்

விவசாயத்தின் வயிற்றைக்கிழித்து
கனிம வளங்களை அதானிகளுக்கு படையல் போடுகிறார்
2.0 இராமன்

அசுவமேத யாகத்தில் பிறந்தது அந்த இராமன்
அதானிகளின் யாகத்தில் பிறந்தது இந்த இராமன்

***

சூத்திரன் வழிபடுவதா
சம்பூகனின் தலையைக் கொய்து மனுநீதியை
நிலை நாட்டினான்
அயோத்தியின் ராமன்

சூத்திரரும் பஞ்சமரும் போராடுவதா?
பீமா கோரேகான் வழக்கில்
ஸ்டேட் சாமியை கழுவேற்றி
மனுநீதியை நிலை நாட்டினார்  அதானியின் இராமன்

இராஜராஜ சோழன்
பெருவுடையார் கோயிலை கட்டினான்
இராஜேந்திர சோழன்
கங்கைகொண்ட
சோழபுரத்தை கட்டினான்

இதோ பாருங்கள்
அதானியின் இராமன்
அயோத்தியில்  இராமனுக்கு கோயில் கட்டினார்

முன்னவர்கள் எந்த மசூதியையும் இடித்து விட்டு கோயில் கட்டவில்லை
அந்த வகையில்
பின்னவர் செய்தது
சாதனை தான்
பெருஞ்சாதனை தான்

***

அந்தணர் குலம் காக்க வாளேந்தியது அயோத்தியின் ராமன் எனில்
கார்ப்பரேட்டுகளின் –  பார்ப்பனர்  குலம் காக்க
திரிசூலம் ஏந்துவது
அதானியின் இராமன்

வேளாண் சட்டத் திருத்தம்
தொழிலாளர் நல சட்டத் திருத்தம்
குடியுரிமை சட்டத் திருத்தம்
இன்னும் பல ….

திருத்தங்களின் பெயரால் திருத்தப்படுகிறது நாடு
இனி, ஜனநாயகம்
உரிமை
போராட்டம்
எதற்கும்
இங்கே வேலை இல்லை

இஸ்லாமியருக்கு இழைக்கப்பட்ட அநீதி மறக்கப்படுகிறது
மறைக்கப்படுகிறது

ராமனுக்கு அட்சதை  போடுவதற்கு முன்பு
ஒரு கணம் நில்லுங்கள்

இராமனுக்கா அர்ச்சனை போடுகிறீர்கள் ?

இந்துக்களின் பெயரால் உங்களின் பெயரால்
மோடி மேற்கொண்ட அனைத்து பாசிச நடவடிக்கைகளுக்கும் அல்லவா
அட்சதை போடுகிறீர்கள்

அது
உங்களுக்கு நீங்களே
போட்டுக் கொள்ளும் வாய்க்கரிசி

அழைப்பிதழை வாங்கும் நீங்கள்
அழைப்பிதழை மட்டும் வரவேற்கவில்லை

இஸ்லாமியர்
தலித் மக்கள் உள்ளிட்டோரின் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும்
அல்லவா வரவேற்கிறீர்கள் ?

பார்ப்பனரும் பனியாவும்

இராமனும் இலக்குவணனும்
ஆர்எஸ்எஸ்-ம் பாஜகவும்
மோடியும் அதானியும்
ஒட்டிப் பிறக்காத இரட்டையர்கள்

தனித்தனியே பிரிக்கவும் முடியாது
தனிப்பட்ட முறையில் ஒழிக்கவும் முடியாது

அங்கே கட்டப்பட்டிருப்பது அயோத்தி இராமனுக்கான கோயில் அல்ல
தனக்குத்தானே
மோடி கட்டிக் கொண்ட கோயில்

அங்கே நீங்கள் சென்று இராமனை ஒருபோதும்
வழிபட போவதில்லை
மோடியைத் தான் வழிபட போகிறீர்கள்

கோயில் திறப்பு விழா அல்ல
இந்த ராஷ்டிரத்துக்கான திறவுகோல்

இப்போதும் நாம்
வழிபட்டுக் கொண்டிருந்தால்
நாளை நம் உரிமைகளை ,  நம்மை  பேசுவதற்கு கூட  யாரும் இருக்க மாட்டார்கள்

நினைவில் கொள்ளுங்கள்
இப்போது இருப்பது
அயோத்தி இராமன் அல்ல
அதானி இராமன்.


மருது

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க