உ.பி. லக்கிம்பூர் கேரி படுகொலை : காவி பாசிஸ்டுகளின் சதி !
ஆர்.எஸ்.எஸ் − பா.ஜ.க. கும்பலுக்கு எதிரான போராட்டங்களை மென்மேலும் தீவிரமான மக்கள்திரள் போராட்டங்களாக வளர்த்தெடுத்து பாசிஸ்டுகளுடன் களத்தில் மோதுவதே நாம் செய்ய வேண்டிய பணி.
உ.பி. லக்கிம்பூர் கேரி படுகொலை : விவசாயிகள் போராட்டத்தை இரத்தச் சேற்றில் மூழ்கடிக்க காவி பாசிஸ்ட்டுகள் செய்யும் சதி!
பாசிஸ்டுகளின் ஆட்சியில் படுகொலைகளுக்கா பஞ்சம் வேண்டும்! குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எழுச்சியோடு முன்னேறிய போராட்டத்தை ஒடுக்குவதற்காக கடந்த 2020−ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் டெல்லியையே கலவரக் காடாக்கினார்கள். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் வாழ்வாதாரம் இழந்தனர்.
பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மேற்கு உத்திரப்பிரதேசம் − என இந்துத்துவத்தின் செல்வாக்கு மண்டலங்களையே கிட்டத்தட்ட ஓராண்டாக உலுக்கிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டம் பாசிஸ்ட்டுகளின் ஆத்திரத்தை தூண்டாமலா இருக்கும்? உ.பி மாநிலம் லக்கிம்பூர் கேரியில் நிகழ்த்தப்பட்ட விவசாயிகள் படுகொலை, அந்த ஆத்திரத்தின் வெளிப்பாடு.
000
கடந்த செப்டம்பர் 25−ஆம் தேதி உத்திரப்பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் மாவட்டத்திலுள்ள சம்பூர்ண நகரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில், விவசாயிகள் போராட்டத்தை ஒழித்துக்கட்டும் நோக்கில் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துப் பேசினார் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா.
இதைக் கண்டித்து, லக்கிம்பூருக்கு அருகிலுள்ள பகுதியில் அக்டோபர் 3-ஆம் தேதியன்று, மல்யுத்தப் போட்டியைத் துவக்கி வைக்க வந்த அம்மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் அஜய் மிஸ்ரா ஆகியோருக்குக் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.
அப்போராட்டத்தில் பங்கேற்று அமைதியாக பேரணி சென்று கொண்டிருந்த விவசாயிகள் மீதுதான் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா வெறித்தனமாக காரை ஏற்றி 4 விவசாயிகளை நசுக்கி படுகொலை செய்தான். இச்சம்பவத்தில் ஒரு பத்திரிகையாளரும் கொல்லப்பட்டார்.
‘‘இது ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு நிகரானது’’ என ஓட்டுக் கட்சித் தலைவர்களே அதிர்ச்சியடையும் வண்ணம், தாங்கள் தான் செய்தோம் என்று தெரிய வேண்டுமென்பதற்காகவே பட்டப்பகலில் துணிச்சலோடு இப்பச்சைப் படுகொலையை அரங்கேற்றியுள்ளார்கள் காவி பாசிஸ்டுகள்.
இச்சம்பவம் நாட்டிலுள்ள அனைவரையும் அதிர்ச்சிக்கும் கோபத்திற்கும் ஆளாக்கிய நிலையில் விவசாய சங்கங்கள், எதிர்க்கட்சியினர் மற்றும் பல்வேறு புரட்சிகர, ஜனநாயக அமைப்புகளும் இப்படுகொலைகளைக் கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களையும் மறியல்களையும் நடத்தி வருகின்றன.
அனைத்தையும் வெளிப்படையாக நிகழ்த்திவிட்டு, ‘‘ஆதாரம் இல்லாமல் யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது’’ என திமிரோடு பதிலளித்த யோகி ஆதித்யநாத் அரசு, இப்படுகொலைகளை ‘‘துரதிருஷ்டவசமானது’’ எனக் கூறி பாதிக்கப்பட்ட விவசாயிகளைக் கேலி செய்திருக்கிறது.
இந்தப் படுகொலைகளைக் கண்டு நாடே கொந்தளித்த நிலையில்தான், உச்சநீதிமன்றம் இவ்வழக்கை தானே முன்வந்து விசாரிக்கிறது. இப்படுகொலை தொடர்பாக ‘‘உ.பி அரசின் விசாரணை திருப்திகரமாக இல்லை’’ என்று கண்டிப்பது போன்ற தோரணையைக் கொடுக்கிறது. இதற்கு முன்னர், பாபர் மசூதி இடிப்பு வழக்கு, காஷ்மீரில் பிரிவு 370 நீக்கம், குஜராத் படுகொலை வழக்கு என காவி பாசிஸ்டுகள் நடத்திய எல்லா வன்முறைகளிலும் அவர்களின் கையாளாகச் செயல்பட்டதுதான் இந்த உச்ச நீதிமன்றம் என்பதை நாம் நினைவில் கொண்டே இதனைப் பார்க்க வேண்டும்.
கொலைக் குற்றவாளி ஆசிஷ் மிஸ்ராவைக் கைது செய்யக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய மாணவர் சங்கத்தினர் (AISA) கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். போராடிய மாணவிகளின் பிறப்புறுப்புகளில் எட்டி உதைத்து தனது வக்கிரத்தையும் பொறுக்கித்தனத்தையும் காட்டியுள்ளது டெல்லி போலீசு. இப்படி நீதிகேட்டு போராடுபவர்களையும் கொடூரமாக ஒடுக்கி வருகிறது, காவி ஆட்சி.
அமைதி வழியில் போராடிய விவசாயிகள் மீது தற்போது நடத்தப்பட்டிருக்கும் இந்தப் படுகொலை, பாசிஸ்டுகளின் தற்செயலான தாக்குதல் அல்ல. சுமார் 11 மாதங்களாக போர்க்குணமிக்க வகையில் நடைபெற்று வரும் விவசாயிகளின் ‘‘டெல்லி சலோ’’ போராட்டத்தை, இரத்தச் சேற்றில் மூழ்கடித்து, ஒழித்துக்கட்டும் திட்டத்துடன் காவி பாசிஸ்டுகள் களமிறங்கியிருக்கிறார்கள் என்பதையே நடப்பு நிகழ்வுகள் அனைத்தும் காட்டுகின்றன.
லக்கிம்பூர் படுகொலையின் பின்னணி
லக்கிம்பூர் படுகொலையை காவிகள் முன்னறிவித்து செய்தார்கள் என்பது முக்கியமானது. சம்பூர்ண நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அஜய் மிஸ்ரா ‘‘இங்குள்ள மக்களுக்கு எனது வரலாறு தெரிந்திருக்கும், நான் நினைத்தால் விவசாயிகளின் போராட்டத்தை இரண்டே நிமிடத்தில் முடித்து வைப்பேன்’’ என்று பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்துப் பேசினார். அதைத் தொடர்ந்துதான் விவசாயிகள் கோபமுற்று, அஜய் மிஸ்ராவுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்குகிறார்கள். அப்போராட்டத்தில்தான், அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ரா விவசாயிகளை கார் ஏற்றிப் படுகொலை செய்கிறான்.
அஜய் மிஸ்ரா மட்டுமல்ல, அதற்கடுத்த நாள் சமூக வலைதளங்களில் அரியானா மாநிலத்தின் முதலமைச்சராக உள்ள மனோகர் லால் கட்டார், பா.ஜ.க.வின் விவசாயப் பிரிவு கூட்டமொன்றில் பேசிய காணொலி வெளியானது. அதில் ‘‘அரியானாவின் வடக்கு மற்றும் மேற்கில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் நீங்கள் 700 முதல் 1,000 தன்னார்வலர்களைத் திரட்டி குழுக்கள் அமைக்க வேண்டும். போராடும் விவசாயிகளுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கையில் அக்குழுக்களை இறக்கிவிட வேண்டும். இதற்காக கட்டைகளைக் கையிலெடுங்கள். சிறை செல்வது, ஜாமீன் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’’ என்று தங்களது திட்டத்தை வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில், அரியானாவில் விவசாயிகள் நடத்திய ஒரு முற்றுகைப் போராட்டத்தின்போது, ‘‘பா.ஜ.க. தலைவர்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளின் மண்டையை உடையுங்கள்’’ என்று கர்னால் மாவட்ட ஆட்சியர் ஒருவர் உத்தரவிட்டதை தற்போது நினைவில் கொள்வோம்.
காவி பாசிஸ்டுகளின் இத்தகைய மிரட்டல் பேச்சுக்களை வெறும் வாய்ச்சவடால்கள் என்றோ, அவர்கள் நடத்தும் தாக்குதல்களை அந்தந்த நேரத்தில் உணர்ச்சி வேகத்தில் நிகழ்பவை என்றோ நாம் பார்க்க முடியாது. கடந்த ஆண்டில், சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டங்களை, குறிப்பாக டெல்லி ஷாகீன் பாக் போராட்டத்தை இந்தப் பாசிசக் கும்பல் வன்முறையை ஏவிவிட்டுக் கலைக்க முயன்றதைப் போலவே விவசாயிகள் போராட்டத்திலும் செய்ய விரும்புகிறார்கள். அதற்கான தயாரிப்புகளில் ஈடுபடுகிறார்கள் என்பதையே நடப்பு நிகழ்வுகள் நமக்குக் காட்டுகின்றன.
விவசாயிகள் போராட்டத்தின் மீதான காவி பாசிஸ்டுகளின் அணுகுமுறை
‘‘காலிஸ்தானிகளின் போராட்டம்’’, ‘‘பாகிஸ்தான் பின்னணி’’, ‘‘மாவோயிஸ்டு தூண்டுதல்’’ என்பது போன்ற தமது வழக்கமான அவதூறு பிரச்சாரங்களையும் தாண்டி விவசாயிகளின் போராட்டம் ‘‘டெல்லிச் சலோ’’ முற்றுகைப் போராட்டமாக வளர்ந்ததையும், உலகம் முழுவதும் கவனம் பெற்ற போராட்டமாக மாறியதையும் காவிகள் எதிர்பார்க்கவில்லை.
‘குடியரசு’ தினத்தன்று விவசாயிகள் நடத்திய அணிவகுப்பின் போது, தனது ஐந்தாம் படையை அனுப்பி செங்கோட்டையில் கொடியேற்ற வைத்து, ‘‘விவசாயிகள் தேசியக் கொடியை அவமதித்து விட்டார்கள்’’ என்று காவி கும்பல் நடத்திய நாடகமும் அம்பலப்பட்டுப்போனது. விவசாயிகளது போராட்டத்தை தனிமைப்படுத்தி ஒழித்துவிட வேண்டும் என்ற சங்க பரிவாரக் கும்பலின் பல்வேறு முயற்சிகளும் பயனற்றுப் போயின.
மத்தியில் ஆளும் காவி பாசிசக் கும்பலின் நெருக்கடிகளையும் தாண்டி சுமார் ஓராண்டாக விவசாயிகள் போராட்டம் நீடிப்பது மகத்தான விஷயம்தான் என்றபோதும், அப்போராட்டம் தற்போது எதிர்கொண்டிருக்கும் தேக்கநிலையையும் நாம் பரிசீலித்தாக வேண்டும்.
இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள விவசாயிகள் நீண்ட காலத்திற்கு முன்பே தனியார் கொள்முதலை நோக்கித் தள்ளப்பட்டிருக்கும் நிலையில் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் (அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் அதிகமாக கொள்முதல் செய்யும் மாநிலங்கள்) போராடும் விவசாயிகளைப் போல நாட்டின் மற்ற மாநில விவசாயிகள் கிளர்ந்தெழவில்லை, விவசாய அமைப்புகளில் உள்ளவர்கள் மட்டுமே அடையாளப் போராட்டங்களை நடத்துகிறார்கள்.
இச்சூழலை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, ஓர் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு விவசாயிகளின் போராட்டத்தை இரத்தச் சகதியில் மூழ்கடிக்கவும், அதன் மூலம் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது, காவி பாசிச கும்பல். இந்த நிகழ்ச்சி நிரலின் தொடக்கம்தான் லக்கிம்பூர் தாக்குதல்.
பாசிச மயமாகி வரும் அரசு எந்திரமும்; போராட்டத்தின் மீதான அவற்றின் எதிர்நிலைப் போக்கும்
காவி − கார்ப்பரேட் நலனுக்கான திட்டங்களை உழைக்கும் மக்கள் எதிர்த்துப் போராடும் போதெல்லாம், காவி பாசிஸ்டுகள் தமது சொந்த பலத்தை வைத்து மட்டுமே அப்போராட்டங்களை ஒடுக்குவதில்லை. போலீசு, நீதித்துறை உள்ளிட்ட அரசுக் கட்டமைப்புகளை தமது காவி − கார்ப்பரேட் பாசிச நலனுக்கு ஒத்திசைவாக சேவை செய்யக்கூடிய அடியாள் படையாக மாற்றியுள்ளது. அந்த வகையில் விவசாயிகளின் போராட்டத்தின் மீது சட்டப்பூர்வமான அடக்குமுறையைச் செலுத்தி, அதை விரைந்து முடித்து வைக்கும் நரித்தனத்தை உச்ச நீதிமன்றம் ஆரம்பம் முதலே செய்து வருகிறது.
விவசாயிகளின் போராட்டம் ஒருகட்டத்தில், அம்பானியின் ஜியோ டவர்களை நொறுக்குவது, ஜியோ சிம்கார்டுகளை எரிப்பது − புறக்கணிப்பது, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளைக் கைப்பற்றி கட்டணங்களை ரத்து செய்வது, ஆளும் கட்சித் தலைவர்களின் அலுவலகங்களை முற்றுகையிடுவது என ஆளும் வர்க்கங்களை அச்சமுறச் செய்வதாக மாறியபோது விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கைத்தானே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, ‘‘விவசாயிகள் போராடுவதில் நியாயம் இருக்கிறது’’ என்று கூறி விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பதுபோல தோரணை காட்டியது உச்ச நீதிமன்றம். போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த கமிட்டி அமைப்பதாகவும், அதனால் போராட்டத்தை விலக்கிக் கொள்ளுமாறும் வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டு வேளாண் சட்டங்களையும் இடை நிறுத்தமும் செய்தது.
உச்ச நீதிமன்றம் நியமித்த இப்பேச்சுவார்த்தைக் கமிட்டியில் இடம்பெற்றிருந்தவர்கள் வெளிப்படையாகவே வேளாண் சட்டங்களை ஆதரித்தவர்கள் என்பதனை முதலாளித்துவ ஊடகங்களே அம்பலப்படுத்தின. இக்கமிட்டியின் யோக்கியதையைக் கேள்விக்குள்ளாக்கிய விவசாயிகள் அதைப் புறக்கணித்து உச்ச நீதிமன்றத்தின் முகத்தில் கரியைப் பூசினர்.
இன்று, ஆர்.எஸ்.எஸ். − பா.ஜ.க. கும்பலோடு சேர்ந்துகொண்டு விவசாயிகள் போராட்டத்தை பகிரங்கமாக எதிர்த்து பேசி வருகிறது உச்ச நீதிமன்றம். சமீபத்தில், புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து சத்தியாகிரகப் போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கங்கள் அனுமதி கேட்டபோது, ‘‘விவசாயச் சட்டங்களுக்குத்தான் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறதே, இன்னும் ஏன் போராடுகிறார்கள்?’’ என்று நியாயவாதம் பேசியது உச்ச நீதிமன்றம். மேலும், தலைநகர் டெல்லியின் குரல்வளையை நெறிக்கிறீர்கள், நெடுஞ்சாலைகளையும் முடக்கியுள்ளீர்கள்; அமைதிப் போராட்டமா நடக்கிறது? குடிமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. அவர்களது சொத்துக்கள் சேதப்படுத்தப் படுகின்றன’’ என சங்கப் பரிவாரங்களின் குரலில் பேசியிருக்கிறது.
தேசிய மனித உரிமை ஆணையமோ இன்னும் ஒருபடி மேலே சென்று, தொழில்துறை மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளதாகவும், இதற்கு உடனடியாக பதிலளிக்கக் கோரி டெல்லி, அரியானா, உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட நான்கு மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கும் போலீசு அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது, விவசாயிகள் போராட்டத்தைக் கலைப்பதற்கான முகாந்திரத்தை சட்டரீதியாக உருவாக்கிக் கொடுக்கிறது.
‘‘போக்குவரத்து முடங்கியுள்ளது, நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது’’ என நீலிக்கண்ணீர் வடிக்கும் மனித உரிமை ஆணையத்திற்கு, இப்போராட்டத்தில் இதுவரை 605 விவசாயிகள் பலியானதும், விவசாயிகள் மீதான போலீசின் கொடூர தாக்குதல்களும் கண்ணிலேயே படுவதில்லை. கர்னால் தாக்குதல், லக்கிம்பூர் படுகொலைகள் எல்லாம் மனித உரிமை மீறலாகவும் தெரிவதில்லை.
உழைக்கும் மக்களின் ஒருங்கிணைந்த போராட்டமே மோடி அரசைப் பணியவைக்கும்
டெல்லி சலோ − விவசாயிகள் போராட்டம் என்பது தனியார்மயம் − தாராளமயம் − உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமலாக்கப்பட்ட பின்னர், இந்தியாவில் நடக்கும் ஒரு முக்கியத்துவமிக்க மக்கள்திரள் போராட்டமாகும். கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். ஆனால், மோடி அரசோ இம்மியளவும் இறங்கி வரவில்லை, இந்தக் காவிக் கும்பல் கார்ப்பரேட்டுகளின் தீவிரமான விசுவாசமிக்க அடியாள் படை என்பதால் இனியும் இறங்கிவர வாய்ப்பில்லை.
மக்களிடையே எழும் அதிருப்திகளையும் எதிர்ப்புகளையும் பரிசீலித்துப் பார்க்கும் ஜனநாயகப் பண்பை நாம் பாசிஸ்டுகளிடம் எதிர்பார்க்கவும் கூடாது. ஆகவே, ஆர்.எஸ்.எஸ் − பா.ஜ.க. கும்பலுக்கு எதிரான போராட்டங்களை மென்மேலும் தீவிரமான மக்கள்திரள் போராட்டங்களாக வளர்த்தெடுத்து பாசிஸ்டுகளுடன் களத்தில் மோதுவதே நாம் செய்ய வேண்டிய பணி.
ஆனால் ‘‘புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்’’ என்ற ஒரே முழக்கத்தின் கீழ் ஒரு சில வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் மட்டுமே தீவிரமாக பங்குபெறும் இப்போராட்டத்தினால் இதை நாம் சாதித்துவிட முடியாது. தொழிலாளர் சட்டங்களை எதிர்த்துப் போராடும் தொழிலாளர்கள், நீட் − புதிய கல்விக் கொள்கையை எதிர்த்துப் போராடும் மாணவர்கள் − ஆசிரியர்கள், மீன்வளச் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் மீனவர்கள், பொதுத்துறை தனியார்மயமாவதை எதிர்த்துப் போராடும் தொழிலாளர்கள், காவி பாசிஸ்டுகளின் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிவரும் சிறுபான்மையினர் − தாழ்த்தப்ட்ட மக்கள், ஊபா − என்.ஐ.ஏ போன்ற ஆள்தூக்கி கொடுஞ்சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் என அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களின், ஜனநாயக சக்திகளின் போராட்டங்களும் ஓரணியில் திரட்டப்பட வேண்டும்.
‘‘காவி−கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்துவோம்’’ என்ற பொதுக் கோரிக்கையின் கீழ் அனைவரும் அமைப்புரீதியாகத் திரண்டு போராடுவதே அடுத்தகட்டத்திற்கு முன்னேறுவதற்கான பாதை. தனித்தனியாக தமது கோரிக்கைகளை முன்வைத்துப் போராடுகின்ற மக்களிடம் இதை பிரச்சாரமாக எடுத்துச் செல்வது, அவர்களை அணிதிரட்டுவது என்ற மாபெரும் கடமை காவி − கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்க்கின்ற அனைத்தும் புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் முன் நிற்கிறது.