த்தரப் பிரதேசத்தில் அமைதியாக போராடிய விவசாயிகள் மீது பாஜக அமைச்சரின் மகன் காரை ஏற்றி படுகொலை செய்திருக்கிறான். இந்த நிகழ்வைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
மூன்று வேளாண் மசோதாக்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லி, அரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் டெல்லி மாநகருக்குள் பேரணி சென்ற விவசாயிகள் மீது ஒன்றிய மோடி அரசு துப்பாக்கிச் சூடு, தடியடி நிகழ்த்தியதற்குச் சற்றும் குறையாத வகையிலான வன்முறையை தற்போது விவசாயிகள் மீது ஏவியுள்ளது ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாசிச பாஜக கிரிமினல் கும்பல் பல இடங்களில் அதற்கான வேலைகளைச் செய்யத் துவங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் இருக்கும் டிக்குனியா கிராமத்திற்குச் சென்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராடி வாகனங்களை மறித்து நடந்து சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த ஆசிஷ் மிஸ்ரா விவசாயிகள் மீது காரை ஏற்றிவிட்டு, தப்பியோடியுள்ளான்.
படிக்க :
அரியானா : போராடிய விவசாயிகள் மீது போலீசு கொலைவெறித் தாக்குதல் !
டெல்லி : விவசாயிகளின் தொடர் போராட்டத்தை சிதைக்கத் துடிக்கும் NHRC !
இதில் அந்த இடத்திலேயே இரண்டு விவசாயிகள் உயிரிழந்தனர். விவசாயிகள் மீது பாஜக குண்டர்கள் தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல், போலீசும் அங்கு கடுமையான தாக்குதலை நிகழ்த்தியுள்ளது.
இதில் 4 விவசாயிகள், 4 பொதுமக்கள், 1 பத்திரிகையாளர் ஆகிய 9 பேர் மரணமடைந்துள்ளனர். 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவும், செல்போன் இணையச் சேவை ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளது மாவட்ட நிர்வாகம்.
அப்பகுதிக்குச் சென்று கள நிலவரம் அறியச் சென்ற அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி ஆகியோரை தடுத்து நிறுத்தி கைது செய்திருக்கிறது உத்தரப் பிரதேச போலீசு.

இந்தியா எங்கும் இதற்குக் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தியதற்குப் பின்னர், ஆசிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளதாக மாவட்ட போலீசு தகவல் தெரிவித்துள்ளது. அதற்கும் கூட, தேர்தல் நெருங்கி வருவதுதான் காரணமாகும். இல்லையெனில் இதுவும் கூட சாத்தியப்பட்டிருக்காது.
பாசிச பாஜக கும்பல் மற்றும் அதன் அடிவருடிகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும், இத்தகைய கடுமையான போலீசு வெறியாட்டங்கள் நடக்கின்றன என்றாலும், உத்தரப் பிரதேசத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. இங்கு முதலமைச்சராக இருப்பவரே ஒரு ரவுடிச் சாமியார் தான்.
பாசிச பாஜக – ஆர்.எஸ்.எஸ். கிரிமினல்கள், தங்களது இந்துராஷ்டிர இலக்கை எளிதாக அடைய எப்படியாவது உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்றுவிட வேண்டிய ஒரு சூழலை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் மூன்று வேளாண் சட்டத்திற்கும் எதிராக உத்தரப் பிரதேச விவசாயிகளின் போராட்டம் பாசிச கும்பலுக்குக் கடும் நெருக்கடியை தந்துள்ளது.
இதனை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்ற அடிப்படையில் தான் போராடும் விவசாயிகளை முடக்கவும் அச்சுறுத்தவும் இது போன்ற சம்பவங்களில் இறங்கியுள்ளது.
இதேபோல சமீபத்தில், அரியானா முதல்வர் தமது கட்சியினரின் மத்தியில் பேசுகையில், ஊருக்கு 100 பேர் தடிகளோடு சென்று போராடும் விவசாயிகளை விரட்டி அடிக்க வேண்டும் என்று சமீபத்தில் பேசியிருக்கிறார். அதேபோல, போராடும் விவசாயிகளின் மண்டையை உடைக்குமாறு போலீசு ஏவலாளிகளுக்கு சமீபத்தில் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதும் அரியானா மாநிலத்தில் தான்.
சி..., என்.ஆர்.சி. ஆகியவற்றுக்கு எதிராக நாடுமுழுவதும் நடந்த போராட்டங்களை முடக்குவதற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எப்படி ஒரு கலவரத்தை டெல்லியில் தூண்டிவிட்டதோ, அதே போன்ற முயற்சியை திட்டமிட்டு எடுத்து வருகிறது ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல்.
பாசிச கும்பலின் இத்தகைய செயல்பாடுகளுக்கு எதிராக வெறுமனே விவசாயிகள் மட்டும் போராடுவதுதான் பாசிச கும்பலுக்கு வலுசேர்க்கிறது. இந்தியா முழுவதும் அனைத்துப் பிரிவு மக்களும் இதனை தொடர் போராட்டமாக முன்னெடுத்துச் சென்றால் மட்டுமே, நாம் உணவுக்காக அதானியிடமும் அம்பானியிடமும் கையேந்தி நிற்கும் அவலநிலை ஏற்படாமல் தடுக்க முடியும்.

சரண்

செய்தி ஆதாரம் : தி வயர்