மோடி அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக கடந்த 8 மாதங்களாக தொடர்ந்து டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் நடந்து வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக கடந்த ஆகஸ்ட் 28 அன்று அரியானா மாநில விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்டனர். அப்போராட்டத்தில் விவசாயிகள் மீது தடியடி நடத்தியுள்ளது போலீசு.
கடந்த ஆகஸ்ட் 28 சனிக்கிழமையன்று வரவிருக்கும் தேர்தலையொட்டி அரியானா மாநில பாஜக-வினர் கர்னல் மாவட்டத்தில் உள்ள பிரேம் பிளாசா எனும் ஓட்டலில் தனது கட்சிக் கூட்டத்தை நடந்த முடிவு செய்திருந்தனர். அக்கூட்டத்தில் அரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், மாநில பாஜக தலைவர் ஓம் பிரகாஷ் தங்கர் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என செய்தி வெளியானது.
படிக்க :
♦ அரியானா பாஜக கூட்டணி அரசை உலுக்கும் விவசாயிகள் போராட்டம் !
♦ அதானி நிறுவனத்தை இழுத்து மூடிய பஞ்சாப் விவசாயிகள் !!
இதனை தொடந்து, அரியானா விவசாயிகள் சங்கத்தினர் ஓட்டலின் எதிரில் அமைதியான வழியில் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பி பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
அதனடிப்படையில், ஓட்டலை நோக்கி அரியானா பாரதிய விவசாயிகள் சங்கம் தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்த வரும் வழியில், 15 கிமீ தொலையில் அமைந்திருக்கும் பஸ்தாரா சுங்கச்சாவடியில் விவசாயிகளை செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளது போலீசு.
ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் கூடுவதற்கு தடை விதித்து 144 ஊரங்கு உத்தரவு இடப்பட்டது. எனவே, விவசாயிகளின் போராட்டம் சட்ட விரோதமானது என அறிவித்தது போலீசு. மேலும் கர்னல் மாவட்டத்தில் பாஜக கூட்டம் நடத்தும் ஓட்டலுக்கு செல்லும் அனைத்து சாலைகளும் பலத்த தடுப்புகளால் மூடப்பட்டன.
“போராடும் விவசாயிகளின் மண்டையை உடைக்க வேண்டும்” என்று போலீசுக்கு அறிவிப்பு விடும் வகையில் கர்னல் மாவட்ட ஆட்சியர் பேசியுள்ளார். அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவத் துவங்கியது. அதனால், மேலும் அதிகமாக விவசாயிகள் பஸ்தாரா சுங்கக்சாவடியை நோக்கி வரத் துவங்கினர்.
போராட்டம் மேலும் தீவிரமடைந்து, சாலை மறியலாக மாறியது. அதன்பிறகு விவசாயிகளின் மீது தடியடி நடத்தியுள்ளது போலீசு. இந்த தடியடியில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் படுகாயமடைந்தனர். ஆடை முழுவதும் இரத்தக்கறையுடன் விவசாயிகள் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.
அதன்பின், அரியானா மாநிலம் முழுவதும் போராட்டம் தீயாய் படர்ந்தது. ஆகஸ்ட் 28 அன்று இரவு தகவலின் படி – ப்தேஹாபாத் – சண்டிகர், கோஹனா – பானிபட், ஜிந்த் – பாட்டியாலா நெடுஞ்சாலைகள் மற்றும் அம்பாலா – சண்டிகர், ஹிசார் – சண்டிகர் ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் பல போராட்டங்கள் நடந்துள்ளன.
விவசாயிகளின் மீதான போலீசின் இந்த தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு கண்டனங்கள் எழுந்துள்ளன.
காங்கிரஸ் கட்சியின் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தனது ட்விட்டில், “இன்று நீங்கள் அரியானாவின் ஆன்மா மீது தடியடி நடத்தியுள்ளீர்கள். வரும் தலைமுறையினர் சாலைகளில் சிந்திய விவசாயிகளின் இரத்தத்தை நினைவில் கொள்வார்கள்” என்றார்.
“இந்த தாக்குதல் மீகவும் காட்டுமிராண்டித்தனமானது. பாஜக-வின் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலிருந்து 15 கிமீ தொலைவில் விவசாயிகள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசு வேண்டுமென்றே இத்தகைய மோதல் சூழ்நிலையை உருவாக்கி விவசாயிகளின் கோபத்தை தூண்டுவதன் மூலம் மோதலை உண்டாக்கி போலீசு தாக்கியிருகிறது.” என்று எதிர்க்கட்சித் தலைவர் பூபிந்தார் சிங் ஹூடா கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைதியான வழியில் மோடி அரசின் மூன்று வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய போலீசு மீதும், விவசாயிகள் மண்டையை உடைக்க வேண்டும் என்று கட்டளையிட்ட கர்னல் மாவட்ட ஆட்சியர் மீதும் வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும்.
போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில பொதுமக்களும், விவசாயிகளும், முற்போக்கு அமைப்புகளும் களமிறங்க வேண்டிய தருணமிது.
சந்துரு
செய்தி ஆதாரம் : The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க