விவசாயிகள் மகாபஞ்சாயத்து: தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்

"குறைந்தபட்ச ஆதாரவிலை, குறைந்தபட்ச கூலிக்கான உத்தரவாதம், விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி, மின்சாரம் தனியார்மயமாக்குவதைத் தடுப்பது மற்றும் LARR 2013 சட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட அடிப்படையான கோரிக்கைகளை அடைவதற்கு தொழிலாளர் – விவசாயிகள் ஒற்றுமை அவசியமானது”.

டந்து வருகின்ற விவசாயிகளின் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவதன் ஒரு பகுதியாக ஜனவரி 4, 2025 அன்று ஹரியானாவின் தோஹானாவிலும், ஜனவரி 9, 2025 அன்று பஞ்சாபின் மோகாவிலும் நடைபெறுகின்ற விவசாயிகளின் மகாபஞ்சாயத்தில் சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) இணைந்துள்ளது. மேலும் ஒன்றிய அரசு, போராடி வருகின்ற அனைத்து விவசாய அமைப்புகளுடனும் அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் SKM வலியுறுத்தியுள்ளது. இது குறித்து SKM, டிசம்பர் 27, 2024 அன்று பத்திரிக்கை செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில், தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களுக்கு SKM எழுதியுள்ள கடிதம்:

குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளுக்காக, பஞ்சாப் எல்லையில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்வாலின் உயிரைக் காப்பாற்ற வேண்டும், உ.பி கிரேட்டர் நொய்டாவின் லக்சர் சிறையில் உள்ள அனைத்து விவசாயிகளையும் விடுவிக்க வேண்டும், புதிய தேசிய வேளாண் சந்தைப்படுத்தும் கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

உச்சநீதிமன்றம் பேச்சுவார்த்தைக்கு உத்தரவிட்ட பிறகும், விவசாய அமைப்புகளுடன் பிரதமர் மோடி விவாதிக்க விரும்பாதது என்பது சட்டப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட விவசாயப் பொருட்களை கொள்முதல் செய்வது மற்றும்  குறைந்தபட்ச ஆதாரவிலை (எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையின் அடிப்படையில்) உள்ளிட்ட கோரிக்கைகளைப் பரிசீலிக்க ஒன்றிய அரசு தயாராக இல்லை என்பதையே காட்டுகிறது.

விவசாயிகளின் கடன் தள்ளுபடி, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் கடுமையான துயரங்களைப் பற்றி விவாதிப்பதற்குப் பதிலாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 3 வது அரசாங்கமானது புதிய தேசிய வேளாண் சந்தைக் கொள்கை மற்றும் டிஜிட்டல் வேளாண்மைத் திட்டம், தேசிய ஒத்துழைப்புக் கொள்கை ஆகியவற்றை அமல்படுத்த முயற்சிப்பதன் மூலம் விவசாயம், தொழில் மற்றும் சேவைத்துறைகள் மீதான தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பைக் கொண்டு வருவது, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைத் திணிக்க முயல்வது, மாநில அரசுகளின் கூட்டாட்சி உரிமைகளைப் பறிப்பது ஆகியவற்றின் மூலம் கார்ப்பரேட் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ‘ஒரே தேசம் ஒரே சந்தை’ எனும் கார்ப்பரேட் நிகழ்ச்சிநிரல் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாநில அரசுகளின் கூட்டாட்சி உரிமைகள் மீதான, மக்களின் வாழ்வுரிமைகள் மீதான இத்தகைய கார்ப்பரேட் தாக்குதலுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் மத்தியில் ஒரு மாபெரும் பரப்புரையும், தீவிரமான போராட்டங்களுக்குத் தயாராக வேண்டியதும் அவசியமாக உள்ளது.

2020-21 இல் டெல்லி எல்லையில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டத்தை விட மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலமாக, மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் விவசாயம், தொழில் மற்றும் சேவைத்துறைகள்  மீதான, இந்திய அரசியலமைப்பின் மீதான, கூட்டாட்சி அமைப்பு மற்றும் மாநில அரசுகளின் உரிமைகள் மீதான தாக்குதலை முறியடிக்க வேண்டும். இது தொடர்பாக அனைத்து தொழிற்சங்கங்கள், விவசாயத் தொழிலாளர் சங்கங்களுடன் பரந்த அளவிலான ஒற்றுமையைக் கட்டியமைக்க வேண்டிய அவசியத்தை SKM வலியுறுத்துகிறது.

குறைந்தபட்ச ஆதாரவிலை, குறைந்தபட்ச கூலிக்கான உத்தரவாதம், விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி, மின்சாரம் தனியார்மயமாக்குவதைத் தடுப்பது மற்றும் LARR 2013 (Land Acquisition and Rehabilitation and Resettlement Bill) சட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட அடிப்படையான கோரிக்கைகளை அடைவதற்காக விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை மிகப்பெரிய போராட்டங்களுக்குத் தயார்ப்படுத்துவதற்குத் தொழிலாளர் – விவசாயிகள் ஒற்றுமை அவசியமானது.

அந்த அடிப்படையில், டிசம்பர் 21, 2024 அன்று பாட்டியாலாவில் KMM-இன் (கிசான் முக்தி மோர்ச்சா) பிரதிநிதிகளுடன் SKM-இன் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழு நடத்திய பேச்சுவார்த்தையினை விவசாயிகள் இயக்கத்தின் பரந்த ஒற்றுமையைக் கட்டியமைப்பதற்கான சரியான திசையில் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பாக SKM உணர்கிறது. விவசாயிகள் இயக்கத்தின் ஒற்றுமையை மேலும் வலிமைப்படுத்த SKM-இன் ஆறு பேர் குழு தனது முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும்.

நடைபெற்று வரும் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துதல், விவசாயிகள் இயக்கத்தின் ஒற்றுமையை மேலும் வலிமைப்படுத்துதல், தொழிலாளர் – விவசாயிகள் ஒற்றுமையை விரிவுபடுத்துதல் மற்றும் மக்களை விரிவாகச் சென்றடைதல் ஆகிய நிகழ்ச்சி நிரல்களை அடிப்படையாகக் கொண்டு ஜனவரி 24, 2025 அன்று புதுதில்லியில், தனது தேசிய கவுன்சில் கூட்டத்தை, SKM-இன் பொதுக்குழுவானது கூட்டுகிறது. அதன் அடிப்படையில் பெரிய அளவிலான கார்ப்பரேட் எதிர்ப்பு பரப்புரைகள் மற்றும் போராட்டங்களை முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.


தமிழாக்கம்: அய்யனார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க