தமிழ்நாடு: தல்லேவாலுக்கு ஆதரவாகப் போராட்டம் அறிவித்த விவசாயிகள்

ஜனவரி 22-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டமும், ’குடியரசு’ தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் டிராக்டர் பேரணியும் நடைபெறும் என்று விவசாயிகள் சங்கத் தலைவர்கள் பி. அய்யாக்கண்ணு மற்றும் பி.ஆர். பாண்டியன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

னவரி 17 அன்று சம்யுக்தா கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) [SKM (NP)] தமிழ்நாடு ஒருங்கிணைப்புக்குழு சார்பாக திருச்சி பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அதில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 22-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டமும், ’குடியரசு’ தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் டிராக்டர் பேரணியும் நடைபெறும் என்று விவசாயிகள் சங்கத் தலைவர்கள் பி. அய்யாக்கண்ணு மற்றும் பி.ஆர். பாண்டியன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

பத்திரிகையாளர் சந்திப்பில் அவர்கள் கூட்டாக அறிவித்ததாவது:

”SKM (NP) தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித்சிங் தல்லேவால் கடந்த நவம்பர் 26 முதல் குறைந்தபட்ச ஆதார விலை நிரந்தர சட்டம் கோரி கனூரி எல்லையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். உச்ச நீதிமன்றம் அமைத்த நவாப் சிங் குழு உடனடியாக குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்; விவசாயிகள் பெற்றுள்ள கடன் முழுமையும் தள்ளுபடி செய்ய வேண்டும்; இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் அடிப்படை நோக்கம் கொண்ட மின்சார ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முன் வரவேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பரிந்துரை செய்துள்ளது. இதனை ஏற்றுச் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

மத்திய அரசு போராடுகிற விவசாயிகளோடு பேச்சுவார்த்தை நடத்த மறுத்து வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவையும் நிறைவேற்ற மறுத்துவரும் நிலையில் தல்லேவால் உடல் நலம் மோசமடைந்து வருகிறது. உடனடியாக அவரை பாதுகாக்க வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி இந்தியா முழுவதும் டிராக்டர் பேரணி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டிலும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பேரணி ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்புடன் நடக்க இருக்கிறது.

ஜனவரி 22 ஆம் தேதி சென்னை எழும்பூரில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும். தமிழகம் முழுமையிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற குழு பரிந்துரையை உடனடியாக நிறைவேற்றி தல்லேவால் உயிரைப் பாதுகாக்க  வேண்டும் என கடிதம் மூலம் வலியுறுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் – 2023 இந்தியாவில் எந்த மாநிலமும் கொண்டு வராத மிகப் பெரிய மோசமான சட்டமாகும். இதன் மூலம் தமிழக மக்கள் தங்களது முகவரியை முழுமையாக இழந்துள்ளனர்.

நிதிப் பற்றாக்குறை காரணங்காட்டி விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய மானியங்களை தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்துள்ளது. மூன்றாண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டிராக்டர் மானியம் உள்ளிட்ட உழவு இயந்திரங்களுக்கான மானிய திட்டங்களுக்கான நிதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கடன் வழங்க மறுத்து தொகை விடுவிக்காமல் உள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. உடனடியாக உரிய தொகை விடுவிக்க வேண்டும்.

தமிழகத்தில் அரசுத் துறைகளில் லஞ்ச ஊழல் முறைகேடுகள் தீவிரம் அடைந்துள்ளது. அதனை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

விவசாயிகள் கடன் வசூல் என்கிற பேரில் வங்கிகள் சொத்துகளைச் சூறையாட முயற்சிக்கிறது. ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலுக்கு முரணாகச் செயல்படுகிறது. சொத்து மதிப்பின் மீது மோகம் கொண்டுள்ள வங்கி அதிகாரிகள் தனியார் வசூல் முகவர்கள் என்கிற பெயரில் சொத்துகளை அபகரிக்க முயற்சிக்கிறார்கள். இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள் தற்கொலை நிலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் மூலமாக ரிசர்வ் வங்கி விதிமுறைகளைப் பின்பற்றி வங்கிகள் கடன் வசூல் செய்வதற்கான ஒரே தவணையில் கடன்களைத் திரும்பச் செலுத்தும் வழிகாட்டுதலைச் செயல்படுத்த வேண்டும். அதனை மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் கண்டிப்புடன் வங்கிகள் பின்பற்றுவதை உறுதி செய்வதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினர்.

ஈரோடு இடைத்தேர்தலில் விவசாயிகள் ஆதரவு உண்டா என்ற செய்தியாளர்கள் கேள்விக்குப் பதில் அளித்த போது ”இத்த தேர்தல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அல்ல. எனவே 2026 சட்டமன்ற தேர்தல் வரையிலும் திமுகவின் விவசாய விரோத கொள்கை தீவிரமடையுமானால் அதனை எதிர்த்து விவசாயிகள் கலவரங்கள் நேரிடும் என எச்சரிக்கிறோம்” என்று செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளனர்.


தினேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க