ஜன 26: விவசாயிகளின் நாடு தழுவிய டிராக்டர் பேரணி

ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் அழைப்பை ஏற்று நேற்று பஞ்சாப், ஹரியானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் ஜனவரி 26 அன்று டிராக்டர் பேரணிகள் நடைபெற்றன.

டந்த ஒரு வருடமாக “கிசான் மஸ்தூர் மோர்சா” (Kisan Mazdoor Morcha), “சம்யுக்தா கிசான் மோர்சா” (Samyukta Kisan Morcha) விவசாயச் சங்கங்களின் தலைமையின் கீழ் விவசாயிகள் வேளாண் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி, உலக வர்த்தகக் கழகத்திலிருந்து வெளியேறுதல், 2020 போராட்டத்தில் உயிரிழந்த 714 விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போராடும் விவசாயிகளுடன் ஒன்றிய அரசு பேச்சு வார்த்தை நடத்த வலியுறுத்தியும், 60 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தல்லேவாலுக்கு ஆதரவாகவும் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று நாடு முழுவதும் உள்ள மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில் டிராக்டர் பேரணி நடத்துவதற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி அனைத்து விவசாயிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தது.

ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் அழைப்பை ஏற்று நேற்று பஞ்சாப், ஹரியானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும், டிராக்டர் பேரணிகள் நடைபெற்றன. கல்லூரி மாணவிகளும், பெண்களும் டிராக்டர் பேரணிகளில் பங்கேற்றிருப்பது விவசாயிகளுக்கு பெருகி வரும் மக்கள் ஆதரவை வெளிப்படுத்துகிறது. பல இடங்களில் நடைபெற்ற பேரணிகள் பாசிச கும்பலுக்கு கிலியூட்டியுள்ளது.

பஞ்சாப் – ஹரியானா

பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ், லூதியானா, சங்ரூர் உள்ளிட்ட 150 இடங்களில் விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது. லூதியானாவில் நடைபெற்ற டிராக்டர் பேரணியில் கல்லூரி மாணவிகள், பெண்கள் கலந்து கொண்டு டிராக்டர்களை ஒட்டிச் சென்று தங்களின் ஆதரவை வழங்கியுள்ளனர்.

லூதியானா
அமிர்தசரஸ்

ஹரியானா மாநிலத்தில் இரண்டு ஆயிரம் டிராக்டர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது.

பிப்ரவரி 14 ஆம் தேதி  விவசாயிகளுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில்  முடிவு எடுக்காவிட்டால்  தங்களின் போராட்டத்தைத் தீவிரப் படுத்துவோம் என விவசாய சங்கங்கள் ஒன்றிய அரசை எச்சரித்துள்ளன.

கர்நாடகா

விவசாய பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடக மாநிலம் மைசூரில் டிராக்டர் பேரணி நடைபெற்றது. இதில் மாநில விவசாயிகள் சங்க கூட்டமைப்பு, கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பாக விவசாயிகள் பேரணியில் பங்கேற்றனர்.

மைசூர்

தமிழ்நாடு:

தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் அருகிலிருந்து இன்று விவசாயிகள் டிராக்டரில் பேரணியாகப் புறப்பட்டுச் சென்றனர். இந்த பேரணி தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே உள்ள சோழன் சிலையில் நிறைவடைந்தது. பேரணிக்கு சங்கத்தின் மாநில தலைவர் திருப்பதி தலைமை தாங்கினார்.

தஞ்சாவூர்

விவசாய கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்; மின்சார திருத்தச் சட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தைத் தொடர்ந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியிலிருந்து தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற டிராக்டர் பேரணி நடைபெற்றது. பாதி வழியில் அனுமது மறுக்கப்பட்டதால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி

பஞ்சாப் எல்லையில் “சாகும் வரை” உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தல்லேவாலுடன் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி செங்கல்பட்டு மாவட்டம் மேடைவாக்கத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்கு சார்பாக 20க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

செங்கல்பட்டு

விவசாய பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்; போராட்டத்தில் உயிர் நீத்த 714 விவசாயிகளுக்கு நினைவிடம் அமைக்க வேண்டும்; அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்; மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை ஐக்கிய விவசாய முன்னணி சார்பாக விவசாயிகளின் டிராக்டர் பேரணி மணிமண்டபத்தில் தொடங்கி புதுக்கோட்டை சாலை வரை நடைபெற்றது.

புதுக்கோட்டை

புதுச்சேரி

விவசாய பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும்; தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும்; நான்கு தொழிலாளர் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் புதுச்சேரியில் விவசாயிகள் தியாகிகள் சதுக்கத்திலிருந்து 50 டிராக்டர்கள் 200 மோட்டார் சைக்கிள்களில் பேரணியை நடத்தியுள்ளனர்.

புதுச்சேரி


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க