விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து 52வது நாளாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வரும் தல்லேவாலுக்கு ஆதரவாக 111 விவசாயிகள் நேற்று (ஜனவரி 15) முதல் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் எல்லைகளில் விவசாயிகள் கிசான் மஸ்தூர் மோர்ச்சா (Kisan Mazdoor Morcha), சம்யுக்த கிசான் மோர்ச்சா (Samyukta Kisan Morcha) விவசாயச் சங்கங்களின் தலைமையின் கீழ் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை (Mimimum Support Price – MSP) விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தல், சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துதல் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வருடமாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மாபெரும் வீரம் செறிந்த விவசாயிகளின் போராட்டத்தின் நான்காம் ஆண்டு நினைவு நாளான நவம்பர் 26 ஆம் தேதி அன்று விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தைத் தொடங்கினர். ஆனால் பாசிச கும்பல் கண்ணீர்ப் புகைக் குண்டு தடியடி மூலம் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கியது.
எனவே அன்று முதல் பாசிச கும்பலின் அடக்குமுறைகளைக் கண்டித்தும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 70 வயதான விவசாய சங்கத்தலைவர் ஜிங்ஜித் தல்லேவால் கனௌரி எல்லைப் பகுதியில் “சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை” நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தல்லேவாலின் போராட்டத்தைத் தடுப்பதற்குப் பாசிச கும்பலானது உச்சநீதிமன்றத்தின் மூலம் கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி போராட்டம் நடைபெறும் இடத்திலிருந்து 700 மீட்டர் தொலைவில் உள்ள தற்காலிக மருத்துவமனைக்கு அவரை மாற்றலாம் என்று தெரிவித்திருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும் உச்சநீதிமன்றத்தால் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நவாப் சிங் தலைமையில் அமைக்கப்பட்ட உயர் அதிகாரம் கொண்ட குழு கடந்த ஜனவரி 6 ஆம் தேதி அன்று தல்லேவாலை சந்தித்து மருத்துவ உதவிகளை வழங்க முயன்றது. ஆனால் தல்லேவால் உறுதியான முறையில் மருத்துவ உதவியை மறுத்துவிட்டார்.
அதனைத் தொடர்ந்து நவாப் சிங் “ஒவ்வொரு விசாரணை தேதியிலும் நீதிபதி சூர்ய காந்த் உங்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய வழிகாட்டுதல்களை வழங்குகிறார்” என்று உச்சநீதிமன்றம் விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவது போன்ற பிம்பத்தை உருவாக்கும் விதமாகப் பேசினார்.
படிக்க: பஞ்சாப்: டெல்லி சலோ போராட்ட களத்தில் விவசாயி தற்கொலை
இதற்கு பதிலளித்த தல்லேவால், “நான் நீதிபதி சூர்ய காந்த்தை மதிக்கிறேன். ஆனால் எங்கள் பிரச்சினை மத்திய அரசால் தீர்க்கப்பட வேண்டியிருக்கும்போது, அவர் ஏன் மத்திய அரசுக்கு எந்த வழிகாட்டுதலையும் வழங்கவில்லை என்று அவரிடம் நான் எப்படிக் கேட்க முடியும்? பஞ்சாப் அட்வகேட் ஜெனரல் மத்திய அரசை வழிநடத்துமாறு கேட்டபோது, சூர்ய காந்த் ஜி கேட்கவில்லை. மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால், அவர்கள் உத்தரவுகளுக்கு இணங்குவார்கள் என்று கூறுகிறார். இந்த வழிகாட்டுதலை மத்திய அரசுக்கு வழங்க உச்ச நீதிமன்றம் தயாராக இல்லை என்றால் எங்களுக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும்” என்று தெரிவித்திருப்பது எந்தவித சமரசத்திற்கும் அடிபணியாத விவசாயிகளின் போராட்ட உணர்வை வெளிப்படுத்துகிறது.
ஆனால் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருவதால் தல்லேவாலின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. அவரது உடல் தண்ணீரைக்கூட ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அவர் தண்ணீர் குடிக்கும் போதெல்லாம் வாந்தியெடுப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் கிளர்ந்தெழுந்த விவசாயிகள் தல்லேவாலுக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்குப் பின்பு ஏற்படும் விளைவுகளை மத்திய அரசால் சமாளிக்க முடியாது என்று எச்சரிக்கை விடுத்திருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
தல்லேவாலின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ள நிலையிலும் போராட்டத்தைக் கைவிடாத அவரின் போராட்ட உணர்வால் உந்தப்பட்ட 111 விவசாயிகள் அவருக்கு ஆதரவாக தாங்களும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
படிக்க: விவசாயிகள் நலனுக்கு எதிராகச் செயல்படும் உச்சநீதிமன்றம்!
இதுகுறித்து தல்லேவாலுடன் நீண்ட காலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கத்தலைவர் அபிமன்யு கோஹர் நேற்று கூறுகையில் “விவசாயிகள் அனைவரும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுள்ளனர். அவர்களும் தல்லேவாலைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக அமைதியான முறையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதற்கு முடிவெடுத்துள்ளனர்.
தல்லேவாலின் சாகும் வரையிலான உண்ணாவிரதம் 51வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு எதற்கும் செவிசாய்க்கத் தயாராக இல்லை, பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவோ அல்லது எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவோ இல்லை” என்று பாசிச கும்பலை அம்பலப்படுத்தியுள்ளார்.
விவசாயிகளின் போராட்டம் 2020 ஆம் ஆண்டு போராட்டத்தைப் போல் மாபெரும் போராட்டமாக மாறிவிடும் என்கிற அச்சம் பாசிசக் கும்பலைத் தொற்றிக் கொண்டுள்ளது. எனவே இத்தகைய தருணத்தில் பாசிசத்தை எதிர்க்கக் கூடிய அனைத்து ஜனநாயக சக்திகளும் உழைக்கும் மக்களும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். அதன் மூலமே பாசிச கும்பலை வீழ்த்த முடியும்.
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram