விவசாயிகள் நலனுக்கு எதிராகச் செயல்படும் உச்சநீதிமன்றம்!

நீதிபதிகள், "சட்டம் ஒழுங்கு பிரச்சினையைச் சிலர் உருவாக்குகிறார்கள் என்றால், அது உங்கள் விவகாரம். அதை இரும்புக் கரம் கொண்டு சமாளிக்க வேண்டும்" என்று விவசாயிகள் மீது வன்முறையை ஏவும் விதத்தில் கருத்துக் கூறியுள்ளனர்.

டந்த ஒரு மாதத்துக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவாலை டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று பஞ்சாப் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. டிசம்பர் 27 அன்று நடைபெற்ற விசாரணையின் போது இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பஞ்சாப் அரசு வழக்கறிஞர் தல்லேவாலின் சகாக்கள் (மற்ற விவசாயிகள்) இந்த நடவடிக்கையை எதிர்த்ததால் தங்களால் அவரை மருத்துவமனைக்கு மாற்ற முடியவில்லை என்று கூறியுள்ளார்.

அதற்கு நீதிபதிகள், “சட்டம் ஒழுங்கு பிரச்சினையைச் சிலர் உருவாக்குகிறார்கள் என்றால், அது உங்கள் விவகாரம். அதை இரும்புக் கரம் கொண்டு சமாளிக்க வேண்டும்” என்று விவசாயிகள் மீது வன்முறையை ஏவும் விதத்தில் கருத்துக் கூறியுள்ளனர்.

பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, டி.ஏ.பி. உர மானியம் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி “கிசான் மஸ்தூர் மோர்சா” (Kisan Mazdoor Morcha), “சம்யுக்தா கிசான் மோர்சா” (Samyukta Kisan Morcha) விவசாயச் சங்கங்களின் தலைமையின் கீழ் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி விவசாயிகள் இந்த டெல்லி முற்றுகை போராட்டத்தைத் தொடங்கிய நிலையில், பத்து மாதத்திற்கும் மேலாக பஞ்சாப், ஹரியானா எல்லைகளில் கடுங்குளிரிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தின் தொடர்ச்சியாக வீரம் செறிந்த விவசாயிகள் போராட்டத்தின் நான்காம் ஆண்டு நினைவு தினமான நவம்பர் 26 அன்று விவசாயிகள் நாடு முழுவதும் டிராக்டர் அணிவகுப்பு மற்றும் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தனர்.


படிக்க: 30ஆவது நாளாக தொடரும் விவசாய சங்கத் தலைவரின் உண்ணாவிரதப் போராட்டம்!


ஆனால் பாசிச கும்பலானது விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டு, ரப்பர் தோட்டா போன்றவற்றைக் கொண்டு விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கியது. இதனால் ஏற்பட்ட உணர்வினால் அன்றைய தினமே பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர் ஜிக்ஜித் சிங் தல்லேவால் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தினை அறிவித்தார்.

அன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தல்லேவால் கடந்த 19 ஆம் தேதி மயக்கமடைந்தார். பின்னர் மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் வலியுறுத்தியும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துவிட்டார். இதனால் மீண்டும் பெரிய அளவிலான விவசாயிகளின் போராட்டம் தொடங்கி விடுமோ என்கிற அச்சம் பாசிச கும்பலைத் தொற்றிக் கொண்டது.

எனவே பாசிச கும்பலானது விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக டிசம்பர் 29 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றத்தின் துணைகொண்டு தல்லேவாளின் உடல்நிலை மோசம் அடைந்ததால் அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும் தல்லேவாலின் நிலையான ஆரோக்கியத்தை உறுதி செய்வது பஞ்சாப் அரசாங்கத்தின் பொறுப்பு என்று கூறிய நீதிமன்றம், தல்லேவாலின் சிறந்த பராமரிப்புக்காக தற்காலிக மருத்துவமனைக்கு மாற்ற வேண்டுமா என்பதை முடிவு செய்யுமாறு மாநில அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.


படிக்க: கடுங்குளிரிலும் தொடரும் விவசாய சங்கத் தலைவரின் உண்ணாவிரதப் போராட்டம்!


ஆனால் நீதிமன்ற உத்தரவிற்கு எல்லாம் பணியாத விவசாயிகள் தல்லேவாலுக்கு அருகே அதிகாரிகள் நெருங்காமல் பார்த்துக் கொண்டனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தினால் ஏற்படுகின்ற எடை குறைவு, ரத்த அழுத்தம் அதிகரிப்பு போன்றவற்றால் உடல்நிலை நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டே இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து உறுதியுடன் தல்லேவால் நடத்தி வருகின்ற போராட்டம் பாசிச கும்பலுக்கு நெருக்கடியையும் அச்சத்தையும் அதிகப்படுத்தி உள்ளது.

தல்லேவாலின் உடல் நிலை மீது அக்கறை உள்ளதுபோல் காட்டிக்கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவது போன்று கபட நாடகமாடிய உச்சநீதிமன்றம் ஒரு கட்டத்திற்கு மேல் விவசாயிகளின் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று தெரிவித்திருப்பதன் மூலம் நீதிமன்றத்தின் உண்மை முகம் மீண்டும் அம்பலமாகி உள்ளது.

எனவே விவசாயிகள் எத்தகைய இரும்புக் கரங்களுக்கும் பணியப் போவதில்லை என்பதைக் கடந்த கால அனுபவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க