போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பஞ்சாப் விவசாய சங்கத்தலைவர் ஜிக்ஜித் சிங் தலேவால் 30ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு அதிகமாக உள்ளதால் உடல் நிலை நாளுக்குநாள் மோசமாகிக் கொண்டே இருக்கிறது.
ஆனால் “எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள மாட்டேன்” என்று சமரசம் இல்லாத போராட்டத்தை நடத்தி வருகிறார்.
பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, டி.ஏ.பி. உர மானியம் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி “கிசான் மஸ்தூர் மோர்சா” (Kisan Mazdoor Morcha), “சம்யுக்தா கிசான் மோர்சா” (Samyukta Kisan Morcha) விவசாயச் சங்கங்களின் தலைமையின் கீழ் விவசாயிகள் போராடி வருகின்றனர். கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி விவசாயிகள் இந்த டெல்லி முற்றுகை போராட்டத்தைத் தொடங்கிய நிலையில், பத்து மாதத்திற்கும் மேலாக பஞ்சாப், ஹரியானா எல்லைகளில் கடுங்குளிரிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால், பாசிச மோடி கும்பலானது விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கோ அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கோ தயாராக இல்லை. இதனை தங்களது சொந்த அனுபவத்திலிருந்து உணர்ந்துகொண்ட விவசாயிகள், நவம்பர் 26-ஆம் தேதியன்று நாடு முழுவதும் டிராக்டர் பேரணி மற்றும் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். பாசிச கும்பலானது விவசாயிகளின் பேரணியைத் ஒடுக்குவதற்காகக் கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு, தடியடி போன்ற கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியதில் விவசாயிகள் பலர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் விவசாயிகள் மீதான பாசிச கும்பலின் அடக்குமுறைகளை எதிர்த்தும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் 70 வயதான பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர் ஜிக்ஜித் சிங் தலேவால், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடரப் போவதாக கடந்த நவம்பர் 26-ஆம் தேதி அன்று அறிவித்தார்.
அன்று முதல் ஹரியானா எல்லையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தலேவாலின் உறுதியான போராட்டத்தினால் எங்கே பெரிய அளவிலான விவசாயிகள் போராட்டம் மீண்டும் தொடங்கிடுமோ என்ற அச்சம் பாசிச கும்பலுக்கு ஏற்பட்டுள்ளது.
அதன் விளைவாக உச்சநீதிமன்றத்தின் மூலம் தலேவாலின் உடல் நிலை மேல் அரசுக்கு அக்கறை உள்ளதைப் போல் போலி பிம்பத்தை உருவாக்குவது, தலேவாலுக்கு மருத்துவ உதவிகள் வழங்கி அவரின் போராட்டத்தை நிறுத்த வலியுறுத்தும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடுவது என பாசிச கும்பல் தலேவாலின் போராட்டத்தை நிறுத்துவதற்குப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.
படிக்க: விவசாயிகள் ரயில் முற்றுகை | புகைப்படக் கட்டுரை
ஆனால் தலேவால் “அரசுக்கு என் உடல்மீது அக்கறை இருந்தால் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றட்டும். அதன் பிறகு சிகிச்சை எடுத்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தது விவசாயிகளின் சமரசம் இல்லாத போராட்ட உணர்வினை வெளிப்படுத்துகிறது.
தொடர்ந்து 24 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் தலேவால் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி உடல்நிலை மோசமடைந்து மயக்கமடைந்தது விவசாயிகளின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக தலேவாலுக்கு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தலேவாலிடம் அவரின் இதயத் துடிப்பு மற்றும் பல உறுப்புகள் செயலிழக்கும் ஆபத்து இருப்பதாக எச்சரித்ததுடன் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு தெரிவித்தனர். ஆனால் தலேவால் ”எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை நான் வேறு எங்கும் செல்லப் போவதில்லை” என்று தெரிவித்தது விவசாயிகளின் போராட்ட உணர்வினை அதிகப்படுத்தியது.
தலேவாலின் உடல் நிலை குறித்து விவசாய சங்கத்தின் உறுப்பினரான அவ்தார் சிங், கூறுகையில் “அவரது இரத்த அழுத்தம் தொடர்ந்து குறைந்து வருவதாலும், எலக்ட்ரோலைட் சமநிலையின்மையாலும் டல்வாலின் நிலை மோசமாக உள்ளது.
அதனால் அவரது நிலைமையைக் கருத்தில் கொண்டு, அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். ஆனால் அவர் எந்த வித சிகிச்சையையும் மறுத்து வருகிறார். விவசாயிகளின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்கும் அல்லது தனது கடைசி மூச்சு வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடரப் போவதாக அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்” என்று சிங் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 21 ஆம் தேதி அன்று தலேவால் உடலில் உள்ள கீட்டோன் அளவுகள் அதிகமாக இருந்ததால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக மருத்துவ பரிசோதனை அறிக்கை மூலம் அறிய முடிகிறது. டிசம்பர் 23 ஆம் தேதி உடலில் ரத்த அழுத்தம் குறைந்து வருவது அவரது உடல்நிலை மேலும் மோசமாகி வருவதை வெளிப்படுத்தியது.
இந்நிலையில் ஹரியானா எல்லையில் நிலவுகின்ற குளிரகாலநிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனுடன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தினால் அவருடைய உடல் எடை15 கிலோ குறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து மிகவும் பலவீனமடைந்து உள்ளார். இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக ஒரு சிலருடன் மட்டுமே பேசி வருவதாக சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram