விவசாயிகள் ரயில் முற்றுகை | புகைப்படக் கட்டுரை

அமிர்தசரசின் புறநகர்ப் பகுதியில் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தண்டவாளத்தில் படுத்து விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாசிச மோடி அரசிற்கு எதிராக கிசான் மஸ்தூர் மோர்சா, சம்யுக்தா கிசான் மோர்சா விவசாய சங்கங்களின் தலைமையின் கீழ் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் ஹரியானா மாநிலத்தின் ஷம்பு எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தின் அடுத்த கட்டமாகக் கடந்த 6, 8 மற்றும் 14 ஆம் தேதிகளில் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவதற்கு “டெல்லி சலோ” பேரணி தொடங்கப்பட்டது. போலீசின் தடுப்புகளையும் மீறி ஹரியானா எல்லை வழியாக டெல்லிக்குள் செல்ல முயன்ற விவசாயிகள் மீது ஹரியானா போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டு, ரப்பர் தோட்டாக்கள், தண்ணீர் பீரங்கிகள் போன்றவற்றினால் கடுமையான தாக்குதல் நடத்தியதில் பல விவசாயிகள் படுகாயமடைந்தனர்.

அதன் காரணமாக மூன்று முறையும் தற்காலிகமாகப் போராட்டத்தை நிறுத்துவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் பாசிச அடக்குமுறைகளுக்கு அடிபணிய மாட்டோம் என்பதைப் பாசிச கும்பலுக்கு உணர்த்துவதற்கு அதே உற்சாகத்துடன் கிசான் மஸ்தூர் மோர்சாவின் தலைவர் சர்வான் பாந்தர் சிங் கடந்த 17 ஆம் தேதியன்று மாநிலம் தழுவிய ரயில் மறியல் போராட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

அதில் ”டிசம்பர் 18 அன்று பஞ்சாப் மாநிலத்தின் 23 மாவட்டங்களில் மதியம் 12 மணி முதல் 3 மணிவரை ரயில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். எங்களின் போராட்டத்திற்கு பஞ்சாப் மக்களும் ஆதரவளிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்ட பாந்தர் சிங் ”கனௌரி பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கத் தலைவர் ஜிக்ஜித் சிங் தலேவாலுக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்” என்று தன்னுடைய அறிவிப்பில் தெரிவித்திருந்தார்.

அதன்படி டிசம்பர் 18 அன்று பஞ்சாப் மாநிலத்தின் 52 இடங்களில் ரயில்களை மறித்தும் தண்டவாளங்களில் படுத்தும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சுனம் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர். இதனைப் போன்று ஃபீரோஸ்பூர், அமிர்தசரஸ் போன்ற பகுதிகளிலும் ரயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாட்டியாலா பகுதியில் விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி  தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க