வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலைக்கான சட்ட உத்தரவாதம் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா மாநில எல்லையான ஷம்புவில் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதியிலிருந்து பத்து மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கிசான் மஸ்தூர் மோர்சா ( Kisan Mazdoor Morcha ) சம்யுக்த கிசான் மோர்சா( Samyukta Kisan Morcha ) பாதிய கிசான் யூனியன்( Bharatiya Kisan Union ) ஆகிய விவசாய சங்கங்களின் தலைமையில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.
விவசாயிகள் தங்கள் போராட்டத்தின் தொடர்ச்சியாக கடந்த டிசம்பர் ஆறாம் தேதி டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராடுவதற்காக “டெல்லி சலோ” பேரணியை மீண்டும் தொடங்கினர். ஆனால், ஹரியானா போலீசு விவசாயிகள் மீது மிருகத்தனமாக தாக்குதல் நடத்தியதில் பல விவசாயிகள் காயமடைந்தனர். ஒரு நாள் கழித்து மீண்டும் விவசாயிகள் தங்களுடைய டெல்லி சலோ பேரணியை தொடங்கினர். போலீசு விவசாயிகள் மீது மீண்டும் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியது. எனவே, தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக விவசாயிகள் அறிவித்திருத்தனர்.
இந்நிலையில், டிசம்பர் 14-ஆம் தேதி மீண்டும் விவசாயிகள் டெல்லியை நோக்கி மூன்றாவது முறையாக செல்ல முயன்றனர். 101 பேர் கொண்ட விவசாயிகள் குழு டெல்லியை நோக்கி பேரணியாக செல்வார்கள் என்று விவசாய சங்கத் தலைவர் அறிவித்தார். இதனையடுத்து ஹரியானா போலீசு டெல்லிக்குள் விவசாயிகள் செல்வதை தடுப்பதற்கு ஹரியானா எல்லையில் தடுப்புகளை அமைத்ததுடன் அம்பாலா மாவட்டத்தில் உள்ள 12 கிராமங்களில் இணைய சேவை, குறுஞ்செய்தி ஆகியவற்றை 17-ஆம் தேதி வரை முடக்கியதுடன் ஐந்து பேருக்கு மேல் கூடுவதற்கும் தடை விதித்தது. அதன்மூலம் விவசாயிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல்களை தொடுக்க எண்ணியது.
டெல்லி நோக்கி சென்றால் போலீசு தங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் என்பதை விவசாயிகள் அறிந்திருந்த போதிலும் நெஞ்சுரத்துடன் போலீசின் தாக்குதல்களை எதிர்த்து டெல்லி நோக்கி செல்ல விவசாயிகள் முயன்றனர். போலீசின் தடுப்புகளைத் தாண்டி முன்னேற முயன்ற விவசாயிகள் மீது தண்ணீரை அதிக அழுத்தத்தில் தண்ணீர் பிரங்கிகள் மூலம் பீய்ச்சி அடித்து; கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி; கண்மூடித்தனமாக ரப்பர் தோட்டக்களால் சுட்டு தாக்குதல் தொடுத்தது ஹரியானா போலீசு. இத்தாக்குதலில், 17 விவசாயிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போலீசு ரப்பர் தோட்டாக்களால் சுட்டதில் காலில் காயமடைந்த ஹரியானா விவசாய சங்கத்தைச் சேர்ந்த ராஜ்குமார் தண்டா கூறுகையில் “நாங்கள் கடந்த மூன்று வருடங்களாக போராடி வருகிறோம். எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்த மோடி தற்போது வரை எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. ஆனால், எங்களின் கோரிக்கைகளுக்காக டெல்லியை நோக்கி பேரணி சென்றால் எங்கள் போராட்டத்தை ஓடுக்குவதற்காக மோடி அரசாங்கம் எங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. எனவே, எனது வேண்டுகோள் வாக்குறுதியளித்தபடி சுவாமிநாதன் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று மோடி அரசின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்துகிறார்.
படிக்க: பஞ்சாப்: விவசாய சங்கத் தலைவர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்!
கண்ணீர் புகைக்குண்டுகளால் தாக்குதலுக்குள்ளான பாரதிய கிசான் யூனியன் தலைவர் சுகதேவ் ராம் கூறுகையில் “போலீசார் எங்கள் மீது தண்ணீர் பீரங்கிகளைக் கொண்டு தாக்கியதால் எங்களால் முன்னேற முடியாமல் இருந்தபோதிலும் தொடர்ந்து எங்கள் மீது நடத்தப்பட்ட கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலில் ஒரு குண்டு எனது கண்ணை தாக்கியது. நான் மீண்டும் பார்ப்பேனா என்று தெரியவில்லை” என்றும் “தாக்குதலினால் எங்களுக்கு வலிகள் இருந்தாலும் நானும் மற்றவர்களும் போராட்டத்தை கைவிடமாட்டோம். இப்போராட்டக் களத்தில் எங்கள் உயிரையும் கொடுக்கவும் தயாராகவே வந்துள்ளோம். எத்தனை இழப்புகளை சந்தித்தாலும் போராட்டத்தில் வெற்றி பெறுவோம்” என்று தன்னுடைய போராட்ட உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கிய விவசாயிகளின் போராட்டத்தில் இதுவரை போலீசு மற்றும் துணை இராணுவப் படைகளின் கொடிய தாக்குதல்களால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் இறந்துள்ள போதிலும் உடல் ஊனமுற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ள போதிலும் சுகதேவ் ராம் உள்ளிட்ட விவசாயிகளின் போராட்ட உணர்வுதான் மோடி அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
மேலும், கிசான் மஸ்தூர் மோர்ச்சா தலைவர் சர்வான் சிங் பந்தேர் “101 விவசாயிகளின் குழு போராட்டம் எப்படி நாட்டிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்று கேள்வி எழுப்பியதுடன் நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு சட்டத்தின் 75-ஆம் ஆண்டின் நிறையவையொட்டி விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால், எங்களுக்கு ஆதரவாக யாரும் குரல் எழுப்பவில்லை” என்று எதிர்கட்சிகளின் சந்தர்ப்பவாதப் போக்கை அம்பலப்படுத்தினார். பாரதிய கிசான் யூனியன் கிராந்திகாரியின் தலைவர் சுக்விந்தர் கவூர் “எங்களை போலிஸ் தாக்கியதுடன் எங்கள் மீது அழுக்குநீரையும் ஊற்றி தாக்குதல் நடத்தினர். பல விவசாயிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதல்கள் மூலம் மோடி அரசாங்கத்தின் அரக்கத்தனமான முகம் அம்பலமாகியுள்ளதாக” தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மோடி அரசின் பாசிச பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்த்து விவசாயிகள் உறுதியுடன் போராடி வருகிறார்கள். திட்டமிட்டப்படி டிசம்பர் 16-ஆம் தேதி பஞ்சாப் தவிர நாடு முழுவதும் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்றும் 18-ஆம் தேதி பஞ்சாபில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கத் தலைவர் சர்வான் சிங் பாந்தர் அறிவித்துள்ளார். இப்போராட்டங்களில் பாசிச எதிர்ப்பு ஜனநாயகச் சக்திகள் கலந்துகொள்வதோடு போராட்டத்தை மாபெரும் மக்கள்திரள் போராட்டமாக வளர்த்தெடுக்க வேண்டும். அத்தகைய போராட்டங்கள் மூலம்தான் மோடி அரசை பணிய வைக்க முடியும்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram