பஞ்சாப்: விவசாய சங்கத் தலைவர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்!

இழப்புகளுக்கும் தியாகங்களுக்கும் அஞ்சாத விவசாயிகள் தொடர்ந்து பாசிசக் கும்பலுக்கு எதிராக தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முன்பைவிட வலிமையான போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஞ்சாப் எல்லையில் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பஞ்சாப் விவசாய சங்கங்களின் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திவருவது பாசிசக் கும்பலுக்கு கிலியூட்டியுள்ளது.

வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதாரவிலைக்கு (MSP – Minimum Support Price) சட்டப்பூர்வ உத்தரவாதம், டிஏபி உர பற்றாக்குறை தீர்க்கப்பட வேண்டும் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் கிசான் மஸ்தூர் மோர்ச்சா, சம்யுக்த கிசான் மஸ்தூர் மோர்ச்சா விவசாய சங்கங்களின் தலைமையின் கீழ் விவசாயிகள் பஞ்சாப், ஹரியானா மாநில எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாசிச மோடி அரசின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் பத்து மாதங்களாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில்தான் பஞ்சாப் விவசாய சங்கங்களின் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நவம்பர் 26-ஆம் தேதி முதல் 17 நாள்களை கடந்தும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். உடல் நிலை பாதிக்கப்பட்டு, உடல் எடை குறைந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ள போதிலும் விவசாயிகளுக்கே உரித்தான போராட்டக்குணத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

ஜக்ஜித் சிங் தலேவால் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், “தாம் நாட்டின் சாதாரண விவசாயி, பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்துக்கு மத்தியில் கனத்த இதயத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டப்பூர்வ உத்தரவாதம்  உள்ளிட்ட 13 கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும். இந்த போராட்டத்தில் நான் இறந்தால் மத்திய அரசுதான் அதற்கு பொறுப்பு. போராட்டங்கள் நடக்கும் இடத்தில் போலீசார் ஏதாவது செய்தால் அந்தப் பொறுப்பும் அரசின் மீதுதான் விழும்” என்று மோடி அரசை எச்சரித்துள்ளார்.

மேலும், இக்கடித்தத்தின் மூலம் தன்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டாலும் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் தான் உறுதியாக உள்ளதையும் மோடி அரசுக்கு மறைமுகமாக உணர்த்தியுள்ளார். இதனால் அச்சங்கொண்ட பாசிசக் கும்பலானது அவரது உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.


படிக்க: இந்திய விவசாயிகள் போராடுவது ஏன்?


ஜல்ஜித் சிங்கின் கடிதம் வெளியானவுடன் விவசாயிகள் போராட்டம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு டிசம்பர் 13-ஆம் தேதியன்று விசாரணை நடத்தியது. விசாரணையில் ஜக்ஜத் சிங்கை சந்தித்து, மருத்துவ உதவி வழங்கி, அவரது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள அவரை வற்புறுத்துமாறு ஒன்றிய அரசுக்கும் பஞ்சாப் மாநில அரசுக்கும் உத்தரவிட்டது.

ஆனால், மோடி அரசானது துணை இராணுவப் படைகள் மற்றும் போலீசு மூலம் போராடும் விவசாயிகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்துவது; கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசுவது; தண்ணீரை பீய்ச்சி அடித்து தடியடி தாக்குதல்கள் நடத்துவது என விவசாயிகள் மீது பாசிச தாக்குதல்களை தொடுக்கும் போது அதனைத் எந்த கேள்வியும் எழுப்பாத உச்சநீதிமன்றம் தற்போது ஜித்ஜிங் உண்ணாவிரதப் போராட்டத்தை தடுப்பதற்கே இத்தகைய நாடகமாடியுள்ளது.

மோடி அரசின் இத்தகைய நாடகங்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் விவசாயிகள் பணியப் போவதில்லை. இழப்புகளுக்கும் தியாகங்களுக்கும் அஞ்சாத விவசாயிகள் தொடர்ந்து பாசிசக் கும்பலுக்கு எதிராக தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முன்பைவிட வலிமையான போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், உணவு தானியங்களை உற்பத்தி செய்து நாட்டு மக்களின் பசியைப் போக்கிய விவசாயிகள், இன்று பட்டினி கிடந்து தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக போராடக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் மனதில் பசுமரத்தாணி போல பதிய வைக்க வேண்டும். நாடு முழுவதுமுள்ள பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் தீரமிக்க விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளித்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வைக்க வேண்டும் என்பதே தற்போதைய உடனடித் தேவையாக உள்ளது.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க