வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP – Minimum Support Price) சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மீண்டும் “டெல்லி சலோ” போராட்டத்தை தொடங்கியுள்ளனர். டிசம்பர் 6-ஆம் தேதி பஞ்சாப் – ஹரியானா எல்லையில் உள்ள ஷம்பு என்ற இடத்திலிருந்து டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணியை தொடங்கியுள்ளனர்.
விவசாயிகளின் அறிவிப்பு வெளியானதையடுத்து, அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக டெல்லி எல்லைகளில் ஏராளமான போலீசு குவிக்கப்பட்டு விவசாயிகள் மீது கடுமையான ஒடுக்குமுறை செல்லுத்தப்பட்டு வருகிறது. போலீசு கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆறு விவசாயிகள் காயமடைந்துள்ளனர், ஒரு வயதான விவசாயி தனது செவித்திறனை இழந்துள்ளார். ஆனால், விவசாயிகள் உறுதியாக போரட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
தற்போது மட்டுமின்றி, 2020 ஆகஸ்ட் முதல் 2021 வரையில் ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் டெல்லி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு மோடி அரசை பணியவைத்தனர். அதன்பிறகு, இந்தாண்டு தொடக்கத்திலும் குறைந்தபட்ச ஆதர விலைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கோரி விவசாயிகள் டெல்லி முற்றுகை போராட்டத்தை மீண்டும் தொடங்கினர். தற்போதும் பல்வேறு அடக்குமுறைகளையும் மீறி விவசாயிகள் டெல்லியை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றனர்.
விவசாயிகளின் இந்த தொடர்ச்சியான போராட்டத்திற்கான காரணத்தை நாம் புரிந்துக்கொள்வது வேண்டியது அவசியமானதாக உள்ளது. விவசாயிகள் கோரும் குறைந்தபட்ச ஆதர விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் என்பது அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் உயிராதாரமான கோரிக்கையாகும். இதனை புரிந்துகொள்ள வேண்டுமெனில், தற்போது இந்திய விவசாயத்துறை எதிர்க்கொண்டுள்ள நெருக்கடிகளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.
படிக்க: “எந்த தியாகத்திற்கும் தயார்” மோடி அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக முழங்கும் விவசாயிகள்
இந்தியாவில் 1990-களுக்குப் பிறகு, தனியார்மயம்–தாராளமயம்–உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, விவசாயம் மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகிய இடுபொருள்களின் விலை உயர்வு, விவசாயத்துறைக்கு அளித்துவந்த மானியங்களின் அளவை குறைப்பது, இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் விளைபொருள்கள் வீழ்ச்சி, வங்கிக்கடன் மறுப்பு, விவசாயத்துறைக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டு நிதியை குறைப்பது போன்றவற்றால் விவசாயிகளின் வாழ்வு கேள்விக்குறியாகிவிட்டது. இந்த நெருக்கடியின் விளைவாகவே குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கையானது தவிர்க்கவியலாமல் விவசாயிகளிமிருந்து எழுகிறது.
விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள இந்நெருக்கடி குறித்து, “கவுண்டர்கரண்ட்ஸ்” (countercurrents) இணையதளத்தில் வெளியான “இந்திய விவசாயம்: சவால்கள், விவசாயிகளின் போராட்டங்கள் மற்றும் நிலையான தீர்வுகள்” (Indian Agriculture: Scope of Challenges, Farmers’ Struggles, and Sustainable Solutions) என்ற கட்டுரை வெளியாகியுள்ளது. இக்கட்டுரையில் தற்போது விவசாயிகள் எதிர்கொண்டுவரும் நெருக்கடிகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் பிரச்சினைகளை புரிந்துக்கொள்வதற்காக இக்கட்டுரையை மொழிபெயர்த்து வெளியிடுகிறோம்.
000
இந்தியா ஒரு விவசாய நாடு. இங்கு பெரும்பான்மையான மக்கள் விவசாயத்துடன் நேரடியாக பிணைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலுள்ள 57 சதவிகித கிராமப்புற குடும்பங்கள் விவசாயத்தை முதன்மையான வாழ்வாதாரமாக நம்பியிருக்கின்றன. ஆனால், அவர்களின் வாழ்வாதாரமாக இருக்கும் விவசாயத்துறை தற்போது பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதிகரித்துவரும் கடன் சுமை, காலநிலை மாற்றம், சந்தையின் நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் அரசின் விவசாய விரோத நடவடிக்கைகள் போன்றவற்றால் இந்திய விவசாயிகளின் வாழ்க்கை மிகவும் மோசமானதாக மாறியுள்ளது. இந்தநிலை விவசாயிகளை மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த சமூக மற்றும் பொருளாதார நிலைத்தன்மையையும் பாதிக்கிறது.
இந்தியாவின் பாரம்பரிய தொழிலாக விவசாயம் இருந்தாலும், தற்போது விவசாயத்துறையில் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் விவசாயத்தில் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. மறுபுறம் விவசாயித்தில் கிடைக்கும் வருமானது குறைந்துள்ளது. இது விவசாயிகளை ஒரு துயரமான சுழலில் சிக்க வைத்துள்ளது.
விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியின் (NABARD) 2021-2022-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, ஒரு விவசாயக் குடும்பத்தின் சராசரி மாத வருமானம் ரூ.13,661. இதிலும், 33 சதவிகித வருமானம் மட்டுமே விவசாயத்தின் மூலம் பெறப்படுகிறது. மீதமுள்ள 67 சதவிகித வருமானத்தை விவசாயிகள் கூலித் தொழில் செய்வது அல்லது சிறு வணிகத்தில் ஈடுபடுவதன் மூலம் ஈட்டுகின்றனர். இது விவசாயத்தின் மூலம் கிடைக்கின்ற வருமானம் மட்டும், விவசாயிகள் வாழ்க்கை நடத்துவதற்கு போதுமானதாக இல்லை என்பதைக் எடுத்துக் காட்டுகிறது. குறிப்பாக, இதில் அதிகம் பாதிக்கப்படுவது சிறு மற்றும் குறு விவசாயிகள்தான்.
படிக்க: மீண்டும் தொடங்கியது விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம்!
இந்தியாவில் சுமார் 86 சதவிகித விவசாயிகள், இரண்டு ஹெக்டருக்கும் குறைவான நிலங்களை வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளின் பிரிவின் கீழ் உள்ளனர். பெரிய நில உரிமையாளர்களுடன் ஒப்பிடும்போது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மிகக்குறைந்த அளவிலான வருமானம்தான் கிடைக்கிறது. ஏனெனில், சிறிய நிலத்தில் விவசாயம் செய்யும்போது உற்பத்திச் செலவு அதிகமாவதுடன், வருமானமும் குறைகிறது. தற்போது விவசாயத்தில் உள்ள நிச்சயமற்ற தன்மை, காலநிலை மாற்றம் இவ்விவசாயிகளின் பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்துகிறது.
அதேபோல், உற்பத்திச் செலவு அதிகரிப்பால், விவசாயிகள் அதிகம் பாதிக்கபடுகின்றனர். இரசாயன உரங்கள், விதைகள், பூச்சிக்கொல்லிகள், நீர் பாசனம் மற்றும் இயந்திரங்களுக்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், விவசாயிகளின் வருமானம் பெரியளவில் குறைகிறது. மேலும், இடைத்தரகர்கள், உள்கட்டமைப்பு பற்றாக்குறை மற்றும் அரசு கொள்முதல் திட்டங்களை முறையாக செயல்படுத்தாமல் இருப்பது போன்றவை விவசாயிகளை நெருக்கடிக்கு தள்ளுகின்றன. இது விவசாயிகளை தங்களது கடின உழைப்புக்குரிய நியாயமான விலையை பெறமுடியாமல் தடுக்கிறது.
மேலும், தற்போது உலகம் சந்தித்துவரும் காலநிலை மாற்றம் (Climate change) என்பது இந்திய விவசாயத்திற்கு மற்றொரு பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. சீரற்ற மழைப்பொழிவு, வறட்சி, சூறாவளி மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு ஆகியவை விவசாயத்தை பெரிதும் பாதிக்கின்றன. தற்போது, மகாரஷ்டிரா மாநிலத்தில் உள்ள மராத்வாடா மற்றும் விதர்பா போன்ற பகுதிகள் கடுமையான வறட்சிக்குள்ளாகின்றன. இது விவசாயிகளின் வருமானத்தை நேரடியாக பாதிக்கிறது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இந்த இழப்புகளை சரிசெய்ய விவசாயிகள் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதை திருப்பிச் செலுத்துவதும் கடினமாகிறது.
இவ்வாறு அதிகரிக்கும் கடன் சுமை விவசாயிகளின் முக்கியமான பிரச்சினையாகும். ஒரு விவசாயக் குடும்பத்தின் சராசரிக் கடன் தொகை ரூ.91,231 ஆகும். இது அவர்களின் மாத வருமானத்தை விட ஏழு மடங்கு அதிகமாகும். கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல், நெருக்கடியில் தவிக்கும் விவசாயிகள் மனமுடைந்து தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர். 1995 முதல் 4 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். விவசாயிகள் அதிகளவு தற்கொலை செய்துக்கொள்ளும் மாநிலங்களாக மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா போன்றவை உள்ளன.
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில், “பசுமைப் புரட்சியின்” விளைவாக உணவு தானிய உற்பத்தி அதிகரித்தாலும், அது பல்வேறு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. மண்வளம் குறைந்துள்ளது, நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது, உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. மேலும், இம்மாநிலங்களில் அதிக வட்டி வசூலிக்கும் கந்துவட்டிக்காரர்களைத்தான் கடன் தேவைக்கு விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ளனர். இது விவசாயிகளின் கடன்சுமையை மேலும் அதிகரிக்கிறது.
தற்போது, நிலவும் விவசாய நெருக்கடிகளுக்கு தீர்வு காணவும் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் சில முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்குவது விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலையை உறுதி செய்வதாக அமையும். கரிம வேளாண்மை மற்றும் பயிர் பல்வகைப்படுத்துதலை ஊக்குவிப்பது உற்பத்திச் செலவைக் குறைக்கவும் நிலையான விவசாயத்தை ஆதரிக்கவும் உதவும்.
இந்திய விவசாயத்தின் மற்றொரு முக்கியமான அம்சம் நீர் மேலாண்மை. தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க, நீர் பாதுகாப்பு முறைகள் மற்றும் நுண்ணீர் பாசன முறைகளை பின்பற்ற வேண்டும். பால் பண்ணை, மீன்பிடி மற்றும் கோழி வளர்ப்பு போன்றவற்றை ஊக்குவிப்பது விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும். கூடுதலாக, விவசாயிகளை நேரடியாக சந்தைகளுடன் இணைக்க வேண்டும். அதற்காக உள்ளூர் சந்தைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மேலும், கடன் பொறியிலிருந்து விவசாயிகளை மீட்க கடன் மறுசீரமைப்பு கொள்கைகளை வகுக்க வேண்டும். கிராமப்புறங்களில் நிதி கல்வியறிவுத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.
விவசாயம் என்பது வாழ்வாதாரம் மட்டுமல்ல, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பு. விவசாயத்தை நிலையான பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக மாற்ற, அரசாங்கம், விவசாய அமைப்புகள் மற்றும் குடிமை சமூகம் இணைந்து செயல்பட வேண்டும். விவசாயிகளின் தற்கொலைகள் பொருளாதார நெருக்கடியின் விளைவு மட்டுமல்ல, கட்டமைப்பு மற்றும் சமூகத்தில் எற்பட்டுள்ள சிக்கல்களின் பிரதிபலிப்பு. இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு விரிவான கொள்கைகளை அமல்படுத்த வேண்டும். விவசாய சீர்திருத்தங்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தாமல், இந்தியாவின் நிலையான எதிர்காலத்தை உருவாக்க முடியாது.
மொழிபெயர்ப்பு: அகதா
மூலக் கட்டுரை: கவுண்ட்டர் கரண்ட்ஸ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
வெல்லட்டும் விவசாயிகள்….