“எந்த தியாகத்திற்கும் தயார்” மோடி அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக முழங்கும் விவசாயிகள்

பாசிச மோடிக் கும்பல் விவசாயிகள் மீது எத்துணை கொடூர தாக்குதலைத் தொடுத்தாலும் விவசாயிகளுக்கே உரிய வீரத்தீரத்துடன் அப்போராட்டம் முன்னேறிக்கொண்டே இருக்கும்.

டந்த டிசம்பர் 8 ஞாயிற்றுக் கிழமையன்று மீண்டும் “டெல்லி சலோ” பேரணியைத் தொடங்கிய விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டு, ரப்பர் தோட்டாக்கள் மூலம் பாசிச மோடி அரசு தாக்குதல் நடத்தியுள்ளது. “கிசான் மஸ்தூர் மோர்ச்சா”, “சம்யுக்த கிசான் மோர்ச்சா” ஆகிய விவசாயச் சங்கங்களின் தலைமையில் வேளான் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம், 2020 டெல்லி சலோ போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அப்போராட்டங்களின் அடுத்தகட்டமாக, பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி டெல்லி சலோ பேரணியைத் தொடங்குவதற்காக ஹரியானா போலீசிடம் அனுமதி கேட்டனர். போலீசு அனுமதி மறுத்ததுடன் டிராக்டர், டிராலிகள் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என்கிற நிபந்தனையையும் விதித்தது. இதனையடுத்து, விவசாயச் சங்கத் தலைவர் சர்வான் பாந்தர் சிங், “நாங்கள் அனைவரும் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து டெல்லிக்குள் செல்வோம்” என்று அறிவித்துவிட்டு பேரணியைத் தொடங்கினர்.

ஆனால், பாசிச கும்பல் ஹரியானா எல்லையில் காண்கிரீட் சுவர்களை அமைத்து பேரணியைத் தடுத்ததுடன் விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு, தடியடி என ராணுவ தாக்குதலை நடத்தியது. இக்கொடூரத் தாக்குதல்களில் பல விவசாயிகள் காயமடைந்ததால் தற்காலிகமாகப் பேரணி நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க மோடி அரசு தங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வராததால், டிசம்பர் 8 அன்று மீண்டும் பேரணியைத் தொடங்குவோம் என்று விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

அதனடிப்படையில், டிசம்பர் 8 அன்று எல்லையிலிருந்து 101 விவசாயிகளைக் கொண்ட விவசாயக் குழு மீண்டும் பேரணியைத் தொடங்கிய நிலையில், ஆரம்பத்தில் விவசாயிகளுக்கு தண்ணீர் பாட்டில்கள், டீ, பிஸ்கட் போன்றவற்றைப் போலீசு கொடுத்து கபட நாடகமாடி விவசாயிகளை திரும்பிப்போகும்படி தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கெல்லாம் பணியாமல் காண்கிரீட் தடுப்புச் சுவர்கள் மீது ஏறி டெல்லிக்குள் செல்ல விவசாயிகள் முயன்றனர்.


படிக்க: டெல்லி: விவசாயிகள் மீது தடியடி – மோடி அரசின் பயங்கரவாதம் | Liveblog


அதனையடுத்து, கண்ணீர்ப் புகைக் குண்டு, ரப்பர் தோட்டாக்கள், மிளகாய்ப் பொடி போன்றவற்றின் மூலம் விவசாயிகள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி போலீசு தனது கோர முகத்தை வெளிக்காட்டியது. இத்தாக்குதலில் ஆறு விவசாயிகள் படுகாயமடைந்ததுடன் பல விவசாயிகளுக்கு கண் எரிச்சலும் வயதான விவசாயிகளுக்கு நெஞ்சு வலியும் ஏற்பட்டு அருகிலுள்ள ஆம்புலன்சுகளில் முதலுதவி எடுத்துக் கொண்டனர்.

தாக்குதலுக்கு பிறகு விவசாயக் குழுக்களுக்கு தலைமை தாங்கிய பல்தேவ் சிங் ஜிரா கூறுகையில், “நாங்கள் அமைதியான முறையில் அணிவகுப்பு நடத்துவதற்கு கூட அனுமதி வழங்காதது சர்வாதிகாரம்” என்று பாசிச மோடி அரசின் முகத்திரையை கிழித்துள்ளார்.

பாசிச மோடிக் கும்பல் விவசாயிகள் மீது எத்துணை கொடூர தாக்குதலைத் தொடுத்தாலும் விவசாயிகளுக்கே உரிய வீரத்தீரத்துடன் அப்போராட்டம் முன்னேறிக்கொண்டே இருக்கும். “விவசாயிகள் எந்த தியாகத்திற்கும் தயாராக இருக்கின்றனர். சங்கங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தியப் பிறகு பேரணி மீண்டும் தொடங்கும்” என்ற விவசாய சங்கத் தலைவர் பாந்தர் சிங்கின் வார்த்தைகள் இந்த உண்மையை உணர்த்துகின்றன.

இத்தருணத்தில், பாசிச மோடி அரசுக்கு எதிராக பல்வேறு அரங்குகளில் குரல் கொடுத்த கொண்டிருக்கும் பாசிச எதிர்ப்பு சக்திகள் தற்போது விவசாயிகளுக்கு ஆதரவாக தங்கள் குரல் கொடுக்க வேண்டும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க