துரையில் இருந்து தேனி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் உள்ள விவசாய நிலங்கள் பெரும்பாலும் தரிசாகவே இருந்தன. தோழர் ஜெயராமனின் ஆரியப்பட்டி கிராமத்தில் பசுமையாக இருந்த சில இடங்களில் மட்டும் ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அருகில் சென்று பார்த்தபோது அவைகள் பெரும்பாலும் பயறு வகைகள், சிறு தானியங்கள் மற்றும் தோட்டப்பயிர்களாக இருந்தது. கிணறுப்பாசனம் உள்ளவர்கள் மட்டும் தண்ணீருக்கு எற்றவாரு இப்பயிர்களை செய்து வருகிறார்கள். தமிழில் வரும் சில பிரபலமான விவசாய இதழ்களில் தோட்டப்பயிர்கள் செய்தால் வளம் கொழிக்கும், கை நிறைய சம்பாதிக்கலாம் என்று சொல்கிறார்களே, அந்த ”வளத்தை” தெரிந்துகொள்ள அவர்களை சந்திந்தோம்.

கொடிவீரன், முதுகலை (பொருளாதாரம்)
தம்பி, எங்க இருந்து வாரீக…என்று கேட்டவரிடம் நம்மை அறிமுகப்படுத்திகொண்டதும் நமட்டு சிரிப்புடன் பேச ஆரம்பித்தார். “ தம்பி, விவசாயம் பண்ணா நாறித்தான் போகனும். எனக்கு எட்டு ஏக்கரு, மூணு மோட்டர் செட்டு. எதுலயும் தண்ணி இல்ல. இருக்கிற தண்ணிய வச்சி தோ.. இந்த ஐம்பது சென்ட் நிலத்துல இந்த வெண்டைய போட்டிருக்கேன்.

நட்டதிலிருந்து இரண்டு மாசம் ஆகும் காய் பறிக்க . அதிலிருந்து ஒன்னரை மாசம் கண்ணும் கருத்துமா பராமரிக்கனும். ஒருநாள் விட்டு ஒருநாள் காய பறிச்சி கொண்டு போய் சந்தையில போடுவோம். எனக்கு எல்லா செலவும் போக ஆயிரம் ரூபாய் கூட மிஞ்சாது. எப்படின்னு கணக்கு சொல்லுறேன், உங்களுக்கே எங்க பாடு தெரிஞ்சிடும்!

இந்த அம்பது சென்ட் இடத்துக்கு 2 கிலோ விதை வாங்கனும். சாம்ராட் விதை. இதோட விலை ரூ. 6000. கவர்மெண்ட்ல விதை வாங்கிக்கலாம்னு சொல்றாங்க. ஆனா உடனே கெடக்காது. அப்படியே வாங்கிட்டு வந்து போட்டாலும் மொளக்காது. அதானால தான் தனியார் கிட்ட இருந்து வாங்குறோம். அப்புறம் பரம்பு, பாத்தி கட்டுறவங்களுக்கு கூலி எல்லாம் சேர்த்து 1500 ரூபா. பொம்பள ஆளுவுளுக்கு 500ரூபா.

காம்ப்ளக்ஸ் உரம் பத்து மூட்டை. ஒரு மூட்டை 950 ரூ. ஐந்து தடவை போடனும். அப்புறம் பூச்சி மருந்து தனி செலவு. எல்லாம் சேர்த்து இருபதாயிரம் வரைக்கும் வந்துடும்.

இவ்ளோ செலவு பண்ணி காய பறிச்சி சந்தைக்கு கொண்டு போனா கிலோ 7 ரூபாக்கு எடுக்கிறான். அவன் வெளிய விக்கிறது கிலோ 25 ரூ. போன வாரம் பரவை மார்க்கெட்ல 162 கிலோ போட்டுட்டு வந்தேன். எவ்ளோ வருதுன்னு கணக்கு பண்ணிக்கோங்களேன்.(7*162=1134 ரூ).

காய் பறிக்கிற இரண்டு ஆளுக்கு கூலி 200 ரூ. சாக்கு 45 ரூ. என்னோட வண்டியிலயே சந்தைக்கு கொண்டு போயிடுறேன். பெட்ரொல், டீ செலவு எல்லாம் இருநூரு ரூபான்னு காசு வந்த வேகத்துலயே கையவிட்டு போயிடும். ஐம்பது, அறுபது முறை பறிக்கலாம். ஒவ்வொரு பறிப்புக்கும் இதான் நெலம. இதுவே மொத பத்து பறிப்புக்கு முப்பது, நாப்பது கிலோதான் கெடக்கும். அதெல்லாம் கணக்குலயே இல்ல.

இனிமே இந்த நெலத்த வச்சிக்கிட்டு ஒண்ணும் பண்ண முடியாதுன்னு தான் ஒரு ஏக்கர் நெலத்த பிளாட் போட்டு வித்துட்டேன். இப்ப எல்லாம் விவசாயம் பண்ணினா பொழக்க முடியாது. மோடியே இன்னா சொல்றாரு. ஒரு குடும்பத்துல இருக்க எல்லாரும் விவசாயத்த நம்பி இருக்காதிங்கன்னு சொல்றாரு. அதான் பசங்க எல்லாம் வேற வேலைக்கு போயிட்டாங்க.

தூத்துக்குடியில எல்லாரையும் சுட்டுக் கொன்னுட்டானே, அந்த ஸ்டெர்லைட் ஓனரு மாதிரி கிரிமினலா இருந்தாதான் தம்பி பொழக்க முடியும். அந்த மாதிரி ஆளுங்களுக்கு தான் அரசாங்கமும் துணையா இருக்கு. நம்மள யாரு பாக்குறா? அந்த காலத்துல ஒரு பழமொழி சொல்லுவாங்க. ”விவசாயி கணக்கு பார்த்தா ஏர்கம்பு மிஞ்சாது”ன்பாங்க. இவ்ளோ நாள் உழைச்சும் ஒன்னும் மிஞ்சல!

தெய்வகனி, கூலி விவசாயி.
எங்க கஷ்டத்தை இன்னான்னு சொல்றது. காலைல 7 மணிக்கு வந்தோம். தோ.. உச்சி வெய்யிலு ஒடம்ப உரிக்குது. இன்னும் சாப்பிடாம இந்த சொனையில கெடக்கொம். நாலு ஆளு பறிக்க வேண்டிய காய இரண்டு பேர எடுக்க சொல்லியிருக்காரு. கேட்டா கட்டுபிடியாகாதாம். இந்த சொனையில கையி, காலு எல்லம் அரிக்குது, உடம்பே எரியுது. இன்னும் ரெண்டு பேர் இருந்திருந்தா இன்னேரம் வீட்டுக்கு போயிருக்கலாம். வேற வேலை இருந்தாலாவது அங்க போயிருப்போம். அதுவும் இல்ல. நூறு நாள் வேலையும் நிறுத்திட்டானுங்க. இப்ப பெரிய பையன் பன்னண்டாவது முடிச்சிட்டான். காலேஜில சேக்கனும், வேற வழியில்லையே.

செல்வி.
எனக்கு நாலு புள்ள. மூணு பொண்ணு, ஒரு பையன். இந்த பசங்கள படிக்க வெக்கத்தான் கஷ்டப்படுறேன். என்னா படிக்க வச்சாலும் வேலை இல்லையே. படிக்க வக்க கடன – உடன வாங்கிட்டு படுறோம். பெரிய பொண்ணு நர்சு படிக்க வச்சேன். அவதான் இப்ப வேலைக்கு போயிட்டிருக்கா’ ன்னு சொல்லி முடிப்பதற்க்குள் கொடிவீரன், ”இவிங்க எல்லாம் படிச்சி வேலைக்கு போயிட்டதால தான் கூலிக்கு ஆளு கெடக்கிறதில்லை”ன்னு சொல்லி சிரித்துக் கொண்டிருந்தவரைப் பார்த்து,……

”காலம்பூரா உங்களுக்கு எல்லாம் அடிமையாவே இருக்கனுமா, இந்த காலத்துல உன் புள்ளங்களே உன் பேச்சை கேக்கறது இல்ல”ன்னு வைத்த குட்டில் அமைதியானார்.
“பொறண்டு படுக்ககூட எங்களுக்கு வீடில்ல. அப்படி எல்லாம் நாங்க வாழும்போதே இவங்களுக்கு எரியுது” இவிங்க மத்தியில வாழ்ந்து எப்படி முன்னேற முடியும்!

பிச்சை, விவசாயி.
இதுக்கு பேரு கேரளா தட்டாங்காய். நாற்பது சென்ட் போட்டிருக்கேன். அக்கம்பக்கத்துல போட்டவங்களுக்கு யாருதும் மொளக்கலை. இத காப்பாத்த ரெண்டு மாசத்துல கணக்கு வழக்கு இல்லாம செலவு பண்ணியிருக்கேன். நாலஞ்சி பறிப்பு முடிஞ்சிருக்கு. ஒரு பறிப்புக்கு நூறு கிலோ கெடைக்கும். ரெண்டு நாளைக்கு ஒருமுறை பறிச்சி கொண்டு போயிட்டு உசிலம்பட்டி சந்தையில போடுவோம். கிலோ பத்து ரூபாய்க்கு எடுக்குறான். இதுல நூத்துக்கு பத்து ரூபா கமிசன் எடுத்துக்குறான். நான் கொண்டு போற செலவு, ஆள்கூலி இதெல்லாம் கணக்கு பார்த்தா ஒன்னும் நிக்காது. நாள் செலவு அடங்கும். எப்பாயச்சும் கிலோ அம்பது ரூபா வரைக்கும் எடுப்பான். அப்ப கையில நிக்கும்.

பிச்சையின் மனைவி வனதேவி.
வெண்டை பறிக்கிற மாதிரி இல்ல இது. குனிஞ்சா நிமிர முடியாது. இடுப்பு எலும்பே விட்டு போகும். கொடி நல்லா வளர்ந்தப்புறம் இரண்டு நாளைக்கு ஒருமுறை வந்து நுனி காம்பை பறிக்கனும். அப்பத்தான் காய் காய்க்கும். இல்லனா கொடி வளர்ந்துட்டே போகும். எவ்ளோ வளர்ந்தாலும் பயிறு வராது.. அப்படியே விட்டுடவும் மனசில்ல. உடம்பு முடியலயேன்னு வூட்ல படுத்தா இவ்ளோ நாள் ஒழப்பு வீணாயிடும்….பா..! உசிலம்பட்டிலருந்து ஆட்டோ புடிச்சி காலையில வந்தாதான் வேலை நடக்கும். இத முடிச்சிட்டு வீட்டுக்கு போயி இருக்க வேலையும் செய்யனும். ஒரு நிமிசம் ஓச்சலு (ஓய்வு) இல்ல.

பெருமாயி.
நீங்க என்னத்த ஃபோட்டோ புடிச்சி என்னத்த மாறப்போவுது. காலத்துக்கும் நாங்க காட்டுமேட்டுலதான் கெடக்கோம். உங்களால முடிஞ்சா மோடிகிட்ட சொல்லி நூறு நாளு வேலையாவது தரச்சொல்லுங்க.

முத்து.
இந்த பக்கம் நெறைய வெள்ளக்காரங்க வந்து சுத்தி பார்த்து போட்டோ புடிச்சின்னு போவாங்க. அவங்க எங்களுக்கு எதாவது சின்ன சின்ன பொருள் கொடுப்பாங்க. நம்ம ஜனங்கள போட்டோ புடிச்சி, அவங்க ஊர்ல பார்த்து சிரிப்பாங்களாமே! என வெகுளியாக கேட்கிறார் முத்து.

  • வினவு புகைப்படச்செய்தியாளர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க