உசிலம்பட்டி: குடியரசு தின கொடியேற்றத்தை தடுத்து மக்கள் போராட்டம்

மக்கள் அனைவரும் கைது செய்தாலும் பரவாயில்லை என்று துணிச்சலாக நின்றனர். வேறு வழியில்லாமல் தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தைக்கு வந்தனர்.

துரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் நகராட்சி பகுதியில் உள்ள 15வது வார்டு கருக்கட்டான்பட்டி மக்கள் பொதுக் கழிவறை வேண்டி குடியரசு தினத்தில் கொடியேற்ற விடாமல் மறித்து போராட்டம் நடத்தினர்.

உசிலம்பட்டி 15வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ஏறக்குறைய 20 ஆண்டுகளாக பொதுக் கழிவறை கட்டித்தரக் கோரி மக்கள் போராடி வருகின்றனர்.

இதுவரை ஆட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் என தொடர்ந்து மனு கொடுத்து பல்வேறு வகையான போராட்டத்தை நடத்தி வந்துள்ளனர்.

இத்தனை ஆண்டுகளில் மூன்று முறை ஆட்சியர், 4 முறை ஆர்.டி.ஓ என வரிசையாக அதிகாரிகள் மாறியுள்ளனர். ஆனால் எந்த அதிகாரிகளும் கோரிக்கைகளைக் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் இன்று ஜனவரி 26 ’குடியரசு தின’த்தன்று நகராட்சியில் கொடியேற்றுவதைத் தடுத்து போராட்டம் நடத்த மக்கள் முடிவு செய்தனர்.

அந்த வகையில் இன்று கொடியேற்றும்போது தடுத்து முழக்கம் எழுப்பப்பட்டது. “உடனடியாக எங்களுக்கு கழிவரை வசதி செய்து தர வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் உடனே கலைந்து செல்லவில்லை என்றால் கைது செய்வோம் என்று போலீசு மிரட்டியது.

மக்கள் அனைவரும் கைது செய்தாலும் பரவாயில்லை என்று துணிச்சலாக நின்றனர். வேறு வழியில்லாமல் தாசில்தார் தலைமையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வந்தனர்.

இரண்டு நாட்களில் பொதுக் கழிவறை அமைப்பதற்கான பணிகளை தொடங்கலாம் என்று அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர்.

இந்தப் போராட்டத்தில் உசிலை பகுதி மக்கள் அதிகாரம் தோழர்கள் ரவி, அசோக், முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொதுக் கழிவறைக்காக எத்தனை முறை கோரிக்கை வைத்தாலும் கண்டுகொள்ளாத அரசு நிர்வாகம் இங்கு யாருக்காக ‘குடியரசு தின’ விழா கொண்டாடுகிறது என்று மக்கள் விழித்து கொண்டவுடன் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்துள்ளது.

மக்கள் போராட்டங்களே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாகும் என்பதை இந்த போராட்டம் உணர்த்துகிறது. இந்த மக்கள் போராட்டத்தை ஜனநாயக சக்திகள் ஆதரிக்க வேண்டும்.

இவண்
மக்கள் அதிகாரம்,
உசிலை பகுதி.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க