மீண்டும் தொடங்கியது விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம்!

போலீசு அமைத்திருந்த தடுப்புகளையும் மீறி விவசாயிகள் தங்கள் கைகளில் விவசாயச் சங்கக் கொடிகளை ஏந்தியவாறு அங்குள்ள கண்டெய்னர் லாரிகள் மீது ஏறி தங்களின் கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர்.

பாரதிய கிசான் பரிஷத் (BKP), கிசான் மஸ்தூர் மோர்ச்சா (KMM), சம்யுக்த் கிசான் மோர்ச்சா போன்ற விவசாயச் சங்கங்கள் விவசாயிகளின் கோரிக்கைகளுக்காகவும் பாசிச மோடி அரசின் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராகவும் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அப்போராட்டங்களின் தொடர்ச்சியாக கிசான் மஸ்தூர் மோர்ச்சா, சம்யுக்த் கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) உள்ளிட்ட சங்கங்களுடன் இணைந்து உத்தரப்பிரதேசத்தின் நொய்டா மாவட்டத்தில் உள்ள மகா மாயா மேம்பாலத்தின் கீழிலிருந்து தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவதற்கு டெல்லி சலோ பேரணியை டிசம்பர் 2 தொடங்க உள்ளதாக பாரதிய கிசான் பரிஷத் தலைவர் சுக்பீர் கலிஃபா (Sukhbir Kalifa) நேற்று (டிசம்பர் 1) அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று (டிசம்பர் 2) மதியம் நொய்டா, கௌதம புத்த நகர், ஆக்ரா, அலிகார், உள்ளிட்ட 20 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் (MSP), விவசாயிகளுக்கும் விவசாய கூலித் தொழிலாளர்களுக்கும் மாதாந்திர ஓய்வூதியத் திட்டம், விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்தல், மின்கட்டண உயர்வை ரத்து செய்தல், 2020-21 போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி “டெல்லி சலோ” பேரணிக்காகப் பாலத்தின் அருகே ஒன்றுகூடினர்.

ஆனால் மாநில யோகி அரசும் ஒன்றிய மோடி அரசும் விவசாயிகள் நொய்டாவிலிருந்து டெல்லிக்குச் செல்வதைத் தடுக்கும் விதமாக போலிசைக் கொண்டு கௌதம புத்த நகர் மற்றும் டெல்லி எல்லைகளில் தடுப்புகளை அமைத்துள்ளது.


படிக்க: நவம்பர் 26: மீண்டும் போராட்டம் அறிவித்துள்ள விவசாயிகள்!


முக்கியமாக விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுப்பதற்கு உத்தரப்பிரதேச எல்லையான தலித் பிரேர்னா ஸ்தாலில் (Dalit Prerna Sthal) 4.000 போலிசைக் கொண்டு மூன்றடுக்கு பாதுகாப்பையும் போராட்டத்தைக் கலைப்பதற்குத் தண்ணீர் பீரங்கிகளையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “விவசாயிகளை எந்த வகையிலும் டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கமாட்டோம்” என்று போலீசு அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால் போலீசு அமைத்திருந்த தடுப்புகளையும் மீறி விவசாயிகள் தங்கள் கைகளில் விவசாயச் சங்கக் கொடிகளை ஏந்தியவாறு அங்குள்ள கண்டெய்னர் லாரிகள் மீது ஏறி தங்களின் கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர். இது பாசிச கும்பலுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக போராட்டத்தை வழிநடத்திய தலைவர்கள் சிலரைக் கைது செய்துள்ளது.

இந்நிலையில், மக்களுக்கு இடையூறு இல்லாமல் போராட்டம் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்திற்கு விவசாயிகளைப் பார்த்தால் மக்களாகத் தெரியவில்லையா? விவசாயிகளின் கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுக்காத நீதிமன்றம் போராட்டத்தைத் தடுக்க மட்டும் முந்திக் கொண்டு வருகிறது.

குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்கும் விதமாக “விவசாயிகள் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதற்காக என் வீட்டின் கதவு திறந்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேசிய பாரதிய கிசான் பரிஷத் தலைவர் சுக்பீர் கலிஃபா “எங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும் நாங்கள் பின்வாங்கமாட்டோம். தலித் பிரேர்னா ஸ்தாலில் போராடிக் கொண்டிருப்போம். எங்கள் போராட்டம் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

எனவே மீண்டும் தொடங்கியுள்ள விவசாயிகளின் “டெல்லி சலோ” போராட்டத்திற்கு பாசிசத்தை எதிர்க்கக் கூடிய அனைத்து ஜனநாயக சக்திகளும் உழைக்கும் மக்களும் ஆதரவளிக்க வேண்டும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க