விவசாயிகள் போராட்டத்தின் நான்காம் ஆண்டு நிறைவு நாளான நவம்பர் 26 அன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம், நாடு தழுவிய போராட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்த உள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
கடந்த நவம்பர் 23-ஆம் தேதி திரிபுரா மாநிலத்தில் இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU), சம்யுக்த கிசான் மோர்ச்சா (திரிபுரா கிளை) இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாநில எஸ்.கே.எம் செயலாளர் பபித்ரா கர், 2020-ஆம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பாசிச மோடி அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டத்தின் நான்காம் ஆண்டு நிறைவு தினத்தை வலியுறுத்திப் பேசினார்.
மேலும் நான்காண்டு நிறைவு தினத்தில் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, தொழிலாளர்களுக்கு எட்டுமணி நேர வேலை மற்றும் மாதம் குறைந்தபட்சம் 20,000 சம்பளம் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதம் 10,000 ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதிலும் 500-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பேரணி மற்றும் போராட்டங்களை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
அதேபோல், CITU மாநில பொதுச் செயலாளர் சங்கர் பிரசாத் தத்தா, “தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கு மோடி அரசை நிர்ப்பந்திக்கும் வகையில் அடையாளப் போராட்டங்கள் நடத்தப்படும். மேலும் எங்களின் கோரிக்கைகளை மூன்று மாதத்திற்குள் ஒன்றிய மோடி அரசு நிறைவேற்றவில்லை என்றால் நாடு தழுவிய விவசாயிகளின் பெரும் போராட்டங்கள் நடைபெறும்” என்று பாசிச மோடி அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
படிக்க: “அதானியே வெளியேறு” என முழங்கும் கென்ய மக்கள்
இதனைத் தொடர்ந்து சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர் ஜிக்ஜிக் தலேவால், “பிப்ரவரி 18 முதல் பயிர்களுக்குக் குறைந்தபட்ச விலை நிர்ணயம், சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துதல், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், 2021 லக்கிம்பூரில் படுகொலை செய்யப்பட்ட விவசாயிகளுக்கு நீதி வழங்குதல், விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தோம். எங்களை மத்திய அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
எனவே, தற்போது மோடி அரசு கொண்டுவந்துள்ள புதிய தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்தல் மற்றும் மின் கட்டண உயர்வை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி சம்யுக்த கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய சங்கங்கள் இணைந்து நவம்பர் 26-ஆம் தேதி முதல் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு இடையேயான ஷம்பு மற்றும் கானௌரி எல்லைப் பகுதியில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க உள்ளோம்” என்று அறிவித்துள்ளார்.
பாசிச மோடி அரசின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து மீண்டும் போராட்டங்களை அறிவித்துள்ள விவசாயிகளுக்கு நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாய – தொழிலாளர் சங்கங்களும் ஆதரவளிக்க வேண்டும்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram