நைரோபி விமான நிலையத்தை அதானி நிறுவனத்திற்கு ஒப்படைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விமான நிலைய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கென்யா தலைநகர் நைரோபியில், உள்ள ஜோமோ சர்வதேச விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் ஒப்பந்தத்தை அதானி குழுமத்திற்கு சுமார் ₹15,000 கோடிக்கு வழங்க கென்யா அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்கீழ் விமான நிலையத்தின் இரண்டாவது ஓடுதளம் மற்றும் புதிய பயணிகள் முனையத்தை மேம்படுத்தவும், விமான நிலையத்தில் உள்ள வசதிகளைப் புதுப்பிக்கவும் அதானி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் உள்ளூர் மக்களின் வேலை வாய்ப்பு பறிபோகும் என்றும், வெளிநாட்டவர்கள் அதிகளவில் வேலையில் அமர்த்தப்படுவர் என்றும் கூறி விமான நிலைய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கென்யா தலைநகர் நைரோபியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜோமோ சர்வதேச விமான நிலைய ஊழியர்கள்

இந்த ஒப்பந்தத்திற்கு ஆரம்பம் முதலே கடுமையான எதிர்ப்பு இருந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் நடைபெறாமல் கென்யா அரசு பார்த்துக் கொண்டது.  இந்நிலையில் தான், கென்ய ஆட்சியாளர்களை நம்பாத ஜோமோ கென்யாட்டா விமான நிலைய ஊழியர்கள் செப்டம்பர் 12 அன்று திடீரென வேலை நிறுத்தப் போராட்டத்தைத் துவக்கியுள்ளனர்.

அங்கு போராடும் மக்கள் “அதானியே வெளியேறு” என்று முழக்கங்களை எழுப்பினர்.

“அதானியை நிராகரிப்போம்” என்ற பதாகையுடன் போராடும் விமான நிலைய ஊழியர்கள்

விமான நிலைய ஊழியர்களின் போராட்டம் காரணமாக நைரோபி விமான நிலையமே ஸ்தம்பித்தது. ஏராளமான விமானங்கள் தாமதமான நிலையில், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.


படிக்க: இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு ஆயுத ஏற்றுமதி செய்யும் அதானி


“தனியார் நிறுவனத்திற்கு விமான நிலையம் குத்தகைக்கு விடப்படுவதன் மூலம், இங்கு ஆட்குறைப்பு நடக்கும்; ஊழியர்களின் வேலை பறிபோகும்; எங்களின் தொழிற்சங்க உரிமைகளும் பறிக்கப்படும். எனவே, இந்த ஒப்பந்தத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்” என்று விமான நிலைய ஊழியர் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

விமான நிலையம் குத்தகைக்கு விடப்படுவது, அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கென்யா மனித உரிமைகள் ஆணையம் நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வரும் வரை, விமான நிலைய ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முக்கிய துறைகள் அனைத்தையும் கைப்பற்றிவரும் அதானி, தற்போது பாசிச மோடி அரசின் ஆதரவுடன், ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கும் தனது கரங்களை விரிவுபடுத்தியுள்ளார். அதன் தொடர்ச்சியாக, தற்போது ஆப்பிரிக்க நாடுகளின் வளங்களையும் சூறையாடக் களமிறங்கியுள்ளார். அதானி இந்திய உழைக்கும் மக்களின் எதிரி மட்டுமல்ல, உலகம் முழுவதுமுள்ள அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எதிரி என்பது நிதர்சனமான உண்மை.


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க