பேரிடர் அல்ல, நவீன தீண்டாமை!

இயற்கைப் பேரிடர்களால் விவசாயம் பாதிக்கப்படுவது இயற்கை சார்ந்த பிரச்சினை. ஆனால், அதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவது இயற்கை சார்ந்த பிரச்சினை அல்ல. விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டிய அரசு விவசாயிகளுக்கு எதிராக மேற்கொள்ளும் நவீன தீண்டாமையின் அங்கமாகும்.

ந்தியாவில் காலநிலை மாற்றத்தினால் புயல்கள், பெரு வெள்ளம், வறட்சி, வெப்ப அலை உள்ளி   ட்ட பேரிடர்கள் உருவாகிப் பேரழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன. மேலும், காலநிலை மாற்றத்தால் மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனினும், உற்பத்தியில் நேரடியாக ஈடுபடுகின்ற விவசாய வர்க்கம்தான், இதனால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் வர்க்கமாக உள்ளது என்பதைக் கடந்த சில மாத அனுபவங்களே நமக்கு உணர்த்துகின்றன.

நவம்பர் மாத இறுதியில் வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 14 மாவட்டங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. ஒரு நாளில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவை விட மிக அதிகமான மழை பெய்தது பாதிப்புகள் அதிகரிப்பதற்கான ஒரு காரணமாகும். சான்றாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில், இதுவரை இல்லாத அளவிற்கு, 23 மணி நேரத்தில்  50 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது. சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு இரண்டு லட்சம் கன அடிக்கும் அதிகமான நீர் திறந்துவிடப்பட்டதால் வெள்ளம் பெருக்கெடுத்தது.

தென்பெண்ணை ஆற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால், கடலூர், விழுப்புரம் மாவட்ட விளைநிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அரசின் புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே, தமிழ்நாட்டில்  2.11 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கிப் போயுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 1.29 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் பெய்த கனமழையால் 6,000 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் நாசமாயின.

விளைநிலங்களில் இடுப்பளவு வெள்ள நீரில் நின்றுகொண்டு வேதனையுடன் விவசாயிகள் அளித்த பேட்டிகள்; வெள்ளத்தில் அழுகிய பயிர்களை விவசாயிகள் எடுத்துக்காட்டும் காணொளிகள் மிகவும் வேதனைக்குரியதாக இருந்தன. பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பயிர்கள் இந்த புயலால் நாசமடைந்துள்ளதால் விவசாயிகள் நிர்கதியாகியுள்ளனர்.

மழையினால் உடைமைகள் இழப்பு மட்டுமின்றி, கடன்வாங்கி விளைவித்த பயிர்களும் அழிந்ததால் விவசாயிகள் ஒன்றிய, மாநில அரசுகளிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஆனால், இந்த அரசுகளோ விவசாயிகளை நிர்கதியில் நிறுத்திவிட்டன.

தமிழ்நாட்டில், 33 சதவிகிதத்திற்கு அதிகமாக பாதிப்படைந்துள்ள நெற்பயிர் விளைநிலங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17,000, மானாவாரி பயிர் விளைநிலங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.8,500 என்று சொற்பத் தொகையை நிவாரணமாக அறிவித்தது, தி.மு.க. அரசு. அந்த நிவாரணத் தொகை விவசாயிகளை சென்றடைந்துள்ளதா என்றால், அதுவும் கேள்விக்குறியே ஆகும்.

பெஞ்சல் புயலைத் தொடர்ந்து வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக டிசம்பர் 12 முதல் 14 வரை தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்தது. இக்கனமழையினால் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் பகுதியில் 40,000 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து, பாசிப் பயிர்களை வெள்ளம் சூழ்ந்ததால் அவை அழுகி நாசமாயின. விளாத்திக்குளம் பகுதியிலும் 6,000 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்களில் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தன.

இதே காலத்தில், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வெள்ளத்தின் பாதிப்புகளை பார்க்க முடிந்தது. வங்கக்கடலில் உருவான டானா புயல் அக்டோபர் 24, 25 ஆகிய தேதிகளில் 120 கி.மீ. வேக பலத்த காற்றுடன் மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவை தாக்கியது. அப்புயலின் தாக்கத்தால் மேற்குவங்கத்தில்  கிழக்கு மிட்னாபூர், ஹூக்ளி மற்றும் ஹவுராவில் 25,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் நாசமடைந்ததாக ஆரம்பக் கணக்கெடுப்பின்படி தெரிவிக்கப்பட்டது. கிழக்கு மிட்னாபூரில் மட்டும் 20,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் நாசமடைந்துள்ளன. இப்பகுதியில் நெல், பூ மற்றும் வெற்றிலை சாகுபடி செய்யும் விவசாயிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு பர்த்வான் மற்றும் மேற்கு மிட்னாபூரில் உள்ள நெல் விவசாயிகளும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


படிக்க: விவசாயிகள் மகாபஞ்சாயத்து: தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்


வெள்ள பாதிப்புகளைப் போலவே, மழை பொய்த்துப் போனதும் கடும் வெப்பமும் விவசாயத்தைப் பெரிதும் பாதித்துள்ளது. பீகார் மாநிலத்தில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகவே, தென்மேற்கு பருவமழைக் (ஜூன் -செப்டம்பர்) காலத்தில் குறைவான மழைப்பொழிவு பதிவாகி வருகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி நிலவரப்படி பீகாரில் 585 மி.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது. இது இக்காலத்தில் பெய்யவேண்டிய 789 மி.மீ. மழையை விட 26 சதவிகிதம் குறைவாகும். மழைப் பற்றாக்குறையால் விளைநிலங்கள் வறண்டு பயிர்கள் காய்ந்து விடுகின்றன.

இவ்வாறு பருவமழை பொய்த்துப் போவதால் பீகார் விவசாயிகள் பயிர் இழப்புக்கு உள்ளாவது ஒருபுறமென்றால், மற்றொருபுறம், செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் கங்கை மற்றும் அதன் துணை நதிகளில் ஏற்படும் வெள்ளப் பெருக்கினால் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாவதாலும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த ஆண்டில் பீகார் மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 28 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, அக்டோபர் மாதத்தில், 2.4 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான விளைநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு பீகார் மாநில விவசாயிகள் வறட்சி மற்றும் வெள்ளம் என்ற இரட்டைத் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

காலநிலை மாற்றத்தால் புது வகை பூச்சிகள் உருவாகி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் பருத்தி பயிர்களை நாசம் செய்கின்றன.

உத்தராகண்ட் மாநிலத்தின் மலைப்பகுதிகளில் வாழும் விவசாயிகளும், நவம்பர் மாதத்தில் பெய்ய வேண்டிய மழை பொய்த்துப் போயுள்ளதால் கோதுமை, பார்லி போன்ற பயிர்களை உரிய காலத்தில் விதைக்க முடியாமல் தவித்து வருகின்றனர். வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, அக்டோபர் 1 முதல் நவம்பர் 24 வரையிலான காலத்தில் உத்தராகண்டில் வழக்கத்தை விட 90 சதவிகிதம் குறைவான மழை பதிவாகியுள்ளது. உத்தராகண்ட் மலைப்பகுதிகளில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான விவசாயமானது மழைப்பொழிவை நம்பியே உள்ளது. மழை பொய்த்துப் போனதால் நிலங்கள் வறண்டு தரிசாகி, இப்பகுதி விவசாயிகளால் விதைப்புப் பணிகளை மேற்கொள்ள இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அதேபோல, தென்மேற்கு பருவமழையின் முதல் மாதமான ஜூன் மாதமானது, மானாவாரி விவசாயத்தை மேற்கொள்ளும் இந்தியாவின் 61 சதவிகித விவசாயிகள் தங்களுடைய விதைப்பு நடவடிக்கைகளை தொடங்கும் மாதமாகும். ஆனால், பருவநிலை மாற்றத்தினால் ஜூன் மாதத்தில் தொடங்கிய மழைப்பொழிவு மிகவும் சீரற்றதாக இருப்பதால், விவசாயிகள் பயிர் விதைப்பை ஜூன் மாதத்திலிருந்து ஜூலைக்கு மாற்றியுள்ளனர்.

ஜூலை ஐந்தாம் தேதி வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை வெளியிட்ட தரவுகளின்படி, ஜூன் மாத இறுதியில் வெறும் 2.27 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் மட்டுமே நெல் விதைக்கப்பட்டிருந்தது. இந்த அளவானது. (இந்தியா கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட 2015-ஆம் ஆண்டைத் தவிர) கடந்த பத்து ஆண்டுகளில் மிகவும் குறைந்த அளவாகும்.

மேலும், காலநிலை மாற்றத்தினால் புதுப்புது வகையிலான பூச்சிகள் உருவாகி, அவை பயிர்களை தாக்கி அழித்து, விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிகழ்வும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. வட இந்திய மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மூன்று மாநிலங்களிலும் பருத்திப்பயிர்களானது இளஞ்சிவப்பு காய்ப்புழு மற்றும் வெள்ளை ஈக்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இப்பூச்சிகளை விவசாயிகளால் கட்டுப்படுத்த முடியாததால் பருத்தி விவசாயத்திலிருந்து நெல்லுக்கு மாறி வருகின்றனர்.

ஜூலை முதல் வார நிலவரப்படி, இம்மூன்று மாநிலங்களிலும் 10.29 லட்சம் ஹெக்டேரில் மட்டுமே பருத்திப் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 6 லட்சம் ஹெக்டேர் குறைவாக இந்தாண்டு பருத்திப் பயிரிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். பருத்தி பயிர்களை புதுப்புது நோய்கள் தாக்குவது இதற்கு ஒரு முக்கியக் காரணமாகும்.

மேற்கூறியவை, காலநிலை மாற்றத்தினால் சமீபத்தில் இந்தியாவின் ஒரு சில மாநிலப் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள் மட்டுமே. புதுடெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் (Centre for Science and Environment) என்ற சிந்தனைக் குழுவின் அறிக்கையின்படி, புயல், வெள்ளம் போன்ற பேரிடர்களால் 2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 3.2 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவிலான விளைநிலங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 2023-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, 2024-ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்ட நிலங்களின் பரப்பளவு ஏறக்குறைய 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு காலநிலை மாற்றத்தினால் விவசாயிகள் பாதிக்கப்படுவது இந்தியாவில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலை வருங்காலங்களில் மேலும் தீவிரமடையும் என்பதையே வானிலை ஆராய்ச்சியாளர்களின் கருத்துகளும் ஆய்வறிக்கைகளும் நமக்கு உணர்த்துகின்றன.

ஆனால், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் காலநிலை மாற்றத்தினால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து அவர்களை காப்பாற்றுவதற்கு எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல், அவர்களை கையறு நிலையிலேயே விட்டுவிடுகின்றன. சொற்பத் தொகையை நிவாரணமாக அறிவித்து அதையும் முறையாக வழங்குவதில்லை.


படிக்க: தல்லேவாலுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய விவசாயிகள்


மேலும், பாசிச மோடி அரசானது காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் புயல், வெப்ப அலை உள்ளிட்ட பேரிடர்களை கணிப்பதற்கான வானிலை முன்கூட்டியே அறிவியலை வளர்த்தெடுக்காமல் உள்ளது. சமீபத்தில், வானிலை நிகழ்வுகளை சரியாகக் கணிக்க முடியாமல் போவதற்கான காரணங்கள் குறித்து கருத்து தெரிவித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், ‘‘வானிலையியலை முழுமையாக அறிந்துகொள்ள அறிவியல் கிடையாது. வானிலையை கணிப்பதற்கு தொழில்நுட்பக் கருவிகள் மட்டும் போதாது. கருவிகள் புள்ளிவிவரங்களைத்தான் கொடுக்கும். அதனை வைத்து ஒன்றும் செய்ய முடியாது.

அறிவியலும் தொழில்நுட்பமும் சேர்ந்து வளரும் போதுதான் எதிர்ப்பார்க்கின்ற துல்லியத்தன்மை கிடைக்கும்’’ என்று பேசியிருந்ததே அதற்கு சான்றாகும்.

ஆனால், ஒன்றிய அரசோ இப்பணிக்காக நிதியை ஒதுக்கீடு செய்வதில்லை. கார்ப்பரேட் முதலாளிகளின் வணிக நோக்கத்திற்காக பல்வேறு செயற்கைக்கோள்களை ஏவும் ஒன்றிய அரசு விவசாயத்துறை வளர்ச்சிக்காக சொற்ப நிதியை ஒதுக்கி விவசாயிகளை வஞ்சிக்கிறது.

விவசாயத்துறையை கார்ப்பரேட் டிஜிட்டல்மயமாக்குவது, விளைநிலங்களை கையகப்படுத்துவது, உள்ளீடு பொருட்கள் உற்பத்தியைக் பாசிச மயமாக்குவதற்காக கார்ப்பரேட்மயமாக்குவது உள்ளிட்ட பல சட்டத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது; இதன்மூலம் விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற்றுகிறது. பாசிசக் கும்பல் தனது இந்த நவீன தீண்டாமைக்கு இயற்கைப் பேரிடர்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை நல்வாய்ப்பாகக் கருதுகிறது.

மொத்தத்தில், இயற்கைப் பேரிடர்களால் விவசாயம் பாதிக்கப்படுவது இயற்கை சார்ந்த பிரச்சினை. ஆனால், அதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவது இயற்கை சார்ந்த பிரச்சினை அல்ல. விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டிய அரசு விவசாயிகளுக்கு எதிராக மேற்கொள்ளும் மேற்கண்ட நவீன தீண்டாமையின் அங்கமாகும்.

மேலும், காலநிலை மாற்றத்தினால் விவசாயிகள் பாதிக்கப்படுவது என்பது அந்த வர்க்கத்தினரின் தனிப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல, நாட்டு மக்களின் உணவு தேவையைப் பூர்த்தி செய்வது பற்றிய பிரச்சினையாகும். உணவு தானிய உற்பத்தியில் உருவாகும் பற்றாக்குறையை காரணம் காட்டி நாட்டு மக்களின் உணவு தேவையைப் பூர்த்தி செய்வதை அம்பானி அதானி கார்ப்பரேட் கும்பல்களின் கைகளில் ஒப்படைக்கும் பாசிச சதித்திட்டத்துடன் தொடர்புடையதாகும்.

எனவே, விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குகின்ற மக்கள் விரோத கார்ப்பரேட் கொள்கைகளை கைவிடுவது, தொடர்ந்து வெள்ளம் மற்றும் வறட்சியால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு மாற்று இடங்களில் விவசாயம் செய்வதற்கான நிலங்களை வழங்குவது, இயற்கை சார்ந்த முறையில் விவசாயத்தை ஊக்குவிப்பது, விவசாயத்தில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை அகற்றுவது உள்ளிட்ட மாற்றுக் கொள்கைகள் இன்று அவசியமானதாக உள்ளன.

இந்தக் கொள்கைகளை விரிவாக வகுக்கவும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக ஒன்றிய, மாநில அரசுகளை நிர்பந்திக்கும் வகையில் போராட்டங்களைக் கட்டியமைப்பதும், காலநிலை மாற்றத்தால் விவசாயம் பாதிக்கப்படுவதற்கு எதிரான நடவடிக்கைகளின் உடனடி மற்றும் முதற்பணியாகும்.


சிவராமன்

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க