செயலிழந்து போன நிலைக்குழுக்கள்: நாடாளுமன்றம் பாசிசமயமாகி வருவதன் நீட்சி

மக்கள் பிரதிநிதிகள் எனப்படுவோர், மக்களை எந்தளவிற்கு வேண்டுமானாலும் ஏய்க்கலாம்; ஆனால் அவர்கள் மீது எந்த சட்ட  நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதே இந்திய ‘ஜனநாயகத்தின்’ இழிநிலை. இதற்கு இந்திய அரசியலமைப்பு பக்கபலமாக இருக்கிறது.

மீபத்தில் நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் செயல்பாடுகள் பற்றி வெளிவந்த செய்திகள், அதாவது போதிய குறைந்தபட்ச உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால் ஐந்து நிலைக் குழு கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன என்ற தகவல், அரசு கட்டமைப்பு வல்லுநர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட, 24 துறை சார்ந்த நிலைக் குழுக்கள் (Department related standing committees) செயல்பட்டு வருகின்றன. இவை தவிர நிதிக் குழு, கண்காணிப்பு மற்றும் நலக் குழுக்கள் போன்ற சில நிரந்தரக் குழுக்களும் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு நிலைக் குழுவிலும் 20 முதல் 35 உறுப்பினர்கள் வரை இடம்பெற்றுள்ளனர். ஒரு கூட்டம் நடைபெற மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் (Quorum) கண்டிப்பாகப் பங்கேற்க வேண்டும்.

இந்நிலையில், மிகச் சமீபத்தில் தொலைத்தொடர்புத் துறையில் உற்பத்தித் தன்னிறைவு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டிருந்த நிலைக் குழுக்கூட்டம், குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை இல்லாததால் ஒத்திவைக்கப்பட்டது.

ஏப்ரல் 22 அன்று ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் தொடர்பான நிலைக் குழுவின் கூட்டமும் அதுபோலவே குறைந்தபட்ச எண்ணிக்கை இன்றி ஒத்திவைக்கப்பட்டது.

ஏப்ரல் 12 அன்று வேளாண்துறை தொடர்பான நிலைக் குழு கூட்டத்தில் 12 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்; அக்குழுவில் தேவையான குறைந்தபட்ச எண்ணிக்கை 11 என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சென்ற ஜனவரி மாதத்தில் நீர்வளத் துறையின் நிலைக் குழு கூட்டமும் அதேபோன்று குறைந்தபட்ச எண்ணிக்கை இல்லாத காரணத்தினால் தள்ளிவைக்கப்பட்டது.

மொத்தமாக எல்லா நிலைக் குழுக்களிலும் சராசரியாக 47 சதவிகித உறுப்பினர்கள், சற்றேக்குறைய சரிபாதி பேர் கலந்துகொள்ளவில்லை என்று அதிகாரப்பூர்வத் தரவுகள் தெரிவிக்கின்றன.

நிலைக் குழுக்கள் என்பன ஒவ்வொரு முக்கிய அமைச்சகத்தின் செயற்பாடுகளை விரிவாக ஆய்வு செய்ய உருவாக்கப்பட்டவை. இவை நாடாளுமன்றத்தின் ஓர் அங்கமாக அமைந்துள்ளன.

நாடாளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருப்பதால் அனைத்துப் பிரச்சினைகளையும் துறைவாரியாக விரிவாக விவாதிக்க இயலாது என்பதனால், துறை சார்ந்து தனித்த விசயங்களை 20, 25 பேர் என்று தனிக்குழுவாக அமைத்து, அதன் விளைவுகளை ஆழமாக ஆய்வு செய்யவே இந்த நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகச் சட்டம் கூறுகிறது.

இக்குழுக்கள், சட்ட மசோதாக்களில் கூடத் தேவையான நேரங்களில் அமைச்சரவைக்கும், நாடாளுமன்றத்திற்கும் தாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் பரிந்துரைகளை வழங்கும். அரசின் கொள்கைகள், திட்டங்கள் சரிவரச் செயல்படுத்தப்படுகின்றனவா என்கிற ஆய்வையும் கண்காணிப்பையும்கூட நிலைக் குழுக்கள் மேற்கொள்கின்றன.

ஆயினும், நிலைக் குழுக்களின் பரிந்துரைகள், ஆலோசனைகள், அறிக்கைகள் அனைத்தும் வெறும் உபதேசம் மட்டுமே. அவை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வச் செயல்பாட்டிற்கானவை அல்ல. பெரும்பாலும் இந்த நிலைக் குழுக்களின் அறிக்கைகளை ஆளும் கட்சி பொருட்படுத்துவதே இல்லை. எனவே, பெரும்பாலும் நிலைக் குழுக்களின் அறிக்கைகளுக்கான இடம் இறுதியில் குப்பைத் தொட்டிகளே. இதைத் தெரிந்து வைத்திருக்கும் நிலையில், நிலைக் குழு உறுப்பினர்கள் தமது அறிக்கைகளைத் தயாரிக்கப் பெரிதாக ஒன்றும் மெனக்கெடுவதில்லை என்பது இன்னொரு உண்மையாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறு சிறப்புப் பணிகள் பல ஒப்படைக்கப்படுகின்றன என்றாலும், அவர்களைப் பொறுத்தவரையில் எந்தப் பொறுப்போ, மக்கள் நலனில் எவ்வித அக்கறையோ இல்லாமல், தம் விருப்பம் போல் ஊரைச் சுற்றிக்கொண்டும் சொந்த வேலைகளைப் பார்த்துக்கொண்டும் இருந்து வருகின்றனர் என்பதே இதிலிருந்து தெரிய வருகிறது.

நிலைக் குழுவில் பங்கேற்பதற்குத் தனித்த ஊதியம் இல்லை என்றாலும், தினசரிப் படிகள், விமானப் பயணம் உள்ளிட்ட பல பயணச் செலவுகள், தங்குமிட வசதிகள், அதிகாரப்பூர்வச் சுற்றுப்பயணச் செலவுகள் எனப் பல சலுகைகள் அளிக்கப்படுகின்றன. அவ்வகைத் தனிச் சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டே கூட்டங்களுக்கு “டிமிக்கி” கொடுப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனாலும், அவர்களுக்குச் சட்டப்பூர்வமான எவ்விதக் கட்டுப்பாடுகளோ, அவற்றை மீறுபவர்களுக்கான தண்டனை முறைகளோ கிடையாது. பெரும்பாலானவர்கள் மக்கள் பிரதிநிதிகள் என்ற போர்வையிலேயே காலத்தைக் கழிக்கிறார்கள்.


படிக்க: காபூல் போதை மறுவாழ்வு மையம் மீதான தாக்குதல்: தொடரும் பாகிஸ்தானின் போர்க்குற்றங்கள்


நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களிலும் இதுவேதான் நிலைமை. குறைந்தபட்ச எண்ணிக்கை இல்லாததால் நாடாளுமன்றக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. நாடாளுமன்றத்தில் குறைந்தபட்ச எண்ணிக்கை என்பது பத்தில் ஒரு பங்காகும். அதாவது, 543 உறுப்பினர்கள் இருக்கிற அவையில் பல சமயங்களில் 54 பேர் கூட வருவதில்லை என்பதே நிலைமை.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்கிற வகையில் அவர்களின் ஊதியம், விமானப் பயணங்கள், இலவசத் தொலைப்பேசி – இணைய வசதிகள் மற்றும் தொகுதி மேம்பாட்டு நிதி என்று ஏராளமாக வழங்கப்படுகின்றன.

நாடாளுமன்ற உறுப்பினருக்கான மாத ஊதியம் ஒரு லட்சம் ரூபாயாகும். தொகுதிக்கான படிகள் (Allowance) என்று ரூ.70,000, அலுவலகச் செலவுகள் என்று ரூ.60,000 என மாதாந்திர ஊதியமே ரூ.3 லட்சத்திற்கும் மேல் வழங்கப்படுகிறத்ஹு. இவை தவிர இலவச வீடு, விமானப் பயணம், இலவச இணைய இணைப்பு எனப் பல இலவசங்கள் வழங்கப்படுகின்றன.

மேலும், ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுவிட்டால் ஆயுட்கால ஓய்வூதியத் தொகை ரூ.25,000 உறுதி செய்யப்பட்டுவிடுகிறது. இருமுறை வென்றால் ரூ.35,000, மும்முறை வென்றால் ரூ.45,000 என்று ஓய்வூதியம் உயர்ந்துகொண்டே போகிறது.

அவற்றுக்கெல்லாம் மேலாகத் தொகுதி மேம்பாட்டு நிதி (Member of Parliament Local Area Development Scheme) என்று ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஓர் ஆண்டுக்கு ரூ.5 கோடி என ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.25 கோடி வழங்கப்படுகிறது. இந்த வகையில் மட்டும் மொத்தமுள்ள 778 நாடாளுமன்ற (இரு அவை) உறுப்பினர்களுக்கும் சேர்த்து ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய ரூ.12,000 கோடி ஒதுக்கப்படுகிறது. இந்தத் தொகையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூலமே செலவழிக்க முடியும் என்றிருக்கின்ற போதிலும், இதில் தொகுதிகளுக்கு என்ன மேம்பாடுகளைச் செய்திருப்பார்கள் என்பது மக்கள் அனைவருக்கும் வெளிச்சம்.

தேர்தலில் ஒருமுறை வெற்றி பெற்றுவிட்டால் அவ்வளவுதான். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர்களை மக்கள் எதுவும் கேட்க முடியாது என்பது மட்டுமல்ல, அவர்களுக்குரிய பணிகளைச் செய்யவில்லை என்பதற்காக அவர்கள் மீது நாட்டின் பிரதமரோ, குடியரசுத் தலைவரோ அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகளோ யாரும் எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கிய பணி என்று ஒன்று உண்டென்றால், அது முக்கியமான சட்டத் திருத்தங்கள் அல்லது புதிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படுகிற நாட்களில் மட்டும் கட்சியின் கொறடாவின் அறிவுறுத்தலின் பேரில் கூட்டத்தொடரில், கண்டிப்பாகக் கலந்துகொண்டு வாக்களித்துவிட வேண்டும் என்பதுதான். வேறு எந்த நிபந்தனைகளோ நிர்ப்பந்தங்களோ இவர்களுக்கு அறவே கிடையாது.

மக்கள் பிரதிநிதிகள் எனப்படுவோர் இவ்வளவு விட்டேற்றியாகத் திரிவதற்கு ஏன் அனுமதிக்க வேண்டும்?

என்ன அமைப்பு முறை இது?

மக்கள் பிரதிநிதிகள் என்போர் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் அல்ல என்பதை எப்படி ஏற்பது?

அடுத்த முறை வெற்றிபெற வேண்டுமே என்பதற்காக மக்கள் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்தால் உண்டு; மற்றபடி வேறு எந்தக் கடமையோ பொறுப்போ இவர்களுக்கு இல்லை.

மொத்தத்தில், மக்கள் பிரதிநிதிகள் எனப்படுவோர், மக்களை எந்தளவிற்கு வேண்டுமானாலும் ஏய்க்கலாம்; ஆனால் அவர்கள் மீது எந்த சட்ட  நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதே இந்திய ‘ஜனநாயகத்தின்’ இழிநிலை. இதற்கு இந்திய அரசியலமைப்பு பக்கபலமாக இருக்கிறது.

குறிப்பாக, 1990-களில் இந்திய அரசு தனியார்மய – தாராளமய – உலகமயக் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட போதே இந்திய நாடாளுமன்றத்தின் கொஞ்சநஞ்ச அதிகாரமும் பறிக்கப்பட்டுவிட்டது. மிக முக்கிய முடிவுகளும் ஒப்பந்தங்களும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாமலேயே இறுதி செய்யப்பட்டு இந்தியாவின் இறையாண்மை ஏகாதிபத்தியங்களிடம் காவு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான், 2014-ஆம் ஆண்டு இந்தியாவின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பல் சொல்லிக்கொள்ளப்பட்ட நாடாளுமன்ற முறைகளையும் மரபுகளையும் பெயருக்குக் கூட மதிக்காமல் ஒழித்துக்கட்டி வருகிறது. இந்த போலி ஜனநாயக நாடாளுமன்ற முறையை பாசிசமயமாக்கி வருகிறது. ஏற்கெனவே சடங்குத்தனமாக இயங்கிவந்த நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் தற்போது அந்த சடங்கைக் கூட பின்பற்றாமல் செயலிழந்து போயிருப்பது இதன் நீட்சியே ஆகும்.

ஆகவே, அரசியல் அமைப்பு முறையையும் பாசிசமயமாகியுள்ள நாடாளுமன்றத்தையும் கலைத்தெறிந்துவிட்டு, புதிய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையிலான, பாசிஸ்டுகளை ஒடுக்குகின்ற ஒரு பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு அமைக்கப்பட வேண்டும்; அதில் மட்டுமே மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை வழங்க முடியும்.


ஆதி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க