ஆப்கான் தலைநகர் காபூலின் மையப்பகுதியில் அமைந்துள்ள “ஓமிட்” என்ற பகுதியில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தின் மீது பாகிஸ்தான் ராணுவம் மார்ச் 16-ஆம் தேதி இரவு 9 மணியளவில் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில் 260-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை (UNAWA) தனது முதற்கட்ட ஆய்வில் தெரிவித்தது. ஆனால், தாலிபான் அரசானது 400-க்கும் மேற்பட்டோர் பலியானதாகத் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த கூடாரங்கள், கட்டடங்கள் மற்றும் உணவு சேமிப்புக் கிடங்குகள் போன்றவை முற்றிலும் எரிந்து சாம்பலாகின. பல நூற்றுக்கணக்கான நோயாளிகள் படுகாயமுற்று அவதிப்பட்டு வருகின்றனர். பலரது உடல்கள் சிதைந்துவிட்டன. இதனால், சிலரது உடல்கள் சேர்த்தே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இறந்தவர்கள் மற்றும் படுகாயமுற்றவர்கள் அனைவரும் நோயாளிகளும் அவர்களுக்கு சிகிச்சை அளித்துவந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் மட்டுமே.
400-க்கும் மேற்பட்ட அப்பாவி நோயாளிகள், மருத்துவர்கள் கொல்லப்பட்ட இந்த நிகழ்வானது தெற்காசியாவை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அண்டை நாட்டின் மீது தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களைக் கொன்ற இக்கொடூரச் செயலானது, தெற்காசியாவில் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். அண்மைக் காலங்களில் இவ்வாறான ஒரு போர்ச் சூழலை தெற்காசியா சந்தித்ததில்லை என்பது இன்னொரு முக்கிய காரணமாகும்.
காபூல்-ஜலாலாபாத் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த போதைப்பொருள் மறுவாழ்வு மையமானது 2,000 படுக்கைகள் கொண்ட மிகப்பெரிய மையமாகும்.
ஆப்கானிஸ்தானில் நீண்டகாலமாக இருந்துவரும் பிற்போக்கு தாலிபான்களின் ஆட்சியானது மக்களை கடும் வறுமைக்கு ஆளாக்கியுள்ளது. இவ்வாறு வறுமையிலும் பசி பட்டினியிலும் தவிக்கும் ஆண்கள் மிகப்பெரிய அளவில் போதைப்பொருள்களுக்கு அடிமைகிவருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் தினக்கூலி தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், சிறு கடைக்காரர்கள் என உழைக்கும் வர்க்கங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இவ்வாறான ஒரு மையத்தைத் தாக்கியது ஒரு காட்டுமிராண்டித்தனமாகும், போர்க் குற்றமுமாகும்.
000
தாங்கள் போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தைத் தாக்கவில்லை என்றும் தீவிரவாத முகாமைத்தான் தாக்கியதாகவும் பாகிஸ்தான் கூறியது. பின்னர், காபூலுக்கு வெளியிலிருந்த தீவிரவாத முகாமைத்தான் குறி வைத்ததாகவும் தெரிவித்து தன்னிலையை நியாயப்படுத்த முயன்றது. ஆனால், அது இந்த முகாமை இலக்கு வைத்துத்தான் தாக்கியது என்பதைச் சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்தத் தாக்குதல் குறித்து குறிப்பிட்ட, தாலிபான் அரசு, இது ஆப்கானிஸ்தானின் இறையாண்மை மீதான அப்பட்டமான தாக்குதல் என்றும், அப்பாவி பொதுமக்கள் மற்றும் மருத்துவ மையத்தை இலக்கு வைத்து பாகிஸ்தான் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியுள்ளதாகவும் தனது கண்டத்தைத் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள், இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளதோடு, இது ஒரு போர்க்குற்றம் என்றும் அந்த அடிப்படையில் இது விசாரிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளன.
ஆனால், ஈரான், பாலஸ்தீனத்தின் மீது அமெரிக்காவும் இசுரேலும் நடத்திவரும் கொடூரத் தாக்குதல்களைக் கண்டிக்க முதுகெலும்பற்ற இந்திய அரசும், இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளது. இது, “மனிதாபிமானமற்ற கொடூரச் செயல், இது ஒரு கோழைத்தனம்” என்று கூறியுள்ளது.
நமது நாட்டில் தேசவெறியைத் தூண்டிவிடுவதற்கு பாகிஸ்தானை எதிரி நாடாகக் காட்டும் மோடி அரசு, பாகிஸ்தானின் தவறுகளைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் உத்தியைக் கையாண்டுவருவதன் வெளிப்பாடுதான் இந்தக் கண்டனமுமாகும். மற்றபடி, மனிதாபிமானத்திற்கும் மோடி அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது யாவரும் அறிந்த உண்மையாகும்.
பாகிஸ்தானில் உள்ள தாலிபான் அமைப்பு “பாகிஸ்தான் தாலிபான்” (TTP), பாகிஸ்தான் அரசாங்கத்தை மக்கள் தூக்கியெறிய வேண்டுமென்றும் இந்தப் படுகொலைகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமெனக் கோரியுள்ளது.
000
எனினும், பிப்ரவரி 27 அன்று தொடங்கிய இப்போரில் போர் விதிமுறைகளை மீறி பாகிஸ்தான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு முன்னர், ஆப்கானின் பல்கலைக்கழகம் ஒன்றின் மீதும் வான்வழித் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியது. இதுமட்டுமின்றி, சீனா மற்றும் கத்தார் நாடுகளின் தலையீட்டினால் ஏற்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ஆப்கான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
மொத்தத்தில், இந்த மூன்று மாதங்களில் மட்டும் ஆப்கானில் 750-க்கும் மேற்பட்ட ஆப்கானிய அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.
000
ஆப்கான் ஆயுதக் குழுக்கள் மூலமாக, தனது நாட்டின் உட்பகுதிகளில், தாக்குதல்களை நடத்தி வருவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி வந்ததன் தொடர்ச்சியாகத்தான் இந்தப்போர் வெடித்துள்ளது. இதனை நிரூபிக்கும் வகையில், இந்த மே மாதம் 10-ஆம் தேதி, வடக்கு பாகிஸ்தானின் பானு என்ற பகுதியில் உள்ள ஒரு போலீஸ் முகாம் மீது, கார் குண்டுவெடிப்பு பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது. இதில் 12 பேர் கொல்லப்பட்டனர். அதேவேளையில், அப்பகுதியில் இருக்கும் சந்தையில் ஒரு குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதில் ஒன்பது அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
போர் அறிவிக்கப்படுவதற்கு முன்புவரை, தீவிரவாத முகாம்கள் மீது மட்டும் தாக்குதல் நடத்தி வந்த பாகிஸ்தான், போர் தொடங்கிய பின்னர், அப்பாவி பொதுமக்கள் மீதும் வான்வழித் தாக்குதலை நடத்தி மக்களைக் கொன்று வருகிறது.
எனினும், அப்பாவி மக்களைக் கொன்றுதான் இந்தப் பிரச்சினையைத் தீர்வுக்குக் கொண்டுவர வேண்டுமென்ற அளவிற்கு பாகிஸ்தானில் ஆப்கானின் தீவிரவாத நடவடிக்கைகள் முக்கியத்துவமுடையவை அல்ல. அதுவரை மேற்கொண்டு வந்த தாக்குதல்கள் மூலமாகவே கட்டுப்படுத்த முடியும். எனினும், போர் விதிமுறைகளை மீறிய தற்போதைய கோடூர தாக்குதல்கள், ஆப்கானில் நடந்துவரும் தாலிபான் ஆட்சிக்கு எதிராக மக்களைத் திருப்புவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
எனினும், பாகிஸ்தான் நினைப்பது போல, தாலிபான்களின் ஆட்சியிலிருந்து அகற்றுவது அவ்வளவு எளிதான விசயமல்ல. பாகிஸ்தானின் தற்போதைய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் தாலிபான் அரசுக்கு சில நெருக்கடிகளை மட்டுமே ஏற்படுத்தக் கூடும். மற்றபடி, தாலிபான் அரசானது பாகிஸ்தானிய அரசைவிட மிகவும் உறுதியாக உள்ளது. அங்கு அரசியல் குழப்பங்கள் இல்லை.
இன்னொரு பக்கம், பாகிஸ்தானில் நிலவும் உள்நாட்டுக் குழப்பங்களைத் தற்காலிகமாக திசைதிருப்புவதற்கும் இந்த கொலைவெறித் தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. மேலும், அண்மைக் காலமாக ஆப்கான் இந்தியாவுடனான நெருக்கம் அதிகரித்துவரத் தொடங்கியது சர்வதேச காரணமாகும்.
இந்த உண்மைகளை அம்பலப்படுத்தி, பாகிஸ்தானின் போர்க்குற்றங்களைக் கண்டிப்பதும், ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பதும் ஒவ்வொருவரின் கடமையாகும்.
![]()
மகேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











