கடுங்குளிரிலும் தொடரும் விவசாய சங்கத் தலைவரின் உண்ணாவிரதப் போராட்டம்!

நவம்பர் 26 முதல் ஹரியானா எல்லையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தலேவாலின் போராட்டத்தினால், மீண்டும் கட்டுக்கடங்காத வகையில் விவசாயிகள் போராட்டம் எழுந்துவிடுமோ என்கிற அச்சம் பாசிச கும்பலை தொற்றிக்கொண்டுள்ளது.

போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மோடி அரசு நிறைவேற்ற வேண்டுமென்று விவசாய சங்கத் தலைவர் ஜிக்ஜித் சிங் தலேவால் ஹரியானா எல்லையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவருகிறார். ஜிக்ஜித் சிங் தலேவாலின் உண்ணாவிரதப் போராட்டம் 26 நாட்களைக்  கடந்து நடைபெற்று வருகிறது. இவரது உடல்நிலை மோசமடைந்துள்ள நிலையில், “எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளமாட்டேன்” என்று அவர்  தெரிவித்திருப்பது பாசிச கும்பலுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, டி.ஏ.பி. உர மானியம் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி “கிசான் மஸ்தூர் மோர்சா” (Kisan Mazdoor Morcha ), “சம்யுக்தா கிசான் மோர்சா” (Samyukta Kisan Morcha) விவசாய சங்கங்களின் தலைமையின் கீழ் விவசாயிகள் போராடி வருகின்றனர். கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி விவசாயிகள் இந்த டெல்லி முற்றுகை போராட்டத்தைத் தொடங்கிய நிலையில், பத்து மாதத்திற்கும் மேலாக பஞ்சாப், ஹரியானா எல்லைகளில் கடுங்குளிரிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால், பாசிச மோடி கும்பலானது விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கோ அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கோ தயாராக இல்லை. இதனை தங்களது சொந்த அனுபவத்திலிருந்து உணர்ந்துகொண்ட விவசாயிகள், நவம்பர் 26-ஆம் தேதியன்று நாடு முழுவதும் டிராக்டர் பேரணி மற்றும் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். பாசிச கும்பலானது விவசாயிகளின் பேரணியைத் ஒடுக்குவதற்காகக் கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு, தடியடி போன்ற கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியதில் விவசாயிகள் பலர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் விவசாயிகள் மீதான பாசிச கும்பலின் அடக்குமுறைகளை எதிர்த்தும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் 70 வயதான பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர் ஜிக்ஜித் சிங் தலேவால் (Jagjit Singh Dallewal), சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடரப் போவதாக கடந்த நவம்பர் 26-ஆம் தேதி அன்று அறிவித்தார்.

அன்று முதல் ஹரியானா எல்லையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தலேவாலின் போராட்டத்தினால், மீண்டும் கட்டுக்கடங்காத வகையில் விவசாயிகள் போராட்டம் எழுந்துவிடுமோ என்கிற அச்சம் பாசிச கும்பலை தொற்றிக்கொண்டுள்ளது.


படிக்க: விவசாயிகள் ரயில் முற்றுகை | புகைப்படக் கட்டுரை


இந்நிலையில், டிசம்பர் 13-ஆம் தேதி விவசாயிகளின் போராட்டம் குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யா காந்த் மற்றும் உஜ்ஜல் புல்யான் ஆகியோரின் அமர்வு, “மனித உயிர் விலைமதிப்பற்றது. ஒன்றிய, மாநில அரசுகள் தலேவாலுக்கு மருத்துவ உதவிகள் வழங்கிப் போராட்டத்தை முடித்துக் கொள்ள அறிவுறுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டது. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குப் பாசிச மோடி அரசை வலியுறுத்தாத உச்சநீதிமன்றம், தலேவாலின் போராட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு விவசாயிகளின் மேல் அக்கறை உள்ளது போல் கபட நாடகமாடுகிறது.

நீதிமன்றத்தின் உத்தரவிற்குப் பிறகு கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி பஞ்சாப் மாநில போலீஸ்துறை இயக்குநர் கெளராவ் யாதவ் மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சக இயக்குநர் மயங்க் மிஸ்ரா ஆகியோர் விவசாய சங்கத் தலைவர் ஜிக்ஜித் சிங்கை சந்தித்தனர். மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொண்டு போராட்டத்தை நிறுத்திக்கொள்ளும்படி ஜிக்ஜித் சிங்கிடம் தெரிவித்தனர். ஆனால், “தன் உடல்நலத்தின் மீது ஒன்றிய அரசுக்கு அக்கறை இருந்தால் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அதுவரை சிகிச்சை மேற்கொள்ளப் போவதில்லை” என்று கூறியுள்ளார். ஜிக்ஜித் சிங் தலேவால் பதிலளித்திருப்பது போராடும் விவசாயிகளின் உறுதியைப் பறைசாற்றுகிறது.

இந்நிலையில், தொடர்ந்து 26 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால், கடந்த டிசம்பர் 19-ஆம் தேதியன்று தலேவால் உடல்நிலை மோசமடைந்து மயக்கமடைந்தது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக மாநிலத்தின் ரஜிந்திரா மருத்துவக் கல்வி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜிக்ஜித் சிங் தலேவாலுக்குக்கு  மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சம்யுக்தா கிசான் மோர்சா செய்தித் தொடர்பாளர் மகேஷ் சவுத்ரி, “மருத்துவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்திய போதிலும் கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை மருத்துவமனைக்குச் செல்லப் போவதில்லை. சாகும் வரை இங்கேயே உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாக தலேவால் தெரிவித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

எந்தவித இழப்புகளுக்கும் தியாகத்திற்கும் தயங்காமல், பாசிச கும்பலின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல், சமரசமில்லாத போராட்ட உணர்வுடன் ஹரியானா எல்லையில் 27-வது நாளாக தலேவாலின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்  தொடர்ந்துகொண்டிருக்கிறது. விவசாயிகளின் இந்த போராட்ட உறுதி பாசிச கும்பலைப் பணிய வைக்கும் என்பது திண்ணம். விவசாயிகளின் இப்போராட்டத்திற்குப் பாசிச எதிர்ப்புணர்வு  ஜனநாயக உணர்வு கொண்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் பாசிச எதிர்ப்பாளர்களும் ஆதரவளிக்க வேண்டும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க