பஞ்சாப்: டெல்லி சலோ போராட்ட களத்தில் விவசாயி தற்கொலை

“பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை (எம். எஸ். பி) உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்கிற விவசாயிகளின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதில் மத்திய அரசின் செயலற்ற தன்மையால் ரேஷம் சிங் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானார்“

ஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் எல்லையில் உள்ள சம்பு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 55 வயதான ரேஷாம் சிங் என்ற விவசாயி விசம் குடித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் சம்பு பகுதியில் கிசான் மஸ்தூர் மோர்ச்சா, சம்யுக்த கிசான் மோர்ச்சா (அரசியல் சாராதது) ஆகிய விவசாய சங்கங்களின் தலைமையின் கீழ் வேளாண் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை (Minimum support price – MSP), விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி ஓர் ஆண்டிற்கும் மேலாகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பு எல்லையில் போராடுவது மட்டுமின்றி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட நாட்டின் பல மாநிலங்களிலும் டிராக்டர் பேரணி, இரயில் மறியல் போன்ற பல்வேறு போராட்டங்களையும் கட்டியமைத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜனவரி 9 ஆம் தேதியன்று, தரண் மாவட்டத்தின் பஹூவந்த் கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான விவசாயி ரேஷாம் சிங் விஷம் அருந்தி தன் உயிரை மாய்த்துக்கொள்ள விழைந்துள்ளார். பின்னர் அவரை விவசாயிகள் பாட்டியாலாவில் உள்ள ராஜிந்திரா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ரேஷாம் சிங்கின் உயிரிழப்பு குறித்து விவசாயிகளின் தலைவர் தேஜ்வீர் சிங் கூறுகையில், “பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை (எம். எஸ். பி) உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்கிற விவசாயிகளின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதில் மத்திய அரசின் செயலற்ற தன்மையால் ரேஷம் சிங் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானார்“ என்று தெரிவித்துள்ளார்.

சம்பு எல்லையில் ரேஷாம் சிங் தன் உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்பாக டிசம்பர் 18 ஆம் தேதி லூதியானாவைச் சார்ந்த விவசாயி ஒருவரும் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இவர் நவம்பர் 26 முதல் கானௌரி எல்லைப் பகுதியில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் 70 வயதான விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் உடல்நிலை மோசமடைந்ததால் வேதனையடைந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


படிக்க: விவசாயிகள் மகாபஞ்சாயத்து: தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்


இவ்வாறு கடந்த மூன்று வாரத்தில் மட்டும் சம்பு எல்லையில் மட்டும் இரண்டு விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள போதிலும் பாசிச மோடி அரசானது விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடாது என தனக்கே உரிய பாசிசத் திமிருடன் நடந்து கொள்கிறது.

மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் 44 நாட்களாக, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அவருடைய எடை குறைந்தும், ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையிலும் தன்னுடைய மருத்துவ சிகிச்சையை அவர் மறுத்து வரும் போதிலும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாசிச மோடி அரசு மறுக்கிறது.

இவ்வாறு சம்பு எல்லையில் இரு விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டதற்கு பாசிச மோடி அரசே முதன்மைக் குற்றவாளியாகும். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாததின் மூலம் அவர்களை ஆழ்ந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலைக்குத் தள்ளுகிறது. இரு விவசாயிகளின் உயிரிழப்பை நாம் தற்கொலை என்று கூட அழைக்க முடியாது; மாறாக பாசிச மோடி அரசால் நிகழ்த்தப்பட்ட படுகொலை என்றே அழைக்க வேண்டும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க