அதானி லாஜிஸ்டிக்ஸ் என்ற கார்ப்பரேட் நிறுவனத்தை இழுத்து மூடிய
பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம் !
மூன்று வேளாண் சட்டங்களை எதிர்க்கும் போராட்டமாகத் தொடங்கி, பிறகு கார்ப்பரேட் புறக்கணிப்பாக மாறி மாபெரும் போராட்டமாக வளர்ந்து, மோடி அரசையும் கார்ப்பரேட்டுகளையும் அச்சுறுத்தியது விவசாயிகளின் “டெல்லி சலோ” போராட்டம்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் பஞ்சாப் விவசாயிகளால் சுங்கச்சாவடிகள் முற்றுகையிடப்பட்டன. ரிலையன்ஸ் மால்கள், ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் முற்றுகை, ஜியோ சிம் புறக்கணிப்பு இவற்றால் கார்ப்பரேட்டுகள் மிரண்டுபோயின. அதைப்போலவே, விவசாயிகளின் தொடர் முற்றுகையால் தற்போது பஞ்சாபின் கிலா ராய்ப்பூர் என்ற பகுதியிலுள்ள அதானி லாஜிஸ்டிக்ஸ் என்ற மாபெரும் கார்ப்பரேட் நிறுவனம் இழுத்து மூடப்பட்டுள்ளது.
படிக்க :
டெல்லி சலோ : பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியை வீழ்த்திய நிலமற்ற தலித் கூலி விவசாயிகள் !
டெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் !!
கொரோனா ஊரடங்கைக் காரணம் காட்டி, தலைநகர் டெல்லியிலும் பிற மாநிலங்களிலும் போராட்டத்திற்கோ, தர்ணாவிற்கோ அனுமதிக்காதபோதும், அதானி மல்டி-மாடல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை 8 மாதங்களுக்கும் மேலாக முற்றுகையிட்டு வரும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து உறுதியுடன் போராடி வருகின்றனர். கடந்த ஆண்டில் விவசாயிகள் நடத்திய சாலை மறியல், டிராக்டர் பேரணி, முற்றுகையின் போதே முடங்கிக் கிடந்த இந்நிறுவனம், தற்போது இழுத்து மூடப்படும் நிலைக்கே வந்துள்ளது.
80 ஏக்கர் பரப்பளவு கொண்டு பரந்து விரிந்திருக்கும் இந்நிறுவனத்தின் முன்பு சிறு கொட்டகைகள் கொண்டு முகாமிட்டிருக்கும் விவசாயிகள், தங்களுடைய சிறிய தள்ளுவண்டிகளால் அந்த மாபெரும் நிறுவனத்தின் வாயில்களை முற்றுகையிட்டுப் போராடி வருகிறார்கள். இந்நிறுவனத்திற்கு வரும் தொழிலாளிகளுக்கு மூன்று வேளாண் சட்டங்கள் குறித்தும் மோடி அரசின் கார்ப்பரேட் கொள்கை குறித்தும் துண்டுப் பிரசுரங்களை தொடர்ச்சியாக விநியோகித்துள்ளனர்.
போராட்டத்தைக் கைவிடுமாறு போலீசு விடுத்த மிரட்டலுக்கு அஞ்சிப் பின்வாங்காமல் உறுதியாக நின்று போராடியுள்ளனர் விவசாயிகள். “உள்ளூர் போலீசுத் துணைக் கண்காணிப்பாளரும் போராட்டக் களத்துக்கு வந்து எங்களை மிரட்டினார். நாங்கள் மிகப் பெரிய நிறுவனத்தை எதிர்த்துப் போராடுவதால் எங்களை இங்கிருந்து வெளியேற்றுவதற்கு அவர்களிடம் ‘வேறு வழிகளும்’ உள்ளன என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், இன்று நாங்கள் பயந்தால் அவர்கள் எங்களை மேலும் அச்சுறுத்த முயல்வார்கள். முடிவாக, இப்போராட்டம் யார் வலிமையானவர்கள் என்பதைப் பற்றிய பிரச்சினையாகும்” என்று உறுதியுடன் கூறுகிறார் போராட்டக் களத்தில் இருக்கும் ஜெய்பால் என்ற பேராசிரியர்.
இப்போராட்டத்தில் அருகிலுள்ள கிராமத்திலிருந்து விவசாயிகள் பலரும் குறிப்பாக பெண்கள், குழந்தைகளும் அதிகளவில் கலந்து கொண்டுள்ளனர். “போராட்டக்களத்தில் இருக்கும் இந்த பெண்கள் திருமணங்கள், இறுதிச் சடங்குகளைத் தவிர வேறு எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே வராதவர்கள்” என்கிறார் பேராசிரியர் ஜெய்பால்.
ஆனால், இப்போது அறுவடை நேரத்தில் ஆண்கள் வேலையாக செல்லும்போது, பெண்கள்தான் இரவிலும் முற்றுகைப் போராட்டத்தை நடத்துகிறார்கள். ஒரு மாபெரும் போராட்டத்தின் போக்கில் பெண்கள் ஜனநாயகப்படுத்தப்படுவதும் தமது உரிமைகளுக்காக வீடுகளைவிட்டு வெளியே வருவதும் தவிர்க்க முடியாமல் இயல்பாக நடந்தேறுகிறது என்பதை இடைக்குறிப்பாக இங்கே நாம் சொல்லலாம்.
இப்போராட்டத்தில் விவசாயிகளுடன், சிறு கடை, பெரிய கடை உரிமையாளர்களும் கலந்துகொண்டது இதுவே முதல்முறை என்கிறார் ஜம்ஹுரி விவசாய சங்கத்தைச் சேர்ந்த ஜக்தர் சிங். “எங்களது வேலை அனைத்தும் பறிப்போய்விட்டன. எங்கள் அடிப்படை உரிமைகள், வாழ்வாதாரங்கள் அனைத்தையும் பெரும் நிறுவனங்கள் கைப்பற்றிவிட்டன. பிரச்சினை எங்கள் வீட்டு கதவை தட்டும்போது, எங்களுக்கு போராடுவதை தவிர வேறு என்ன வழி” என்கிறார் இவர்.
அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்நிறுவனம் மூடப்பட்டதால் தினசரி ரூ.50 கோடி இழப்பு ஏற்படுகிறது. ஜி.எஸ்.டி, சுங்க வரி, இதர வரிகள் சேர்த்து மொத்தமாக சுமார் ரூ.7,000 கோடி இழப்பை சந்தித்துள்ளது” என்கிறார். இந்நிறுவனத்தின் மேற்பார்வையாளர் ராகேஷ் கன்சல் என்பவர் கூறுகையில், “சாலை – இரயில் பாதையில் இணைக்கப்பட்ட இந்நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகளையும் நிறுத்திவிட்டோம்” என்கிறார். விவசாயிகளின் முற்றுகைப் போராட்டத்திற்கு எதிராக பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்த அதானி குழுமம், தற்போது தனது நிறுவனத்தை மூடப்போவதாகவே அறிவித்துள்ளது.
இதை பஞ்சாப் விவசாயிகள் பேருற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். “நாங்கள் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக இந்நிறுவனத்தை முற்றுகையிட்டுப் போராடி வருகிறோம். இந்த (மோடி) அரசு பொதுத்துறைகள் உட்பட எல்லாவற்றையும் பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு விற்று வருவதால், எங்கள் மண்ணில் அதானி நிறுவனம் நடத்தப்படுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இது சிறிய வெற்றிதான் என்றபோதிலும் நாங்கள் அடையப்போகும் பெரிய வெற்றிக்கு இது ஒரு நல்ல தொடக்கம்” என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் போராட்டக்களத்தில் இருக்கும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாய சங்கத்தைச் சேர்ந்த ஒருவர்.
படிக்க :
நள்ளிரவில் எரிவாயு குழாய்களை குவித்த கெயில் நிறுவனம் : விவசாயிகள் போராட்டம் !
வேளாண் சட்ட எதிர்ப்பு : அடுத்தகட்டமாக மகா பஞ்சாயத்துகளைக் கூட்டவிருக்கும் விவசாயிகள் !
8 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து உறுதியுடன் நடத்தப்பட்ட போராட்டத்தால்,  5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொள்கலன்கள், 0.9 மில்லியன் மெட்ரிக் டன் தானியக் குழிகள், 4 லட்ச சதுர அடி கிடங்கு மற்றும் 6 உள்நாட்டு நீர்வழிக் கப்பல்கள் கொண்ட – அதானிக்குச் சொந்தமான மாபெரும் கார்ப்பரேட் நிறுவனம் இழுத்து மூடப்பட்டுள்ளது.
உண்மையில் இது பஞ்சாப் விவசாயிகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றிதான். “எறும்பு கூடித் தேரிழுக்க முடியுமா” என்று உரிமைக்காகப் போராடுபவர்களைப் பார்த்து ஏளனம் செய்பவர்களுக்கு பதிலடியாய் அமையும் இந்த வெற்றி, அதேசமயத்தில் போராடிப் பயனில்லை என்று விரக்தியடைந்துள்ளோருக்கும் உற்சாகத்தையும் உந்துதலையும் அளிக்கக் கூடியதாய் உள்ளது.

ஷர்மி
செய்தி ஆதாரம் : The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க