புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட, ஜனவரி 7-ம் தேதி வியாழக்கிழமையன்று பஞ்சாப் கெட் மஸ்தூர் (PKMU) யூனியன் அமைப்பை சேர்ந்த 2000 கூலி விவசாய தொழிலாளர்கள் பஞ்சாப், டப்வாலியிலிருந்து அரியானாவுக்கும் டெல்லிக்கும் இடையில் உள்ள  திக்ரி எல்லைக்கு புறப்பட்டுள்ளனர். இது புதியதொரு வரலாற்றைப் படைத்திருக்கிறது.

இதை புதிய வரலாறு என நாம் குறிப்பிடக் காரணம், தற்போது போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, திக்ரி எல்லை நோக்கி படையெடுத்திருக்கும் இந்த நிலமற்ற கூலித் தொழிலாளர்கள் அனைவரும், இதற்கு முன்னர் பொதுநிலத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட  மூன்றில் ஒரு பங்கு தங்களுக்குக் கிடைக்கப்பெறாதது குறித்த எழுந்த முரண்பாட்டில் பிற சமூகத்தினரோடு முரண்பட்ட கிராமங்களில் இருந்து வந்துள்ளனர் என்பதுதான்.

படிக்க :
♦ டெல்லி சலோ : தன்னெழுச்சி அல்ல ! வர்க்கரீதியாக அணி திரட்டப்பட்ட விவசாயிகளின் பேரெழுச்சி !
♦ விவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …

நாடு முழுவதும் உள்ள 472-க்கும் மேலான விவசாய சங்கங்கள் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிற அதே நேரத்தில்  டெல்லி எல்லையில் விவசாயிகள் 40 நாட்களுக்கும் மேலாக இன்றுவரை போராடி வருகின்றனர். இந்த போராட்டமானது பஞ்சாப் விவசாயிகளால் தலைமை தாங்கப்பட்டிருக்கிறது. பஞ்சாப்பில் எல்லா சாதியினரும் நிலம் வைத்திருக்கின்றனர். ஆனால், மாநில மக்கள் தொகையில் 25 சதவீதம் உள்ள  ஜாட் சாதியினர்தான் அதிகமாக நிலம் வைத்திருக்கக் கூடியவர்கள். அதே நேரத்தில் மாநில மக்கள் தொகையில்  32 சதவீதம் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள்  வெறும் 2.3 சதவீத விவசாய நிலம் மட்டுமே வைத்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில், இந்த புதிய வேளாண் சட்டத்தை ஆதரிக்கக் கூடியவர்களுக்கு இந்த போராட்டம், ஜாட் சாதியினர் சம்மந்தபட்டது என்று முத்திரை குத்த எளிதாகி விடுகிறது. குறிப்பாக தலித் சமூகம் ஜாட் சாதியினருடன் பஞ்சாப்பின் சில பகுதிகளில் மேற்குறிப்பிட்ட நிலப்பிரச்சினையை ஒட்டி ஏற்பட்ட மோதலை கருத்தில் கொண்டு இப்போராட்டம் குறித்து இத்தகைய கருத்தாக்கத்தை எளிமையாக ஏற்படுத்திவிட முடிகிறது.

உதாரணமாக, 2014-ம் ஆண்டில் சங்க்ருர் மாவட்டத்தின் பால்டு காலன் என்ற கிராமத்தில் உள்ள தலித் மக்கள் அக்கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து பொது நிலத்தில் மூன்றில் ஒரு பங்கை குத்தகைக்காக கோரிக்கை வைத்து கேட்ட பொழுது, அவர்கள் போலீசின் தாக்குதலையும், நீதிமன்ற வழக்குகளையும் சிறையையும் கூட எதிர்கொள்ள நேர்ந்தது. ஆனாலும் உறுதியாக நின்று, அந்தப் பொது நிலத்தில் மூன்றில் ஒரு பங்கு உரிமையை பெற்றனர்.

பால்டு காலன் கிராமத்தை சேர்ந்த நிலமற்ற கூலி தொழிலாளியான ஹர்பால் சிங்கிற்கு  கிராம பொது நிலத்தில் 0.2 ஏக்கர்  மட்டுமே கிடைக்கப்பெற்ற போதிலும், டெல்லி எல்லையில் நடக்கும் போராட்டத்தில் பஞ்சாப்பிலிருந்து வந்த விவசாயிகளுடன் சேர்ந்து கலந்து கொண்டார். ஊருக்கு திரும்பியுள்ள ஹர்பல், “புதிய வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படவில்லை என்றால் எங்களுக்கு  வேலை கிடைக்காது. விவசாயிகளுடன் ஒன்றுபடுவது எங்களின் கடமை. நாங்கள் விவசாயிகளுடன் நட்புறவு வைத்துள்ளோம்” என்று கூறுகிறார்.

2016-ல் சங்க்ருர் மாவட்டம், ஜாலூர் கிராமத்தில் கிராம பொது நிலம் சம்மந்தமாக ஜாட் மற்றும் தலித் மக்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் குர்தேவ் கவுர் என்ற பெண்மணி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார். ஆனால், நிலமற்ற கூலி தொழிலாளியான குர்தாஸ் சிங்கும்,  ஜாலூரிலிருந்து வந்து  டெல்லி எல்லையில் நடக்கும் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்ட  பல தலித் மக்களில் ஒருவராக இருக்கிறார்.

தற்போது ஊருக்கு திரும்பியுள்ள குர்தாஸ் , “எங்களுக்கு நிலம் கிடையாது. ஆனால், இந்த சட்டம் எங்களுக்கும் ஆபத்து தரக்கூடியதாக உள்ளது. பொது கிராம நிலம் மீது எங்களுக்கும் நில உடமையாளர்களுக்கும் சண்டை இருந்தது, ஆனால், எங்களுக்குள் தனிப்பட்ட பகை உணர்வு இல்லை.” என்கிறார்.

மேலிருந்து கீழ்நோக்கி வரும் பாதிப்பு :

மேலோட்டமாக பார்த்தால், இந்த புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை மட்டும் பாதிப்பதாக தோன்றுகிறது. ஆனால், ஜமீன் பிரபாதி சங்கர்ஷ் கமிட்டி என்கிற தலித் நில உரிமைக்காகப் போராடும் அமைப்பின் தலைவர் முகேஷ் மலாடு, விவசாய கூலி தொழிலாளிகளும் இந்த சட்டங்களால் பாதிக்கப்படுவார்கள் என்கிறார். “அரசாங்கம் வேளாண் விளைபொருள் சந்தை கமிட்டியை (APMCs),  கலைத்தால் லட்சக்கணக்கான தலித் கூலி தொழலிளாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள்.,” என்று தி வயர் இணையதளத்திடம் பேசுகையில் தெரிவித்தார்.

“டெல்லி எல்லையில் போராட வந்திருக்கும் தலித் மக்களில் பெரும்பாலானோர் உயர் அறிவு பெற்றவர்கள். அவர்கள் பல்வேறு அமைப்புகளில் பங்கேற்றுள்ளனர். விவசாய சங்கங்கள் தலித் மக்களை இங்கே கொண்டுவர அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இது புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல, இது அறிவுஜீவிகளை சிறையில் அடைத்திருக்கின்ற, காஷ்மீரிகளை கொடூர தாக்குதலைத் தொடுத்திருக்கின்ற, தொழிலாளர் சட்டங்களை திருத்தியிருக்கின்ற, என்ஆர்சி சட்டங்களை கொண்டுவந்திருக்கின்ற பாசிச அரசாங்கத்திற்கு எதிரானதோர் போராட்டம்” என்கிறார் முகேஷ் மலாடு

“ தலித் மக்கள் இந்த போராட்டத்தில் நுழைய வேண்டியதன் அவசியம், ஆளும் பாஜக அரசாங்கத்தின் பிரித்தாலும் சூழ்ச்சியை முறியடிப்பதில் முக்கியமானது” என்கிறார் அவர்.

இந்தப் போராட்டம் தொடங்கிய உடனே, பாஜக தானாக முன்வந்து தலித் மக்களின் உரிமைக்காக போராடும் தலைவனைப் போல காட்ட முயற்சித்தது. இவ்வாறாக இந்த தேசியப் போராட்டத்தை நில உடமையாளர்களின் உரிமை பற்றிய பிரச்சினையாக சித்தரித்தது. பிஜேபி ஆளும் உத்திர பிரதேசம் மாநிலம், ஹத்ராசில் ஒரு தலித் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட அதே நேரத்தில்தான் இதுவும் நிகழ்ந்தது. என்ன நிகழ்ந்தது என்பதை மறைக்கும் வகையில் அவருடைய உடல் போலிசால் நள்ளிரவில் எரியூட்டப்பட்டது.

சட்ட விரோத முறையில் பஞ்சாப்பில் உள்ள தலித் அமைப்புகளை கட்டுபடுத்த பாஜக விரும்புவதாக குற்றம் சாட்டுகிறார், முகேஷ் மலாடு. “டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கியதில் இருந்து கடந்த ஒரு மாதமாதத்தில், அமெரிக்காவிலிருந்து ஒரு நபர் உட்பட  வெவ்வேறு இடங்களிலிருந்தும் அனேக நபர்கள் எங்கள் அமைப்புக்கு நிதி கொடுக்க அணுகினர்” என்கிறார் மலாடு.

“பெயர் குறிப்பிடாத நபர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு ‘ஜாட் சாதியினர் தொடர்ந்து தலித் மக்களை ஒடுக்குகிற போது, ஏன் உங்கள் அமைப்பு அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறது? பஞ்சாப்பில் பாஜக ஆட்சி அமைத்தால் அது ஜாட்டுகளுக்குச் சொந்தமான நிலத்தைப் பறிக்க தலித்துகளுக்கு உதவி புரியும்.’ என்றார். தொலைதூர இடங்களிலிருந்து மக்கள் எங்களை தொடர்பு கொண்டு உதவ ஆர்வம் தெரிவித்திருப்பது, இதுதான் முதல்முறை. இது பெரிய கேள்விகளை எழுப்புகிறது. இது பாஜக-வின் விளையாட்டாக இருக்கலாம் என்று நினைக்கிறோம்” என்றார் அவர்.

படிக்க :
♦ விவசாயிகள் போராட்டத்தின் ஆதாரத் தூண்கள் || படக் கட்டுரை
♦ டெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் !!

உணவுக்கு எதிராக லாபம் :

மலாடு அல்லாத பி.கே.எம்.யூ (PKMU) தலைமை உட்பட கூலித் தொழிலாளர் மற்றும் தலித் அமைப்புகளின் பிற தலைவர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

பி.கே.எம்.யூ-வின் மாநில தலைவர் ஜோரா சிங் நஸ்ரலி கூறுகையில், தமது அமைப்பைச் சேர்ந்தவரான 75 வயது தேஜா சிங் என்பவர் பஞ்சாப்பில் உள்ள பத்திந்தாவில் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தபோது நவம்பர் 11 அன்று,  இறந்ததாக குறிப்பிட்டார். தேஜா சிங் நிலமற்ற ஒரு தலித் தொழிலாளி. அவர் பி.கே.எம்.யூ-வில் 20 ஆண்டுகாலமாக சிறந்த செயல்வீரராக இருந்து வந்தார். 900 பி.கே.எம்.யூ-வின் தலைவர்கள் மற்றும் மற்ற அதன் செயல்பாட்டாளர்கள் திக்ரி எல்லையில் போராடிக்கொண்டிருக்கிற நேரத்தில், பி.கே.எம்.யூ-வின் அனேக உறுப்பினர்கள் பஞ்சாப்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருகின்றனர்.

டிசம்பர் 12 மற்றும் 20 தேதிகளுக்கு இடையில் “விழிப்புணர்வு மற்றும் எழுச்சிகொள்ளுதல்” என்ற பெயரில் ஒரு பிரச்சாரத்தை பி.கே.எம்.யூ பஞ்சாப்பில் மேற்கொண்டது. அது 90 கிராமங்களில் உள்ள கூலி தொழிலாளர்களுக்கு அச்சட்டத்தின் பாதிப்புகளை தெரிவிக்கும் விதமாக விளக்கி பிரச்சாரம் செய்தது. இரண்டாவது கட்ட பிரச்சாரம் டிசம்பர் 25 முதல் ஜனவரி 5 வரை நடத்தப்பட்டது. இதில் பி.கே.எம்.யூ-வின் தலைமை 200 கிராமங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டது. அதனை தொடர்ந்து ஜனவரி 7 அன்று திக்ரி எல்லையை நோக்கிய பயணத்தை மேற்கொண்டுள்ளது.

நஸ்ரலி கூற்றுப்படி விவசாயிகள் தங்களின் குறைந்தபட்ச ஆதார விலையையும் நிலத்தையும் இழந்தால், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம் அமல்படுத்தப்பட்டால் விவசாயக் கூலித் தொழிலாளர்கள்,  விவசாயிகள் பாதிக்கப்படுவதை போலவே பாதிக்கப்படுவார்கள்.

“வர்த்தக கழகங்கள் பெரிய அளவில் விவசாயம் செய்ய தொடங்கினால், அவர்கள் உயர் தொழில்நுட்ப இயந்திரங்களை பயன்படுத்துவார்கள். அவை விவசாய  கூலி தொழிலாளர்களை வேலை அற்றவர்களாக மாற்றும். அரசாங்கம் அத்தியாசிய பொருட்கள் திருத்த சட்டத்தின்படி இருப்பு வைக்கும்  அளவில் கட்டுபாடுகளை  முடிவுக்கு கொண்டுவந்தால், கார்ப்பரேட் கம்பெனிகள் நுகர்வோரை கொள்ளை அடிக்க தொடங்குவார்கள்” என தி வயர் இணையதளத்திடம் நஸ்ரலி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது: “மக்களுக்கு என்ன தேவையோ அதை கார்ப்பரேட்டுகள் பயிரிட அனுமதிக்க மாட்டார்கள். நாட்டின் மக்கள் தொகைக்கு  போதிய உணவு உற்பத்தி என்பதை விட எது லாபம் தருகிற பயிரோ அதையே பயிரிட கவனம் செலுத்துவார்கள்.  விவசாய கூலி தொழிலாளர்கள் விவசாயிகளுடன் இணைந்து இந்த சட்டங்களுக்கு எதிராக போராட வேண்டும் என்பதற்கு இவையே முக்கியக் காரணங்கள் ஆகும்.”

“கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் நெற்பயிர் காலத்தில் சில பஞ்சாயத்துக்கள் விவசாய கூலி தொழிலாளர்களுக்கான கூலியை குறிப்பிட்ட வரம்பிற்குள் நிர்ணயிக்க தீர்மானம் நிறைவேற்றியதும், இதற்கு எதிராக தலித் மக்கள் போராடினால் சமூக புறக்கணிப்பு செய்யப் போவதாக மிரட்டயதுமான நினைவுகள் நினைவுக்கு வந்தாலும் கூட, உண்மையிலேயே இவை எதுவும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கு பெறுவதிலிருந்து எதுவொன்றும் எங்களை தடுக்காது” என்றார் நஸ்ரலி.

‘நம் எல்லோருக்குமான ஒரு போராட்டம்’ :

டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள நிலமற்ற கூலி தொழிலாளார்கள் மட்டுமே தலித்துக்கள் அல்ல. பஞ்சாப், சண்டிகரில் உள்ள அம்பேத்கர் மாணவர் சங்கம்(ASA) சிங்கு எல்லையில் உள்ள போராட்டக்களத்தில் இலவச நூல் நிலையத்தை அமைத்துள்ளது.

மாணவர்கள் அமைத்த இலவச நூலகம்ASA-வின் உறுப்பினரும் பஞ்சாப் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி மாணவருமான குர்தீப் சிங், “போராடுவதற்கு  நீங்கள் நிலம் வைத்திருப்பவராகவோ அல்லது நிலம் அற்றவராகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் இங்கே சமூகத்தின் உறுப்பினர்களாக பங்கேற்க வந்தோம். குறிப்பிட்ட சாதியின் உறுப்பினர்களாக மட்டுமின்றி பஞ்சாப் மாநிலத்தின் உறுப்பினர்களாகவும் வந்துள்ளோம். எங்கள் போராட்டக்கார்கள் கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய் என்ற அம்பேத்கரின் கனவை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

நாங்கள் இங்கே அமைத்துள்ள நூலகம் பல்வேறு தரப்பு சாதி, வர்க்கம் சார்ந்த மக்களை கவர்ந்து வருகிறது. தலித்துக்கள் உட்பட எல்லா பிரிவு மக்களும் இங்கே போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரியான கூட்டுத்துவ உணர்வு சமூகத்தில் சாதிய உணர்வை அழித்தொழிப்பதற்கு வழிவகுக்கும் என்று நான் உயர்வான நம்பிக்கை வைத்துள்ளேன்.” என தி வயர் இணையதளத்திடம் பேசுகையில் தெரிவித்தார்.

விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்பதற்கு குர்தீப் கூறும் அதே காரணம்தான் 28 வயதான கபடி வீரரும், சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவருமான குஷ்-ஷிடமும் வெளிப்பட்டது. அவர் சிங்கு எல்லை முகாமில் போராட்டத்தில் இருக்கிறார். குஷ், ஹோசிப்பூரில் உள்ள சந்த்ரா கிராமத்தை சேர்ந்தவர். அவரது குடும்பத்திற்கு என நிலம் ஏதும் இல்லை. ஆனால், ஒரு போராட்டக்காரர்  விவசாயியாக இருக்கலாம் அல்லது விவசாயி அல்லாதவராகவும் இருக்கலாம். அது ஒரு பிரச்சினையே அல்ல என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளார்.

“நாம் நமது எல்லோருக்காகவும் போராடவேண்டிய தேவை உள்ளது. என் நண்பர்களில் சிலர் ஜாட் சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை சார்ந்து உள்ளது. எங்களின் வாழ்வாதாரம் அவர்களை சார்ந்து உள்ளது. அவர்கள் தங்களின் நிலத்தை இழந்தால் நாம் எப்படி மக்களுக்கு உணவு அளிக்க முடியும்?” ” என்கிறார் குஷ்.

“நம்மையெல்லாம் ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்த பிஜேபி விரும்புகிறது. ஆனால், நாம் அனைவரும் ஒருவரே. இந்த போராட்டங்களில்  சாதி ஒரு பிரச்சினையாக இருக்கவே முடியாது. இங்கே, ஒவ்வொருவரும் ஒன்றாக இருக்கிறோம். நாம்  இங்கே ஒன்றாக தங்கியிருக்கிறோம். ஒரே தட்டில் உணவு உண்கிறோம்.” என்கிறார் குஷ்

இந்த வலிமையான ஒற்றுமை உணர்வுதான், “இன்னும் பல்வேறு தலித் மக்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்க ஊக்கப்படுத்தப்பட வேண்டும்” என்று பஞ்சாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் முன்ஜித் சிங் கூறுவதற்கு காரணமாக உள்ளது.

“தலித்துக்கள் இப்போராட்டங்களில் பங்கேற்கிறார்கள். ஆனால், அதிக எண்ணிக்கையில் இல்லை. ஜாட் உள்ளிட்ட தலித் அல்லாதோர் அனைவரும் இருகரம் விரித்து தலித்துகளை அரவணைத்துக் கொள்ள வேண்டும். தலித்துக்களை பயன்படுத்தி பிஜேபி வெற்றிபெற்றால் அதற்கு தலித் அல்லாதோர்தான் பொறுப்பேற்க வேண்டும்.” என்று தி வயர் இணையதளத்திடம் தெரிவித்தார் முன்ஜித் சிங்.


மொழியாக்கம் : முத்துக்குமார்
செய்தி ஆதாரம் : The Wire

 

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க