மைய அரசாங்கத்தின் 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து, இலட்சக்கணக்கான உழவர்கள் 20 நாட்களுக்கு மேலாக தலைநகர் டெல்லியில் போராடி வருகின்றனர். போராடும் உழவர் பெருமக்களையும், அவர்களுக்கு உறுதுணையாய் களமாடும் மாணவர்களையும், ஜனநாயக சக்திகளையும் தேச விரோதிகளாக ஆளும் பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து அவதூறு செய்கிறது.

ஆனால் தங்களுக்கு விரோதமான சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் எத்தனை மாதங்கள் ஆனாலும் திரும்பி செல்ல மாட்டோம் என்று உழவர்கள் சூளுரைக்கின்றனர். ஆணும் பெண்ணுமாக, கிராமங்களிலிருந்து வரும்போதே தங்களுக்கு வேண்டிய தட்டுமுட்டு பொருள்களுடன் போராட்டத்தில் அவர்கள் கலந்து கொள்கின்றனர். ஒன்றாகவே சமையல் செய்கின்றனர். இதர வேலைகளையும் பகிர்ந்து கொள்கின்றனர். தலைநகர் டெல்லியின் கடுமையான குளிருக்கிடையில் தாங்கள் பயணித்து வந்த டிராக்டர்கள் மற்றும் லாரிகளுக்கு அடியில் தூங்குகின்றனர். போராட்டம் அவர்களை தன்னியல்பாய் ஒன்றுப்படுத்துகிறது.

படிக்க :
♦ விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை !
♦ குஜராத் மாடல் : விவசாயிகளின் டெல்லி சலோவில் குஜராத் பங்கேற்காத பின்னணி ?

”இந்த சட்டங்கள் மூலம் நாங்கள் கடுமையாக பாதிக்கப்படுவோம். குறைந்தபட்ச ஆதார விலைக்கும் குறைவாய் விளைச்சலை விற்றால் எங்களுக்கு இலாபம் இருக்காது” என்கிறார் அதிகாலை குளிருக்கு இதமாக தேனீரை பருகிக்கொண்டிருக்கும் 70 வயதான உழவர் ரஞ்சித் சிங். போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு வேண்டிய உணவு, உறைவிடம், மருத்துவ வசதிகளுக்காக பல்வேறு தன்னார்வலர்கள் உதவுகின்றனர்.

”எங்களுக்கு உவப்பில்லாத இந்த சட்டங்களை நீங்கள் நிறைவேற்றும் போது, நாங்கள் உங்களது அரசு அலுவலகங்களை இயங்க விட மாட்டோம். இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல தடையரண்களைத் தாண்டி டெல்லிக்கு கால்நடையாகவே வந்திருக்கிறேன்” என்கிறார் அரியானாவை சேர்ந்த 45 வயதான ஷர்மிலா சோடா.

“நான் ஒரு உழவர் குடும்பத்தை சார்ந்தவன். எனவே இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறேன்” என்கிறார் 23 வயதான பஞ்சாப் கல்லூரி மாணவர் ஹஸ்ஸன். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த உழவர்கள் தான் அதிக அளவில் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இந்தியாவில் உழவர்கள் அதிக வருமானம் ஈட்டும் முதன்மையான மாநிலம் பஞ்சாப் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாலை முதல் அந்திசாயும் வரை ஒலிபெருக்கிகளிலிருந்து முழக்கங்களும் பாடல்களும் ஒலிக்கின்றன. தொலைக்காட்சி கேமராக்கள் மற்றும் ஊடகங்கள் போராடும் விவசாயிகளைப் பின்தொடர்கின்றனர். “எங்களை பயங்கரவாதிகள் என்று சித்தரிப்பதற்கு ஒரு பக்க சார்பான ஊடகங்களை அரசாங்கம் பயன்படுத்துகிறது. இதன் மூலம் எங்களது சமூக இயக்கத்தை வீழ்த்த முயற்சிக்கிறது” என்று 23 வயதான முனைவர் மாணவரும், மாணவர் குழு ஒன்றின் உறுப்பினருமான ஹரிந்தர் ஹேப்பி கூறுகிறார்.

”எங்களது மாணவர்கள் பஞ்சாப்பின் பல்வேறு கிராமங்களுக்கு சென்று இந்த சட்டங்களையும், அதன் கேடுகளையும் உழவர்களுக்கு விளக்குகின்றனர்” என்று பஞ்சாப் மாணவர் சங்கத்தை சேர்ந்த 23 வயதான சுக்ரிபிர் கவுர் கூறுகிறார். எங்களது பெற்றோர்கள் வயல்வெளிகளில் உழைக்கின்றனர். அவர்கள் தாம் இந்த நாட்டின் முதுகெலும்பு. அரசாங்கமும், பெருநிறுவனங்களும் எங்களது நிலத்தை பறித்துக் கொண்டால் அவர்கள் என்ன செய்வார்கள்? என்று வினவுகிறார் அவர்.

“நாங்கள் குடும்பமாக இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தோம்” என்கிறார் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 70 வயதான விவசாயி ரத்யார்ட் சிங்.
திங்களன்று (14-டிசம்பர்), தங்களது கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்க நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டத்திற்கு உழவர் சங்கங்கள் அழைப்பு விடுத்தன. இதை ஏற்று இந்தியாவுக்கு வெளியே, கனடா, இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்திலும் உழவர்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
அரியானா-டெல்லி எல்லையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக புதுடெல்லிக்கு உழவர்கள் அணிவகுத்துச் செல்வதைத் தடுக்க பாதுகாப்புப் படையினர் தடுப்பரணுடன் நிற்கின்றனர்.
புது டில்லிக்குள் உழவர்கள் நுழைவதைத் தடுக்க ஆயிரக்கணக்கான வாகனங்கள் டெல்லி போலீசாரால் நிறுத்தப்பட்டுள்ளதைக் காட்டும் சிங்கு (Singhu) பகுதி எல்லையின் வான்வழி காட்சி.
அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் மேற்கோள்களை சுவர்களில் முழக்கங்களாக வரைந்துள்ளனர். “நாம் கற்பது கற்றுக்கொண்டதை பகிர்ந்து கொள்வதற்கு தான். இது தான் எங்கள் போராட்டத்தின் வழி” என்று பத்ராவைச் சேர்ந்த 25 வயது மாணவர் சஹில் பட்குஜார்ல் கூறினார்.
“நூல் வெளியீட்டு நிறுவனங்கள் இந்த நூல்களை குறைந்த விலைக்கு எங்களுக்கு வழங்குகின்றன. நாடு முழுவதும் இருந்து வந்த மாணவர் சங்கங்கள் சில நூல்களுக்கு நிதியளிக்கின்றன” என்கிறார் 25 வயதான மாணவி மனிஷா.
சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் புத்தகக் கடைகளை தொடங்குவதற்கான முயற்சியை கல்சா எய்ட் (Khalsa Aid) தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் மாணவர்கள் குழுவினர் தொடங்கியிருக்கிறார்கள்.
“நான் ஹோட்டல் மேலாண்மை படித்துள்ளேன் மேலும், ஆயுர்வேத மருந்துகளைப் பற்றி எனக்கு தெரியும். ஆயுர்வேத மருந்து கடையைத் திறப்பதன் மூலம் இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று நான் எனது பெற்றோருக்கு பரிந்துரைத்தேன்” என்று அரியானாவின் பகதூர்காத்தைச் சேர்ந்த 21 வயதான மன்வீன் கவுர் கூறுகிறார்.
“சமூக ஊடகங்களில் மட்டுமல்ல, இந்தியாவின் தெருக்களிலும் இந்த போராட்டங்களைக் குறிக்க விரும்புகிறோம்” என்று 22 வயதான பிரேம்ஜீத் சிங் கூறுகிறார்.
பஞ்சாபின் பாட்டியாலாவில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் பிற போராட்டக்காரார்களுக்கும் உணவளிப்பதன் மூலம் போராட்டத்தில் இணைந்து கொள்கின்றனர். “நாங்கள் இந்த வேலையை ஷிப்ட் அடிப்படையில் செய்கிறோம். இரண்டு நாட்களுக்குப் பிறகு, நாங்கள் எங்கள் கிராமத்திற்குச் செல்வோம். அதற்குப் பதிலாக மற்ற பெண்கள் எங்களது வேலையை தொடருவார்கள்” என்கிறார் பர்மிந்தர் ஜீத் கவுர்.
சிங்கு எல்லையில் கிட்டத்தட்ட 30,000 உழவர்களுக்கான சமூக சமையலறைக்கு 50 வயது சீக்கிய தன்னார்வலர் மான் சிங் தலைமை தாங்குகிறார். “இது 24 மணி நேரம் திறந்திருக்கும். நாங்கள் அனைவருக்கும் உணவை வழங்குகிறோம்” என்கிறார் அவர்.


தமிழாக்கம் : ஆறுமுகம்
நன்றி : Aljazeera

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க