தினமலர், தினமணி போன்ற பார்ப்பன நாளிதழ்களின் செய்திகளில் பகிரங்கமாகவே “நூல்” இழையோடுவது கண்ணுக்குத் தெரிந்துவிடும். ஆனால் “இந்து தமிழ் திசை” எனும் “நடுநிலை” நாளிதழின் செய்திகளில் சற்று உற்று நோக்கினால்தான் அதில் இழையோடும் ‘நூலை’ அடையாளம் காண முடியும். ஒவ்வொரு நாளும் இந்து தமிழ் திசையை ஆராய்ந்தால் அன்றாடம் ஒரு அங்கவஸ்திரம் நெய்யும் அளவிற்கு ‘நூலை’க் கண்டெடுக்க முடியும். அந்த அளவிற்கு பாஜக – சங்க பரிவாரக் கும்பலுக்குச் சார்பான ‘நடுநிலை’ செய்திகளை வெளியிட்டுவருகிறது இந்து தமிழ்திசை.

சாதாரணமாக தினமணி, தினமலரில் செய்திகளின் தலைப்பிலும், கொடுக்கப்படும் தகவல்களிலுமே பார்ப்பன சார்பு நிலை பகிரங்கமாகத் தெரியும். ஆனால் இந்து தமிழ் திசையைப் பொருத்தவரையில், பார்ப்பன சார்பு நிலையை நைச்சியமாக, பூசி மொழுகினாற்போல, “நடுநிலையாக” வெளிப்படுத்துவதில் தனிச்சிறப்பான வல்லமை கொண்ட நாளிதழாகும்.

படிக்க :
♦ முருகன் – பாஜக – தமிழ் இந்து | ஒரு நாடகக் காதல் கதை !
♦ பதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் !

எதை வெளியிட வேண்டும்; அதை எந்தப் பக்கத்தில், எந்த இடத்தில் வெளியிடவேண்டும்; எந்த தலைப்பில் வெளியிட வேண்டும் என்பதிலேயே தனது வாசகர்கள் அந்தச் செய்தியை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை தீர்மானித்து வெளியிடும் “சாணக்கியத்தனம்” கொண்ட பத்திரிகை அது.

டெல்லியில் தற்போது நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி பெரும்பாலான தொலைக்காட்சி ஊடகங்கள், பொய்களைச் சொல்வதையும், இருட்டடிப்பு செய்வதையும் மேற்கொண்டு வருகின்றன. செய்தி நாளிதழ்களும் தனது பங்குக்கு விவசாயிகளின் போராட்டத்தைக் குறித்த தவறான பார்வை ஏற்படும்படியான செய்திகளையும் அரசியல் அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றன.

கடந்த வாரத்தில் விவசாயிகள் மீது டெல்லி போலீசு தாக்குதல் தொடுத்ததையும், விவசாயிகள் அதைக்கண்டு அஞ்சாமல் எதிர்கொண்டு நிற்பதையும் ஊடகங்கள் மறைத்தாலும், சமூக வலைத்தளங்களில் அதுகுறித்து பல்வேறு படங்களும், காணொலிகளும் வெளியிடப்பட்டன.

வீரஞ்செறிந்த விவசாயிகளின் போராட்டத்தை எவ்வளவு மட்டம் தட்ட முடியுமோ அந்த அளவிற்கு மட்டம்தட்டி தான் செய்தி வெளியிட்டு வந்துள்ளது இந்து தமிழ் திசை நாளிதழ். ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, நேற்றைய (30-11-2020) நாளிதழில் வந்த செய்திகளை மட்டும் எடுத்துப் பார்க்கலாம்.

விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த பகுதியில், பொதுமக்கள் சிலர் தங்களது உடைமைகளைத் தூக்கிச் செல்லும் காட்சியை புகைப்படம் எடுத்துப் போட்டு, “பொதுமக்கள் தங்கள் உடைமைகளை சுமந்தபடி நேற்று சிங்கு எல்லைப் பகுதியை சிரமத்துடன் நடந்தபடியே கடந்தனர் ” என தலைப்பிட்டு வெளியிட்டிருக்கிறது.

விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய அனுமதிக்குமாறு போராடிக் கொண்டிருக்கையில், சாலையை தோண்டிப் போட்டு பாதையை முடக்கிய டெல்லி போலீசை அம்பலப்படுத்தாமல், விவசாயிகளின் பிரச்சினை குறித்தும் இந்தப் போராட்டம் குறித்தும் மேலோட்டமாகத் தெரிந்த சாதாரண மக்களின் மத்தியில், விவசாயிகளின் போராட்டத்தால்தான் சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பது போல அந்த புகைப்படத்தை சித்தரித்துள்ளது.

மேலும் இந்த வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு அறிவில்லாததால் தான், எதிர்க்கட்சிகளின் தவறான வழிகாட்டுதலின் அடிப்படையில் விவசாயிகள் போராடுகின்றனர் என்று திட்டமிட்டு தொலைக்காட்சி ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டு விவாதங்களும் நடத்தப்படுகின்றன.

நேற்றைய “இந்து தமிழ் திசை”யும் ஒரு செய்திப் பதிவில் “வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள்” என்று மோடி பேசியதை விளாவரியாக எழுதியுள்ளது. ஒரு நாட்டின் பிரதமர் பேசியதை வெளியிட்டால் தப்பா? என்று யாரேனும் கேட்கலாம். சரிதான், பிரதமர் பிரபலமானவர்; அவர் பேசியதை வெளியிடுவது அவசியமானது என்றே எடுத்துக் கொள்வோம்.

ஆனால் எத்தனை பேருக்கு ரமேஷ் சந்தியைத் தெரியும் ? ரமேஷ் சந்தி என்பவர் “நிதி ஆயோக்”-ன் உறுப்பினர். பெரிய வேளாண் விஞ்ஞானியைப் போல, “மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை விவசாயிகள் புரிந்து கொள்ளாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்” என்று இவர் கருத்துக் கூறியதை அப்படியே தலைப்பாகப் போட்டு செய்தி வெளியிட்டிருக்கிறது இந்து தமிழ் திசை.

விவசாயிகளின் வீரஞ்செறிந்த போராட்டங்களை இழிவுபடுத்தும் விதமாக, “விவசாயிகள் என்ற போர்வையில் அரசியல் ஆதாயத்துக்காக சில கட்சிகள் போராட்டம்” என்று வானதி சீனிவாசன் பேசியதையும் ஒரு செய்தியாக வெளியிட்டிருக்கிறது. காயத்ரி ரகுராம், மதுவந்தி என ஒவ்வொரு நாளும் ஒருவரின் அரைவேக்காட்டு அறிக்கைகளை வெளியிட நேர்ந்து கொண்டிருக்கிறது போலும், இந்து தமிழ் திசை.

பஞ்சாபில் உள்ள அமிர்தசரசில் சீக்கியர்களின் பொற்கோவில் உள்ளது பற்றி நமக்குத் தெரியும். அங்கு ராம் தீர்த்தக் கோவில் இருப்பது பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? யாருக்கும் தெரியாத அந்த ராம் தீர்த்தக் கோவிலில் நடந்த விழாவைப் பற்றி ஒரு செய்தியை வலிந்து வெளியிட்டிருக்கிறது தமிழ் திசை.

அக்கோவிலின் பிரகாரத்தில் சில சுற்றுலாப் பயணிகள் நின்று செல்பி எடுக்கும் படத்தைப் போட்டு, இந்தக் கோவில் திருவிழா விமரிசையாக நடைபெற்றதாக செய்தி வெளியிட்டிருக்கிறது. யாருக்கும் பெரிதாக அறிமுகம் இல்லாத கோவிலில் அதுவும் குறிப்பாக பஞ்சாபில் உள்ள ஒரு கோவிலில் கூட்டமே இல்லாமல் ஆங்காங்கே ஒரு சிலர் நின்று செல்பி எடுக்கும் புகைப்படத்தைப் போட்டு, விழா விமரிசையாக நடந்ததாகச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன ?

பஞ்சாப் விவசாயிகள் குடும்பத்துடன் டெல்லிக்கு சென்று போராடுகின்றனர். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை டெல்லிக்கு இலட்சக்கணக்கில் திரண்டிருக்கும் செய்திகள் குறித்து எழுதுவதற்கும் சொல்வதற்கும் ஏராளமான விசயங்கள் உள்ளன. தங்களது வாழ்வாதாரமே பறிபோகிறது என்ற நிலையில் போர்க்கோளம் பூண்டுள்ளனர் பஞ்சாப் விவசாயிகள். அந்தச் செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்துவிட்டு, பஞ்சாப் மக்களின் உணர்வோடு கலந்திருக்கும் இந்தப் போராட்டம், வெறும் விவசாய சங்கங்களின் போராட்டம் என்பதாகவும், மக்கள் இந்தப் போராட்டம் குறித்த பெரிதாக அக்கறையின்றி இருப்பது போலவும் ஒரு தோற்றத்தை வாசகர் மத்தியில் உண்டாக்க மறைமுகமாக முயற்சிக்கிறது.

மொத்தத்தில் விவசாயிகளின் போராட்டம், விவசாயிகளின் அறிவின்மை காரணமாகவும், பிற எதிர்க்கட்சிகளின் தூண்டுதல் காரணமாகவும், சாதாரண மக்களுக்கு துன்பத்தைத் தரும் வகையிலும்  நடைபெறுகிறது என்பதையே நைச்சியமாக வாசகர்கள் மனதில் ஏற்றுகிறது இந்து தமிழ் திசை.

000

விவசாயிகளின் டெல்லி போராட்டச் செய்திகள் என்பது ஒரு உதாரணம்தான். இந்து தமிழ் திசை நாளிதழின் ஒவ்வொரு செய்தியை எடுத்துப் பார்த்தாலும், அதில் அப்பட்டமான பார்ப்பன, கார்ப்பரேட் சார்பு நிலையை அடையாளங்காண முடியும். அதே போல, தமிழகத்திற்கான ஆர்.எஸ்.எஸ். – பாஜக-வின் நிகழ்ச்சிநிரலை அச்சரம் பிசகாமல் நிறைவேற்ற அரும்பாடு பட்டுவருகிறது “தமிழ் திசை”.

திராவிட கட்சிகளின் மீதான வெறுப்புப் பிரச்சாரம், மதரீதியான முத்திரைகள் ஆகியவற்றின் மீதுதான் இந்தத் தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டிருக்கிறது சங்க பரிவாரக் கும்பல். சங்க பரிவாரத்தின் இந்த நிகழ்ச்சிநிரலையும் நேற்றைய நாளிதழில் வெகு சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறது தமிழ் திசை.

“தனி அலுவலகம், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் நியமனம் ஐ.டி. நிறுவனங்கள் போல செயல்படும் அரசியல் கட்சிகளின் தகவல் தொழில்நுட்ப அணிகள்” என்ற தலைப்பில் மற்றொரு செய்தியை வெளியிட்டிருந்தது. இதில் திமுக-வையும், அதிமுகவையும் மட்டும் குறிப்பிட்டிருக்கும் தமிழ் இந்து, பாஜக பற்றி வாய்திறக்கவில்லை. இந்தியாவில் ஐ.டி.-விங்கிற்கும், இணைய ட்ரோல் படைக்கும் முன்னோடிக் கட்சி பாஜக தான். அதனை வைத்துத்தான் மோடி என்ற ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பம் நடுத்தரவர்க்கத்தினரிடையே பிரபலப்படுத்தப்பட்டது.

ஆனால், இதைப் பற்றியெல்லாம் பேச மறந்துள்ள இந்து தமிழ்திசை, அதிமுகவும் திமுகவும்தான் மக்களை “மயக்க” ஐ.டி.விங்கிற்கு பெரும் செலவு செய்து வருவதாக ஒரு சித்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற கருத்தாக்கத்தை உருவாக்க பாஜக முயற்சி செய்து கொண்டிருக்கையில், இந்து தமிழ்திசை ஒருபடி மேலே போய் திமுக மீது ஏற்கெனவே இந்து விரோத கட்சி என்ற முத்திரை இருப்பதாக ஒரு சித்திரத்தை நேற்று வெளியான செய்தி ஒன்றில் உருவாக்கியிருக்கிறது.

“தீபாவளிக்கு வாழ்த்து… கோவிலுக்காக போராட்டம்.. ‘இந்துவிரோதக் கட்சி’ என்ற முத்திரையை அகற்ற களமிறங்கும் திமுக” என்ற ஒரு கட்டுரையை செய்தி போல வெளியிட்டுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், தமிழகத்தில் பாஜகவிற்கு வேல் யாத்திரை மூலம் ஆதரவு பெருகிவருவதாக எழுதியிருப்பதுதான். பாஜகவிற்கு தமிழகத்தில் கிடைத்து வரும் செல்வாக்கைக் கண்டு அஞ்சி விலுக்குச் செல்லாத திமுகவினரும், கோவிலுக்குச் சென்று வருவதாகவும் எழுதியிருக்கிறது. திமுகவிற்கும் தி.க-விற்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு தமிழ் திசையில் கட்டுரையாளர்கள் இருக்கமாட்டார்கள் என்று எடுத்துக் கொண்டு பார்க்கையில் இது முழுக்க முழுக்க பாஜகவின் ஊதுகுழல் வேலையைத் தவிர வேறு எதுவும் அல்ல என்பதை புரிந்து கொள்ளமுடியும்.

தேர்தல் நெருங்க நெருங்க, இந்து தமிழ்திசை எனும் ‘நடுநிலை’ நாளிதழின் யோக்கியதை இன்னும் அம்பலமேறும் என எதிர்பார்த்துக் காத்திருக்கலாம். கத்திரிக்காய் முற்றும்போது சந்தைக்கு பகிரங்கமாக வந்துதானே தீரவேண்டும் !

மகேஷ்
செய்தி ஆதாரம் : இந்து தமிழ் திசை – 30-11-2020 நாளிதழ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க