ருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து விமர்சித்து வெளியிட்ட காணொலியைப் பயன்படுத்தி அந்த சேனலையே இந்துத்துவக் கும்பல் முடக்கியது நினைவிருக்கலாம். குறிப்பாக இது போலீசின் உதவியுடன் கன கச்சிதமாக நிறைவேற்றப்பட்டது.

தமிழர் பண்பாட்டின் மீது தாங்கள் தனிக்காதல் கொண்டவர்கள் என்பதாகக் காட்டிக் கொள்ள இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டது இந்துத்துவக் கும்பல். ’தமிழ்க்’ கடவுள் முருகனை ‘திராவிட’ நாத்திகவாதிகள் அவமதித்துவிட்டதாகக் கூறி ஒரு கொந்தளிப்பைக் காட்ட சங்க பரிவாரக் கூட்டம் எத்தனித்தது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பாஜக-வின் தமிழகத் தலைவர் முருகன், திடீரென ஒரு அறைகூவல் விடுத்தார். அதாவது ஆகஸ்ட் 9-ம் தேதி ஞாயிறு அன்று மாலை 6.01 மணிக்கு அனைவரும் அவரவர்களது வீட்டில் இருந்து கொண்டே வேல் அல்லது முருகன் (கடவுள்) படத்தை வைத்துப் பூஜை செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

கொரோனா பெருந்தொற்றில் மக்களின் இழந்த வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க ஒரு நடவடிக்கையோ, போராட்டமோ நடத்தாத பாஜக மற்றும் சங்க பரிவாரக் கும்பலின் இந்த ‘அறைகூவல்’ மக்களுக்கு ஆத்திரத்தை மட்டுமே ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால் தங்களது ‘கந்த சஷ்டி இயக்கம்’ வெற்றி பெற்றதாக கூறிக் கொண்டது பாஜக. அதற்குச் சான்றாக பாஜக-வின் தலைவர்களும், அதிமுக தலைவர்களும் தாங்கள் வேலோடும் முருகன் படத்தோடும் நிற்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

படிக்க :
♦ புராதன ஆரியரும் திராவிடரும், இந்தியப் பண்பாடும் !
♦ பாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் !

பண்டைய தமிழகத்தின் குறிஞ்சி நிலத் தலைவனான முருகனை வழிபடும் போக்கை சுவீகரித்துக் கொண்ட பார்ப்பனீயம், முருகனுக்கு ஒரு புதிய கதையைக் கட்டி ஸ்கந்தன் என்றும் சுப்ரமணியன் என்றும் பெயரிட்டு முருக வழிபாட்டை பார்ப்பனமயமாக்கிக் கொண்டது. முருகனின் துணைவியாக அறியப்பட்ட வள்ளியை ஓரம்கட்ட தெய்வானையைக் கொண்டுவந்து இறக்கிப் புராணப் புழுகுகளைக் கட்டிவிட்டது தனிக் கதை !

மக்களின் மத நம்பிக்கையை பார்ப்பனியமயமாக்க முருகனை சுவீகரித்துக் கொண்டாலும் பார்ப்பனர்கள் வீட்டில், விஷ்ணுவின் அவதாரங்களுக்கும், சிவனுக்கும், பிள்ளையாருக்கும் தான் முதல் மரியாதையே ஒழிய முருகனுக்கு என்றும் இருந்ததில்லை. பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த பாஜக, அதிமுக தலைவர்கள் நேற்று (09-08-2020) வெளியிட்டுள்ள முருகன் வழிபாட்டுப் புகைப்படங்களே அதற்குச் சான்று!

மேலே உள்ள புகைப்படங்களில் பாஜகவின்  எஸ்.வி. சேகர், எச். ராஜா ஆகியோரின் பூஜையறையைப் பாருங்கள். கடவுளர்களுக்கே வர்ணாசிரம தர்மப்படிதான் உரிய இடம் வழங்கப்பட்டிருக்கும். குறிப்பாக எச்.ராஜாவின் பூஜை அறையின் ‘மேல்’ தட்டில், “மகா பெரியவா”, திருப்பதி வெங்கடாசலபதி, லெட்சுமி, பிள்ளையார், கிருஷ்ணர், நடராஜர் உள்ளிட்ட கடவுளர் படங்களும், ‘கீழ்’ தட்டில் மாரியம்மன், பராசக்தி உள்ளிட்ட கடவுளர்களும், தரையில், கட்சியின் செயல்திட்டத்துக்காக நிறுத்திவைக்கப்பட்ட வேலும் இடம் பெற்றிருக்கிறது. கடவுளர்களேயானாலும் பார்ப்பனியத்தின் படிநிலைக்கு உட்பட்டவர்கள்தான்.

‘சவுண்டு ஸ்பெசலிஸ்ட்’ திருப்பதி நாராயணன், அதிமுகவின் மைத்ரேயன் ‘ஐயங்கார்’ உள்ளிட்ட அனைவரின் வீட்டு பூஜையறையிலும் முருகனின் படம் எதுவும் இல்லை என்பதையும் அவசரத்துக்காக காலண்டரில் இருந்து கிழித்துவந்த படமும், அவசரமாக ஆர்டர் செய்யப்பட்ட வேலும் தான் அதற்கு சான்று.

அவசர அவசரமாக தயாரிக்கப்பட்ட செட்டப்புகளில், அவசர அவசரமாக வாங்கப்பட்ட போட்டோக்களைக் கொண்டே பூஜைகள் செய்யப்படுகின்றன. எச்.ராஜா, எஸ்.வி.சேகர் வீட்டுப் பூஜையறையில் மகா பெரியவாளின் அருகில் ஒரு சிலையாகவோ, படமாகவோ இடம்பெறக் கூட முருகனுக்கு பாக்கியதையில்லை. இதுதான் முருகப் பெருமான் மீதான பாஜகவினரின் ‘திடீர்க் காதலின்’ இலட்சணம். நியாயப்படி அவர்களின் ‘பாஷையில்’ சொல்வதானால் இதை நாடகக் காதல் என்றுதானே சொல்லமுடியும்.  ஆனால் ஒன்று ! பூஜை அறையில் முருகனைச் சேர்த்துக் கொள்ள வேண்டிய  ‘அவல நிலைக்கு’  பாஜக பார்ப்பனர்களைத் தள்ளிய பெருமை தமிழ்நாட்டையே சேரும் !

தமிழகத்தில் மக்களை மதரீதியாக தங்கள் பக்கம் அணி சேர்க்க மீண்டும் மீண்டும் முயற்சித்து வரும் பாஜக-விற்கு தமிழக ஊடகங்களும் ஆதரவாக இருந்து வருகின்றன. இன்றைய ‘தமிழ் இந்து’ நாளிதழில், இது குறித்து அதற்கே உரிய இந்துத்துவ நரித்தனத்தோடு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

”கந்த சஷ்டி கவசத்தை பெருமைப் படுத்த வீடுதோறும் கந்தவேல் பூஜை” என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதில் யூடியூப் சேனல் ஒன்று தமிழ் கடவுள் முருகனையும், கந்த சஷ்டிக் கவசத்தையும் அவதூறாகப் பேசியதால் தமிழகத்தில் உள்ள முருக பக்தர்கள், காவடிக் குழுக்கள், பாதயாத்திரைக் குழுக்கள் ஆகியோர் சார்பில் தான் 9-ம் தேதி மாலை 6 மணிக்கு கந்த சஷ்டிக் கவசம்  படிக்குமாறு அறைகூவல் விடுக்கப்பட்டதாம். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பலரும் இந்த பூஜையை நடத்தினராம். இந்த செய்தியோடு முருகன் படத்தைக் கும்பிடும் ஒரு சிறுவனின் படத்தையும் வெளியிட்டு, வாசகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது சாதாரண மக்கள் இதைத் தங்களுக்கான பிரச்சினையாக கையிலெடுத்துக் கொண்டு தாங்களே முன் வந்து அறைகூவல் விடுத்து கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு எதிராகக் குரல் கொடுத்திருப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

மற்றொரு செய்தியில், பாஜக அமைப்பினருடன், ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் இந்த பூஜையை நடத்தியது குறித்து விலாவாரியாக ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. ‘தமிழ் இந்து’ நாளிதழைப் பொறுத்தவரையில் ஆர்.எஸ்.எஸ்.-ன் அதிகாரப் பூர்வ நாளிதழாக அறிவிக்கப்படாதது ஒன்றுதான் பாக்கி. அந்த அளவிற்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்க பரிவாரக் கும்பலின் செயல்திட்டத்தின் அங்கமாக மாறியிருக்கிறது.

கொரோனாவை விடக் கொடூரமான இந்தக் கிருமிகளை அடையாளம் கண்டு விரட்டியடிப்பதுதான் காலத்தின் அவசியத் தேவையாக இருக்கிறது.

நந்தன்

2 மறுமொழிகள்

  1. கருத்து முதல் வாத கற்பனைகளின்படி முருகன் தமிழ் கடவுள்! தமிழ் நாட்டில் ஆர் எஸ் எஸ் பாஜக காலூன முடியாத நிலையில்,கடவுள் பக்தியில் மூழ்கி இருக்கும் தமிழர் மாயையில் இடம் பிடிக்க நடத்தப் படும் ஜாப் ஆர்டர் பிஸ்னஸ், பற்றாக்குறைக்கு போனஸாக கொரானோ சேவகர் நிதி விருது என தலைவிரித்தாடும் அவலங்கள்…!!!???

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க