மோடி அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் “தவிர்க்கவியலாத” தீங்காம்,  முட்டுக்கொடுப்பதில் முன்னிலை வகிக்கும் இந்துதமிழ் திசை !
‘நடுநிலை’ பத்திரிக்கை என்று வாய் கூசாமல் தம்பட்டமடித்து திரியும் இந்துதமிழ் திசை, தினமலர், தினமணி வரிசையில் தானும் பா.ஜ.க சார்பு நாளிதழ்தான் என்று அடிக்கடி அம்பலப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த வாரம் ஒன்றிய அரசு அறிவித்த தேசிய பணமாக்கல் திட்டத்தைப் பற்றி, “மத்திய அரசின் பொருளாதாரச் சீரமைப்பு : தவிர்க்கவியலாத தீங்கு” என்று ஆகஸ்ட் 31 அன்று தலையங்கம் ஒன்றைத் தீட்டியிருக்கிறது.
மக்களின் பொதுச் சொத்துக்களான இரயில்வே, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, தொலைத்தொடர்பு, விமான நிலையங்கள் மற்றும் விளையாட்டுத் திடல்கள் போன்றவற்றை கார்ப்பரேட்டுகளுக்குக் குத்தகைக்கு விடும் மோடி அரசின் இந்நடவடிக்கை பலரையும் அதிர்ச்சிக்கும் கோபத்திற்கும் ஆளாக்கியுள்ள நிலையில் இதை நேரடியாக நியாயப்படுத்தி எழுத முடியாத இந்துதமிழ் திசை “தவிர்க்கவியலாத தீங்கு” என தனது தலையங்கத்தில் மிக நூதனமாக முட்டுக் கொடுக்க முயற்சித்திருக்கிறது.
படிக்க :
“பணமாக்கல் திட்டம்” : கார்ப்பரேட்டுகளுக்கு இந்தியாவை தாரைவார்க்கும் திட்டம் !
நாட்டை விற்பனை செய்யும் தேசிய பணமாக்கல் திட்டம் || கண்டன ஆர்ப்பாட்டம்
கட்டுரையில், “மத்திய அரசின் பொருளாதாரச் சீரமைப்புத் திட்டத்துக்கு எதிர்க் கட்சிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது என்ற தொடர் குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்க்கும் சான்றாகவே இத்திட்டத்தை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்” என்று எதிர்க்கட்சிகளின் வாதங்களில் உள்ள நியாயத்தையும் எடுத்துக் காட்டுவதுபோல் “நடுநிலையோடு” தொடங்குகிறது. ஆனால், அதற்கு அடுத்த பத்தியிலேயே தனது நரித்தனத்தைக் காட்ட ஆரம்பித்துவிடுகிறது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி அரசின் இத்திட்டம் குறித்து “70 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட சொத்துக்களை ஏழே ஆண்டுகளில் அழிக்கிறது பா.ஜ.க” “மூன்று நான்கு தொழிலதிபர்களுக்கு மட்டுமே பரிசாக அளிக்கப்படுகிறது இந்தக் குத்தகை” என்று விமர்சிப்பதை அப்படியே எடுத்துக் காட்டும் தலையங்கம்; தொடர்ந்து, “காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் பொதுத்துறை முதலீடுகள் விற்கப்பட்டுள்ளன. இப்போதும் கூட, தனியார்மயத்துக்குத் தாங்கள் எதிரியல்ல என்றே ராகுல் காந்தி விளக்கம் அளித்திருக்கிறார்” என்று ராகுல் காந்தி பேசியதை சுட்டிக்காட்டியும் “காங்கிரஸ், பா.ஜ.க இரண்டுமே தனியார்மயத்துக்கு ஆதரவாளர்கள்தான் என்பதையும் சேர்த்தே இந்தப் பிரச்சனையை அணுக வேண்டியிருக்கிறது” என்று எழுதியிருப்பதன் மூலமும் இத்திட்டத்திற்கெதிரான வாதங்கள் எல்லாவற்றையும் நீர்த்துப்போகச் செய்யக் கூடிய வகையில் மிகவும் தந்திரமாக தலையங்கத்தை அமைத்திருக்கிறது.
மோடி கொண்டு வந்த பணமாக்கல் என்ற தேசத்துரோக திட்டத்திற்கு காங்கிரஸ் மட்டுமா எதிர்ப்பு தெரிவித்தது. ஒட்டுமொத்த இந்திய மக்களையுமே அது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அனைவரது கண்டனங்களையும் பெற்றுள்ளது. அனைத்து தொழிற்சங்கங்களும் இத்திட்டத்திற்கு எதிராக தங்களது போராட்டங்களைத் தொடங்கியிருக்கிறார்கள். மொத்தத்தில் “பா.ஜ.க vs இந்திய மக்கள்” என்ற பிரச்சனையை வெறுமனே “மோடி vs காங்கிரஸ்” என்று திருப்பிவிட்டு இறுதியாக காங்கிரசைக் கொண்டே அவர்களது வாதங்களை மொக்கையாக்கும் வகையில் திட்டமிட்டு எழுதியுள்ளது இந்துதமிழ் திசை.
இன்று நேற்றல்ல, இந்த உத்திக்கு ஒரு வரலாறே உண்டு. நீட், ஜி.எஸ்.டி, புதிய கல்விக் கொள்கை என்று பா.ஜ.க ஒவ்வொரு நாசகாரத் திட்டங்களைக் கொண்டுவரும் போதும் இத்திட்டங்களுக்கு எதிராக வெளிப்படும் மக்களின் எதிர்ப்புகளை வெறும் பா.ஜ.க-வைப் பிடிக்காத எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பாகச் சித்தரிப்பதும்  “இதெல்லாம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே கொண்டுவரப்பட்ட திட்டங்கள்தான். பா.ஜ.க அதை நடைமுறைப்படுத்துகிறது. ஆனால், காங்கிரஸ் தேர்தல் அரசியலுக்காக சந்தர்பவாதமாக அதை எதிர்க்கிறது” என்று பேசுவதும் சங்க பரிவாரங்கள் நீண்டகாலமாக மேற்கொண்டுவரும் உத்திகள். தற்போது பணமாக்கலுக்கு முட்டுக்கொடுக்கும் இந்துதமிழ் திசை தனது தலையங்கத்திற்கு பயன்படுத்தும் உத்தியும் அதேதான்.
இந்த அரசுக் கட்டமைப்பிலுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் தனியார்மயத்துக்கு (கார்ப்பரேட்மயத்துக்கு) எதிரானவைகள் அல்ல, மாறாக அதனை அமல்படுத்துவதில் அவர்களிடம் அணுகுமுறையில்தான் வேறுபாடு என்பதை நாம் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறோம். கொள்கை அளவில் இக்கட்சிகளெல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். தன்னை எதிர்ப்பதற்கு எதிர்க் கட்சிகளிடம் எந்த மாற்றுக் கொள்கையும் இல்லாத (இருக்கமுடியாத) இந்த நிலைதான் உண்மையில் பா.ஜ.க-வை எதிரியே இல்லாத கட்சியாக நிலைநிறுத்தியிருக்கிறது.
ஆனால், நீண்ட காலம் இப்படியே பா.ஜ.க-வால் சாமாளிக்க முடியாது. அதன் மூர்க்கமான மறுகாலனியாக்கத் திட்டங்களின் அமலாக்கம் நாடெங்கும் உழைக்கும் மக்களின் கடுமையான எதிர்ப்புக்கு ஆளாகி வருகிறது. டெல்லி சலோ விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டம் அதற்கு ஒரு முன்மாதிரி. அத்தோடு இக்கார்ப்பரேட்மயமாக்கல் திட்டங்களுக்கு எதிராகப் படைக்கலத் தொழிலாளர்கள், வங்கி-காப்பீடு நிறுவன ஊழியர்கள், மின்சாரத்துறை ஊழியர்கள் உள்ளிட்டு பல்வேறு பொதுத்துறை தொழிலாளார்களின் போராட்டங்களும் வெடித்துக் கிளம்பிக் கொண்டிருக்கின்றன.
இதை இந்துதமிழ் திசையாலும் கூட மறுப்பதற்கு முடியவில்லை. ஆகையினால் வேறுவழியில்லாத நிலையில்தான் பா.ஜ.க இதுபோன்ற திட்டங்களைக் கொண்டு வருவதாகவும் மற்றபடி ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சார்பு அமைப்புகளுக்கே இதில் உடன்பாடு இல்லை என்றும் புளுகித் தள்ளுகிறது.
அதற்குச் சான்றாக “ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடைய பாரதீய மஸ்தூர் சங்கத்திடமிருந்தும் கூட இம்முடிவுக்கு எதிர்ப்பு வந்துள்ளது” என்று எழுதுகிறது. ஆர்.எஸ்.எஸ்-ன் தொழிற்சங்கமான பி.எம்.எஸ் கூட போலியாகவாவது தனது எதிர்ப்பைக் காட்டித்தான் ஆகவேண்டும் என்ற அளவிற்கு தொழிலாளர் பெருந்திரளது எதிர்ப்பு இருக்கிறது என்பதுதான் உண்மை நிலை.
மேலும் “மத்திய அரசின் இந்த முடிவு இன்றைய பொருளாதார நெருக்கடி மிகுந்த சூழலில் தவிர்க்க முடியாதது என்பதை எல்லோருமே ஏற்றுக் கொள்கிறார்கள்” என்று வேறு எழுதுகிறது. எல்லோருமே ஏற்றுக் கொண்டால் ஏன் ஆர்.எஸ்.எஸ்-ன் தொழிற்சங்க அமைப்பு கூட எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பதை இந்துதமிழ் திசைதான் விளக்க வேண்டும். இரண்டாவதாக பொதுத்துறைகளை விற்பதற்கு காரணம் பொருளாதார நெருக்கடிதான் என்பது பா.ஜ.க-வே சொல்லாத கருத்தாகும்.
நாடு வளர்ச்சியடைய வேண்டுமென்றால் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது அவசியம், ஆனால் அதற்கான நிதி அரசிடம் இல்லை. ஆகவே பொதுத்துறைகளை குத்தகைக்கு விட்டு ரூ.6 லட்சம் கோடி நிதி திரட்டும் முயற்சியாகவே பணமாக்கல் திட்டம் கொண்டுவரப்படுகிறது என்பதுதான் பா.ஜ.க-வின் வாதம். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிச்சலுகைகள் கொடுக்கவும் வாராக்கடன் தள்ளுபடி செய்யவும் நிதி இருக்கிறது; ஆனால் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு நிதி இல்லையா? என்பது நமது வாதம்.
மேலும், இந்த துறைகள் அனைத்தும் நட்டத்தில் இயங்குவதால் அரசால் இதனை நடத்த முடியவில்லை என்றும் ஒரு வாதம் வைக்கிறார்கள். எல்லா தனியார் கார்ப்பரேட் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 5ஜி-க்கு விண்ணப்பித்துக் கொண்டிருக்கும்போது பி.எஸ்.என்.எல்-க்கு 4ஜி தொழில் நுட்பத்திற்குக் கூட அனுமதி தரப்படவில்லையே இது தானே அதன் நட்டத்திற்கு காரணம். ஆகவே இது திட்டமிட்டு அரசால் ஏற்படுத்தப்பட்ட நட்டம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
தனியார் கார்ப்பரேட் மின் உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவித்தும் அரசு மின் உற்பத்தியை திட்டமிட்டே நாசமாக்கியும்; பின்னர் அரசே தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி மானிய விலைக்கோ அல்லது இலவசமாகவோ கூட கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சலுகை வழங்கியது போன்றவைதானே மின்சாரத்துறை நட்டத்திற்கு காரணம். இவையெல்லாம், பொதுத்துறை நிறுவன ஊழியர்களே அரசின் மீது வைக்கும் குற்றச்சாட்டு.
1991-ல் தனியார்மய – தாராளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமலுக்கு வந்தபின் அரசே திட்டமிட்டு பொதுத்துறை நிறுவனங்களை சீரழிக்க ஆரம்பித்தது. வாஜ்பாய் தலைமையிலான இதே பா.ஜ.க ஆட்சிக் காலத்தில்தான் பொதுச் சொத்துக்களை இலக்கு வைத்து விற்பதற்கென்றே பங்கு விலக்கல் துறை (ministry of dis-invesment) என்று தனி அமைச்சகமே உருவாக்கப்பட்டது. தற்போது முதலீடுகள் மற்றும் பொதுச்சொத்துக்களை நிர்வகிக்கும் துறை DIPAM (department of investment and public asset management) என்ற பெயரில் நிதியமைச்சகத்தின் கீழ் இத்துறை இயங்கி வருகிறது.
இப்படி திட்டமிட்டு உள்கட்டமைப்புகளை சிதைத்துவிட்டு அதையே காரணமாக வைத்து பொதுச் சொத்துக்களைக் கார்ப்பரேட்டுகளுக்கு விற்பதும் குத்தகைக்கு விடுவதும் நடக்கிறது. இதில், கேலிக்கூத்து என்னவென்றால் இதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து இதே உள்கட்டமைப்புகளை மேம்படுத்தப்போவதாக சொல்வதுதான்.
இதற்குள் எல்லாம் போகாமல் வசதியாக “பொருளாதார நெருக்கடி” என்று பா.ஜ.க-வே சொல்லாத தகவலை எடுத்துக் கொண்டு முட்டுக்கொடுக்கிறது இந்துதமிழ் திசை.
கடைசியாக “மாற்று வாய்ப்புகள் என்னென்ன இருக்கின்றன என்பது குறித்து எதிர்ப்பாளர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க வகையில் எந்த ஆலோசனைகளும் முன்வைக்கப்படவில்லை” என்று எழுதுகிறது. இங்கே கூட எதிர்ப்பாளர்கள் என்று எதிர்க் கட்சிகளை மட்டுமே சித்தரிக்கிறது இந்துதமிழ் திசை. நாம் முன்பே கூறியதைப் போல காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடம் தனியார்மயமாக்கத்துக்கு மாற்றுக் கொள்கை இல்லை என்ற தைரியத்தில்தான் இவ்வாறு எழுதுகிறது.
மேலும் “நெருக்கடியான நேரத்தில் மாற்றுத்தீர்வுகளை முன்வைக்காமல் அரசின் முடிவைக் கேள்விக்குள்ளாக்குவது; மேலும் புதிய நெருக்கடிகளை நோக்கித் தள்ளிவிடும் அபாயம் நிறைந்தது” என்று வேறு நம்மை எச்சரிக்கிறது இந்துதமிழ் திசை.
படிக்க :
விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை !
ரஜினியின் கருத்துச் சுதந்திரத்திற்காக களமிறங்கும் இந்து தமிழ் திசை
வளர்ச்சி, முதலீடுகளை ஈர்த்தல் என்ற பெயரில், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மானிய விலையில் கொடுக்கப்படும் நிலம், மின்சாரம், நீர் உள்ளிட்ட கொள்ளைக்கார சலுகைகளை நிறுத்து ; பொதுத்துறை வங்கிகளிலிருந்து இலட்சக்கணக்கான கோடி ரூபாய்களைக் கடனாய் கொடுப்பதை நிறுத்து ; வாங்கிய கடனைக் கட்டாமல் ஏமாற்றும் கார்ப்பரேட் முதலைகளின் சொத்துக்களை பறிமுதல் செய் ; அதில் கிடைக்கும் நிதியை வைத்துப் பொதுத்துறைகளை பலப்படுத்து என்று நாம் சொல்கிறோம். நடுநிலை ஏடான இந்துதமிழ் பா.ஜ.க-வுக்கு இதனை சிபாரிசு செய்யுமா?
பா.ஜ.க கொண்டுவரும் திட்டங்களுக்கெல்லாம் நைச்சியமாக முட்டுக்கொடுத்துக் கொண்டே தமக்கு தாமே ‘நடுநிலை’ என்று வேறு நாமகரணம் சூட்டிக் கொள்கின்றன இந்துதமிழ் திசை போன்ற நாளேடுகள். எதிரியைக் கூட நம்பிவிடலாம். நடுநிலை என்று கழுத்தில் தோளில் போட்டுக் கொண்டே கழுத்தருக்கும் இந்து தமிழ் திசை போன்ற கிரிமினல் கும்பலிடம் என்றும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் !!

பால்ராஜ்
செய்தி ஆதாரம் : இந்து தமிழ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க