நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காண்ட் பரிந்துரையின் படி 6 லட்சம் கோடி அரசுச் சொத்துக்களை குத்தகைக்கு விடுவது என்ற “தேசிய பணமாக்கல் திட்டத்தை” அறிமுகப்படுத்தியுள்ளார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன். செயல்படுத்துவது, பராமரிப்பது, ஒப்படைப்பது என்ற முறையில் குத்தகைக்கு விடப்படுவதாக (25 வருடத்திற்கு தனியாருக்கு தாரைவார்க்கப்படுவது குறித்து) நமக்கு விளக்கமளித்துள்ளார்.
இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு பொருளாதார தேக்கம் ஏற்பட்ட இன்றைய சூழலில் 7.7% பொருளாதார சரிவுடன் 2020-21-க்கான நிதி அறிக்கையை நிறைவு செய்து, 2021-22 ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய போகிறது, உலகிலேயே பொருளாதாரத்தில் 6-வது பெரிய நாடாக உள்ள இந்தியாவை ஆளும் கார்ப்பரேட் – காவி பாசிசக் கும்பல்.
படிக்க :
குப்தா சகோதரர்களை ஓடவிட்ட தென் ஆப்பிரிக்க மக்கள் !
அதானி நிறுவனத்தை இழுத்து மூடிய பஞ்சாப் விவசாயிகள் !!
கொரோனாவில் ஒரு கோடி பேருக்கு மேல் நோயால் பாதிக்கப்பட்டு,  1.50 லட்சம் பேர் காவு வாங்கப்பட்ட சூழலில், 7.7% பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கு இந்நிலைமையை சரி செய்யவும், நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் அரசின் சொத்துக்களை குத்தகைக்கு விட்டு 6 லட்சம் கோடி பணத்தைத் திரட்டவுமே இத்திட்டத்தை அறிவித்துள்ளதாக நிதி அமைச்சர் திருவாய் மலர்ந்துள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வே, மின்சாரம், தொலைதொடர்பு, விமான நிலையங்கள், துறைமுகங்கள், சுரங்கங்கள், விளையாட்டு அரங்குகள் இவற்றின் அசையா – அசையும் சொத்துக்கள் அனைத்தையும் தனியாருக்கு ஏலம் விடப்பட்டும். குறிப்பாக அதானி, அம்பானி கும்பலுக்கு ஏலம் விடப்படும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், தமது கார்ப்பரேட் காவி பாசிச நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக நின்று தேர்தல் செலவிற்கும், ஆட்சிக் கவிழ்ப்பிற்கும் கோடிக்கணக்கில் அள்ளித் தரும் தனது எஜமானர்களை எப்படி மறக்க முடியும்?
இங்கு இது இட்டுக்கட்டி சொல்லப்படவில்லை. ஏற்கெனவே நடந்த நிகழ்வுகளிலிருந்து பார்த்தாலே இதன் பின் உள்ள உண்மையைப் புரிந்து கொள்ள முடியும். ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கம் ஏலம் எடுக்க தனியார் வங்கிகள் கடன் தர நிராகரித்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து ரூ.6000 கோடியை அதானிக்கு வழங்க வழிகாட்டுதல் கொடுத்தது ம்ோடி ஆட்சிதான். மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை அதானியின் வசம் ஒரு விமான நிலையம் கூட இல்லை. தற்போது 51 விமான நிலையங்களிலும் மற்றும் பல துறைமுகங்களும் அதானி  நிறுவனங்களால் பராமரிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மீதமுள்ள விமான நிலையங்களும் துறைமுகங்களும் தாரை வார்ப்பதில் எந்த சிக்கலும் இல்லை.
அதேபோல் அம்பானிக்கும் தொலைத்தொடர்பு, மின்சார உற்பத்தி, பகிர்மானம், இயற்கை எரிவாயு, பைப்லைன் உற்பத்தி, பராமரிப்பு, கிடங்கு ஆகியவைகளும் இத்திட்டத்தின் கீழ் தாரை வார்ப்பதில் எந்த வில்லங்கமும் வரப்போது இல்லை. ஏறக்குறைய ஏலம் விடப்போகும் துறைகள் அனைத்தும் இவர்களின் சுரண்டலுக்கு ஏற்கனவே உட்பட்டதே.
எனவே இத்திட்டத்தின் கீழ் கூடுதலாக இத்துறைகளை வாரிக் கொடுப்பதில் எந்த குறுக்கீடும் இடையூறும் இருக்க போவது இல்லை. ஒருவேளை அரசின் ஏலத்தொகை கட்டுபடியாகவில்லை எனில் அடிமாட்டுத் தொகைக்கு குறைக்கவும் தயங்காது ஒன்றிய அரசு. மேலும் பல புதிய சலுகைகளையும் அறிவிக்கலாம்.
இதற்கான தொகையைக் கூட அரசு வங்கிகள் மூலம் கடன் தருவதற்கும் தகுந்த ஏற்பாடு செய்யலாம். அதனால்தான் என்னவோ, வங்கிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று துடிக்கிறார் ஒன்றிய நிதியமைச்சர். ஏனெனில் பொதுத்துறை வங்கிகள், கார்ப்பரேட்டுகளின் வாராக்கடன் காரணமாக, அவற்றின் கடன் வழங்கும் அளவு குறைந்துள்ளது. அதனை அதிகரிக்க, வங்கிகளை ஒருங்கிணைத்து அவற்றின் நிதியளவையும் கடன் வழங்கும் அளவையும் அதிகரிக்க முடியும். மேலும் இவர்களின் நெருக்கடியைப் பொறுத்து கடனை தள்ளுபடி செய்யவும் முடியும்.
தற்போது  விற்கப்படவிருக்கும் இவற்றை அரசே எடுத்து நடத்த முடியாதா? அதன் மூலம் பொருளீட்ட முடியாதா ? முடியும். கார்ப்பரேட் வருமான வரியை பழையபடி 40 %-ஆக உயர்த்துவதன் மூலமும், கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளித்தரப்படும் சலுகைகளை குறைப்பது மூலமும், வருவாயை உருவாக்கி பொருளாதார இழப்பை ஈடு செய்ய முடியும்.

பல அத்தியாவசிய சேவை நிறுவனங்களை அரசாங்கமே ஏற்று நடத்தி அவற்றின் மூலம் இலாபம் எடுக்கலாம். மேலும் நிதி தேவைப்பட்டால் அதானி, அம்பானிக்கு தரப்போகும் வங்கிக் கடனை அரசே பெற்றுக் கொள்ள முடியும். அரசு கடன் பத்திரங்களை மக்களுக்கு விநியோகிக்கலாம். அரசு சொத்துக்களையும் முறையாக திட்டமிட்ட வகையில் வருவாய் நோக்கில் பொதுத்துறைகளை போல அதன் சொத்துக்களையும் ஆக்கப்பூர்வமாக பராமரிக்கலாம். தற்போதுள்ள 7.7% சரிவை ஈடு செய்வதோடு, கடன் இல்லாத பற்றாக்குறை இல்லாத பொருளாதாரத்தை உருவாக்க முடியும் என்று பல்வேறு பொருளாதார வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

உலகளவிலான பெரும் பணக்காரர்களில் (பில்லினியர்கள்) இந்தியாவில் உள்ளவர்களின் எண்ணிக்கை 140. இவர்களின் சொத்து மதிப்பு 44.27 லட்சம் கோடி என்கிறார்கள். இதற்கு 4% வரியைப் போட்டு வருவாயைப் பெருக்கலாமே ? இந்தக் கேள்வியை நாம் எழுப்புவோ. இந்தப் பணத்தை நம்மிடமிருந்துதானே இலாபமாக பெரு நிறுவனங்கள் எடுத்துக் கொண்டன ? அப்படி வரி செலுத்த முடியாது என்று சொல்வார்களானால் அவர்களது 50% சொத்துக்களைப் பறிமுதல் செய்யச் சொல்வோம். இதன்மூலம் பொருளாதார இழப்பை ஈடு செய்யலாம்.
அரசு சொத்துக்களை விற்பதன் மூலம் அரசு எதிர்பார்க்கும் வருவாய் வருகிறதோ இல்லையோ, அரசு சொத்தை ஏலம் எடுப்பதன் மூலம் அதானி, அம்பானி போன்ற கும்பலின் தற்போதைய சொத்தின் மதிப்பு 12 லட்சம் கோடியைவிட மேலும் ஒரு மடங்கோ, இரு மடங்கோ உயரலாம்.
ஆனால், இத்துறைகளைப் பயன்படுத்தும், இங்கு பணிபுரியும் பெருவாரியான மக்கள் அனைவரும் பெருநிறுவனங்களின் சுரண்டலுக்கேற்ப மேலும் பெருவாரியான உழைப்பு சக்தியை, உழைப்பாகவும் பணமாகவும் இழக்க வேண்டும். 1990-களில் கொண்டு வரப்பட்ட தாராளமய – தனியார்மய – உலகமய கொள்கையால் ஏற்பட்டுள்ள 99% – 1% என்ற ஏற்றதாழ்வு, இந்த தேசிய பணமாக்கல் திட்டம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில் மேலும் அதிகரிக்கலாம்.
படிக்க :
கேஸ் சிலிண்டர் விலை உயர்வும் மானியக் குறைப்பும் !
பெட்ரோல் – டீசல் விலை உயர்வுக்குப் பின்னிருக்கும் கார்ப்பரேட் கொள்ளை !
இந்த பணமாக்கல் திட்டமே, தேச நலனுக்காக, வளர்ச்சி திட்டங்களுக்காக, வேலை வாய்ப்பை பெருக்குவதற்கான, தேசத்தின் ஒட்டு மொத்த உழைக்கும் மக்களின் நலனுக்காக கொண்டு வரப்படவில்லை என்பது நிதர்சனம். அதானி, அம்பானி கும்பலுக்கு ஒட்டு மொத்த தேசத்தையும், அதன் செல்வத்தையும் பணமாக்கல் என்ற திட்டத்தின் கீழ் அவர்களின் மூலதனத்தை மேலும் மேலும் பெருக்கவுமே திட்டமிட்டு கொண்டு வரப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.
ஒட்டு மொத்த தேசத்தையும், அதன் நலனையும் உழைக்கும் மக்களால் உருவான மொத்த சொத்தையும், அதன் உபரிகளையும் அதானி, அம்பானி கும்பலுக்கு சமர்பணம் செய்வது எவ்வளவு பெரிய துரோகம்? இதைவிட தேசதுரோகம் வேறு எதுவும் இருக்க முடியுமா? இம்மாதிரியான தேச துரோகிகளையும், இவர்களின் எசமானர்களையும் தொடர்ந்து அம்பலப்படுத்துவது நமது கடமை. இவர்களை என்ன செய்ய வேண்டுமென்பதை மக்களே முடிவு செய்வார்கள் !
வினவு செய்திப் பிரிவு
கதிரவன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க