‘இலவச’ எதிர்ப்பும் சமூக நலத்திட்ட ஒழிப்பும்!

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி நாட்டையே கார்ப்பரேட் முதலாளிகளின் வேட்டைக்காடாக மாற்றுவது; சேவைத்துறைகளைத் தனியார்மயமாக்குவது; நலத்திட்டங்கள் அனைத்தையும் முற்றாக நிறுத்துவது என்ற போக்கில் நாட்டை மறுகாலனியாக்குவதே ஆளும் வர்க்கங்களின் திட்டமாகும்.

ரசியல் கட்சிகள் தேர்தலில் இலவசங்களை அறிவிப்பதற்குத் தடை விதிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டு, இலவசங்களுக்கு எதிராக வாதாடிக் கொண்டே, டிசம்பரில் நடக்கவிருக்கும் குஜராத், ஹிமாச்சலப் பிரதேசத் தேர்தல்களையொட்டி இலவச திட்டங்களை அறிவித்திருக்கிறது பாஜக. இதன்மூலம் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவது மட்டுமல்ல, சொல்லொன்றும் செயலொன்றுமாக இருப்பதே பார்ப்பனியத்தின் சிறப்பியல்பு என்பதை பா.ஜ.க நிரூபித்து வருகிறது.

“நாட்டின் பொருளாதாரத்தை இலவசங்கள் அழிக்கின்றன” என்றும்; “தேர்தலின்போது சுயநலம் கொண்ட இலவச அறிவிப்புகள் நாடு தற்சார்பு அடைவதைத் தடுத்து, நேர்மையாக வரி செலுத்துவோருக்கு சுமையை அதிகரிப்பதுடன், புதிய தொழில்நுட்பங்களில் முதலீடுகளைத் தடுக்கும்” என்றும்; “இலவசத் திட்டங்களை அறிவித்து மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்க முடியும் என சிலர் கருதுகின்றனர்” என்றும் அண்மைக்காலமாக திருவாளர் மோடி பல கூட்டங்களில் பேசிவருகிறார்.

மாநில அரசுகள் – கட்சிகள் தமது வாக்கு வங்கிக்காக இலவசத் திட்டங்களை அறிவித்து நாட்டை நாசம் செய்கின்றன என்ற வகையிலான விவாதங்களுக்கு இவை மீண்டும் தூண்டுகோலாக அமைந்துள்ளன.

டெல்லி பா.ஜ.க.வின் நிர்வாகியான அஸ்வினிகுமார் உபாத்யாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், “தேர்தலின் போது இலவச அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி கொடுக்கிற கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய முடியாது என நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தாலும் கூட, “இலவசங்கள் நாட்டின் மிக முக்கியமான பிரச்சினை என்றும், இலவசங்கள் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கின்றன” என்றும் தன் பங்கிற்கு பா.ஜ.க சார்பாக பேசிவிட்டு,  “இலவசங்கள் குறித்து ஆராய்வதற்கு ஒரு குழு அமைக்கப்படும்” என்று உத்தரவிட்டுள்ளது. 2013 எஸ்.சுப்பிரமணியம் பாலாஜி வழக்கில், இலவசங்களை சட்டவிரோத நடவடிக்கையாக அறிவிக்க முடியாது என உச்சநீதிமன்றம் முன்னர் தீர்ப்பளித்தது; அத்தீர்ப்பையும் மறுபரீசிலனை செய்யக்கோரி மூன்று பேர் கொண்ட அமர்வுக்கு இவ்வழக்கை மாற்றியது.

படிக்க: சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! | காணொலி

இந்த விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் போது, “பெரும்பாலான நிதிகள் இலவசங்களுக்கு செலவிடப்படுவதால் மக்களுக்கு குறைந்த செலவில் கல்வி, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை அரசு ஏற்படுத்தித்தர முடிவதில்லை” எனக் கூறியிருக்கிறார் ரிசர்வ் வங்கியின் நிதிக்குழு உறுப்பினர் அசீமா கோயல்.

உச்ச நீதிமன்றம், ரிசர்வ் வங்கி மட்டுமல்ல தானும்கூட பா.ஜ.க.வின் கிளைப்பிரிவுதான் என்பதை நிரூபிக்கும் விதமாக தேர்தல் ஆணையமும் இந்தக் கோதாவில் இறங்கியது. “தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதும் ஆட்சிக்கு வந்தபிறகு அதனை செயல்படுத்துவதும் அந்தந்தக் கட்சிகளின் கொள்கை முடிவு. அதில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது” என ஏப்ரல் மாதத்தில் கூறியிருந்த உச்ச நீதிமன்றம், அடுத்த ஒரு மாதத்திலேயே தன்னுடைய முடிவை பரிசீலிப்பதாகக் கூறியது.

அக்டோபரில், “இலவச வாக்குறுதிகளால் வாக்காளர்கள் மத்தியில் ஏற்படும் தாக்கத்தை தேர்தல் ஆணையம் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. இனி இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், தேர்தல் வாக்குறுதிகளாக வழங்கும் இலவசங்களுக்கான நிதி ஆதார விவரங்களை அளிக்க வேண்டும்” எனக் கூறியது.

அடுத்த நாளே ஒன்றிய சட்டத்துறை அமைச்சர், தேர்தல் சட்டங்களை மாற்றியமைக்க தேர்தல் ஆணையத்துடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறினார். இதன் மூலம் மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து தங்களுக்குச் சாதகமான வகையில் தேர்தல் சட்டங்களை மாற்றியமைக்க முயற்சித்து வருவதை நாம் புரிந்துகொள்ள முடியும்.

இலவசங்கள், நலத்திட்டங்களுக்கு எதிராக இவ்வளவு மூர்க்கமாக பாரதிய ஜனதா கட்சி ஓலமிட என்ன காரணம்? உச்ச நீதிமன்றம், ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம் என வரிசை கட்டி நிற்க வேண்டிய அவசியம் என்ன?

இலவசங்கள் எனப்படும் கவர்ச்சிவாதத் திட்டங்கள் இருவகைகளில் காவி – கார்ப்பரேட் பாசிசக் கும்பலை எரிச்சலூட்டிக் கொண்டிருக்கின்றன.

படிக்க: சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! | துண்டறிக்கை!

முதலாவது, சட்டப்பூர்வ வழிகளில் ஒற்றையாட்சியை நோக்கி நகர்ந்து வரும் பா.ஜ.க.வுக்கு மாற்றாக, அகில இந்திய அளவில் போட்டிபோடும் அளவுக்கு காங்கிரஸ் வலிமையுடன் இல்லை. அதே நேரத்தில் தமிழகத்தில் திமுக, மே.வங்கத்தில் திரிணாமுல், தெலுங்கானாவில் பாரதிய (தெலுங்கானா) ராஷ்ட்ரிய சமிதி, ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம், பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் கேரளத்தில் சி.பி.எம் போன்று மாநிலக் கட்சிகள் வலுவாக உள்ளன. அக்கட்சிகளின் வாக்குவங்கிக்கும் மக்கள் செல்வாக்கிற்கும் அவர்கள் செயல்படுத்திவரும் கவர்ச்சிவாத மற்றும் சமூகநலத்திட்டங்களே அடிப்படையாக இருக்கின்றன.

இரண்டாவதாக, இந்தத் திட்டங்களுக்கு ஒன்றிய – மாநில அரசுகள் சார்பில் சில லட்சம் கோடிகள் செலவிடப்பட்டு வருகின்றன. அம்பானி – அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளி வர்க்கமானது இந்தச் செலவை வெட்டிச்செலவு எனக் கருதுகிறது. சேவைகளை எல்லாம் காசாக்கிக் கொள்ளையிடுவதற்குத் தடையாக இருப்பதால் சமூக நலத்திட்டங்களை எதிர்க்கின்றனர். இலவச – கவர்ச்சிவாதத் திட்டங்களுக்கு அரசு செலவிடும் தொகையை நிறுத்தி, அவற்றை நேரடியாக தமக்கே கொடுத்து, தமது சொத்துக்களைப் பெருக்க உதவ வேண்டும் எனக் கருதுகின்றனர். எனவே தான், தமது அடியாட்படையைக் களமிறக்கி விட்டு இலவச எதிர்ப்பு நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

மாநிலக் கட்சிகளின் செல்வாக்கைக் குறைக்க வேண்டுமானால், அவர்கள் அறிவித்து நடைமுறைப்படுத்தி வரும் இலவச – கவர்ச்சிவாதத் திட்டங்களையும், சமூக நலத்திட்டங்களையும் முடக்க வேண்டும் என்பதை பா.ஜ.க முன்பே புரிந்துகொண்டு விட்டது. ஜி.எஸ்.டி மூலமும், எரிபொருட்கள் மீது விதிக்கப்படும் பங்கிடப்படாத வரியை அதிகரிப்பதன் மூலமும் மாநில அரசுகளின் வருவாயைக் குறைத்து வருகிறது. இதன் காரணமாக, தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்ற கவர்ச்சிவாத திட்டங்களையோ, சமூக நலத்திட்டங்களையோ நடைமுறைப்படுத்தும் அளவுக்குத் தங்களுக்கு வருவாய் இல்லை என்று மாநில அரசுகள் புலம்புவதும், மக்கள் மீதான வரிகளை அதிகரிப்பதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசாங்கத்தின் செயல்பாடுகளே இதற்குச் சிறந்த சான்று.

வாக்குறுதிகளை நிறைவேற்றாதபோதும், மக்கள் மீது வரிச்சுமை ஏறும்போதும் ஆட்சியில் இருக்கும் மாநிலக் கட்சிகள் மீதான வெறுப்பு மக்களிடையே அதிகரிப்பது தவிர்க்க முடியாததாக மாறிவருகிறது. மாநில அரசு அறிவித்த திட்டங்களை எல்லாம் ஏன் நடைமுறைப்படுத்தவில்லை, இவர்கள் மக்களை ஏமாற்றி வாக்கு பெறுவதற்காக மட்டுமே இப்படி வாக்குறுதி கொடுத்தனர் என அவ்வப்போது பா.ஜ.க.வினர் குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர். இவர்களை சமாளிக்க மாநில அரசு ஏதேனும் இலவச அல்லது நலத்திட்டத்தை அறிவித்தாலும்கூட, மக்களிடம் கூடுதலாக வரி விதித்தே அதற்கான செலவை சமாளிக்க வேண்டியுள்ளது. இந்த நச்சுச்சுழலில் இருந்து வெளிவர முடியாதபடி மாநிலக் கட்சிகள் சிக்கியுள்ளன.

அதே நேரத்தில், இக்கட்சிகளோடு போட்டியிட்டு வெற்றிபெற வேண்டுமானால், தாங்களும் இதுபோன்ற இலவச – கவர்ச்சிவாத அறிவிப்புகளை வெளியிடுவதும், சிலவற்றைச் செய்து கொடுப்பதும் அவசியம் என்பதையும் பா.ஜ.க.வினர் உணர்ந்தே இருக்கின்றனர். எனவே தான், இலவசங்கள் நாட்டை அழிக்கின்றன என்று மோடி ஓரிடத்தில் பேசிக் கொண்டிருக்கும் போதே, குஜராத்தில் ஆண்டுக்கு இரண்டு சிலிண்டர்கள் இலவசம் என்று அறிவிக்கின்றனர். குஜராத் மட்டுமின்றி உத்தரப் பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இலவசத் திட்டங்களை அறிவித்தும், நடைமுறைப்படுத்தியும் வருகின்றனர். அவ்வளவு ஏன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ஆண்டுக்கு 6,000 ரூபாய் செலுத்தும் திட்டத்தை அறிவித்து நடைமுறைப்படுத்தியும் வருகிறது மோடி அரசு. இன்னொரு வாக்குறுதியான, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க, குறைந்தபட்ச ஆதார விலையை இருமடங்காக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க: மதுரை: மே 1 மாநாடு ஆலோசனை கூட்டம்

தமது ஒற்றைச் சர்வாதிகாரம் நிலைநாட்டப்பட வேண்டுமானால், இலவச – கவர்ச்சிவாதத் திட்டங்களையும், மக்கள் நலத் திட்டங்களையும் முற்றாக ஒழிப்பது அவசியமான தாயாரிப்புகளில் ஒன்று என்று பா.ஜ.க. கருதுகிறது; அவர்களது தற்போதைய வழிமுறை சட்டப்பூர்வ வாய்ப்புகளைப் பயன்படுத்துவதாக இருப்பதால், இந்த வாய்ப்பின் ஊடாக மாநிலக் கட்சிகளுடனான போட்டியில் வெல்வதற்கு, தாமும் இத்தகைய திட்டங்களை – தற்காலிகமானது என்றாலும்கூட – அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. மற்றபடி அவர்களது இயல்பே, கவர்ச்சிவாத திட்டங்களை வழங்கி வெல்லும் ஆம் ஆத்மியின் டெல்லி மாடல் அல்ல. சாதி – மத மோதல்களால் மக்களைப் பிளவுபடுத்தி வெல்லும் குஜராத் – உ.பி மாடலே.

தாங்கள் நடைமுறைப்படுத்துபவை இலவச – கவர்ச்சிவாதத் திட்டங்கள் அல்ல, அவையெல்லாம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் நலத்திட்டங்கள் தான் என்கிறது பா.ஜ.க,. இதையே தான் திமுகவும், ஆம் ஆத்மியும் சொல்கின்றன. இலவசங்களையும் நலத்திட்டங்களையும் தங்களால் பிரித்துப் பார்க்க முடியுமென உச்ச நீதிமன்றம் சொல்கிறது.

ஆனால், உண்மையில் இக்கட்சிகளுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சமூக நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் துளியேனும் அக்கறை இருக்கிறதா? அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி – மருத்துவம் – குடிநீர், மிகக்குறைந்த செலவில் தங்குமிடம் – போக்குவரத்து – தகவல் தொடர்பை உத்தரவாதம் செய்ய, அனைவருக்கும் வேலை கொடுக்க எந்தக் கட்சிக்கும் திட்டமும் விருப்பமும் இல்லை என்பதே உண்மை.

ஏனெனில், இத்திட்டங்கள் அனைத்துமே கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்கு முற்றிலும் எதிரானவை. இந்தப் புள்ளியில் தான் எல்லாக் கட்சிகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒன்றுபட்டுள்ளன. இதற்காகவே ஆட்சி செய்து வருகின்றன. மக்கள் நலத்திட்டங்களை ஒழித்துக்கட்டுவதையும், சேவைத்துறையிலிருந்து அரசு விலகிக் கொண்டு, தனியாருக்குத் தாரை வார்ப்பதுமே தனியார்மயத்தின் இலக்கு. இந்த வரம்பை மீறும் எவரும் தேர்தல் அரசியலில், அதிகாரத்தில் நீடித்திருக்க முடியாது.

அதனால் தான், சேவைத்துறைகளைக் கார்ப்பரேட் கொள்ளைக்குத் திறந்துவிடும் திட்டங்களை ஒன்றிய அரசு நடைமுறைக்குக் கொண்டுவரும்போது, மாநில அரசுகள் முணுமுணுப்புடன் ஏற்று நடைமுறைப்படுத்தி வருகின்றன. புதிய கல்விக்கொள்கை, தொழிலாளர் நலச் சட்டத்திருத்தங்கள், மின்சார மசோதா போன்றவற்றை இதற்கு சான்றாகக் குறிப்பிடலாம்.

இலவசங்களை எதிர்த்த அஸ்வினி உபாத்யாயாவின் வழக்கில் தன்னை இணைத்துகொண்ட திமுக-வின் மனுவில், சாதாரண மக்களுக்குச் செய்வதை இலவசம் என கொச்சைப்படுத்தும் பா.ஜ.க.வானது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மானியமாகவும், கடன் தள்ளுபடியாகவும் பல இலட்சம் கோடிகளை வாரிவழங்கியதை அம்பலப்படுத்தியது. இதனால், தானும் அதே பாதையில் செல்வதை தி.மு.க. கைவிடுகிறது என்று அர்த்தமில்லை. இது பா.ஜ.க.வை அரசியல் அரங்கில் அம்பலப்படுத்தி, அதன் வேகத்தை மட்டுப்படுத்துவற்கான ஓர் உத்தி மட்டுமே.

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி நாட்டையே கார்ப்பரேட் முதலாளிகளின் வேட்டைக்காடாக மாற்றுவது; இயற்கை வளங்களையும் மனித உழைப்பையும் சூறையாடத் திறந்து விடுவது; சேவைத்துறைகளைத் தனியார்மயமாக்குவது; நலத்திட்டங்கள் அனைத்தையும் முற்றாக நிறுத்துவது என்ற போக்கில் நாட்டை மறுகாலனியாக்குவதே ஆளும் வர்க்கங்களின் திட்டமாகும்.

இதற்கு இசைவாகத்தான் கார்ப்பரேட்டுகள், காவி கும்பலோடு இணைந்து அரசையும் சமூகத்தையும் பாசிசமயமாக்கி வருகின்றனர். தமது திட்டங்களை முழுமையாக நிறைவேற்றத் தடையாக இருப்பவற்றை, சட்டப்பூர்வ வழிகள் மூலமாகவே தகர்த்து வருகின்றன காவி – கார்ப்பரேட் பாசிச சக்திகள். இதன் ஒரு பகுதியாகவே இலவச – கவர்ச்சித் திட்டங்களை எதிர்த்து வழக்காடுவது, எதிர்ப்பிரச்சாரம் நடத்துவது, மாநிலக் கட்சிகளை அம்பலப்படுத்துவது ஆகியவற்றைச் செய்து வருகின்றன. அவர்களது இலக்கு, இலவச – கவர்ச்சிவாதத் திட்டங்களை ஒழிக்கும் பெயரில் மக்கள்நலத் திட்டங்களையும் ஒழித்து மக்களை ஓட்டாண்டிகளாக்குவதே என்பதைத் அம்பலப்படுத்தி முறியடிப்பது நமது கடமை. பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் – தேர்தல் அரசியல் கட்சிகள், மக்கள் நலத்திட்டங்களை உள்ளடக்கிய பாசிச எதிர்ப்பு ஜனநாயக செயல்திட்டத்தை முன்வைப்பதன் மூலமே மக்களை அணிதிரட்ட முடியும், பா.ஜ.க.வின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்த முடியும்.

(புதிய ஜனநாயகம் நவம்பர் 2022 இதழ்)

அமீர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க